சரா கொண்டாட்டத்தில் இராவணன் உருவப் பொம்மையைக் கொளுத்தி வீட்டுக்கு வீடு இனிப்புகளும் வழங்கிக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர், ‘ஹிந்துக்கள்’. அவர்களின் காவலனாக தன்னை காட்டிக்கொள்ளும் ‘56 இன்ச் தேசபக்தர்’ மோடியோ இந்தியாவையே எரித்து கொண்டாடிக் கொண்டிருகிறார். இந்திய மக்களின் சொத்தான பொதுத்துறைகளை ஒட்டுமொத்தமாக விற்க முடிவெடுத்து ஒவ்வொன்றாக விற்கவும் துவங்கி விட்டார், மோடி. அதில் முக்கியமானது,  ஏர் இந்தியா விற்பனை.
பிள்ளைகளது பள்ளிக் கட்டணத்துக்கே திண்டாடுகின்ற நமக்கு, விமானக் கம்பெனியை விற்றால் என்ன ? விற்காவிட்டால் என்ன? என்று இருந்து விட முடியாது. ஏர் இந்தியாவை டாடாவுக்கு கிட்டத்தட்ட தானமாகவே வாரிக் கொடுத்திருப்பதால் பல்லாயிரம் கோடி ரூபாய் நட்டம் பொதுமக்களாகிய நமது தலையில் தான் விழப் போகிறது. அதற்காகவேனும் ஏர் இந்தியா தள்ளுபடி விற்பனையை நாம் எதிர்த்தாக வேண்டும்.
1948 வரை இந்தியாவின் விமானப் போக்குவரத்து டாடா கையில்தான் இருந்தது. பின்னர் 1953−ல் டாடாவிடமிருந்து பெறப்பட்டு அரசுடைமையாக்கப்பட்டது. இந்திய அரசின் அதிகாரப்பூர்வமான விமான நிறுவனமாக அறிவிக்கப்பட்டது. அன்று முதல் ஏர் இந்தியா நிறுவனத்தை மேம்படுத்த இந்திய அரசு இலட்சக்கணக்கான கோடிகளை செலவிட்டுள்ளது.
படிக்க :
மூணாறு நிலச்சரிவு : தமிழக தோட்டத் தொழிலாளர்களின் உயிரைக் குடித்த டாட்டாவின் இலாப வெறி !
பில்கேட்ஸ் – டாடா இந்திய விவசாயத்திற்கு வைக்கும் கடைசிக் கொள்ளி !
அப்படி பராமரிக்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் தற்போதைய தினசரி நட்டம் ரூ.20 கோடி என்கிறார்கள். ஒரு நிறுவனத்தின் தினசரி நட்டம் ரூ.20 கோடி என்றால், அதற்கு யார் காரணம்? மோசமான நிர்வாகமும் அரசுத் துறையின் மெத்தனப் போக்கும்தான் காரணம் என்று கூறுகிறார்கள்.
2009−2010 நிதியாண்டில் ஏர் இந்தியாவை நவீனப்படுத்த இந்திய அரசு வாரி இறைத்த பணம் ரூ.1,10,000 கோடி. அப்படி இருந்தும் அடுத்த பத்து ஆண்டுகளில் 2020−21−ல் ரூ.61,562 கோடிகளுக்கு கடனாளியானது, ஏர் இந்தியா. இது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கடன்தான். நட்டமும் செயற்கையாக உருவாக்கப்பட்டதுதான். நட்டத்தையும், கடனையும் காரணம் காட்டி ஏர் இந்தியா அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது. இதை விற்பனை என்று சொல்வதைவிட தானம் என்றே சொல்லலாம்.
ஏர் இந்தியாவின் மதிப்பு சுமார் 1,57,339 கோடி என்கின்றனர், மதிப்பீட்டு நிபுணர்கள் (valuation experts). (ஆதாரம்: Money Control மின்னிதழ் 13.10.2021). இந்த சொத்தைத்தான் வெறுமனே ரூ.18,000 கோடிகளுக்கு வாங்கிக் கொண்டார் டாடா; இந்த விற்பனை ஒப்பந்தப்படி, இலவச இணைப்பாக ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் 100% பங்குகளும், இன்னொரு கூட்டு நிறுவனமான Air India SATS நிறுவனத்தின் 50% பங்குகளும் டாடாவுக்கு கொடுக்கப்படும்.
ரத்தன்_டாடா
ரத்தன் டாடா
ஏர் இந்தியாவின் தற்போதைய கடனான ரூ.61,562 கோடி கடனில் டாடா ரூ.15,000 கோடிகளை அடைப்பார். எஞ்சிய கடனை (ரூ.46,262 கோடி) இந்திய அரசு எப்படி அடைக்கும்? இருக்கவே இருக்கிறது, ஜி.எஸ்.டி., பெட்ரோலுக்கான கலால் வரி. இதில் ஏதாவது ஒரு பொருளுக்கு ஜி.எஸ்.டி வரியை அதிகமாக்கி நம்மை கசக்கிப் பிழிவார்கள். மொத்தத்தில் டாடா மஞ்சள் குளிக்க நமது இரத்தத்தை உறிஞ்சப் போகிறார்கள்.
ஆக, 1,57,339 கோடி சொத்துள்ள ஒரு நிறுவனத்தின் ரூ.61,562 கோடிகள் கடனை அடைப்பதற்காக அந்நிறுவனத்தை வெறும் ரூ.18,000 கோடிக்கு விற்கிறார்கள், என்றால் நட்டம் யாருக்கு? இலாபம் யாருக்கு? சுமை யாருக்கு? ரொம்பவும் எளிதான கணக்கு. ரூ.1,39,339 கோடி டாடாவுக்கு இலாபம். பொதுமக்களாகிய நமக்கு ரூ.46,262 கோடிகள் கடன் சுமை !
இந்த விற்பனை, ஏர் இந்தியா ஊழியர்களை பேரவலத்தில் தள்ளி இருக்கிறது. டாடாவுக்கு ஏர் இந்தியாவை அள்ளிக் கொடுத்த மோடி அரசு, ஏர் இந்தியாவில் பணிபுரிந்த சுமார் 10,000 நிரந்தர ஊழியர்கள் மற்றும் 19,000 காண்டிராக்க்ட் தொழிலாளர்களுக்கு ஒரு இருண்ட காலத்தை அளித்துள்ளார்.
ஏர் இந்தியாவில் பல ஆண்டுகள் பணியாற்றிய இந்த தொழிலாளர்களின் மீது ‘கருணை’ மழை பொழிந்துள்ளார், டாடா. விலைக்கு வாங்கிய ஒரு வருடத்துக்கு வேலையில் வைத்துக் கொள்வாராம். இரண்டாம் ஆண்டிலிருந்து ஆட்குறைப்பு செய்வாராம். மூன்றாவது ஆண்டில் பெரும்பான்மையினர் இருக்கமாட்டார்கள். இந்த நரியின் நயவஞ்சகம் இப்போதே தோலுரிரிய ஆரம்பித்துவிட்டது. பெரும்பாலும், விமான ஊழியர்கள் விமான நிலையத்துக்கு அருகிலேயே வசிக்க வேண்டும். அதற்காக, அந்த நிறுவனமே குடியிருப்புகளைக் கட்டித்தரும். இது வழக்கமான நடைமுறை.
ஏர் இந்தியா, டாடா கைகளுக்கு போனதும், ஊழியர்களை குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றும் பணி துவங்கி விட்டது. 7 ஆயிரம் ஊழியர்கள் உடனடியாக குடியிருப்புகளை காலி செய்தாக வேண்டும். இல்லை எனில், ரூ.15 இலட்சம் அபராதம். அதோடு, அந்த வீட்டுக்கு சந்தை மதிப்பில் இரண்டு மடங்கு வாடகை தர வேண்டும். எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!
படிக்க :
பழைய வாகன அழிப்புக் கொள்கை : மோடியின் புதிய கார்ப்பரேட் சேவை !
நக்சல்பாரிக்கு முன்பிருந்து துவங்கி … || சாரு மஜும்தாரின் மகன் நேர்காணல்
இந்த மோசடிக்கு சங்கிகள் ஒரு சப்பைக்கட்டு கட்டுகின்றனர். ஏர் இந்தியாவின் தினசரி நட்டமான ரூ.20 கோடி மிச்சமானது என்கிறனர். இந்த நட்டம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. 1990−களில் புகுத்தப்பட்ட தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கிற புதிய தாராளவாதக் கொள்கையின் கீழ் பொதுத்துறைகளை ஒழித்துக்கட்ட 3 உத்திகளை அரசு கையாண்டது.
முதலாவதாக, தரமான சேவை. இரண்டாவதாக, பரந்து விரிந்த சேவை. மூன்றாவதாக, நட்டத்தை தடுத்தல். தரமான சேவை, பரந்து விரிந்த சேவைகள் என்பதன் இலட்சணத்தை, BSNL முதல் வங்கிகள் இணைப்பு வரை கடந்த கால நிகழ்வுகள் அனைத்திலும் கண்டோம். அலைபேசி துறையில் இலாபகரமாக இயங்கி வந்த பி.எஸ்.என்.எல்-க்கு 3ஜி, 4ஜி வசதிகளை தாமதமாகத் தருவது, தராமல் இழுத்தடிப்பது ஆகிய உள்ளடி வேலையின் மூலமாகவே அந்நிறுவனம் நட்டத்தில் தள்ளப்பட்டது.
அதே வகையில் தான் ஏர் இந்தியாவும் பலியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே ரயில்வே… அடுத்தது எல்.ஐ.சி. அதற்கு அடுத்து கப்பல் கழகம் (Shipping Corporation of India – SCI) என இதற்கு முடிவே இருக்கப் போவதில்லை. மொத்த நட்டங்களும் நம் தலையில் வரிகளாய் வந்து விழ, பொதுத்துறை நிறுவனங்களையும், அவற்றின் சொத்துக்களையும், அவற்றிலிருந்து பெறப்போகும் இலாபங்களையும் சுவைக்க கார்ப்பரேட்டுகள் தயாராக இருக்கின்றன.
நன்றி : புதிய தொழிலாளி