PP Letter head

தேதி : 29.06.2020

ஆதாரங்கள் இருக்க சிபிஐ விசாரணை எதற்கு?

பத்திரிக்கை செய்தி

சாத்தான்குளம் போலீஸ் நடத்திய இரட்டைக் கொலைகள் நாடு முழுவதும் மக்களின் பெருங் கோபத்திற்கு ஆளாகியுள்ளன.

தொடர்புடைய காவலர்கள் மட்டுமின்றி இக்கொலைக்கு துணைபோன மருத்துவர், நீதிபதி, சிறை அலுவலர் ஆகியோர் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

கொலை செய்த காவலர்கள், காவலர் நண்பர்கள் ஆகியோர் உடனடியாக கொலை வழக்கில் கைது செய்யப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.

ஆனால் தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவதாக அறிவித்து கொலையாளிகள் கைது செய்யப்படாமல் இருக்க சூழ்ச்சி செய்துள்ளது.

சிபிஐ விசாரணை மேற்கொள்வதற்குள் சாத்தான்குளம் போலீசு சாட்சிகளைக் கலைப்பது, ஆதாரங்களை அழிப்பது, பாதிக்கப்பட்டோரை மிரட்டுவது ஆகிய எல்லா கிரிமினல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள எடப்பாடி அரசும், காவல்துறையும் ஏற்பாடு செய்திருக்கும் சதித்திட்டமே சிபிஐ விசாரணைஅறிவிப்பு. ஏராளமான ஆதாரங்களும் சாட்சியங்களும் பொது வெளியில் வந்த பிறகும் கைது செய்யாமல் கொலையாளிகளைப் பாதுகாக்கிறது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று வெளியிட்டிருக்கும் உத்தரவு காவல்துறை மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி இருப்பதை உறுதிப்படுத்துகிறது.

சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்கு ஒத்துழைக்காததால் சாத்தான்குளம் காவல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. நீதித் துறைக்கு காவல்துறை கட்டுப்பட மறுப்பது என்பது அரசியல் சட்டத்திற்கு கட்டுப்பட மறுப்பதே. இதனை உயர்நீதிமன்றம் கடுமையாகக் கருதி நடவடிக்கை எடுக்காமல் மாவட்ட ஆட்சியருக்கு பொறுப்பளித்திருக்கிறது.

படிக்க:
நுண்கடன் தவணை ஆகஸ்ட் 31 வரை செலுத்த மறுப்போம் ! கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு !
♦ சாத்தான்குளம் படுகொலை : தமிழகம் முழுவதும் கண்டன போராட்டம் !

குற்றவாளிகளை அரசு பாதுகாக்கும் என்ற உறுதி தான் நீதி விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் தைரியத்தை சாத்தான்குளம் போலீசுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. இது மிக மிக ஆபத்தான போக்கு. மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தாங்களே வழிமுறைகளை உருவாக்கி கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளதையே நிலைமைகள் உணர்த்துகின்றன.

சட்டத்தின் ஆட்சி, ஜனநாயக உரிமைகள் ஆகியவை கேலிக்கூத்தாக்கப்பட்டு போலிசு ஆட்சிதான் யதார்த்தத்தில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இத்தகைய சூழலில் மக்கள் போராட்டங்களால் மட்டுமே காவல் துரையின் அத்துமீரலைக் கட்டுப்படுத்தமுடியும். எனவே காவல்துறையினர் சட்ட விதிகளை மீறினால் அவர்கள் விசாரணை இன்றி வேலை நீக்கம் செய்யப்பட வேண்டும்.

தேனியில் ஒரு பெண் காவலர் வேலைக்கு சேரும் முன் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார் என்பதால் விசாரணை இன்றி வேலை நீக்கம் செய்யப்பட்டார். அப்படியானால் போலீசின் எல்லா குற்றங்களுக்கும் இதேபோல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மக்கள் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் காவல் நிலையங்களை ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கு போலீசார் லத்தி, கழி போன்றவற்றைப் பயன்படுத்துவது தடை செய்யப்படவேண்டும். தவறான முடிவுகளால் ஏற்படும் விளைவுகளுக்கு நீதிபதிகள் பொறுப்பாக்கப்பட வேண்டும். இவை உடனடியாக அமல் படுத்தப்பட வேண்டும்.

தோழமையுடன்
தோழர் காளியப்பன்,
மாநிலப் பொருளாளர்,
மக்கள் அதிகாரம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க