திரிபுராவில் இந்துவெறி குண்டர்களின் வெறியாட்டம் !
தேவை : பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியும் போராட்டங்களும்!
ண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என்று 2014−ல் பா.ஜ.க. வாய்ச்சவடால் அடித்து ஒன்றிய ஆட்சியைக் கைப்பற்றியது. அதேபோல, திரிபுரா மாநிலத்தில் ஆண்டுக்கு 50,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம், 7−வது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்துவோம் என்று 2018 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்று வாக்குறுதிகளை அள்ளி வீசி, சிறிய வாக்கு வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை (சி.பி.எம்) வீழ்த்தி அம்மாநில ஆட்சியைக் கைப்பற்றியது.
தேர்தலில் வெற்றி பெற்றவுடனே பெலோனியா நகரில் இருந்த பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் சிலையை உடைத்து, தனது வன்முறை வெறியாட்ட வக்கிரத்தையும் திமிரையும் இந்துவெறி பாசிச கும்பல் பறைசாற்றியது. ஆட்சிக்கு வந்த பிறகு, ஆளும் பா.ஜ.க. கும்பல் தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விட்டது.
வேலையின்மை, விலையேற்றம் முதலானவற்றால் ஆளும் பாஜக ஆட்சியின் மீதான வெறுப்பு அம்மாநில மக்களிடம் அதிகரித்து வருவதோடு, ஆங்காங்கே போராட்டங்களும் பெருகி வருகின்றன. இதிலிருந்து மக்களைத் திசைதிருப்பும் நோக்கத்திலும், கம்யூனிஸ்டுகளை ஒழிப்பது முக்கிய வேலைத்திட்டம் என்ற வகையிலும் சி.பி.எம். கட்சியினர் மீது இந்துவெறி பாசிஸ்டுகள் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
படிக்க :
திரிபுராவில் தோழர் லெனின் சிலை இடிப்பு ! பு.மா.இ.மு கண்டனம் !
என் இனமடா நீ ! மோடி – பிப்லப் சந்திப்பில் என்ன பேசுவார்கள் ?
தலாய் மாவட்டம் அம்பாசாவில் நடைபெற்ற பா.ஜ.க.-வின் நிகழ்ச்சியில், ‘‘2023−க்குள் கம்யூனிஸ்ட்களை திரிபுராவிலிருந்து வேரோடு பிடுங்கியெறிய வேண்டும்’’ என்று ஊழியர்களிடம் வெறிகொண்டு பேசியுள்ளார், திரிபுராவின் பா.ஜ.க. முதல்வர் பிப்ளவ். போர்த்தந்திர ரீதியில் சீனா மற்றும் வங்க தேசத்திற்கு எதிராகவும், வங்கதேச முஸ்லீம்களின் ஊருவல் என்ற பெயரில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் தொடுக்கவும், வடகிழக்கு மாநிலங்களில் கிறித்துவர்களுக்கு எதிராகவும் தேசியவெறியையும் மதவெறியையும் தூண்டி வன்முறைக் கலவரங்களைக் கட்டவிழ்த்துவிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பதே இந்துவெறி பாசிச கும்பலின் நோக்கமாக உள்ளது.
இதனை நிரூபிக்கும் வகையில், ‘‘இந்துராஷ்டிரக் கனவை நிறைவேற்ற வடகிழக்கு மாநிலங்கள் ஆர்.எஸ்.எஸ்−க்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதி’’ என்று கூறுகிறார், முன்னாள் ஆர்.எஸ்.எஸ் ஊழியரும், திரிபுரா தேர்தல் பொறுப்பாளருமான சுனில் தியோடர்.
திரிபுராவில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுவதைக் கண்டித்தும், ஆண்டுக்கு 50,000 வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என்ற பா.ஜ.க. கும்பலின் வெற்று வாக்குறுதியை அம்பலப்படுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், ‘‘எங்கே எனது வேலை’’ என்ற முழக்கத்துடன் முறையான அனுமதியுடன் பேரணி நடத்தத் திட்டமிட்டிருந்தது. ஆனால், திடீரென பேரணிக்கு அனுமதியை போலீசு மறுத்ததையடுத்து, தடையை மீறி பேரணி செல்ல முயன்றவர்கள் மீது பா.ஜ.க குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
திரிபுராவில் மொத்தம் 60 சட்டமன்றத் தொகுதிகளில் 20 இடங்கள் பழங்குடியினர் நிறைந்துள்ள பகுதியாகும். தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டதால், மக்கள் மத்தியில் பா.ஜ.க. மீது அதிருப்தியும் வெறுப்பும் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த ஏப்ரல் 2021−இல் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளுக்கான (TTAADC) தேர்தலில் பா.ஜ.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் படுதோல்வியடைந்துள்ளன. இப்பாசிச சக்திகள் திரிபுராவில் தொடர்ந்து தனிமைப்பட்டுப் போயுள்ளதால், அடுத்து நடைபெறவுள்ள 2023 ஆண்டின் சட்டமன்றத் தேர்தலில் வெற்றியைச் சாதிக்க வன்முறையும் பயங்கரவாதமும்தான் ஒரே வழி என்று இந்துவெறிக் கும்பல் தீர்மானித்துள்ளது.
கடந்த மார்ச் 2018−லிருந்து ஜூன் 2021 வரை, 662 சி.பி.எம். கட்சி அலுவலகங்கள், 204 மக்கள்திரள் அமைப்புகளின் அலுவலகங்கள், கட்சி ஊழியர்களின் 3,363 வீடுகள், கட்சி ஆதரவாளர்களுக்குச் சொந்தமான கடைகள், 1,500 மீன்பிடி கலங்கள் மற்றும் ரப்பர் மரங்கள் ஆகியவற்றை தாக்கி இந்துவெறி கும்பல் சேதப்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 8−ஆம் தேதியன்று சி.பி.எம் கட்சி ஊழியர்கள் மீது கொலைவெறித் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டுள்ள சங்கப் பரிவார கும்பல், சி.பி.எம்−க்கு சொந்தமான 42 கட்சி அலுவகங்களையும், கட்சி ஊழியர்களின் வீடுகள், கடைகள் என 67 கட்டிடங்களையும், தேசர்கதா என்ற பத்திரிக்கை அலுவலகத்தையும் தீ வைத்து எரித்துள்ளது.
சி.பி.எம். கட்சி அலுவலகங்கள் மட்டுமின்றி, இதர அரசியல் கட்சிகளின் அலுவலகங்களும் பல்வேறு நாளேடுகளின், மின்னணுச் செய்தி ஊடகங்களின் அலுவலகங்களும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. தலைநகர் அகர்தலா மட்டுமின்றி, பல்வேறு நகரங்களிலும் இத்தகைய அட்டூழியங்கள் நடந்துள்ளன. இத்தகைய வன்முறை வெறியாட்டத்தின்போது அம்மாநிலப் போலீசு கைகட்டி நின்றது. சி.பி.எம். மத்தியக் கமிட்டியின் கூற்றுப்படி, சி.பி.எம். கட்சி அலுவலக வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த மத்திய ரிசர்வ் போலீசுப் படையானது, இத்தாக்குதலுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்கள் இத்துடன் நின்றுவிடப் போவதில்லை. ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள இந்த பாசிச கும்பல், ஒட்டுமொத்தமாக இடதுசாரி கருத்தாளர்கள், பகுத்தறிவாளர்கள், சிறுபான்மையினர் அனைவரையும் அழித்தொழிக்கும் வரை ஓயாது. தேர்தல் மூலம் இந்துவெறி பாசிச பயங்கரவாத கும்பல்களை ஒருக்காலும் ஒழித்துவிடவும் முடியாது.
ஆர்.எஸ்.எஸ். என்பது தேர்தல் முறையில் நம்பிக்கையற்ற அரை ரகசியமாக இயங்கும் கொடிய பாசிச அமைப்பு. அது, வேர்மட்ட அளவில் தொடங்கி உயர்மட்டம் வரை சித்தாந்தத்தால் பயிற்றுவிக்கப்பட்டு ஆயுதப் பயிற்சி உட்பட பல பயிற்சிகள் அளிக்கப்பட்டு அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட்டுள்ள இயக்கமாகும். எனவே, தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டும் இந்துவெறி பாசிச அமைப்பை முறியடிக்கும் வகையில் ஆற்றல் கொண்ட ஓர் அமைப்பு அல்லது பல்வேறு அமைப்புகளின் கூட்டணியால்தான் பார்ப்பன பாசிசத்தை வீழ்த்த முடியும்.
ஆனால், காவி பாசிச குண்டர்களை எதிர்கொள்வதற்கு எந்தத் திட்டமும் இல்லாமல், சி.பி.எம். கட்சி இப்பிரச்சினையை எதிர்கொள்ளும் விதமே அதன் கையாலாகாத்தனத்தை அம்பலப்படுத்திக் காட்டுகிறது. இத்தாக்குதலை, ‘‘எதிர்க்கட்சிகள் மீதான தாக்குதல், ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்’’ என்று மொன்னையாகப் குறிப்பிடுகிறார், சி.பி.எம். கட்சியின் பொதுச் செயலாளரான சீதாராம் யெச்சூரி. இக்கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்து மாநிலத் தலைநகர் அகர்தாலாவில் அடையாளப் பேரணியையும், பிற மாநிலங்களில் அடையாளப் போராட்டங்களையும் நடத்துகிறது, சி.பி.எம். கட்சி.
தற்பொழுது நடைபெற்ற தாக்குதலுக்கு எதிராக மட்டுமல்ல, மோடி ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, 2018 திரிபுரா சட்டமன்றத் தேர்தலுக்கு முந்தைய நான்காண்டு காலத்தில் சி..பி.எம். ஆட்சியிலிருக்கும் போதுகூட பாசிச சக்திகளுக்கு எதிராக மக்களைத் திரட்டவோ, ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்கப் பரிவார அமைப்புகளின் வளர்ச்சியைத் தடுக்கவோ எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.
அதாவது, காவி பாசிச சக்திகளை, இன்னுமொரு தேர்தல் அரசியல் கட்சியாகக் கருதி ஜனநாயக பூர்வமான அணுகுமுறையில் அணுகி வருகிறது சி.பி.எம். கட்சி. இதனால், சி.பி.எம். ஆட்சியிலிருந்த காலகட்டத்திலேயே திரிபுராவில் ஆர்.எஸ்.எஸ். வேகமாக வேரூன்றத் தொடங்கியது. 2013 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வியடைந்த பிறகு, பல்வேறு அமைப்புகள் மூலம் பலதரப்பட்ட மக்கள் மத்தியில் வேலை செய்ததன் மூலம், 2014−ல் 60−ஆக இருந்த ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களின் எண்ணிக்கை 2018−ல் 265 ஆக உயர்ந்தது.
படிக்க :
ஆர்.எஸ்.எஸ். கும்பலிடம் அறிவியல் படும் பாடு !
மேற்கு வங்கம் : சிவப்பு காவியாக மாறியது எப்படி ?
2018 தேர்தலில், சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த பெருமளவிலான அரசு ஊழியர்களும், குடும்ப உறுப்பினர்களும் பா.ஜ.க.விற்கு வாக்களித்துள்ளனர் என்பதே இதற்கு சிறந்த உதாரணம். மக்கள் மத்தியில் மட்டுமல்ல, தன் கட்சி அணிகளுக்கூட இந்துவெறி பாசிச ஆர்.எஸ்.எஸ். − பா.ஜ.க பற்றிய புரிதலை சி.பி.எம். கட்சி கொடுக்கவில்லை. இதைதான், ‘‘சாதாரண மக்களுக்கு மார்க்ஸ் யாரென்று தெரியாது, அவர்கள் மூலதனத்தையும் படித்ததில்லை’’ என்கிறார், உள்ளூர் ஆர்.எஸ்.எஸ்.காரர்.
இப்படி, பாசிச சக்திகளை களத்தில் எதிர்த்து முறியடிக்கும் திட்டம் இல்லாமல், மக்களை கையறுநிலைக்கு சி.பி.எம். கட்சி தள்ளியதற்கு காரணம், அக்கட்சி பின்பற்றி வரும் திரிபுவாத – நாடாளுமன்ற துரோகப் பாதைதான். திரிபுராவில் பாசிசம் அரங்கேறி வருகின்ற இந்த நிலைமைகள் வரலாற்றில் முதல்முறையாக நடக்கும் விசயமல்ல. ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தவுடன் யூதர்கள் மீது படுகொலை நடத்துவதற்கு முன்னதாக, கம்யூனிஸ்டுகளைத்தான் நரவேட்டையாடினான் என்பதும், அங்கிருந்த திரிபுவாத கம்யூனிஸ்ட்களின் துரோகத்தால்தான் ஹிட்லரால் ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது என்பதும்தான் வரலாறு.
ஆகவே, சி.பி.எம். ஊழியர்கள் மீதான கொலைவெறித் தாக்குதலை இந்தப் பின்னணியில் இருந்தும், பரிமாணத்திலிருந்தும்தான் பார்க்க வேண்டும். மக்களுக்கு இந்துவெறி பாசிச பயங்கரத்துக்கு எதிராக விழிப்புணர்வூட்டி, செயலுக்கமிக்க வகையில் திட்டமிட்டுப் போராடி பாசிச குண்டர் படைகளை களத்தில் எதிர்கொண்டு முறியடிக்க வேண்டும். இதற்கு திரிபுராவில் உள்ள புரட்சிகர அமைப்புகள், ஜனநாயக சக்திகள், போராடும் உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியைக் கட்டியமைத்துப் போராட வேண்டியது காலத்தின் கட்டாயம்!

அப்பு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க