ஸ்டான் சுவாமியின் மரணமும் – தனிப்பட்ட சுதந்திரத்தை பாதுகாக்கத் தவறிய இந்தியாவின் சிக்கலான சட்ட அமைப்பும்

செயல்பாட்டாளர் ஸ்டான் சுவாமியின் மரணம் இந்திய நீதித்துறைக்கு ஒரு கருப்பு நாள். உடல்நிலை சரியில்லாத ஒரு மூத்த குடிமகனுக்கு பிணை போன்ற அடிப்படை உரிமையைக் கூட நீதிமன்றத்தால் வழங்க முடியவில்லை. மேலும், அவர் முற்றிலும் நிரபராதி எனவும் அவர் மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனவும் ஒரு வழக்கு உள்ளது. வரலாற்றில் இந்த துயர்மிகு தருணம், நீதித் துறையினுடைய திறன் மற்றும் மனசாட்சியின் சீரழிவால் – இது தனிப்பட்ட சுதந்திரத்தை சிறிதளவே பாதுகாக்கும் – ஏற்பட்ட விளைவு மட்டுமல்ல, இந்தியாவின் சிக்கலான சட்ட கட்டமைப்பும் இதற்குக் காரணமாகும்.

ஜான் ஸ்டூவர்ட் மில், தனது சுதந்திரம் குறித்த கட்டுரை ஒன்றில், சுதந்திரத்திற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான போராட்டம், வரலாற்றின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும் என வாதிடுகிறார். ஒரு நபரின் சுதந்திரம், அவரைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட முழுமையானது மற்றும் ஒரு நாகரிக சமூகத்தின் எந்தவொரு உறுப்பினரின் மீதும் – அவருடைய விருப்பத்திற்கு மாறாக,  மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பதைத் தடுப்பதே – அதிகாரம் சரியான முறையில் நடைமுறைப் படுத்தப்படுவதாகும்”.

படிக்க :
♦ சாத்தான்குளம் படுகொலை : காவலர்களல்ல, கிரிமினல்களே !
♦ ஸ்டான்சுவாமி மரணத்திற்கு நீதி விசாரணை கோரும் சமூக செயற்பாட்டாளர்கள் !

“மற்றவர்களுக்கு தீங்கு விளைவித்தல்” என்ற சொற்றொடர் பயன்பாட்டில் கண்ணாடி கொண்டு பார்க்கப்பட வேண்டும் என அவர் விளக்குகிறார். இது பெரும்பான்மையினரின் விருப்பம் அல்ல, அதன் கொடுங்கோன்மைக்கு எதிராக என அவர் எச்சரிக்கிறார். மாறாக “பயன்பாடு என்பதன் மிகப்பெரிய பொருளில், நிரந்தர நலன்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு மனிதன் ஒரு முற்போக்கான மனிதனாக” இருக்க வேண்டும் என்கிறார். எனவே, அவர் சுதந்திரத்திற்கான கட்டுப்பாடுகள் எப்போதும் நீண்ட காலத்திற்கு ஒட்டுமொத்த சமூகத்தின் மிகப்பெரிய நன்மைக்காக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.

குற்றவியல் சட்டம் என்பது தனிப்பட்ட சுதந்திரத்தின் மீதான ஒரு கட்டுப்பாடாகும். மேலும், அரசுக்கு வழங்கப்பட்ட கைது அதிகாரங்கள் குடிமக்களை உடனடியாக கூண்டில் அடைக்கப்பட்ட மனிதர்களாக மாற்றுவதை குறைக்க உதவுகின்றன. மேலும், அதன் தயவில் அவர்களை விட்டு விடுகின்றன. எனவே, அரசியலமைப்பின் மூன்றாம் பாகத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சுதந்திரங்கள் தேவையற்ற முறையில் மிதிக்கப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த, எச்சரிக்கையுடனும், மிகுந்த கண்காணிப்புடனும் செயல்பட வேண்டியது அவசியம்.

இருப்பினும், சமீப காலங்களில் பீமா கொரேகான் செயல்பாட்டாளர்கள், நடிகர் ரியா சக்ரவர்த்தி மற்றும் சிஏஏ போராட்டக்காரர்கள் போன்ற பலதரப்பட்டோரின் தன்னிச்சையான கைதுகள் நிகழ்ந்தன. இந்த கைதுகளின் நோக்கம், சமூகத்தின் பழிவாங்கலுக்கான விருப்பத்தைத் திருப்திப்படுத்துதல், அரசியல் லாபங்களை பெறுதல், எதிர்ப்பாளர்களை அடக்குதல் மற்றும் அரசு இயந்திரங்களுக்கு எதிராக குடிமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துதல், நமது சமூகத்தின் பெரும் நன்மை மற்றும் முன்னேற்றத்தை ஊக்குவிப்பதை விட, ஒரு கடுமையான நினைவூட்டலாக சேவை செய்கிறது.

இந்த போக்கு, தேசத் துரோக வழக்குகள், சட்டத்தை மதிக்கும் குடிமக்களுக்கு எதிராக அரசு முகமைகளால் புனையப்பட்ட பீமா கோரேகான் பொய் வழக்குகள் அல்லது ஊபா போன்ற விதிகளைப் பயன்படுத்தி ஐபிசி குற்றங்களை கடுமையாக மாற்றுவதன் மூலம் நடைமுறைப் படுத்தப்படுவது கவலையளிக்கிறது. இந்திய குற்றவியல் நீதி அமைப்பு, “குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை நிரபராதி” என்பதை பெரும்பான்மையாக தொடர்வதைக் காட்டிலும், தனிநபர் சுதந்திரத்தைக் காக்க வடிவமைக்கப்படவில்லை. மேலும், ஒரு முறை ஒரு குடிமகன் அதன் பிடியில் சிக்கிக் கொண்டால், வெளியேறுவது ஒரு கடினமான செயல்முறையாகும், குற்றம்சாட்டப்பட்டவரின் குற்ற உணர்வு குறித்து அதற்கு கவலையில்லை.

கைது செய்வதற்கான பரந்த அதிகாரங்கள்

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சி.ஆர்.பி.சி.) 41-வது பிரிவு காவல்துறையினருக்கு மிகவும் பரந்த கைது அதிகாரங்களை வழங்குகிறது. அதில், ஒரு நபர் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவிக்கும் ஒரு குற்றத்தைச் செய்துள்ளார் என்ற நியாயமான சந்தேகம் இருந்தால் அவர்களை வாரண்ட் இல்லாமல் கைது செய்ய முடியும்.

தண்டனை ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவான வழக்குகளில் கைது செய்யும் அதிகாரங்கள் சி.ஆர்.பி.சி-யின் பிரிவு 41-ஏ மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன. இது குற்றம் சாட்டப்பட்டவர்களை ஆஜராகுமாறு அறிவிக்க வேண்டும். மேலும், உச்சநீதிமன்றத்தின் அர்னேஷ்குமார் வழிகாட்டுதல்கள், கைது நடவடிக்கைக்கு முன் காவல்துறை அதிகாரி அதற்கான விரிவான காரணத்தை அளிக்க வேண்டும் என கூறுகின்றன.

கைது செய்வதற்கான இந்த தேவைகளைத் தவிர்ப்பதற்காக, இந்திய தண்டனைச் சட்டத்தில் (ஐ.பி.சி.) கிட்டத்தட்ட அனைத்து குற்றங்களுக்கும் இருக்கும் மோசமான குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்துவதற்கான நடைமுறை உருவாகியுள்ளது. திருட்டு என்பது கொள்ளையாக மாற்றப்படுகிறது. ஒரு ஆவணத்தின் எளிய மோசடி ஒரு மதிப்புமிக்க ஆவணத்தின் மோசடியாக மாற்றப்படுகிறது. இது ஆயுள் வரை சிறைவாசம் தரும் குற்றமாகிறது.

குற்றவியல் சதி மற்றும் பொதுவான நோக்கம் போன்ற பிரிவுகள் வழக்கமாக அப்பாவி நபர்களையும், குறைந்த குற்றங்களில் குற்றவாளிகளையும் வழக்கமான குற்றவாளிகள் மற்றும் பெரும் குற்றவாளிகளுடன் இணைக்க வழக்கமாக பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் தேவையான நியாயப்படுத்தல்கள் இல்லாமல் எளிதாக கைது செய்ய வசதியாகிறது. மேலும், இந்த குற்றச்சாட்டுகள் வழக்கமாக விசாரணையின் போது அல்லாமல், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் கட்டத்தில் நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுகின்றன. இதனால் குற்றம்சாட்டப்பட்டோர் 60-90 நாட்கள் வரை நீட்டிக்கப்பட்ட காவலில் இருக்க அனுமதிக்கிறது.

இயந்திரத்தனமான தடுப்புக் காவல்கள்

அரசியலமைப்பின் 22-வது பிரிவு கைது செய்யப்பட்ட ஒருவரை 24 மணி நேரத்திற்குள் ஒரு மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்த வேண்டும் என்று கோருவதன் மூலம் அவர்களைப் பாதுகாக்கிறது. ஆனால், பெரும்பாலும் நீதிபதிகள் ரிமாண்ட் உத்தரவுகளை அனுப்பும் போது, தங்கள் மனதில் ஏற்றிக் கொள்ள தவறிவிடுகிறார்கள். சி.ஆர்.பி.சி-யின் பிரிவு 167, குற்றம் சாட்டப்பட்டவர்களை 15 நாட்கள் வரை போலீசு காவலிலும் 90 நாட்கள் வரை நீதிமன்றக் காவலிலும் வைக்க மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம் அளிக்கிறது.

படிக்க :
♦ சமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா – நாளை தமிழகம் !
♦ சமூக செயற்பாட்டாளர்கள் கைது : ஆர்.எஸ்.எஸ்-ன் சதிப் பின்னணி என்ன ?

உதாரணமாக, செயல்பாட்டாளர் சுவாமியின் வழக்கில் ரிமாண்ட் உத்தரவு இட்ட நீதிபதி, நோய்வாய்ப்பட்ட மூத்த குடிமகனை முதன்மையான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்காக காவலில் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை கேள்விக்குட்படுத்தியிருக்க வேண்டும். மேலும், கைது செய்யப்படாமல் விசாரணை எளிதாக தொடர்ந்திருக்க முடியுமே என்ற கேள்வியை எழுப்பியிருக்கலாம்.

அர்னேஷ் குமார் அல்லது மனுபாய் ரத்திலால் படேல் வழக்கிலோ உச்சநீதிமன்றம், தடுப்புக் காவலுக்கு நீதித்துறை பொறுப்புணர்வு தேவைப்படுகிறது, அது ஒரு இயந்திர செயல்முறையாக இருக்க முடியாது என பலமுறை குறிப்பிட்டுள்ளது. இந்த காரணத்திற்காக, 37-வது சட்ட ஆணைய அறிக்கையின் பரிந்துரைகளுக்கு இணங்க, பிரிவு 167 செயல்படுத்தும் நீதிபதிகளை ரிமாண்ட் வழங்குவதற்கான நோக்கத்திலிருந்து விலக்குவதற்காக திருத்தப்பட்டது. ஏனெனில், இதற்கு குறிப்பாக நீதியை செயல்படுத்தும் மனப்பான்மை தேவை.

இவை அனைத்தும் இருந்தபோதிலும், தடுப்பு காவல் இயந்திரத்தனமாக நீட்டிக்கப்படுகிறது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களை தடுப்புக் காவலில் வைக்கத் தேவையில்லை என்றாலும் கூட, குற்றம் சாட்டப்பட்டவர்களை போலீசு காவலில் இருந்து நீதித்துறை காவலில் வைப்பது வழக்கமாகியுள்ளது.

உதாரணமாக, கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் கொடூரமான மரணங்கள் தடுக்கப்பட்டிருக்கலாம். மாஜிஸ்திரேட் மேலும் தடுப்புக் காவலில் அனுப்புவதற்கு பதிலாக அவர்களை விடுவித்திருக்கலாம். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான மோசமான குற்றச்சாட்டுகள் நியாயமானதா எனவும், மேலும் காவலில் வைக்க உண்மையான தேவை இருக்கிறதா எனவும் ஒரு முறைகூட அவர் கேள்வி எழுப்பவில்லை.

பிணை என்பது ஒரு சிறப்பு சலுகை!

இராஜஸ்தான் Vs பால்சந்த் வழக்கில் நீதிபதி கிருஷ்ணய்யர்,  “பிணை என்பது விதி, சிறை அல்ல” என்று பொருத்தமாகக் கூறினார். பிணை என்பது ஒரு புனிதமான உரிமை, ஏனெனில் குற்றவாளி என நிரூபிக்கப்படுவதற்கு முன்பு ஒரு நபர் தண்டிக்கப்படுவதில்லை என அது உத்தரவாதம் அளிக்கிறது. எனவே, இது நமது குற்றவியல் நீதி அமைப்பில் சுதந்திரத்தின் பாதுகாப்பு அரண்களில் ஒன்றாகும்.

எவ்வாறாயினும், சி.ஆர்.பி.சி-யின் 437 மற்றும் 439 பிரிவுகளின் கீழ் போலீசு காவலில் உள்ள ஒருவருக்கு பிணை வழங்க நீதிமன்றங்கள் விரும்புவதில்லை.  ஏனெனில் அவர்கள் விசாரணையில் தலையிடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக, இது பிரிவு 167-இன் கீழ் 15 நாள் உயர் வரம்பைக் கொண்டுள்ளது. இது போலீசு காவலை நீட்டிப்பதற்கும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்குவதற்கான உரிமையை மறுப்பதற்கும் அற்பமான மற்றும் தொலைதூர காரணங்களை சுட்டிக்காட்டி போலீஸை தப்பித்துக் கொள்ள அனுமதிக்கிறது.

நடைமுறையின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்படும் போது தான் பிணை விண்ணப்பங்கள் வழக்கமாக விசாரிக்கப்படுகின்றன. இங்கேயும், எண்ணற்ற பிரச்சினைகள் எழுகின்றன. நீதிபதிகள் இருக்கமாட்டார்கள் அல்லது விசாரணை தேதிகள் கொடுக்க மாட்டார்கள் அல்லது அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் பதில்களை தேவையில்லாமல் தாமதப்படுத்தும்போது, குற்றம் சாட்டப்பட்டவரின் பிணை உரிமை தானாகவே தடுக்கப்படும். அரசியல் ரீதியாக முக்கியமான வழக்குகளில், துணை நீதித்துறை பொறுப்பை அதிகமாகக் கைவிடுவதை ஒருவர் கவனிக்கக்கூடும். அரசால் முறையற்ற முறையில் அதிகாரம் செலுத்தும் வழக்குகளில் நேரடியாக தலையிடுவதைவிட மேல்முறையீடு செய்யப்படுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்.

பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள் மற்றும் திறமையான சட்ட பிரதிநிதித்துவம் இல்லாதவர்கள் போன்ற பின்னணியிலேயே பெரும்பான்மையான விசாரிக்கப்படாத வழக்குகள் உள்ளன. பிணைக்கு நிச்சயம் அது அவசியம் தேவை. UAPA மற்றும் MCOCA (Maharashtra Control of Organised Crime Act) போன்ற மோசமான தண்டனைகளுடன் கூடிய சிறப்புச் சட்டங்கள் ஐ.பி.சி குற்றங்களுக்காக வழக்கமாக பயன்படுத்தப்படும் போது, இது மேலும் சிக்கலாகிறது. இதனால் பிணை கிடைப்பது மிகவும் கடினமாகிறது. ஊபாவின் பிரிவு 43-D (5) போன்ற கடுமையான விதிமுறைகள், குற்றம் சாட்டப்பட்டவர் முதன்மையான குற்றவாளி என நம்பினால் பிணையை நிராகரிக்க நீதிபதியை அனுமதிக்கிறது. இவை அனைத்தும் பிணை என்பதை ஒரு உரிமை என்பதாக அல்லாமல், சிலருக்கு சிறப்பு சலுகையாக குறுக்கியுள்ளன.

தடுப்புக்காவல் கொடூரங்கள்

சிக்கலான நடைமுறைகள் பேச்சளவில் விடுதலையை பேசிவிட்டு, காவலில் வைப்பதை ஒரு விதிமுறையாக மாற்றுகின்றன. இந்தியாவின் கைதிகளில் 70 விழுக்காட்டினர் வழக்கு விசாரணையில் உள்ளவர்கள். சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கைக்கு இந்தியா ஒப்புதல் அளிக்க மறுத்த நிலையில், கடந்த பத்தாண்டுகளில் ஒவ்வொரு நாளும் சுமார் ஐந்து பேர் தடுப்புக் காவலில் இறந்து கொண்டிருக்கிறார்கள். 2001 முதல் 2018 வரை 26 காவல்துறை அதிகாரிகள் மட்டுமே தடுப்பு காவல் மரண வழக்குகளில் தண்டனை பெற்றிருக்கிறார்கள். காவல்துறை அதிகாரத்துக்கு தடுப்புக்காவல் பாதுகாப்பான வெளியாக சேவை செய்கிறது.

சமீபத்தில், ஹரியானாவில் ஒரு இளைஞர் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட உடனேயே இறந்தார். அவர் இறப்பதற்கு முன், அவர் காவல்துறையினரால் உடல் ரீதியாக சித்திரவதை செய்யப்பட்டதாகவும், உண்மையை வெளிப்படுத்தினால் தனது குடும்பம் அடுத்ததாக சித்திரவதைக்கு உள்ளாகும் என மாஜிஸ்திரேட் முன் வாயை மூடவைக்கப்பட்டதாகவும் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். சரியான நேரத்தில் மருத்துவ தலையீட்டால் தப்பிப்பிழைத்திருக்கக்கூடிய ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரும் காவலில் இருந்தபோது தாக்குதலுக்கு ஆளானார்கள்.

விடுதலை ஒரு கேலிக்கூத்து?

இவை அனைத்தும் இந்தியாவின் சிக்கலான நடைமுறைகள் மற்றும் அவை மெதுவாக செயல்படுத்தப்படுவது, ஒருவர் தண்டிக்கப்படுவதற்கு குற்றவாளி என நிரூபிக்கப்பட வேண்டியதில்லை என்பதை உறுதி செய்கிறது. நடைமுறைகள் நீதியின் ஏவலாளியாக இருப்பதற்குப் பதிலாக, அது தானே தண்டனைக்குரியதாகவும், விடுதலையின் சாரத்தை தாக்கக் கூடியதாகவும் உள்ளது. அர்னாப் கோஸ்வாமியின் வழக்கில் நீதிபதி சந்திரசூட்டின் விடுதலைக்கான வரிகள் இப்படி இருந்தன: “ஒரே ஒரு நாள்கூட விடுதலையை பறிப்பது ஒரு நாளை பல நாட்களாக்கும்”. கண்களில் கண்ணீரை வரவழைக்கும் இதயத்தில் நம்பிக்கையை அளிக்கும் இந்த வரிகள், பொதுவான வழக்கு விசாரணைகளில் தொலைதூர கற்பனையாகவே இருக்கின்றன.

படிக்க :
♦ ஸ்டான் சுவாமி படுகொலை : பீமா கொரேகான் வழக்கில் கைதானோரின் குடும்பத்தினர் அறிக்கை !
♦ ஊபா (UAPA) : செயற்பாட்டாளர்களை செயலிழக்க செய்வதற்கு தான் || அருந்ததி ராய்

குற்றவியல் சட்டங்களில் சீர்திருத்தங்களுக்காக சமீபத்தில் அமைக்கப்பட்ட குழுவுக்கு முன் ஒரு முக்கியமான சவால் காத்திருக்கிறது. ஈடுசெய்யமுடியாத மதிப்புமிக்க நேரத்தையும் சுதந்திரத்தையும் இழந்த அப்பாவிகளின் விடுதலை குறித்த முக்கியமான கேள்வியே அது. அதுவரை, நீதித்துறையின் பலிபீடத்தில் பலியிடப்பட்ட தந்தை ஸ்டான் சுவாமி போன்ற தியாகிகள் இருப்பார்கள். ஆனாலும், அவரது எதிர்ப்புணர்வானது எக்காலத்துக்குமானது. அவரின் அநியாய சிறைவாசத்தில் அவர் துணிச்சலோடு பதிலளித்தார் “நாங்கள் இன்னும் ஒரே குரலில் பாடுவோம். ஒரு கூண்டு பறவையால் இன்னும் கூட பாட முடியும்”. நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது, நீதித்துறை அல்ல, அவருடைய மரணம்தான் அவருக்கான விடுதலையை வென்றது.


கட்டுரையாளர் : வழக்கறிஞர் இஷா சிங் (மும்பை உயர் நீதிமன்றம்)
தமிழாக்கம் : அனிதா
செய்தி ஆதாரம் : The Wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க