திரிபுரா, நாகலாந்து, மேகலாயா தேர்தல் முடிவுகள்: எச்சரிக்கை, பரவிவருகிறது பாசிசம்!

அதிகாரத்தைப் பயன்படுத்தி, அராஜகவாதிகள் மட்டுமே வெற்றிபெற வழிவகுக்கும் இந்த போலி ஜனநாயகத் தேர்தல்களில் பா.ஜ.க.வை வீழ்த்திவிட முடியும் எனக் கருதுவதும், அந்த வெற்றிகளைக் கொண்டே பாசிஸ்டுகளை வீழ்த்திவிடலாம் எனக் கருதுவதும் பாசிஸ்டுகளின் வெற்றிக்கே வழிவகுக்கும் என்பதுதான் நடந்து முடிந்த மூன்று மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்துகின்றன.

சென்ற மாதம் நடந்து முடிந்த திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க வெற்றி பெற்றதன் மூலம் பா.ஜ.க கட்சியானது சமூகத்தில் அனைத்துத் தரப்பினருக்குமான கட்சி என நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த வெற்றி கேரளாவிலும் எதிரொலிக்கும் என்றும் தேர்தல் வெற்றிக் கூட்டத்தில் பெருமிதம் கொண்டார் மோடி. பெரும்பான்மை ஊடகங்களும் “வடகிழக்கு மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தும் பா.ஜ.க, மோடி அலையால் இது சாத்தியமாயிற்று” என மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகளைக் கொண்டாடின.

மூன்று மாநிலங்களில் திரிபுராவில் மட்டுமே 32 தொகுதிகளில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது பா.ஜ.க. மற்ற இரண்டு மாநிலங்களான நாகலாந்தில் 12 தொகுதிகளிலும், மேகாலயாவில் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. அம்மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்துதான் ஆட்சியில் பங்குபெற்றிருக்கிறது பா.ஜ.க.

நாகலாந்தில் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் இணைந்து பா.ஜ.க ஆட்சி அமைத்திருக்கிறது. மேகாலயாவில் எந்தக் கட்சியும் பெரும்பானமை பெறவில்லை. அம்மாநில ஆளும் கட்சியான தேசிய மக்கள் கட்சி 26 தொகுதிகளிலும், மற்றொரு மாநிலக் கட்சியான ஜக்கிய ஜனநாயகக் கட்சி 11 இடங்களிலும், காங்கிரஸ் ஐந்து இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கின்றன.

இச்சூழலில், ஆளும் தேசிய மக்கள் கட்சி, ஐக்கிய ஜனநாயகக் கட்சி, காங்கிரஸ் ஆகியவை இணைந்து ஆட்சி அமைக்க முடியும். ஆனால், தேசிய மக்கள் கட்சி, பா.ஜ.க, இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மலைப்பகுதி மக்கள் ஜனநாயக் கட்சி (Hill State Peoples’ Democratic Party) ஆகியவற்றின் ஆதரவுடன் தொங்கு சட்டசபை அமைந்திருக்கிறது.


படிக்க: திரிபுரா மாடல் தேர்தல் வன்முறை : பாசிஸ்டுகள் கற்றுத்தரும் பாடம் என்ன?


தேர்தலுக்கு முன்பு வரை தேசிய மக்கள் கட்சியுடன் கூட்டணியில் இருந்துவிட்டு தேர்தலின்போது கூட்டணியை முறித்துக் கொண்டு, பா.ஜ.க. தனித்து போட்டியிட்டது. தேர்தல் பிரச்சாரத்தில் தேசிய மக்கள் கட்சியை ஊழல் கட்சி என்று பிரச்சாரம் செய்தது ‘உத்தம’க் கட்சியான பா.ஜ.க. தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் அனைத்தும் தலைகீழாக மாறின. ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற அதிகார வெறியால் பா.ஜ.க.வே கூறிய ஊழல்கட்சிக்கு ஆதரவளித்து, அமைச்சர் பதவியும் பெற்றிருக்கிறது.

இம்மூன்று மாநிலத்தேர்தலில், பிரதான எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், சி.பி.எம் கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தலில் பெற்ற வெற்றிகளைக் கூடப் பெறவில்லை. “காங்கிரஸ் இல்லாத இந்தியா” என்ற ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பாசிச கும்பலின் கனவானது வடகிழக்கில் நனவாகி வருகிறது. திரிபுராவில், இத்தேர்தலுக்காக எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரசுடன் சி.பி.எம் வைத்த கூட்டணியும் பலனில்லாமல் போய்விட்டது. வெறும் 11 தொகுதிகளில்தான் சி.பி.எம் வெற்றி பெற்றிருக்கிறது.

இம்மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “வடகிழக்கு மாநிலத் தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது. இம்மூன்று மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி குறைவான தொகுதிகளிலேயே போட்டியிட்டது. இந்த வடகிழக்கு மாநிலங்கள் பொதுவாக மத்தியில் இருக்கும் அரசுக்கு ஆதரவாகவே வாக்களிக்கும். ஆனால், தேசிய அரசியலில் ஆர்வம் கொண்டுள்ள பல தலைவர்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கின்றனர்” என்றார்.

சி.பி.எம்-இன் அரசியல் தலைமைக்குழுவின் அறிக்கையில், “திரிபுரா மாநிலத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு பணத்தை வாரியிறைத்தும், முறைகேடுகள் செய்தும் குறைவான பெரும்பான்மையில்தான் பா.ஜ.க வெற்றிபெற்றிருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த மூன்று மாநிலத் தேர்தல்களில் மூன்றிலும் ஏதாவது ஒரு வகையில் பாசிஸ்ட்டுகள் ஆட்சி அமைத்திருப்பது குறித்து காங்கிரஸ், சி.பி.எம் கட்சிகளின் நிலைப்பாடு வெறும் தொகுதி குறித்தும், வாக்குவீதம் குறித்துமானதாகவே இருக்கின்றன.  தேர்தல் களத்தில் எதிர்க்கட்சிகளை ஒழித்துக் கட்டுமளவிற்கு வன்முறை மாடலைக் கட்டவிழ்த்துவிட்ட பிறகும், திரிபுராவில் கம்யூனிஸ்ட் கட்சியை ஒழிப்பதே முதல் இலக்கு என்று கம்யூனிஸ்ட்களை வேட்டையாடும் சூழலில், இக்கட்சிகளின் இத்தகைய நிலைபாடானது யதார்த்தத்தைக் காண மறுக்கும் குருட்டுத்தனமாகும்.

இலவசம்…  ‘வளர்ச்சி’ … இரட்டை நாக்கு – பா.ஜ.க.வின் வெற்றி சூத்திரம்

இலவசங்களால் நாடு கெடுகிறது என்று இலவசங்களைக் கண்டு எரிச்சலடைகிற, அவற்றை ஒழித்துக்கட்டத் துடிக்கிற காவி பாசிசக் கும்பல்தான் தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்களில்  வகைதொகையின்றி பல கவர்ச்சித் திட்டங்களை அறிவிக்கிறது. இந்த மூன்று மாநிலத் தேர்தல்களிலும் பல கவர்ச்சித் திட்டங்களை அறிவித்தது. பெண் குழந்தைகளுக்கு முதுகலை படிப்பு வரை இலவச கல்வி, இளைஞர்களுக்கு ஸ்மார்ட் போன், பெண்களுக்கு இலவச ஸ்கூட்டி, இரண்டு இலவச எரிவாயு உருளை (சிலிண்டர்), நாகலாந்து கலாச்சார ஆய்வு நிதி 1,000 கோடி ரூபாய், விவசாயிகளுக்கான பிரதமர் நிதி ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும், பிறந்த பெண் குழந்தைகளுக்கு 50,000 ரூபாய் மதிப்புள்ள பத்திரம் வழங்கப்படும் என பல்வேறு கவர்ச்சித் திட்டங்களை அறிவித்துத்தான் தேர்தலை எதிர்கொண்டது பாசிசக் கும்பல்.

இலவசத் திட்டங்கள்  மட்டுமின்றி, மோடி அலையும், மோடி அரசின் வளர்ச்சித் திட்டங்களும்தான் பா.ஜ.கவின் வெற்றிக்குக் காரணம் என்கின்றன ஊடகங்கள்.  முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த எட்டு ஆண்டுகளில் (2014-லிருந்து) வடகிழக்கு மாநிலங்கள் முன்னேறியிருப்பதால்தான் பா.ஜ.க வடகிழக்கு மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது என்கின்றன.  இந்தியாவிற்கே மாடல் என்று முன்னிறுத்தப்படும் குஜராத் மாடலின் யோக்கியதை ஊரறிந்ததுதான். பிரிட்டனின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வந்தபோது, குஜராத் மாநிலத்தில் குடிசைகளை திரையிட்டு மறைத்ததை நாம் அறிவோம்.  இத்தகைய வளார்ச்சி மாடலின் நாயகர்கள் வடகிழக்கில் கொண்டுவந்த வளர்ச்சி என்னவாக இருக்கும்?

வடக்கிழக்கின்  “எட்டு மாநிலங்களின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி” என்று கடந்த 2014-லிருந்து பல்வேறு கட்டுமானத் திட்டங்களை அறிவித்து வருகிறது கார்ப்பரேட்தாசனான மோடி அரசு. ரயில்வே, நான்கு வழிச்சாலைகள், வான் வழிப்போக்குவரத்து, எய்ம்ஸ் மருத்துவமனை என பல திட்டங்கள் பல்வேறு கவர்ச்சிகரமான பெயர்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒன்றிய அரசானது வடகிழக்கு மாநிலங்களில் 1,34, 200 கோடி ரூபாய் செலவில் சாலை, ரயில் மற்றும் வான்வழிப் போக்குவரத்திற்கான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான திட்டங்களை முன்னெடுத்திருக்கிறது. அறிவிக்கப்பட்டுள்ள 187  திட்டங்களில்,  45 திட்டங்கள் மட்டுமே கடந்த எட்டு ஆண்டுகளில் நிறைவு பெற்றுள்ளன. மற்ற திட்டங்களில் சில கட்டுமானப் பணியில் உள்ளன, சில இன்னும் தொடங்கப்படாமலும் உள்ளன.

நாகலாந்தில் திமபூர்-கோஹிமா சுங்கச்சாவடிகளுடன் கூடிய நான்குவழிச்சாலைக்கான கட்டுமான வேலைகள் நடைபெற்று வருகின்றன. இச்சாலைத் திட்டமானது, திமபூர்-கோஹிமா தொடங்கி, இந்திய எல்லையக் கடந்து மியான்மர்-பாங்காங்க் வழியாக தாய்லாந்துடன் சாலைப் போக்குவரத்து தொடர்பை உருவாக்குவதற்கான திட்டத்தின் தொடக்கம்தான் இது.  “ஆசியாவின் சுதந்திர வர்த்தகப்பகுதி” (ASEAN-Free trade area) என்ற அடிப்படையில் வடகிழக்கு ஆசிய நாடுகளுடன் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கானதுதான் இத்திட்டம். இதை மூடிமறைத்துவிட்டு வடகிழக்கு மாநிலங்களில் மக்களுக்காக உள்கட்டுமானங்களை உருவாக்குவதுபோல் கூப்பாடு போடுகின்றன காவிக் கும்பல்கள்.


படிக்க: திரிபுரா காவிமயமான வரலாறு !


காஷ்மீரின் சிறப்பு அதிகாரச் சட்ட ரத்தானது காஷ்மீரின் லித்தியத்தை அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் கும்பல் கொள்ளையிட வழிவகுத்தது போல, வடகிழக்கில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள்  வடகிழக்கின் வளங்களை உள்நாட்டு-வெளிநாட்டு கார்ப்பரேட் கொள்ளையர்கள் சூறையாடுவதற்கானதாக இருக்கும் என்று வடகிழக்கு மக்கள் உணரும் தருணம் வெகு தூரமில்லை.  இமயமலைப் பகுதிகளில் உள்ள இந்த மாநிலங்கள் எதிர்கால “ஜோஷிமத்” போல் சூழலியல் பேரிடர்களை எதிர்கொண்டாலும் ஆச்சரியமில்லை.

வடகிழக்கு மாநிலங்களைக் கார்ப்பரேட்டுகளுக்கு படையல் போடுவதற்காக இலவச அறிவிப்புகளை  ஒருபுறமும், நரித்தனமான இரட்டை நாக்கு சந்தர்ப்பவாத அணுகுமுறைகளை மறுபுறமும் கையாண்டு வருகிறது. இம்மூன்று மாநிலங்களில் நாகலாந்து, மேகாலயா இரண்டும் கிறித்துவர்கள் அதிகமுள்ள பகுதியாகும். இங்கு விவசாயம் செழிப்பாக இல்லாததால் மாட்டுக்கறிதான் பிரதான உணவாக, மக்களின் பண்பாடாகவும் இருக்கிறது. இந்தியாவின் ஏனைய பகுதிகளில் மாட்டுக்கறி தடைச்சட்டத்தை நிறைவேற்றுகிற, மாட்டுக்கறி வைத்திருந்ததாக பொய் பரப்பி அப்பாவிகளை கொலை செய்யும் காவி பாசிசக் குண்டர்கள் இம்மாநிலங்களில் மாட்டுக்கறி தடை குறித்து பேசுவதே இல்லை.

இந்தியாவின் ஏனைய பகுதிகளில் “கிறித்துவ கைக்கூலிகள்”, “பாவாடைகள்” என்று கூச்சலிடுகிற, கிறித்துவர்கள் மீது தாக்குதல் நடத்துகிற இக்கும்பல்தான், இம்மாநிலங்களில் வெற்றிபெறுவதற்காக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக கே.ஜே அல்போன்ஸ் என்ற கேரள கிறித்துவரை நியமித்து செயல்பட்டது. இம்மாநிலங்களில் 80 தொகுதிகளுக்கு (மேகலாயா 60, நாகலாந்து 20) 75 தொகுதிகளில் கிறித்தவர்களையும், ஐந்து தொகுதிகளில் இதர இந்து அல்லாதவர்களையும் வேட்பாளாராக நிறுத்தியிருப்பதாக கூறியிருக்கிறார், வடகிழக்கு மாநில பா.ஜ.கவின் கூடுதல் ஒருங்கிணைப்பாளரும், தேசிய செயலாளருமான ரிதுராஜ் கிஷோர் சிங்கா.

நாகலாந்தில் நொய்பியூ ரியோ தலைமையிலான கூட்டணி ஆட்சி பொறுப்பேற்கும்போது, அல்லேலுயா பாடியும், “அரசர்களின் அரசனான, தேவர்களின் தேவனான இயேசு கிறிஸ்துவின் நாமத்தால்” என்று கூறிதான் ரியோ முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அதேமேடையில் எந்தவித சலனமுமின்றி இயல்பிலேயே இந்துவெறியர்களான அமித்ஷாவும் மோடியும் அமர்ந்திருக்கின்றனர். அதிகாரத்தில் பங்குபெறுவதற்காக எந்தளவிற்கு நரித்தனமாக சந்தர்ப்பவாதத்தில் காவி பாசிஸ்ட்டுகள் ஈடுபடுவர் என்பதையே இந்நிகழ்வுகள் காட்டுகின்றன.

பாசிசக் கும்பலின் இச்சந்தர்ப்பவாதத்தை வடகிழக்கு மாநிலங்களிலும், ஏனைய இந்திய பகுதிகளுக்கும் எடுத்துச் சென்று பா.ஜ.கவிற்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்த எதிர்க்கட்சிகள் முயலவில்லை. அந்த அளவிற்கு, பா.ஜ.க எதிர்ப்பு மனநிலை வரும்போது வெற்றிபெறலாம் என்று மாயையில், கனவுலகில் சஞ்சரிக்கின்றன எதிர்க்கட்சிகள்.

இந்துராஷ்டிர நீரோட்டத்தில் வடகிழக்கு மாநிலங்கள்

பா.ஜ.க எதிர்ப்பு அலை உருவாகும் என எதிர்க்கட்சிகள் காத்திருக்கும் சூழலில், காவி பாசிஸ்ட்டுகள் வடகிழக்கு மாநிலங்களில் வேர்பரப்பி வருகின்றனர். ஒரே நாடு – அது இந்துராஷ்டிரம் என தனது இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது காவி பாசிசக் கும்பல். 2024 நாடாளுமன்ற தேர்தலே இந்துராஷ்டிரத்திற்கான நுழைவுவாயிலாக இருக்கும் சூழலில், இம்மூன்று மாநிலத் தேர்தல்களும், இதர மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களும் பா.ஜ.க.விற்கு முக்கியமானதாக இருக்கின்றன.  இச்சட்டமன்றத்தேர்தல்களில் வெற்றி பெறுவது, ஆட்சி அமைப்பதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வெல்வது மட்டுமல்ல, அம்மாநிலங்களில் இந்துராஷ்டிர எதிர்ப்பு மனநிலையை ஒழிக்கவும், இந்துராஷ்டிர ஆதரவு மனநிலையை உருவாக்குவதற்கும் இத்தேர்தல்களை கருவியாக அணுகுகிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல்.

ஏற்கனவே, வனவாசி கல்யாண் ஆசிரமம், ஓராசிரியர் பள்ளிகள், வித்யாலாயாக்கள் ஆகியவற்றின் மூலம் வடகிழக்கு மாநிலங்களில் இயற்கை வழிபாடு கொண்ட பழங்குடியினர்களை இந்துக்களாக மதம்மாற்றி வருகிறது பா.ஜ.க. 2014 மோடி ஆட்சிக்குப் பிறகு பெருமளவில் ஆர்.எஸ்.எஸ் இம்மாநிலங்களில் ஊடுருவி வேலை செய்கிறது. கடந்த 2018-இல் திரிபுராவில் பா.ஜ.க வெற்றி பெற்றதும் இவ்வாறே. தற்பொழுது இம்மூன்று மாநிலங்களில்  பா.ஜ.க வெற்றி என்பது ஆர்.எஸ்.எஸ் செய்த  ‘தன்னலமற்ற’ சேவையால் கனிந்தது என ஒப்புதல் வாக்குமூலமளிக்கிறது ஆர்.எஸ்.எஸ்-இன் அதிகாரப்பூர்வ ஏடான  ஆர்கனைசர்.

குறிப்பாக, நாகலாந்தில் புகழ்பெற்ற பிரிட்டிஷ் எதிர்ப்புப் போராளியும், கிறித்துவ எதிர்ப்பு கொண்டவருமான கைதின்லியூ என்பவரின் புகழை தனக்கு சாதகமாக கிறித்துவ எதிர்ப்பு மனநிலைக்கும், இந்துத்துவாவை பரப்புவதற்கும் பயன்படுத்திக் கொள்கிறது பா.ஜ.க. நாகலாந்தின் பெண் தெய்வங்களை கிருஷ்ணனின் மனைவி ருக்மணி, அர்ஜூனனின் மனைவி என்று பார்ப்பனமயமாக்கும் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. ஒரே தேச எதிர்ப்பு வரலாறு கொண்ட வடகிழக்கு மாநிலங்களை  ராமாயண-மகாபாரத காலத்திலிருந்து  இந்தியாவுடன் இருப்பதாக கதைகட்டி வருகிறது.

72 வருடங்களாக,  போலி சுதந்திரத்தையோ, போலி குடியரசு தினத்தையோ கொண்டாடாத வடகிழக்கு மக்களிடம் அதை கொண்டாடுவதற்கான பழக்கத்தை, இந்தியாவின் அங்கம் என்ற மனநிலையை உருவாக்க முயற்சித்து வருகிறது. இந்துராஷ்டிர நீரோட்டத்தில் வடகிழக்கு மாநிலங்களை ஒன்று கலக்கச் செய்ய இந்து-இந்திய மனநிலை உருவாக்குவது முதன்மையானதாகும். இதை உருவாக்குவதற்காகவும், தனது அடித்தளத்தைப் மேலும் மேலும் பலப்படுத்தவும் இத்தேர்தல் வெற்றிகளை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பயன்படுத்தப் போகிறது.

ஆர். எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு எதிரான போராட்டம் என்பது ஒரு சித்தாந்தப் போராட்டமாகும். சட்டப்பூர்வமான வழிகளில் மட்டுமின்றி, சட்டவிரோதமான வழிகளில் அக்கும்பல் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் அனைத்தையும் முறியடிக்கும் வகையிலானதாக நமது போராட்டம் பல்வகைப்பட்டதாக இருக்க வேண்டும். அதிகாரத்தைப் பயன்படுத்தி, அராஜகவாதிகள் மட்டுமே வெற்றிபெற வழிவகுக்கும் இந்த போலி ஜனநாயகத் தேர்தல்களில் பா.ஜ.க.வை வீழ்த்திவிட முடியும் எனக் கருதுவதும், அந்த வெற்றிகளைக் கொண்டே பாசிஸ்டுகளை வீழ்த்திவிடலாம் எனக் கருதுவதும் பாசிஸ்டுகளின் வெற்றிக்கே வழிவகுக்கும் என்பதுதான் நடந்து முடிந்த மூன்று மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்துகின்றன.

அப்பு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க