டம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்

ஒரு சாவு எவ்வளவு பிரபலமடைகிறதோ, அதற்கேற்ப காசு கொடுக்க வேண்டும், இதற்கெனெ ஒரு தனி அமைச்சரவை, விரைவில் உருவாக்கபோகிறோம். - தூத்துக்குடி படுகொலை குறித்த மனுஷ்யபுத்திரன் எழுதிய கவிதை.

யார் சுட்டார்கள் என்று எனக்குத் தெரியாது
ஏன் சுட்டார்கள் என்று எனக்குத் தெரியாது
யார் சுடச்சொன்னார்கள் என்று எனக்குத் தெரியாது
இறந்தவர்களை எப்படிப் போய் பார்க்க வேண்டுமென எனக்குத் தெரியாது
இருப்பவர்களின் கண்ணீரை எனக்குத் துடைக்கத் தெரியாது
நான் ஒரு டம்மி அரசன்
நான் ஒன்றுமே செய்வதில்லை
இருந்தும் எனக்கு எதற்குமே நேரமில்லை
என்னை ஏன் கேள்விமேல் கேள்வி கேட்கிறீர்கள்
எனக்கு எதுவுமே தெரியாது

நான் இங்குதான் இருக்கிறேன்
நீங்களே பார்க்கிறீர்கள்
நான் தீயதைப் பார்ப்பதில்லை
நான் தீயதைக்கேட்பதில்லை
தீயதை செய்வதில் மட்டுமே எனக்கு விருப்பமுண்டு
நான் ஒரு பிரமாண்டமான தீமையிலிருந்து உருவான
சிறிய தீமை என்றுதான் எல்லோரும் நினைத்தீர்கள்
நானே இப்போது தீமையிலும் பெரிய தீமையாக
வளர்ந்துவிட்டேன்
தயாரிக்கப்பட்ட உரைகளுக்கு அப்பால்
எனக்கு ஒன்றுமே சொல்வதற்கில்லை
மக்கள் சாகிறார்கள்
மக்கள் சாகடிக்கப்படுகிறார்கள்
எல்லாம் அவர்கள் நன்மைக்காகவே
எதிரிகள் என் கழுத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்
எதிரிகள் என் அருகில் உட்கார்ந்திருக்கிறார்கள்
எதிர்கள் என் அறைவாசலில் வழியை மறிக்கிறார்கள்
தூங்கும்போது என் தலையில் கல்லைப்போட
என் சகாக்கள் ஆயத்தமாக இருக்கிறார்கள்
எனக்கு இதையெல்லாம் சமாளிக்கத்தான்
நேரம் சரியாக இருக்கிறது

இது பொறுப்பு மிக்க பதவி என்று
எனக்குத் தெரியும்
இந்தக் கோடையில் மலை வாசஸ்தலங்களிலேயே
பெரும்பாலும் என் அரசியல் பயணத்தை நடத்துகிறேன்
நிறைய திருமணவீடுகளுக்கு போகவேண்டியிருக்கிறது
நிறைய பூப்புனித சடங்குகளுக்கு போகவேண்டியிருக்கிறது
மலர்க் கண்காட்சிகளை திறந்து வைக்க வேண்டியிருக்கிறது
மக்கள் தெருநாய்களைப்போல தினமும் சாகிறார்கள்
சாவு வீடுகளுக்குப்போக சங்கடமாக இருக்கிறது
வருடாவருடம் எங்களால் சாகிறவர்களுக்கு நஷ்ட ஈடாக
ஒரு பெரிய தொகையை தரவேண்டியிருக்கிறது
பட்ஜெட்டில் இதற்காக தனியாக நிதி ஒதுக்குகிறோம்
ஒரு சாவு எவ்வளவு பிரபலமடைகிறதோ
அதற்கேற்ப காசு கொடுக்க வேண்டும்
இதற்கெனெ ஒரு தனி அமைச்சரவை
விரைவில் உருவாக்கபோகிறோம்
கொத்துக் கொத்தாக சாக ஆரம்பித்துவிட்டார்கள்
இதற்காக கூடுதலாக கடன் வாங்க வேண்டியிருக்கிறது

பழங்கால அரசனைப்போலத்தான் நானும்
எனக்கு எதுவும் தெரியாது
என் அந்தப்புரத்தில் வெளிச்சம் வராது
மழை பெய்கிறதா வெய்யிலடிக்கிறதா
என்று எனக்குத் தெரியாது
மாதம் மும்மாரி பெய்கிறதா என
அமைச்சரைக் கேட்டுகொள்வேன்
என் அலிபாபா குகையில்
உட்புட்றமாக பூட்டிக்கொண்டு
தங்கபுதையலில்
படுத்து உறங்குகிறேன்

மக்கள் என்னை வெறுக்கிறார்கள்
நானும் மக்களை வெறுக்கிறேன்
இதில் ஒரு சமநிலை இருக்கிறது

கொல்லப்பட்டவர்களுக்கு
என் ஆழ்ந்த அனுதாபங்கள்
கொல்லபடுபவர்களுக்கு
என் ஆழ்ந்த அனுதாபங்கள்
கொல்லப்பட இருப்பவர்களுக்கு
என் ஆழ்ந்த அனுதாபங்கள்

24.5.2018
பிறபகல் 3.49
நன்றி: மனுஷ்ய புத்திரன்

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க