பெண்கள் சட்டையில் பொத்தான்கள் இடதுபுறத்திலும்
ஆண்கள் சட்டையில் வலதுபுறத்திலும் இருப்பது ஏன்?
ண்கள் மற்றும் பெண்களின் சட்டைகளைத் துவைக்கும் போதோ அல்லது இஸ்திரி செய்யும் போதோ, பெண்களின் சட்டையில் பொத்தான்கள் இடது பக்கத்தில் இருப்பதை  கவனித்திருக்கலாம். (சில சட்டைகளில் விதிவிலக்காக அமைந்திருக்கும்) அது ஏன் என்று கேள்விக்கு பதில் நாம் யோசித்து கூட இருக்க மாட்டோம். ஆனால் அதன் பின்னிருக்கும் கதைகள் பெண்கள் மீதான வரலாற்று ரீதியான ஒடுக்குமுறைகளைப் பதிவு செய்கின்றன.
நீண்ட காலத்திற்கு முன்பிலிருந்து, சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை, உடைகள் எவ்வாறு வடிவமைக்கபட வேண்டும் என்பதை பாலினம்தான் தீர்மானித்தது. சமீபத்தில்தான் யுனிசெக்ஸ் ஃபேஷன் (Unisex Fashion) மற்றும் பரிணாம வளர்ச்சியுடன், ஆண்களும் பெண்களும் தங்கள் ஆடைகளை தாங்களே தேர்ந்தெடுக்கும்படியான சூழலும் உரிமையும் உள்ளது. இனி பெண்களுக்கு பாவாடை, சேலை மற்றும் ஆண்களுக்கு பேன்ட், வேட்டி என்பது போன்று ஆடைகளை வைத்து ஒருவரின் பாலினத்தை தீர்மானிக்க முடியாது. அனைவருக்கும் பொதுவானதான உடைகள் தற்போது வரத் துவங்கியுள்ளன. இருப்பினும், ஜீன்ஸ் பேண்ட்களில் சிறிய பாக்கெட்டுகள் மூலமாகவும், சட்டைகளில் இடது பக்க பொத்தான்கள் அமைப்பது மூலமாகவும் பெண்களுக்கு பாகுபாடு காட்டப்படுவது இன்னும் தொடர்கிறது.
படிக்க :
புடவை கடந்து வந்த பாதையும் அது சார்ந்த போராட்டங்களும் ! || சிந்துஜா
பாவாடை பெண்களுக்கே உரிய உடையா ? || சிந்துஜா
நீங்கள் ஒருபோதும் கவனித்தது இல்லை என்றால், பெண்களின் சட்டைகளில் பொத்தான்கள் இடதுபுறத்திலும் ஆண்களுக்கு வலதுபுறத்திலும் இருப்பதை கவனியுங்கள். சரி, இதன் வரலாற்றை சற்றி பின்னோக்கிச் சென்று பார்க்கலாம். பொத்தான்கள் 13-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உடைகளில் வடிவமைக்கப்பட்டன. அப்போதுதான் பொரும்பாலான புதிய தொழில்நுட்பங்களும் உருவாக்கப்பட்டது. அப்போதும் பொத்தான்கள் எல்லோருடைய ஆடையிலும் இடம் பிடிக்கவில்லை. ஏனென்றால் அதன் விலை கூடுதலாக இருந்திருக்கிறது.
அந்த காலத்தில் நவீன ஆடைகள் பெரும்பாலும் உயர்த்தட்டு மக்களுக்குரியது என்று இருந்தது. அவற்றில் பெண்கள் பல அடுக்குகள் கொண்ட ஆடைகளையே பயன்படுத்தினர்.  மறுமலர்ச்சி மற்றும் விக்டோரியன் சகாப்தத்தில் பெண்களின் ஆடைகள் பெரும்பாலும் ஆண்களை விட மிகவும் கடினமானதாகவும், விரிவானதாகவும் இருந்தன – பெட்டிகோட்கள், கோர்செட்டுகள் மற்றும் பெரிய பாவாடைகள் என பயன்படுத்தப்பட்டன. அப்போதெல்லாம் பெண்களுக்கு அவர்களின் பணிப்பெண்களே ஆடையை உடுத்தி விட்டனர். அப்படி அணிவிக்கப்படும் ஆடைகளில்  பொத்தான்களை பூட்டுவதற்கு பணிப் பெண்களுக்கு இலகுவாக இருக்க வேண்டும் என்பதற்காக இடது புறத்தில் பொத்தான்கள் தைக்கப்பட்டது என்றொரு கருத்துண்டு.
நாம் பொரும்பாலான மக்கள் வலது கை பழக்கம் உள்ளவர்கள் பெண்கள் பொதுவாக குழந்தைகளை இடது கைகளில் வைத்திருப்பார்கள், இடதுபுறத்தில் பொத்தான்களை வைப்பதன் மூலம் இலகுவாக பொத்தானை திறந்து தாய்ப்பால் கொடுக்க முடியும் என்று கருத்தும் இதற்குப் பின்னணியில் நிலவுகிறது.
இவை எல்லாம் இது குறித்துக் கூறப்படும் அனுமானங்கள்தான். ஆனால், ஃபேஷன் வரலாற்று இணையப் பதிவர் ஒருவர் மேற்கூறிய கருத்துக்கள் குறித்துக் குறிப்பிடுகையில் 17, 18-ம் நூற்றாண்டுகள் வரையிலும் மேட்டுக்குடி ஆண்களும் வேலைக்காரார்களைக் கொண்டுதான் ஆடை அணிந்திருப்பார்கள். 18-ம் நூற்றாண்டு வரை பெண்களின் ஆடைகளில் பொத்தான்கள் அரிதாகவே இருந்தன. 1860-க்குப் பிறகுதான் பெண்களுக்கான உடைகளில் பொத்தான்கள் இடதுபுறத்தில் தோன்றத் தொடங்கியது.
சிந்திக்க வேண்டிய முக்கிய விசயம் என்வென்றால், உயர் வர்க்க கனவான்கள், தங்களது வேலைக்காரர்களின் வசதிக்காக தங்களின் ஆடையில் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள் என்பது ஏற்கத் தக்கதாக இல்லையே !
ஆண்கள் சட்டையில் பொத்தான்கள் வலது புறத்தில் தைக்கப்பட்ட தன் காரணம் அவர்கள் போர்க்களத்திலும், ராணுவத்திலும் ஆயதங்களை கையாள வலது கையே பயன்படுத்தினர். அப்படி கையாளுவதற்கு வசதியாக சட்டையில் வலதுபுறத்தில் பொத்தான்கள் வடிவமைத்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இது இந்த அனுபவத்திலிருந்து வந்திருக்கலாம் என்கின்றனர்.
ஆனால், இந்த செளகரியம் பெண்களுக்கு ஏன் கிடைக்கவில்லை ? என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை.  நீடிக்கிறது.
மற்றொரு கருத்தாக்கம் நெப்போலியனை மையப்படுத்தி கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பிரெஞ்சு பேரரசர் நெப்போலியன் போனபார்ட்டின், சட்டைப் பொத்தான்களுக்கு இடையே தனது வலது  கையை உள்நுழைத்து நிற்கும் புகைப்படப் ‘போஸ்’ (Pose) ஒன்று பிரபலமானது. இதனை தனது அடையாளப்பூர்வமான புகைப்படப் போஸாக அவர் வைத்திருந்தார். பல பெண்களும் நெப்போலியன் போனபார்ட்டை கிண்டல் செய்யும் வகையில் தமது வலது கையை தமது ஆடைகளின் பொத்தான்களுக்கு இடையே நுழைத்து போஸ் கொடுத்துள்ளனர். அதனை அறிந்த நெப்போலியன் போனபார்ட் பெண்களின் சட்டைகளில் உள்ள பொத்தான்களை ஆண்களுக்கு எதிர் பக்கத்தில் வைக்கும்படி உத்தரவிட்டார். அப்படி செய்தால் பெண்கள் தம்மைப் போலவே வலது கையை பொத்தான்களுக்கு இடையே நுழைந்த்துப் போஸ் கொடுத்து தம்மை கிண்டல் செய்ய முடியாது என்றூ கருதி இந்த உத்தரவிட்டுள்ளார். இதுவும் ஒரு கருத்தாக்கம்தான்.
அதையும் கடந்து ஓரு விஷயம் என்வென்றால், அப்போதெல்லாம் குதிரை சவாரி செய்யும்போது பெண்கள் வலப்புற பக்கவாட்டில் அமர்ந்து சவாரி செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது. பெண்கள் குதிரை சவாரி செய்யும்போது காற்று அவர்களில் மேல் பாய்வதை குறைத்து துணியை விலக விடாமல் தடுக்க இடதுபுறத்தில் பொத்தான்கள் பயன்படுத்தப்பட்டதும் ஓரு காரணம் என்கிறார்கள்.
ஆடையில் பாலின சமத்துவம்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பாலியல் வல்லுநர் ஹாவ்லாக் எல்லிஸ் எழுதுகிறார் ஆண் மற்றும் பெண்: இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை பாலியல் கதாபாத்திரங்களின் ஆய்வு (1894-ல் வெளியிடப்பட்டது), பெண்களின் ஆடைகள் வலமிருந்து இடமாக பொத்தான் இருப்பது பெண்களின் “வலிமை மற்றும் வேகத்தை குறைப்பதாக இருந்திருக்கக் கூடும்” என்கிறார். எனவே, ஆண்களை விட பெண்கள் தாழ்வானவர்கள் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்கிறார். பெண்கள் ஆடையில் உள்ள சிரமங்களால் பல கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேர்ந்தது.
பெண்களின் ஆடைகள் விடுதலையை வெளிப்படுத்தத் தொடங்கியதும், ஆண்களின் ஆடைகளிலிருந்து (எ.கா:பேன்ட்) புதிய விசயங்கள் பெண்களின் ஆடைகளுக்கும் வந்தன. உற்பத்தியாளர்கள் இடதுபுறத்தில் உள்ள பொத்தான்களை ஆண்கள் மற்றும் பெண்களின் ஆடைகளை வேறுபடுத்துவதற்கான ஒரு நடைமுறையாகப் பராமரித்தனர் என்று மற்றொரு கோட்பாடு வலியுறுத்துகிறது.
படிக்க :
நாகரிக வளர்ச்சியும் ஆடைகளின் வரலாறும் !!
ஜீன்ஸ் : ஆடையின் வரலாறும் – பொதிந்துள்ள உழைப்பின் வரலாறும் !
பெண்களின் சட்டையில் உள்ள இடதுபக்க பொத்தான்கள் பாலின பாகுப்பாட்டின் ஓரு அடையாளம். அடக்குமுறைகள் காலங்காலமாக பெண்களின் ஆடையிலும் தொடர்கிறது என்றால் மிகையாகாது. ஆனால், இன்று காலம் மாறி வருகிறது. அதன் ஒரு வடிவமாக பெரிய நிறுவனங்கள் யூனிசெக்ஸ் உடைகளை கையில் எடுத்திருக்கின்றன. அவை, ஆண்களைபோன்றே சட்டையில் பொத்தான்கள் வலதுபக்கத்தில் வைக்க உந்துகிறது. இதுபோன்ற முன்னெடுப்புகள் கட்டாயம் ஆடையில் சமத்துவத்தை நோக்கி பயணிக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.
மினசோட்டா ஆடை வடிவமைப்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கிம் ஜான்சன் இது குறித்துக் கூறுகையில் “பாலினங்களுக்கிடையில் பாகுபாட்டை நாம் தொடரும் வரை அது நம் ஆடையிலும் தொடரும்” என்கிறார். உண்மையான வார்த்தைகள் இவை. சமூகத்தில் நிலவும் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள் நீங்கும் வரை, ஆடைகளில் இத்தகைய பாகுபாடுகளும் கட்டுப்பாடுகளும் சமூக எதார்த்தமாக நீடிக்கவே செய்யும் !!
சிந்துஜா
சமூக ஆர்வலர்
disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க