“போலீசு உங்கள் நண்பன்” என்பது ஏட்டளவிலும் சாலையோரத் தட்டிகள் அளவிலும் மட்டுமே நிற்கும் வாசகமாகும். நடைமுறையில் போலீசு சாதாரண மக்களுக்கு விரோதியாகத்தான் செயல்பட்டு வருகிறது. இதனை நிரூபிக்கும் வகையான சம்பவங்கள் அன்றாடம் நிகழ்ந்து கொண்டும் அம்பலமாகிக் கொண்டும் இருக்கின்றன.
கடந்த ஜனவரி 14 அன்று நள்ளிரவில் மருந்தகத்தில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சட்டக் கல்லூரி மாணவன் அப்துல் ரஹீமை முகக்கவசம் சரியாக அணியவில்லை என்று கொடுங்கையூர் போலீஸ் அதிகாரிகள் வலுக்கட்டாயமாக தரதரவென போலீசு நிலையத்திற்கு இழுத்துச் சென்று உள்ளாடையோடு நிற்கவைத்து கடுமையாக பிளாஸ்டிக் பைப்பால் தாக்கியுள்ளனர்.
வலி தாங்காமல் கீழே விழுந்த ரஹீமை செருப்புக் காலால் உதைத்துள்ளனர். ரஹீம் சட்டம் படித்த மாணவன் என்பதால் சில சட்டங்களை பேசியுள்ளார். நான் முறையாக முகக்கவசம் அணிந்து இருக்கிறேன், சமூக இடைவெளியை கடைபிடித்து தான் நிற்கிறேன் என்னை ஏன் பிடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “எங்களிடமே சட்டம் பேசுறியா, சட்டம் படித்தால் பெரிய மயிரா?” என்று போலீசு திமிரை காட்டியுள்ளனர்.
இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ரஹீமை மதத்தின் பெயரைச் சொல்லி மிகவும் இழிவான முறையில் நடத்தியுள்ளனர். பூட்ஸ் காலால் உதைத்ததில் கண்ணின் ஓரத்தில் இருந்து கொட்டிய இரத்தத்தை ரஹீமின் சட்டையை கழட்டி அழுத்தித்துடை என்று சித்திரவதை செய்துள்ளனர். தன்னை இவர்கள் கொலைசெய்ய போகிறார்கள் என்று பயந்த ரஹீம் செல்போனில் தனக்கு நடந்த போலீஸ் வெறியாட்டங்களை வீடியோ பதிவு செய்து வெளியிட்டார்.
சமூக வலைதளங்களில் வெளிவந்து போலீசின் உண்மை முகத்தை கிழித்து தொங்கவிட்ட வீடியோவைப் பார்த்து பயந்துபோன போலீசோ, ரஹீமிடம் போலீசு என்னை அடிக்கவில்லை கீழே விழுந்து காயம் ஏற்பட்டு விட்டதென வீடியோ பதிவு செய்துவிட்டு வெளியே அனுப்பியுள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது போலீசுத்துறை பெயரளவில் மட்டும் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதேபோல, கடந்த ஜனவரி 8-ம் தேதி சேலம் மாவட்டத்திலுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்ற மாற்றுத்திறனாளியை திருடன் என்று கைது செய்து, போலீசு நிலையத்திற்கு அழைத்துச் செல்லாமல் அருகிலுள்ள போலீசு குடியிருப்பிற்கு அழைத்துச் சென்று காணாமல்போன 140 பவுன் நகையைத் திருடியதாக வலுக்கட்டயமாக ஒப்புக்கொள்ளச் சொல்லி அவரின் மனைவியின் முன்பு மாற்றுத்திறனாளி என்று கூடப் பாராமல் கடுமையாக அடித்துள்ளனர். அவரின் ஆணுறுப்பில் அடித்ததில் வலிதாங்காமல் அழுதுள்ளார். இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக போலீசு தாக்கியதில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார் முருகேசன். அவரின் மனைவியையும் இரண்டு நாட்கள் சிறையில் அடைத்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 4, 2021 அன்று நள்ளிரவில் நண்பர்களுடன் வண்டியில் வந்து கொண்டிருந்த இராமநாதபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற கல்லூரி மாணவன் போலீசு நிற்கச் சொல்லியும் நிற்காமல் சென்றதால் மணிகண்டனை விரட்டிச்சென்று பிடித்து போலீசு நிலையத்திற்கு அடித்து தரதரவென வழிநெடுகில் இழுத்து வந்துள்ளனர் போலீசு அதிகாரிகள். போலீசு நிலையத்திலும் வைத்து அடித்துள்ளனர்.
மணிகண்டனின் உடல்நிலை மோசமாகவே மாணவனின் வீட்டிற்கு போன் செய்து உங்கள் மகனை உடனே அழைத்துச் செல்லுங்கள் என்று கூறியுள்ளனர். போலீசு நிலையத்திற்கு வந்த மணிகண்டனின் உறவினர்கள் அவரின் உடல்நிலை கண்டு அதிர்ச்சியடைந்தனர் வெளிகாயம் தெரியாமல் மாணவனைத் தாக்கியுள்ளனர்.
வீட்டிற்கு சென்று ஐந்து மணிநேரத்தில் படுக்கையில் இறந்த நிலையில் மணிகண்டன் பிணமாகக் கிடந்துள்ளார். போலீசு தாக்கியதால்தான் என் அண்ணன் இறந்தான் என்று வழக்குப்பதிவு செய்துள்ளார் மணிகண்டன் தம்பி.
சேலம் மாவட்டத்தில் கருந்துறை அருகே பாப்பநாயக்கன் பட்டியில் ஏத்தாப்பூர் தற்காலிக போலீசு நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த எஸ்.ஐ. பெரியசாமி அந்த வழியில் குடிபோதையில் வந்த முருகேசனை ரோட்டில் வைத்து வெறித்தனமாக அடித்துள்ளார். அடிதாங்க முடியாமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் முருகேசன்.
***
மேற்கூறிய சம்பவங்கள் எல்லாம் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பொதுவெளியில் அம்பலமான கொட்டடிக் கொலை / சித்திரவதை சம்பவங்கள். அம்பலமாகாத கொட்டடி சித்திரவதைகள் இன்னும் பன்மடங்கு இருக்கும். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள நிலைமைதான்.
கடந்த ஜீலை 19, 2020-ம் தேதியன்ன்று இரவு கடையை திறந்து வைத்திருந்ததால் போலீசு அடித்து இழுத்துச் சென்று ஆசன வாயில் லத்தியை செருகி கொல்லப்பட்ட தந்தை மற்றும் மகன் (ஜெயராஜ், பென்னிஸ்) கொலைச் சம்பவம் நாடு தழுவிய அளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசின் அதிகாரத்தையும் திமிர்த்தனத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஆனால், இன்றுவரை அந்தக் குற்றவாளிகள் முழுமையாக தண்டிக்கப்படவில்லை.
தமக்கு அளிக்கப்பட்டுள்ள வானளவு அதிகாரத்தைக் கொண்டுதான் அப்பாவி மக்களை விசாரணை என்று அழைத்துச் சென்று அவர்களுக்கு தோன்றியபடி வழக்குப் பதிவு செய்வது மட்டுமல்லாமல் அடித்து துன்புறுத்தி கொலைசெய்து கொண்டிருக்கிறது போலீசு.
மனித உரிமை ஆணையத்தின் கூற்றுப்படி, கடந்த 2021-ம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மொத்தம் இந்தியாவில் 1,067 நபர்கள் போலீஸ் சித்திரவதையால் கொல்லப்பட்டுள்ளனர். இதில், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் தினசரி ஐந்து நபர்கள் நீதிமன்றக் காவலிலும் தடுப்புக் காவலிலும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர்.
சித்திரவதைகளுக்கெதிரான தேசிய பரப்புரை [NATIONAL COMPAIGN AGAINST TORTURE (NCAT)] 2021 அறிக்கையின்படி, 62 சதவீத மரணங்கள் போலீசால் கைது செய்யப்பட்ட 24 மணிநேரத்திற்குள் நடைபெறுகின்றன.
கடந்த 2021-ம் ஆண்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2018 முதல் 2019 வரை நீதிமன்றக் காவலில் 1,797 மரணங்களும், தடுப்புக் காவலில் 126 மரணங்களும், 2019 முதல் 2020 வரை நீதிமன்றக் காவலில் 1,584 மரணங்களும், தடுப்புக் காவலில் 112 மரணங்களும், 2020 முதல் 2021 வரை நீதிமன்றக் காவலில் 1,840 மரணங்களும் தடுப்புக் காவலில் 100 மரணங்களும் பதிவாகியுள்ளன. கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் நீதிமன்றக் காவலில் 5,221 மரணங்களும் தடுப்புக் காவலில் 248 மரணங்களும் நடந்துள்ளதாகப் பதிவாகியுள்ளது.
சிறைச்சாலையின் தரவுகளின்படி, இந்தியாவில் உள்ள மூன்றில் இரண்டு கைதிகள் விசாரணை கைதிகளாவர். 2019 சித்திரவதைகளுக்கெதிரான தேசிய பரப்புரை (NCAT)-இன் தரவு, தடுப்புக் காவலில் இறந்த 125 நபர்களில் 60 சதவீதம் பேர் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்டச் சமூகத்தைச் சார்ந்தவர்கள். விசாரணை என்ற பெயரில் அப்பாவி மக்களை அழைத்துச் சென்று நீதிபதிகள் முன் பெயரளவில் மட்டும் ஆஜர்படுத்தி போலீசு அதிகாரத்தைக் கொண்டு வலுக்கட்டாயமாக சிறையில் தள்ளிவிடுகின்றனர் என்று கூறுகிறது.
குற்றம் செய்யும் போலீசு அதிகாரிகளை விசாரிப்பதற்கு பெயரளவில் அமைக்கப்படும் விசாரணை ஆணையமும் போலீசு அதிகாரிகளைக் கொண்டே அமைக்கப்படுகிறது. இப்படி அமைக்கப்பட்ட ஆணையம் மூலம் பெரும்பாலும் யாரும் தண்டிக்கப்படுவது கிடையது. கொட்டடிக் கொலைகளுக்கு எதிராகப் போராடும் மக்களின் போராட்ட குணத்தை குறைப்பதற்காக நடத்தப்படும் நாடகம்தான் இது.
திருடனைப் பிடிக்கத் திருடனை நியமிக்கும் கதைதான். அவர்களை தண்டிப்பதற்கு சட்டங்கள் இந்தக் கட்டமைப்பில் கிடையாது, சஸ்பெண்ட் செய்துவிட்டால் வீட்டில் இருந்து வேலைக்கு வராமல் சம்பளம் வாங்கத்தான் போகிறார்கள்.
இவ்வாறான சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம், “பணிச்சுமை காரணமாகத்தான் போலீசார் இப்படி தவறு செய்கிறார்கள்” என்றும் “ஒருசில போலீசு கரும்புள்ளிகள் செய்யும் தவறுகளால் போலீசு துறையையே குற்றம் சொல்லக் கூடாது” என்றும் “அவர்களுக்கு மனநல கவுன்சிலிங் கொடுக்கப்பட வேண்டும்” என்றும் புளித்துப் போன வாதங்கள் மீண்டும் மீண்டும் வைக்கப்படுகின்றன.
ஆனால், ஜெயராஜ், பென்னிக்ஸை கொன்றவர்களுக்கும் ரஹீமைத் தாக்கியவர்களுக்கும் மனநிலை ஒன்றுதான். “தன்னை எதிர்த்து யாரும் கேள்விக் கேட்கக் கூடாது தன்முன் யாரும் பேசக் கூடாது” என்ற அதிகார திமிர்தான் அந்த மனநிலை. தன்னை யாரும் கேள்வி கேட்கவும் தண்டிக்கவும் முடியாது என்ற ஆணவம்தான் அந்த மனநிலை.
மக்களை அடக்கி ஒடுக்குவதற்காக இத்தகைய ஆணவத்தை உடையவர்களாகவே ஆளும்வர்க்கங்களால் வார்க்கப்பட்டு, அரசியல்சாசனத்தால் பாதுகாக்கப்பட்டு, வளர்க்கப்படும் போலீசை தண்டிக்க இந்த அரசமைப்பில் சாத்தியம் இல்லை என்பதே நடைமுறை அனுபவங்கள் நமக்கு மீண்டும் மீண்டும் சொல்லும் பாடம். தனிப்பட்ட போலீசின் மனநிலைக்கான சிகிச்சையல்ல, ஒட்டுமொத்த அரசமைப்புக்குமான அறுவை சிகிச்சையே இன்றைய தேவை.