கர்நாடகா, திரிபுரா, அசாம் : பற்றிப் படர்ந்து வரும் ‘இந்துராஷ்டிர பேரபாயம்’ ! – பாகம் 4
பாகம் 3

பிப்லவ் குமார் தேவ் தலைமையிலான பா.ஜ.க.வின் ஆட்சியின் கீழ் திரிபுராவை காவிமயமாக்குவதில் மூர்க்கமாக செயல்பட்டுவருகிறது ஆர்.எஸ்.எஸ். காவி கும்பல். தங்களுடைய முயற்சிகளில் பெரிய அளவில் வெற்றியையும் குவித்துவருகிறது. திரிபுரா இந்து மதவெறியர்களின் கூடாரமாகி வருகிறது என்பதற்கு 2018-ஆம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடனேயே ஆசான் லெனினின் சிலையை பெயர்த்தெறிந்தது தொடங்கி, சமீபத்தில் மார்க்சிஸ்டு கட்சியின் அலுவலகங்கள் சூறையாடப்பட்டது; அக்கட்சியின் தோழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் சென்ற அக்டோபர் மாதக் கடைசியில் முஸ்லீம்களின் குடியிருப்புகள், கடைகள், வழிபாட்டுத்தலங்கள் ஆகியவற்றின் மேல் காவி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் போன்றவற்றை சான்றுகளாகச் சொல்லலாம்.

திரிபுராவின் மக்கள் தொகையில் வெறும் 9 சதவிகிதத்தினரே முஸ்லீம்கள். மற்றவர்கள் மண்ணின் மைந்தர்களான பழங்குடியினரும் வங்காளப் பிரிவினையின்போது குடியேறிய வங்காள இந்துக்களுமாவர். கடந்த அக்டோபர் மாதம் வங்கதேசத்தில் துர்கா பூஜையின்போது, முஸ்லீம் மதவெறியர்களால் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதை தமது மதவெறி நிகழச்சி நிரலுக்கு கிடைத்த தீனியாக பயன்படுத்திக் கொண்ட விஷ்வ ஹிந்து பரிஷத், ஹிந்து ஜன் மார்ச் உள்ளிட்ட சங்கப் பரிவார அமைப்புகளைச் சேர்ந்த காவி குண்டர்கள் “முகமது, உன் தந்தை யார்?” “ஹரே ராம் ஹரே கிருஷ்ணா” என்று கொலைவெறியுடன் கத்திக் கொண்டே பேரணியாக சென்று, வட திரிபுராவின் பனிசாகர் பகுதியிலுள்ள ராவ் பஸார், ஜலிபாஷா, சம்டிலா போன்ற இடங்களில் உள்ள மசூதிகளைத் தீவைத்து எரித்ததோடு, கடைகளையும் சூறையாடினார்கள். இக்கொலைவெறித் தாக்குதலில் மொத்தம் 16 மசூதிகள் சேதப்படுத்தப்பட்டன.

படிக்க :

♦ சமூக ஊடகங்களில் பதிவிட்ட 102 பேர் மீது ஊபா : திரிபுரா பாசிச பாஜக அரசு வெறியாட்டம் !

♦ எதிர்த்துக் கேட்டால் ஊபா : பாசிஸ்டுகளின் சோதனைக் களமாகும் திரிபுரா || மக்கள் அதிகாரம்

மற்ற வட மாநிலங்களைப் போலல்லாமல், திரிபுராவில் இதுபோன்ற மதவெறிக் கலவரங்கள் நடப்பது இதுதான் முதன்முறையாகும். 1992-இல் நடந்த பாபர் மசூதி இடிப்பின்போது வட இந்தியா முழுவதும் முஸ்லீம்களுக்கு எதிரான கலவரங்கள் மிகப்பெரிய அளவில் நடந்தபோது திரிபுராவில் அத்தகைய தாக்கம் எதுவும் இல்லை. முஸ்லீம்களும் வங்க தேச இந்துக்களும் ஒற்றுமையாகத்தான் வாழ்ந்துவந்தனர். அந்த ஒற்றுமை தற்போது உடைக்கப்பட்டுவிட்டது என்பதற்கான அடையாளமாகத்தான் திரிபுராவின் மதக்கலவரத்தைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

பழங்குடிகளை ‘இந்து’க்களாக்குதல்..

1956-ஆம் ஆண்டிலிருந்து திரிபுரா காவிமயமான வரலாறு தொடங்குகிறது. மாநிலத்தின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் (சுமார் 60 சதவிகிதம்) வங்கதேசத்திலிருந்து குடிபெயர்ந்த இந்துக்களாவர். ஆகவே முஸ்லீம்களை எதிரியாக காட்டி அவர்களை மதவெறியூட்டுவது ஒப்பீட்டளவில் காவி கும்பலுக்கு சுலபமாக இருந்தது. ஆனால் 31 சதவிகிதமுள்ள பூர்வகுடி மக்களை இந்துத்துவமயப்படுத்த அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள்தான் அதிகம். “ஒவ்வொரு பழங்குடியும் இந்து அல்லது சனாதன தர்மத்தின் ஒரு அங்கம்” என்று அவர்களிடையே பிரச்சாரம் செய்தன சங்கபரிவார அமைப்புகள்.

ஓராசிரியர் பள்ளிகள், பால்வாடிகள், சேவா பாரதி, வித்யா பாரதி விடுதிகள், கோயில்கள், பழங்குடியின சமூக குழுக்கள், விஷ்வ ஹிந்து பரிஷத், பாரதிய ஜன சங்க சந்தன், மருத்துவ முகாம்கள் – என பழங்குடிகளை காவிமயமாக்க பல வழிகளில் சுற்றி வளைத்துள்ளது ஆர்.எஸ்.எஸ். நச்சுப் பாம்பு. அதில், ஷாகாக்களுக்கு அடுத்தபடியான முக்கியத்துவமுடையாதாக இருப்பது ஓராசிரியர் பள்ளிகள்தான்.

000

திரிபுராவில் பெரும்பாலான ஓராசிரியர் பள்ளிகள் பழங்குடியின மக்கள் வாழும் தொலைதூர கிராமங்களில் நடைபெறுகின்றன. இங்கு ‘புனிதக் கல்வி’ என்ற பெயரில் இந்து வழிபாடு, இந்திய பெருமைகள் மற்றும் ‘தேசிய’ உணர்வை வளர்ப்பது என சிறுவயதிலிருந்து அம்மாணவர்களின் சிந்தனை காவிமயமாக்கப்படுகிறது. இது ஆர்.எஸ்.எஸ். வளர்ச்சிக்கு நன்கு பலனளித்தது. அரசுப் பள்ளிக் கட்டமைப்பை ஒழித்துக் கட்டும் நோக்கத்தோடு தங்கள் காவிமய நோக்கத்திற்கு சேவை செய்வதற்காகவும்தான் இவ்வாறான முறைசாராக் கல்வியை புதிய கல்விக் கொள்கை 2019-இல் சேர்த்தது மோடி அரசு. அதைத்தான் தமிழகத்தில் ‘சமூக நீதி’ தி.மு.க. அரசு “இல்லம் தேடி கல்வி” என்ற மாற்றுப் பெயரில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த ஓராசியர் பள்ளிகளில் ஆசிரியராக வருபவர்களுக்கு முதலில் 5 நாட்கள் பயிற்சி பட்டறை, 3 மாதம் கற்பித்தல் பயிற்சி, கடைசியாக 10 நாட்கள் பயிற்சி பட்டறை என மூன்று கட்டங்களாக பயிற்சியளிக்கப்படுகிறது. இந்த ஆசிரியர்கள் சங்கப் பரிவாரத்தின் கண்களாக, காதுகளாக செயல்படுகின்றனர். ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களை உருவாக்குவதற்கான காவித் தொழிற்சாலைகளே இப்பள்ளிகள். திரிபுராவில் மட்டும் 1,650 ஓராசிரியர் பள்ளிகள் செயல்படுகின்றன என்பதிலிருந்து ஆர்.எஸ்.எஸ். இம்மக்களிடம் எப்படி வேரூன்றியிருக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம்.

ஓராசிரியர் பள்ளி என்ற மாலை நேரப் பள்ளிகள் மட்டுமல்லாது “வித்யா பாரதி” என்ற பெயரில் தனது வழக்கமான பள்ளிகளையும் நடத்துகிறது ஆர்.எஸ்.எஸ். இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் இந்திய தேசிய உணர்வை வளர்க்க அசாம் உள்ளிட்ட இதர வடகிழக்கு மாநிலங்களில் செய்ததைப் போல “இந்தியா என் தாய்நாடு” என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று படிக்க வைக்கப்படுகிறார்கள். இப்பள்ளிகளில் காலையும் மாலையும் சமஸ்கிருத மந்திரங்களுடன் வழிபாடுகள் நடத்தப்படுவதோடு, காலை வழிபாடு முடிந்தவுடன் ஆர்.எஸ்.எஸ்-இன் காவி கொடிக்கு வணக்கம் செலுத்துவது தவறாமல் நடைபெறுகிறது.

“மார்க்சிஸ்டு கட்சியின் ஆட்சி காலத்தில் 15 ஆண்டுகளாக இடைநிலைப் பள்ளிக் கல்வியின் பாடத்திட்டம் மாற்றப்படவில்லை இப்பாடப்புத்தகங்களில் கார்ல் மார்க்ஸ், மாவோ மற்றும் ஹிட்லர் பற்றி உள்ளதே தவிர இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற பாடத்திட்டங்கள் இருந்தால் மாணவர்கள் இந்திய மன்னர்களை மறந்துவிடுவார்கள். எனவே பிரான்ஸ்-ரஷ்ய புரட்சிகளுக்கு பதிலாக இந்திய வரலாற்றில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறிய முதல்வர் பிப்லவ் குமார், இந்த பாடத்திட்டங்களை மாற்றி தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சிக் குழு (என்.சி.ஆர்.டி) பாடப்புத்தகங்கள் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

இளம்பிஞ்சுகளுக்கு காவி நஞ்சுட்டும் ஆர்.எஸ்.எஸ் கும்பல். வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் புற்றீசல் போல் காணப்படும் ஷாகாக்கள்.

வித்யா பாரதி பள்ளிகளில் இந்த என்.சி.ஆர்.டி. பாடப் புத்தகங்கள்தான் வழக்கத்தில் உள்ளன. “2019-ஆம் ஆண்டு முதன்முதலில் மகாராஷ்டிராவில் அறிமுகப்படுத்தப்பட்ட என்.சி.ஆர்.டி. பாடப் புத்தகங்களில் பழங்குடி மக்களின் வரலாறு, பண்பாடு பற்றி எந்த குறிப்புகளும் இல்லை. பழங்குடிகள் இயற்கையை வழிபடுபவர்கள். ஆனால், இராமன் மற்றும் அனுமனின் படங்கள்தான் இப்பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன” என்கிறார் பழங்குடி ஆர்வலர் லஸ்லு சோமா நகோடி.

மேலும் 20 அரசு பள்ளிகளை எடுத்து நடத்தவும் ‘அட்சய பாத்திரா’ என்ற திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கவும் சங்கப் பரிவார அமைப்பின் பல்வேறு முகங்களில் ஒன்றான “அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம்” (ISKCON – International Society For Krishna Consciousness) என்ற அமைப்பிற்கு அனுமதியளித்திருக்கிறது, பிப்லவ் அரசு.

சங்கப் பரிவார அமைப்பான இஸ்கான் (ISKCON) வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், மூங்கில் குடிசைகளில் உள்ள பழங்குடியினர், “நாங்கள் இதற்குமுன் விலங்குகளைப் போல் வாழ்ந்தோம். பன்றிகளையும் சாராயத்தையும் விற்று வாழ்ந்து வந்தோம்” என்று கூறி வேத மந்திரங்களையும் இந்து மதப் பாடல்களையும் முணுமுணுக்கின்றனர்.

திரிபுராவில் 2015-ஆம் ஆண்டு 80-ஆக இருந்த ஷாகாகளின் எண்ணிக்கை, ஒரே ஆண்டில் (2016) 265-ஆக அதிகரித்தது. 2018-ஆம் ஆண்டு கவுகாத்தியில் “பிரம்மபுத்திராவின் மகன்கள்” என்ற பெயரில் இந்துக்கள் மாநாட்டை (இந்து சமிதி) நடத்தியது ஆர்.எஸ்.எஸ். நாடு முழுவதிலிருந்து 35,000 ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் அந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இவர்கள் மட்டுமல்லாது ஹாசிஸ், மிசிங், கஜோங், திவாஸ் போன்ற பழங்குடியினத் தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். பழங்குடியின மக்கள் ஆர்.எஸ்.எஸ்-இன் இந்துத்துவ நீரோட்டத்தில் இரண்டறக் கலந்துவிட்டனர் என்பதை இம்மாநாட்டின் காட்சியே எடுத்துக்காட்டியது.

பாசிஸ்டுகளின் குதிகால் நரம்பை அறுத்தெறிவோம்!

இந்து ராஷ்டிரம் எனும் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை நிலைநாட்டுவதற்காக வெறித்தனத்தோடு வேலைசெய்துகொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் பரிவாரம், தன்னுடைய இலட்சியத்தை சாதிப்பதற்கான பல்வேறு கருவிகளுள் ஒன்றாகவே பா.ஜ.க. என்ற தனது அரசியல் கட்சியின் மூலம் தேர்தலைப் பயன்படுத்திக் கொள்கிறது.

அவ்வாறு தேர்தல்களில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. வெற்றிபெறுவதும்கூட கீழே மக்களிடம் வேலைசெய்து தன்னுடைய சித்தாந்தத்திற்கு செல்வாக்கு தேடியிருக்கும்போதுதான் சாத்தியமாகிறது. கூட்டணி அமைப்பது, குதிரை பேரம் மூலம் பிற கட்சியினரை விலைக்கு வாங்குவது போன்ற தகிடுதத்தங்கள் எல்லாம் தங்களுடைய வெற்றிக்கு கூடுதலாக அவர்கள் கையாளும் தந்திரங்கள்தான் என்பதையே நாம் தொடர்ச்சியாக சொல்லிவருகிறோம்.

இன்று பா.ஜ.க. ஆளும் கர்நாடகா, அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்கள் இந்து ராஷ்டிரத்தின் புதிய சோதனைச் சாலைகளாக காட்சிதருவதை இந்த அடிப்படையில்தான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

மாறாக, இன்று பா.ஜ.க. ஆட்சியிலிருப்பதுதான் அம்மாநிலங்களில் நடக்கும் மதவெறிக் கலவரங்களுக்கும் பல்வேறு மக்கள் விரோதத் திட்டங்களை அமல்படுத்த முடிவதற்கும் காரணம். எனவே தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதன் மூலம் பாசிசத்தை தோற்கடித்துவிடலாம் என ஒருவர் கருதினால் அது காவி பாசிசத்தைப் பற்றிய மிகவும் பாமரத்தனமான புரிதலாகும்.

இத்தாலியிலும் ஜெர்மனியிலும் பாசிச சித்தாந்தத்திற்கு பரந்த மக்கள் அடித்தளம் உருவாக்கப்பட்ட பின்னர்தான் அந்நாடுகளில் பாசிச சர்வாதிகார ஆட்சியை நிறுவ முடிந்தது என்பதே வரலாறு. முதல் உலகப் போரில் ஜெர்மனி தோற்ற பிறகு உருவாகிய ஹிட்லரின் நாஜிக் கட்சி 1920-களில் மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாதபோதே அதிகாரத்தைக் கைப்பற்ற துணிந்தது, அப்போது ஹிட்லர் சிறையிலடைக்கப்பட்டான்.

1924-ஆம் ஆண்டு ஹிட்லர் சிறையிலிருந்து வெளிவந்த பிறகு ஜெர்மன் நாடாளுமன்றத் தேர்தலில், நாஜிக்கட்சி 3 சதவிகித ஓட்டுகளைப் பெற்று 14 நாடாளுமன்ற இடங்களை மட்டுமே பிடித்தது. எனினும் கொஞ்சம் கொஞ்சமாக நாஜிக் கட்சிக்கு மக்களிடையே செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கியது. 1933-ஆம் ஆண்டு 43.9 சதவிகித வாக்குகளைப் பெற்று 288 சீட்டுகள் பெற்றது நாஜிக் கட்சி. அன்றைய அதிபராக இருந்த ஹிண்டன்பர்க் தாமாக முன்வந்து பதவி விலகினான்; ஹிட்லர் அதிகாரத்தில் ஏற்றப்பட்டான். பாசிச குண்டர்படை, ஜெர்மன் மக்கள் மத்தியில் செய்த அடிமட்ட வேலைகளால்தான் பாசிச ஹிட்லர் அதிகாரத்திற்கு வர முடிந்தது.

1930-களில் உலகையே அச்சுறுத்திய ஹிட்லர், முசோலினி பாசிச ஆட்சி காலத்தில், பாசிச எதிர்ப்பு போராட்டத்திற்கு வழிகாட்டியாக செயல்பட்ட மூன்றாம் கம்யூனிஸ்ட் அகிலத்தின் செயலாளர் தோழர் டிமிட்ரோ கூறுவதைப் போல, “பாசிஸ்டுகளின் குதிகால் நரம்பு, அவர்களின் மக்கள்திரள் அடித்தளமாகும்”. அதனை அறுத்தெறிவது எப்படி என்பதுதான் பாசிச எதிர்ப்பு போராளிகள் ஒவ்வொருவரின் உளப்பாங்காக இருக்க வேண்டும்.

கர்நாடகா, அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் மட்டுமல்ல, இந்து ராஷ்டிரத்தை நிர்மாணிப்பதற்காக நாடு முழுக்க அடிமட்ட அளவில் வேலை செய்து வருகிறது ஆர்.எஸ்.எஸ். ஒவ்வொரு மாநிலங்களுடைய வரலாற்றுவழி, தனிச் சிறப்பான சூழல்கள், மக்களின் பண்பாடுகள் ஆகியவைகளுக்கேற்ப தனது வேலைமுறையை அமைத்துக் கொள்கிறது.

படிக்க :

♦ திரிபுரா : முஸ்லீம்கள் மீதான சங் பரிவாரின் தாக்குதல்களை முறியடிப்போம் | மக்கள் அதிகாரம்

♦ திரிபுராவில் இந்துவெறி குண்டர்களின் வெறியாட்டம் !

சான்றாக, தமிழகத்தில் வள்ளுவருக்கு காவிச் சாயம் பூசியது; ராமனுக்கு பதில் முருக வழிபாட்டை கையிலெடுத்தது; கொங்கு மண்டலத்தில் கவுண்டர், வன்னியர் போன்ற ஆதிக்க சாதிகளுடனும் தென் தமிழகத்தில் “தேவேந்திர குல வேளாளர்” என புது அவதாரமெடுக்கும் பார்ப்பன கைக்கூலி கிருஷ்ணசாமி போன்ற பிழைப்புவாத சாதிச் சங்கத் தலைவர்களை ஒருங்கிணைப்பதன் மூலமும் தனக்கு அடித்தளம் அமைத்துக் கொள்கிறது ஆர்.எஸ்.எஸ்.

எனவே பாசிச எதிர்ப்பு போராட்டத்தில், முதன்மையான அம்சம் என்னவென்றால் அடித்தளத்தில் (மக்களிடையே) ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிஸ்டுகள் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையையும் எதிர்த்து முறியடிப்பதேயாகும். இதன் மூலமே காவி -கார்ப்பரேட் பாசிச அபாயத்தை எதிர்கொள்ள முடியும். ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிஸ்டுகளை வீழ்த்த நினைக்கும் பல்வேறு புரட்சிகர, முற்போக்கு ஜனநாயக சக்திகள் அனைவரும் இந்த அடிப்படையில் ஓர் ஒற்றுமையை கட்டியமைத்துப் போராட வேண்டும். இதற்குட்பட்டே தேர்தல் களத்தையும் அணுக வேண்டும்.

மாறாக, பாசிசத்தை முறியடிக்க தற்போதைக்கு ஒரு ‘சாத்தியமான மாற்று’ என்ற பெயரில் தேர்தல் களத்தை மட்டுமே முதன்மைப்படுத்தி பா.ஜ.க-வை வீழ்த்துவதற்கு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட ஆளும்வர்க்க ஓட்டுக் கட்சிகளின் பிரச்சார பீரங்கிகளாக மாறினால், பற்றிப் பரவிவரும் பாசிச அபாயத்தை கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்.

(முற்றும்)


அப்பு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க