தீபாவளியை வெறுப்பின் பண்டிகையாக மாற்றியிருக்கும் பா.ஜ.க!
பா.ஜ.க.வின் எம்.பி.யான தேஜாஸ்வி சூர்யா கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம், இஸ்லாமிய மதத்திற்கு எதிராக கடுமையான மதவெறியை கக்கும் ட்வீட் ஒன்றை போட்டிருந்தார். “தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது. ஆனால், தீவிரவாதிக்கு கண்டிப்பாக மதம் இருக்கிறது. பெரும்பாலான சமயங்களில் அது இஸ்லாமாக இருக்கிறது”. இந்து மதவெறியின் அரசியல் சக்தியான பா.ஜ.க அரசே இதை நீக்க ட்விட்டர் நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டது எனில் அந்தக் கருத்தின் யோக்கியதையை நாம் தனியாகக் கூறத் தேவையில்லை.
படிக்க :
டானிஷ்க் விளம்பரம் : இந்துத்துவக் கும்பல் கதறுவது ஏன் ?
டானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் !
அதற்கு சற்றும் குறையாமல் இந்த வாரம் மற்றுமொரு ட்வீட் செய்திருக்கிறார் சூர்யா. தீபாவளி பண்டிகை காலத்துக்கான தன்னுடைய விளம்பரத்தில் உருது வாக்கியமான Jash-e-Riwaaz ‘ஜாஸ்-இ-ரிவாஸ்’ – ‘பாரம்பரியத்தின் கொண்டாட்டம்’ என ஆடை நிறுவனமான ஃபேப் இந்தியா பயன்படுத்தியிருந்தது. இதை எப்படி இந்து – முஸ்லீம் மோதலாக திருப்பியிருக்கிறார் என்பதை அவரது சமீபத்திய ட்வீட் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பா.ஜ.க.வின் எம்.பி.யான தேஜாஸ்வி சூர்யா
“தீபாவளி, ஜாஸ்-இ-ரிவாஸ் கிடையாது. பாரம்பரிய இந்து ஆடைகள் இல்லாமல் விளம்பர நடிகர்களை சித்தரித்து இந்துமத பண்டிகைகளை திட்டமிட்டு ஆபிரகாமியமயமாக்கும், இந்த முயற்சி கண்டிப்பாக திரும்பப் பெறப்பட வேணடும். மேலும், ஃபேப் இந்தியா போன்ற நிறுவனங்கள் இத்தகைய திட்டமிட்ட தவறான செயல்களுக்கு பொருளாதார இழப்புக்களை எதிர்கொண்டாக வேண்டும்” என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
இந்த பாஜக தலைவரின் ட்வீட்டில் பல விடயங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. மொழி (உருது) மற்றும் மதம் (ஆபிரகாமியமயமாக்கும்) இடையே புனையப்படும் வகுப்புவாத கண்ணோட்டம் அதில் ஒன்று. அடுத்து, நடிகா்கள் அணிந்திருக்கும் ஆடைகள் (புடவை,  சல்வார்-கமீஸ் மற்றும் குர்தா-பைஜாமா) பாரம்பரிய இந்து உடைகள் இல்லை என்ற விசமத்தனமான எதிர்ப்பு இது.
இந்தியாவின் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் உருதும் ஒன்றாகும். மேலும், ஆங்கிலத்தைப் போலல்லாமல் உருது, ‘இந்தியாவில்’ தோன்றிய மொழியாகும். அதன் சொற்கள் சரியாக உச்சரிக்கப்படாவிட்டாலும் கூட பாலிவுட்டில் அதற்கென்று தனி இடம் இருக்கிறது. தீபாவளியை “ஜஷ்ன்-இ-சரஹன்” – விளக்குகளின் திருவிழா என்று முகலாயர்கள் அழைத்தனர்.
பெரும்பாலும் சல்வார்-கமீஸ் மற்றும் குர்தா ஆடைகள் இந்திய ஆடைகள் அல்ல என்ற வரலாற்று தோற்றம் நன்கு அறியப்பட்டிருந்தாலும், நவீன உடைகள் மத அடையாளத்தைக் கொண்டிருப்பதாக நம்மில் பெரும்பாலோர் கருதுகின்றனர். விளம்பரத்தில் நடிகர்கள் நெற்றிப்போட்டு வைக்காமல் இருப்பதை மற்றொரு முக்கியமான இந்துத்துவா ஆர்வலர் எதிர்த்திருக்கிறார். மேலும், தீபாவளியை ‘அன்பு மற்றும் ஒளியின் திருவிழா’ என்று குறிப்பிடுவதை “இந்துத்துவ நீக்கம்” என்று கூறியிருக்கிறார்.
தீபாவளியை “ஒளியின் திருவிழா” என்று கூறும் பிரதமர் அலுவலகத்தை நோக்கி தமது விமர்சனங்களை வைக்க அவருக்கு நான் பரிந்துரைக்கிறேன். ஸ்பானிஷ் பேசும் நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் தீபாவளியை, “Festival de las Luces” –  “விளக்குகளின் திருவிழா” என்றுதான் வழக்கமாக அழைக்கின்றன. பாஜக அவர்களுக்கு கண்டிப்பாக ஒரு குறிப்பாணை அனுப்ப வேண்டும்.
விளம்பரத்தில் உருது வாக்கியமான Jash-e-Riwaaz ‘ஜாஸ்-இ-ரிவாஸ்’ – ‘பாரம்பரியத்தின் கொண்டாட்டம்’ என ஆடை நிறுவனமான ஃபேபி இந்தியா பயன்படுத்தியிருந்தது.
விளம்பரத்தை நீக்குவதற்கு ஃபேப் இந்தியா நிறுவனம் விரைவாக முடிவு எடுத்தது வருத்தமளித்தாலும், அதற்காக நான் ஆச்சரியப்படவில்லை. ‘ஜஷ்ன்-இ-ரிவாஸ்’ என்ற சொற்றொடர் தீபாவளியை குறிக்க பயன்படுத்தவில்லை என்று அது கூறியது மழுப்பலாக தான் தெரிகிறது. ஆனால் உண்மை என்னவென்றால், இந்தியாவின் பெரிய நிறுவனங்கள் இந்துத்துவா மதவெறியை எதிர்கொள்ளத் தடுமாறுகின்றன.
கடந்த ஆண்டு, டாடா குழுமத்திற்கு சொந்தமான தனிஷ்க், மத ஒருமைப்பாட்டு அடையாளமாக ஒரு கலப்பு சமூக வீட்டை காட்டும் அழகான விளம்பரத்தை எடுத்தது. மறுபுறம், சர்ஃப் எக்செல், ஒரு முஸ்லீம் சிறுவன் மற்றும் இந்து சிறுமியை நண்பர்களாக காட்டும் மனதுக்கு நெருக்கமான ஹோலி விளம்பரத்திற்காக ஒரு கொடூரமான தாக்குதலை எதிர்கொண்டது. ஆனால், அதன் தாய் நிறுவனமான இந்துஸ்தான் யுனிலீவர் ஒரு பன்னாட்டு நிறுவனமாக இருந்ததால் அந்த எதிர்ப்பினை சமாளித்தது.
தங்களது விளம்பரங்கள் தவறானதாலோ அல்லது வாடிக்கையாளர்களிடம் இருந்து அந்நியமாகி விடுவோமே என்ற அபாயத்தினாலோ ஃபேப் இந்தியா மற்றும் தனிஷ்க் நிறுவனங்கள் வளைந்து கொடுக்கவில்லை, மாறாக இந்தியா, சட்டத்தின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு நாடு அல்ல என்பது அவர்களுக்கு தெரியும். அரசாங்க ஆதரவு சக்திகள் தங்களது கடைகள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடலாம். மேலும், அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் போலீசு செய்து தரும் என்பதும் அவர்களுக்கு தெரியும். இந்துத்துவாவின் எதிர் பக்கத்தில் இருந்தால் பல்வேறு வழிகளில் தாங்கள் குறிவைக்கப்படுவோம் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
“இந்துக்களின் மனதை புண்படுத்துகிறது” என்று போலீஸால் வழக்கு தாக்கல் செய்யப்படலாம், வருமான வரி சோதனை நடக்கலாம்; அமலாக்க இயக்குநரகம் சில அற்பமான புகார்களையும் சிக்கல்களையும் தோண்டி எடுத்து வழக்கு தொடுக்கலாம். நிறுவனமும் அதன் உரிமையாளர்களும் நீதிமன்றத்தில் போராடுவதற்கு பல ஆண்டுகள் செலவிட வேண்டியிருக்கலாம்.

ஃபேப் இந்தியா போன்றவற்றை விமர்சிப்பது கிளர்ச்சியூட்டுவதாக இருக்கிறது என்றாலும், நம்முடைய  கோபத்தை வேறு இடத்தில் குவிக்க வேண்டும். வேறு இடத்தில் என்று நான் குறிப்பிடுவது சூர்யா மற்றும் பிற இந்துத்துவா வெறுப்பு ட்வீட்களை அல்ல. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் இந்துக்களும், அவர்களுடைய மதமும் தாக்குதலுக்குள்ளாகி வருவதாக போலி பிரச்சாரம் செய்து வரும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அரசியல் தலைமைகளை தான்.
படிக்க :
பாஜகவின் மத வெறிப் பிரச்சாரத்தில் மண்ணள்ளிப் போட்ட சர்ஃப் எக்செல் விளம்பரம் !
மோடி : விளம்பர அரிப்பும் … அதிகாரக் கொழுப்பும் !
ஏற்கனவே ‘லவ் ஜிஹாத்’, ‘நில ஜிஹாத்’, ‘UPSC ஜிஹாத்’ மற்றும் ‘Vendor ஜிஹாத்’ ஆகியவற்றை இந்துத்துவ பிரச்சார இயந்திரம் கொண்டு வந்துள்ளதைப்போல இப்போது ‘விளம்பர ஜிஹாத்’ தையும் கண்டுபிடித்துள்ளனர். இந்துக்களை பாதுகாப்பற்றவர்களாக உணரச் செய்வதும், அவர்களுக்கும் இந்தியாவின் மத சிறுபான்மையினருக்கும் இடையே ஒரு ஒற்றுமையின்மையை ஏற்படுத்துவதுமே இதன் நோக்கம்.
கடந்த மாதம் உத்தரப்பிரதேச முதலமைச்சரும் இதுபோன்ற ஒன்றை செய்த பின்னர்தான் பிரதமர் மோடி இடமிருந்து ‘சிறந்த நிர்வாகத்திற்கான’ பாராட்டு பெற்றார். இதனால், தேஜஸ்வி சூர்யாவால் ஒரு உருது சொற்றொடரை எளிதில் குறிவைக்க முடிந்திருக்கிறது. பாஜக உருவாக்கிய வக்கிரமான இந்த அரசியல் உணர்வுச் சங்கிலியில் யார் யாரெல்லாம், முஸ்லீம்கள், இஸ்லாம் மற்றும் ‘ஆபிரகாமிய’ நம்பிக்கைகளை எவ்வளவு அதிகமாக குறிவைக்கின்றனரோ, அவ்வளவு வேகமாக அவர்கள் உயர் பதவிக்கு செல்வார்கள். இதுதான் இந்தியா எதிர்கொள்ள வேண்டிய உண்மையான சமூக சீர்கேடு.

கட்டுரையாளர் : சித்தார்த் வரதராஜன்
தமிழாக்கம் : ஆறுமுகம்

நன்றி : த வயர்