பண்டிகை நாட்களில் நமது வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ ‘பாரம்பரிய’ உடையை உடுத்துவதை ஒரு சடங்காக வைத்திருக்கிறோம். அப்படி பண்டிகை அல்லது குடும்ப நிகழ்வுகளில் நமது பாரம்பரியமாக போற்றப்பட்டு உடுத்தப்படும் உடை தமிழகத்தைப் பொறுத்தவரையில் பெண்களுக்குப் புடவையும், ஆண்களுக்கு வேஷ்டியும் தான்.
அத்தகைய கொண்டாட்ட நாட்களில் பெண்கள் சல்வார், ஃபிராக் அல்லது கவுன் போன்ற உடையை அணிந்தால் அது நமது கலாச்சாரத்தை கடைபிடிக்காத போக்காக ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகிறது. அதுவும் அந்நாட்களில் பெண்கள் தமக்குப் பிடித்த சல்வாரோ அல்லது குட்டை சட்டையோ அணிந்து, ‘துப்பட்டா’வை போடவில்லை என்றால், அது பெண்ணின் நடத்தையையும் ஒழுக்கத்தையும், பாரம்பரிய ஒழுகுதலையும் (sanskari) கேள்விக்குட்படுத்தும் செயலாகவே பார்க்கப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட இந்தப் பார்வை அனைத்து வர்க்கங்களிலும் ஒரே மாதிரியாக வெளிப்படுவதில்லை. இத்தகைய பாரம்பரியங்களின் வரலாறும் மிக நீண்டதாக இல்லை. அப்படியானால் இந்தியா முழுவதும் பெண்கள் தமது பாரம்பரியமாகக் கருதும் புடவையும், ரவிக்கையும் (Blouse) எவ்வளவு காலமாக நமது ‘பாரம்பரிய’ உடையாக இருந்து வந்திருக்கின்றன ? அவை யாருக்கெல்லாம் உடையாக அணிந்து கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தன? என்ற கேள்வி எழுகிறதல்லவா? அதற்கான பதிலை நோக்கி இனி பயணிப்போம்.
படிக்க :
♦ நைட்டி : தேசங்கள் கடந்த பெண்களின் பொது உடை || சிந்துஜா
♦ பிரா அணிவதும் அணியாததும் யாருடைய பிரச்சினை ? || சிந்துஜா
பண்டையகால இந்தியாவில், மௌரியர் மற்றும் சுங்கா காலத்தின் (கி.மு.300) சிற்பங்களில், ஆண்களும் பெண்களும் உடலின் கீழ் பகுதியிலும், மேல் பகுதியிலும் செவ்வக (rectangular) வடிவத் துண்டுகளை அணிந்திருந்தனர். மத்தியப் பிரதேசத்தில் உள்ள கஜுராஹோ கோயிலின் (கி.மு.900 – 1050) சிற்பங்களின் ஒரு நிலையான அம்சம், பெண்களின் மார்பகங்கள் சித்தரிக்கப்பட்ட விதம்; பெண்கள் மேலாடையின்றி வாழ்ந்தனர் என்பதைக் காட்டுகிறது.
குப்தர்கள் காலத்து பெண்கள் மேலாடையின்றி இருந்து இருக்கிறார்கள் என்பது அவர்களது காலத்திய சிற்பங்களில் வெளிப்பட்டுள்ளது. அது அவர்களுக்கு ஏற்றதாக இருந்திருக்கிறது.அதற்கு பிந்தைய காலகட்டங்களில் பெண்கள் குறைந்த அளவு உடைகளையே பயன்படுத்தினர். ஆனால் அவை ஒழுக்கத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அஜந்தா குகைகள் ஒரு புத்த குகை வளாகம்; கி.மு.2-ஆம் நூற்றாணடு முதல் 650 C.E. வரை இருந்த 29 குகைகளின் வரிசையாகும் யுனெஸ்கோ இதை உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது.

அஜந்தா குகைகள் அதன் பிரமிக்க வைக்கும் சுவரோவியங்கள், ஓவியங்கள் மற்றும் சிற்பங்களுக்காக அறியப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை புத்தரின் அன்றாட வாழ்க்கையை சித்தரிக்கும். அதிலும் ஆடை பெண்களின் ஆடைகள் இடம்பெற்று இருக்கின்றன. அஜந்தா மற்றும் எல்லோராவின் குகைகள் பெண்களின் ஆரம்பகால ஓவியங்கள் குறைந்த ஆடைகளுடனே பிரதிபலிக்கின்றது.
பல்வேறு கலாச்சாரங்களுடனான இந்தியாவின் தொடர்பு வரலாறு முழுவதும் இருந்திருக்கிறது. இதில் கிரேக்கம், ரோமன், அரபு மற்றும் சீன தாக்கங்கள் இருந்ததால் – நாகரீகம் அது சார்ந்து மாறத் தொடங்கியது.
முகலாயர்கள் இந்தியாவைக் கைப்பற்றுவதற்கு முன்பு, இந்தியாவில் மேல்தட்டுப் பெண்கள் முழு ஆடைகள் அணிந்திருந்தாலும், மகாராஷ்டிரா மற்றும் கங்கைப் படுகை உட்பட வடஇந்தியாவின் பல பகுதிகளில் உழைக்கும் வர்க்கப் பெண்கள் மேலாடையின்றியே இருந்துள்ளனர். அன்று அது ஒழுக்கங்கெட்டதாகப் பார்க்கப்படவில்லை. மாறாக அது வர்க்கம் சார்ந்த உடை பழக்கமாக இருந்தது.
இந்தியாவில் முகலாயர்களின் வருகைக்குப் பின்தான் இந்திய பெண்களின் தலை மற்றும் மார்பகங்களை மறைப்பது போன்ற மாற்றங்கள் அனைத்துப் பிரிவு பெண்களிடமும் இடம்பெற்றிருக்கின்றன. 15-ம் நூற்றாண்டில், முஸ்லீம் மற்றும் இந்து பெண்கள் வெவ்வேறு ஆடைகளை அணிந்திருந்தனர். 16 மற்றும் 17-ஆம் நூற்றாண்டுகளில் முகலாயப் பேரரசின் செல்வாக்கு தீர்க்கமானதாக இருந்தது. அவர்கள் தற்போதைய இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பெரும்பகுதியை ஆட்சி செய்தனர். முஸ்லீம் பெண்கள் பொதுவாக தங்களை முழுவதுமாக மூடும்விதமான உடைகளை அணிந்திருப்பார்கள். முகலாயர்கள் காலகட்டத்தில்தான் சல்வார் கமீஸ் போன்ற ஆடைகள் தோன்றின. இன்று அது இந்தியாவில் ‘தேசிய உடை’ போல அணியப்படுகிறது.

முகலாயர் காலகட்டத்திற்குப் பிறகு இங்கு நிலைநாட்டப்பட்ட காலனிய ஆட்சிக் காலகட்டம், இந்தியாவில் ஆடையில் புரட்சியை ஏற்படுத்தியது. ஆங்கிலேயர்களின் சந்தை நோக்கம் அதற்கு முக்கியக் காரணம். எனினும் இது இந்தியா முழுவதும் ஒரே மாதிரி நடைபெறவில்லை. இதிலுள்ள சாதிய பாகுபாடுகள் நெஞ்சை உலுக்குபவை.
இந்தியாவின் சில பகுதிகளில், மார்பகங்களை மூடுவது, அவர்களின் வர்க்க நிலையைக் கடந்து சாதியுடன் தொடர்புடையதாகவே இருந்தது.
உதாரணமாக, கேரளாவில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மார்பகங்களை மூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. ரவிக்கை அணியும் உரிமையும், மார்பகங்களை மறைக்கும் உரிமையும் உயர்சாதி பெண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது.
ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் தங்களது மார்பகங்களை மறைக்கும் உரிமைக்கும், மேலாடை அணியும் உரிமைக்காகவும் போராடிய வரலாறு கேரளாவுக்கும் இன்றைய தென் தமிழகத்தின் நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கும் (அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானம்) உண்டு.
வங்காளத்தில், விக்டோரியா காலத்தில், ஆதிக்க சாதிப் பெண்களில் பெரும்பாலானவர்கள் புடவையுடன் ரவிக்கைகளை அணியவில்லை – அவர்கள் ரவிக்கையின்றி வெறும் புடவையை மட்டுமே அணிந்தனர். இன்றும் பழம்பெரும் மூதாட்டிகள் வெறும் புடவையைமட்டுமே மேலாடையாக உடுத்தியிருப்பதைப் பார்க்கலாம்.
அப்படியென்றால் ரவிக்கையை யார் கொண்டு வந்தார்கள் ? இந்தியாவுக்கு ரவிக்கை எனும் உடை எப்படி அறிமுகமானது?
