ர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு 13.8.2021 அன்று குஜராத்தில் நடைபெற்றது. இதில் காணொளி மூலம் கலந்து கொண்ட முன்னாள் குஜராத் முதலமைச்சரும், இந்நாள் ஒன்றிய அரசின் முதன்மை அமைச்சருமான ‘திருவாளர்’ மோடி அவர்கள் கலந்து கொண்டார்.

சங்க பரிவாரத்தின் கார்ப்பரேட் எஜமானர்களின் மனம் குளிரும் வகையில் பல்வேறு சலுகைகளைப் பற்றி பேசிய மோடிஜி, பழைய வாகனங்களை பயன்பாட்டிலிருந்து நீக்கும் கொள்கையின் சரத்துக்கள் குறித்து விளக்கிப் பேசினார். மேலும் அதற்கான பொறுப்பையும் நாம் அனைவரும் ஏற்க வேண்டுமென்றும் உரையாற்றினார்.

இது குறித்து அன்னாரின் உரையில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகளாவன : பழைய வாகனங்களை அழிக்கும் மையம் (scrap center) குஜராத்தில் உருவாக்கப்படும்; இதனால் வெளிநாடுகளிலிருந்து அதிக அளவு இரும்பு இறக்குமதி செய்வது குறையும்; சுற்றுச்சூழல் மாசு குறையும், ரூபாய் 10 ஆயிரம் கோடி முதலீட்டுக்கான வாய்ப்பு கிடைக்கும்.

மேலும் இது குறித்துக் கூறுகையில், இத்திட்டம் இந்தியாவின் வளர்ச்சிப் பாதைக்கு ஒரு மைல் கல்லாக அமையும் என்றும் இளைஞர்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அமையும் என்றும் தெரிவித்தார். மாசுக் கட்டுப்பட்டைக் காரணம் கூறி நாம் அனைவரும் பழைய வாகனங்களை அழித்து விட்டு, புதிய வாகனங்களை வாங்க வேண்டும் என்று நமது பாக்கெட்டுக்குள் கை வைத்துள்ளார்.

படிக்க :
♦ இயற்கை அழிவிற்கு காரணம் உழைக்கும் மக்களா ? கார்ப்பரேட் முதலாளிகளா?
♦ அரசே நடத்தும் வழிப்பறிக் கொள்ளை : மோட்டார் வாகன சட்டத் திருத்தம் !

இந்த பழைய வாகனங்கள் அழிப்புக் கொள்கையானது, இதற்கு முன்பே ஒன்றிய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியால் முன்மொழியப்பட்டதுதான். துவக்கத்தில் இது அரசு, பொதுத்துறை வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அறிவித்துவிட்டு, பின்னர் தனது எஜமானர்களின் மனம் நோகக் கூடாது என்பதற்காக இத்திட்டத்தை மக்களுக்கும் விரிவுப்படுத்தி அவர்களின் மனதைக் குளிர வைத்துவிட்டார்.

இத்திட்டத்தின் அடிப்படையில் புதிய வாகனங்கள் வாங்கினால், அதற்கான பதிவுக் கட்டணத் தள்ளுபடியோடு, வாகன உற்பத்தி நிறுவனங்கள் 5% தள்ளுபடியும் தர வேண்டும் என்று அறிவித்துள்ளார், மோடிஜி. அதே சமயத்தில் பழைய வாகனங்களைப் பயன்படுத்தும் ‘தேச துரோகிகள்’ வாகனத்துக்கான எஃப்.சி [FC]-யை புதுப்பிக்கும் போது அதற்கான கட்டணம் உயர்த்தப்படும் என்றும் மாநில அரசுகளும் அவ்வாகனங்களுக்குக் கூடுதலாக பசுமை வரியை விதிக்கும் என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் புதிய வாகனங்களில் விற்பனை அதிகரிக்கும். இது 2022 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவித்தார்.

ஆனால், இதுவரை இம்மசோதா பல்வேறு காரணங்களால் நடைமுறைக்கு வரவில்லை. அதே வேளையில் ‘திருவாளர்’ மோடி அவர்கள் முதலீட்டாளர் நிகழ்வில் கூறியது போல் 2024-ல் நடைமுறைக்கு வரலாம். அல்லது மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களின் நிர்பந்தத்தால் அதற்கு முன்பும் வரலாம். ஆனால், வருவது நிச்சயம்.

பழைய வாகனங்களை பயன்படுத்திதான் ஆக வேண்டும் என்பதை மக்கள் எவரும் விரும்பி ஏற்பது இல்லை. இதற்குக் காரணம் புதிய வாகனங்களை வாங்க இயலாமைதான். 90%-க்கும் மேற்பட்ட மக்கள் வாங்கும் சக்தியை இழந்து வாடும் சூழலில் பழைய வாகனங்களை அழித்து புதிய வாகனங்களை வாங்க முடியுமா?

ஏற்கெனவே, மாதம் ரூபாய் 8 ஆயிரத்திற்கு மேல் கூலியோ சம்பளமோ கிடைப்பதில்லை. போதிய வேலை வாய்ப்பும் இல்லை. வேலைக்கேற்ற கூலியும் கிடைக்கவில்லை. வாழ்க்கையை ஓட்டுவதே குதிரைக் கொம்பாக உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் ஓட்டையோ, உடைசலோ பழைய வாகனங்களை தவிர்க்க இயலாமல் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இம்மசோதாவின் கீழ் அழிக்கப்படும் பழைய வாகனங்களுக்கு உரிய இழப்பீடு கிடையாது. ஆனால், புதிய வாகனங்களுக்கு மட்டும் வரிச்சலுகை.

இது, சுற்றுச்சூழல் மாசுபாடு, சாலை விபத்துக்கள், கச்சா எண்ணெய் பயன்பாடு ஆகியவற்றைக் குறைக்கும் என மோடி அரசு கூறுகிறது. ஆனால் அதை விட, “புதிய வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும். மேலும் வாகன உற்பத்தி நிறுவனங்களின் குறைந்தக் கூலி, அபரிதமான சுரண்டலுக்கும், முதலீட்டு பெருக்கத்திற்கும் வழிவகுக்கும்.” என்பதுதான் மோடி இந்த மசோதாவை கொண்டுவரும் உண்மையான நோக்கம். முதலீட்டாளர் மாநாட்டில் மோடி இது குறித்துப் பேசுவதில் இருந்தே இதனை புரிந்து கொள்ள முடியும்.

புதிய வாகனங்கள் மாற்றுவதற்கு இவர்கள் கூறும் காரணங்களில் பிரதானமானவை, பழைய வாகனங்களால் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன என்பதும், சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது என்பதும் தான்.

சாலை விபத்துகள் என்பவை பழைய வாகனங்களைப் பயன்படுத்துவதால் அல்ல – சாலைகளை முறையாக, தொடச்சியாக, நேர்த்தியாக பராமரிக்காததன் விளைவாகத் தான் ஏற்படுகின்றன. ஆண்டுதோறும் சாலை வரி என்ற பெயரில் வாகன பயன்பாட்டாளர்களிடமிருந்து பிடுங்கியும் சாலைகள் படுகேவலமாகவே இருக்கின்றன.

அடுத்ததாக சுற்றுச்சூழல் பிரச்சினை. கரிய மில வாயுவை கட்டுப்படுத்தக்கூடிய வாகனங்களை மாற்றுவதற்கான கால அவகாசம் ஏற்படுத்தி அந்தக் காலகட்டத்திற்குள் படிப்படியாக அதனை நோக்கிச் செல்ல, வாகன ஓட்டிகளுக்கு மானியங்கள், ஒதுக்கீடு செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது.

அப்படி இல்லாமல், பழைய வாகனங்களுக்கு எஃப்.சி புதுப்பிப்பு கட்டணத்தை அதிகரிப்பது, பசுமை வரி போடுவது போன்றவற்றின் மூலம் சுற்றுச் சூழல் மாசைக் கட்டுப்படுத்த முடியாது. இவை மக்களை நிர்பந்திக்க மட்டுமே உதவும். ம்க்களிடம் இருந்து வேண்டுமானால் பிடுங்கித் தின்னலாம். ஆனால் பழைய வாகனங்களை மாற்றுவதற்கு நீண்ட கால அவகாசமும் குறைந்த வட்டியில் நிதியை ஏற்பாடு செய்து தரவேண்டும்.  ஆனால், பொதுத்துறைகளையே தனியாருக்க்கு விருந்தாக்கிப் படைக்கும் மோடி அரசு இதனை ஒருபோதும் செய்யப் போவதில்லை.

வாங்கும் வரியையாவது சாலைகளை தரமாக முறையாக தொடர்ச்சியாக பராமரிப்பதற்கு பயன்படுத்தினால் விபத்துகள் ஏற்படாது. புதிய வாகனங்களை வாங்க வேண்டிய தேவையும், வாங்கும்படி மக்களை கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமும் இருக்காது.

பழைய வாகனங்களை அழித்து, புதிய வாகனங்களை வாங்கச் செய்வது இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு மைல் கல் என்று இவர்கள் கூறுவது அவர்களுடைய எஜமானர்களின் வளர்ச்சியைத்தான் என்பதை தனியாகச் சொல்லிப் புரிய வேண்டிய அவசியம் இல்லை.

இனி என்ன? இவர்கள் எஜமானர்களின் வளர்ச்சிக்காக இளிச்சவாயர்களாக இருந்து, இவர்கள் கூறும் பொறுப்பை ஏற்கப்போகிறோமா?, இல்லையா? என்பதுதான் இன்று நம் முன் உள்ள கேள்வி !


கதிரவன்