கொரோனா எமது வாழ்க்கைக்குக் கற்றுத் தந்துள்ள பாடங்கள் அநேகம். மருத்துவமனைக் கட்டில்களில் ஒக்ஸிஜன் குழாய்கள் மூலம் உயிரைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கும் மனிதர்களைப் போலவே நாளுக்கு நாள் மூச்சு நின்று போன மனிதர்களால் பிணவறைகளும் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் கண்ட அளவுக்கு பெருமளவான கொரோனா சடலக் குவியல்கள் இலங்கையில் இல்லாவிட்டாலும், இங்கும் ஒரு நாளைக்கு மயானத்துக்குக் கொண்டு செல்லப்படும் சடலங்களின் எண்ணிக்கை முந்நூறைக் கடந்திருக்கிறது.
இரவுகளில் அனைத்து வைத்தியசாலைகளிலிருந்தும் சவப்பெட்டி ஊர்வலங்கள் எவ்வித இறுதிச் சடங்குச் சோடனைகளோ, நில விரிப்புகளோ, தோரணங்களோ, மலர் வடங்களோ எதுவுமில்லாமல்தான் மயானங்களை நோக்கிச் செல்கின்றன. அது மாத்திரமல்லாமல் அநேகமான சடலங்கள் உறவினர் நண்பர்களோ, தமது அன்புக்குரியவர்களோ இறுதியாக முகத்தைக் கூடப் பார்க்காத நிலையில்தான் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
எவ்வித இறுதி மரியாதைகளோ, இறுதி முத்தங்களோ இல்லாமல் படுக்கையிலேயே பொலிதீன் உறைக்குள் உங்கள் இறுதி யாத்திரை நிகழக் கூடும் என்பதை கொரோனா ஒவ்வொருவருக்கும் இந்தக் கணத்தில் கற்றுத் தந்திருக்கிறது. இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்தக் கணத்திலும் கூட இலங்கையில் மிகவும் நெருக்கடி மிகுந்த இடமாக இருப்பது மருத்துவமனைகளிலிருக்கும் கொரோனா சிகிச்சையறைகளும், பிணவறைகளும், மயானங்களும்தான்.
படிக்க :
இலங்கை : மலையேறிச் சென்று பெண்கள் மேற்கொள்ளும் மருத்துவம் !!
பசில் ராஜபக்சேக்கு அமைச்சர் பதவி : ராஜபக்சே குடும்பத்தின் பிடியில் இலங்கை || ரிஷான் ஷெரிஃப்
ஒரு வறிய ஏழையையும், அரண்மனைச் செல்வந்தனையும் ஒரே நேரத்தில் பாரபட்சமே பாராமல் கொரோனா அரக்கன் எப்போது வேண்டுமானாலும் மரணம் நோக்கி அழைத்துச் செல்லலாம்.
பொலிதீன் உறையில் நிகழும் இறுதி யாத்திரைகளைக் கண்டு ஒரு பிணவறையின் முன்னால் எத்தனை ஆயிரம் பேர் தினந்தோறும் அழுது புலம்புகிறார்கள். காலி, கராப்பிடிய நகரத்தின் பிணவறையின் முன்னால் நான் கண்ணுற்ற சடலங்களின் ஊர்வலம் ஒரு கணம் மனதைத் துணுக்குறச் செய்தது. அப்போது மாலை நேரம், சரியாக ஐந்து மணி முப்பது நிமிடங்கள்.
“இன்று மாத்திரம் கொரோனா சடலங்கள் இருபத்தைந்து. செய்தியறிக்கைகளில் கொரோனா மரணங்களின் அளவு குறைந்திருப்பதாகச் சொன்னாலும், உண்மையில் மரணங்களில் பெரிதாக எவ்விதக் குறைவும் இல்லை. அனைத்தும் அரசாங்கத்தின் நடிப்பு. உண்மையில் எவ்வளவு பெரிய ராஜாவாக இருந்தாலும் அவர்களது இறுதி யாத்திரை இங்கிருந்துதான்” என்று பிணவறை ஊழியர் ஒருவர் சொல்லிக் கொண்டே போனார்.

This slideshow requires JavaScript.

ஏழை, பணக்காரன் என்ற பேதமேதுமற்று, அந்தப் பிணவறையின் முன்னால் மக்கள் அழுது புலம்பும் விதம், தரையில் அமர்ந்திருந்து நிலத்தில் புரண்டழும் விதம் ஆகியவை மனித வாழ்க்கை எவ்வளவு கையறு நிலைக்குள்ளாகியிருக்கிறது என்பதை உணர்த்துகிறது. இலங்கையின் எந்தவொரு பிணவறைக்கு முன்னால் நீங்கள் போனாலும் அந்த வேதனையை, அந்தக் கையறு நிலையை உங்களுக்கும் உணர்த்தும்.
பணம் படைத்தவர்கள், இல்லாதவர்கள், பிரபலமானவர்கள், உயர் குலத்தவர்கள், தாழ் குலத்தவர்கள் என்ற பேதமேதுமற்று அனைத்து சடலங்களையும் ஒன்று போலவே பொலிதீன் உறையில் பொதிந்து சீல் செய்து பிணவறையின் குளிர்ந்த அறையிலிருந்து வெளியே கொண்டு வரும் போது உயிரோடிருப்பவர்கள் எவ்வளவுதான் அழுது புலம்பினாலும் கடைசியில் இவ்வளவுதானா என்று உங்களுக்குத் தோன்றும். அவ்வாறானதோர் சூழலை நெருங்கும்போது மனதில் தோன்றும் உணர்வுகளைக் குறித்து புதிதாக விவரிக்கத் தேவையில்லை. அந்தச் சூழலில் கேட்கக் கூடிய ஒரே ஓசை அழுகையும், ஒப்பாரிகளும் மாத்திரம்தான்.
அங்கு புன்னகை பூத்த முகங்களைக் காணவே முடியாது. பிணவறையின் விறாந்தைகளில் தள்ளுவண்டிகளின் மீது அமைதியாகக் கைகளைக் கோர்த்தவாறு படுத்திருப்பவர்களின் வாழ்நாளில் எவ்வளவு பந்தங்கள் இருந்திருக்கும்? அவர்கள் எவ்வளவு நண்பர்கள், சொந்தங்களுடன் பழகியிருப்பார்கள்? எவ்வளவு கனவுகள், எதிர்பார்ப்புகள், இலக்குகள்  அவர்களுக்கு இருந்திருக்கும்? தமது துணையின், அம்மாவின், அப்பாவின், பிள்ளையின், உறவினர், நண்பர்களின் முகங்களைக் கூட இறுதியாகப் பார்க்க முடியாமல் இறுதிப் பயணத்தைப் போக நேர்ந்த எத்தனை பேர் அந்தப் பொலிதீன் உறைகளுக்குள் இருக்கக் கூடும்?
“எனது கணவருக்கு மரணிக்கும் அளவிற்கு எவ்வித வியாதியும் இருக்கவில்லை. இப்போதுதான் அவருக்கு முப்பத்தொன்பது வயதாகிறது. அவர் பணி புரிந்து வந்த இடத்திலிருந்து அவருக்குக் கொரோனா தொற்றியதைக் கேள்விப்பட்டதும் எனக்கும், குழந்தைக்கும், அம்மாவுக்கும் தொற்றி விடுமோ என்று பயந்து மிகவும் அழுதார். நாங்கள் பாதுகாப்பாக இருந்த போதிலும் எம்மையும் கொரோனா தொற்றியது. இன்றோடு எமக்குக் குணமடைந்து ஒரு மாதத்துக்கும் மேலாகிறது.
அம்மா மிகவும் வயதானவர். அவருக்கு சுவாசிக்கச் சிரமமானதும் கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதித்தோம். அவசர சிகிச்சைப் பிரிவில் கட்டில் இல்லாததால் அம்மாவின் உயிர் தள்ளுவண்டியிலேயே பிரிந்தது. அம்மாவின் மரணம் குறித்து அப்போது கணவரிடம் நாங்கள் தெரிவிக்கவில்லை. அப்போது அவர் தீவிர சிகிச்சையில் இருந்தார். ஒன்பது நாட்கள் அவ்வாறு இருந்த பிறகுதான் கணவருக்குக்குக் குணமானது.
அம்மாவின் மரணம் குறித்து கணவர் வீடு திரும்பிய பிறகுதான் அவரிடம் கூறினோம். ‘அம்மாவின் பேரில் மூன்றாம் மாத அன்னதான நிகழ்வைச் சிறப்பாகச் செய்ய வேண்டும்’ என்று அவர் கூறினார். வீடு திரும்பி பதினைந்து நாட்களின் பின்னர் கணவருக்கு இருமல் ஏற்பட்டது. இருமலுடன் மீண்டும் சுவாசிக்கச் சிரமப்பட்டார். கராப்பிட்டிய மருத்துவமனைக்குக் கூட்டி வந்த போது ‘ஆஸ்துமாவினால் வந்திருக்கும்’ என்றார்கள். நேற்று மாலை நேரமும் என்னோடு நன்றாகக் கதைத்துக் கொண்டிருந்தார். ‘இன்னும் இரண்டு நாட்களில் வீட்டுக்குத் திரும்பி விடலாம்’ என்றும் கூறினார்.
இரவு வேளையில் மருத்துவமனையிலிருந்து என்னை அழைத்து கோவிட் நியூமோனியாவின் காரணமாக கணவர் இறந்து விட்டதாகக் கூறினார்கள். என்னால் நம்பவே முடியவில்லை. கொரோனா குணமாகி வீட்டுக்கு வந்தவருக்கு என்ன நேர்ந்தது? ஒரே ஒரு தடவை எனக்கு கணவரின் முகத்தைப் பார்க்க அனுமதித்தார்கள். குழந்தைக்கு இப்போதுதான் இரண்டு வயது. அதனால் மருத்துவமனைக்குக் கூட்டிக் கொண்டு வர வேண்டாம் என்றார்கள்.
அம்மா காலமாகி இருபது நாட்களில் எனது கணவரும் இறந்து விட்டார். அழுவதற்கு இப்போது என்னிடம் கண்ணீர் கூட இல்லை. இவ்வாறானதொரு துயரம் வேறு எந்தப் பெண்ணுக்கும் நேரக் கூடாது. உங்களைக் கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறேன். கொரோனாவிடமிருந்து பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள். நான் மீண்டும் ஒரு தடவையாவது எனக்கு என்னுடைய கணவரின் முகத்தைப் பார்த்துக் கொள்ளக் கிடைக்குமா என்றுதான் இப்போது இங்கு காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று ஒரு பெண்மணி அழுது புலம்பினார். அவர் இந்தப் பிணவறையில் நான் சந்திக்க நேர்ந்த ஒரு இளம்பெண். அவரது அழுகை ஓலம் பிணவறை முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
அதே கராப்பிட்டிய மருத்துவனையின் பிணவறை ஊழியர் ஒருவர் தனது அனுபவத்தை என்னிடம் இவ்வாறு தெரிவித்தார்.
“இரவாகும்போது எனது மொத்த உடலும் வலிக்கும். கொரோனா சடலங்களைத் தள்ளுவண்டியில் நானேதான் தூக்கி வைக்க வேண்டியிருக்கும். கொரோனா சடலங்களைத் தொட்டுத் தூக்கக் கூட யாரும் அருகில் வருவதில்லை. நோய் தொற்றி விடும் என்ற பயம்தான் காரணம். ஒரு நாளைக்குக் குறைந்தது இருபது, இருபத்தைந்து கொரோனா சடலங்கள் தவறாமல் இங்கு வரும். ஒரு நாள் நாற்பது சடலங்கள் வந்தன.
நான் இங்கு பிணங்களை அறுப்பதைச் செய்து வருகிறேன். அன்று மாத்திரம் நான் தனியாக இருபத்தைந்து சடலங்களை அறுக்க நேர்ந்தது. எப்படியும் குறைந்தது ஒரு நாளைக்கு பத்து, பன்னிரண்டு சடலங்களை நான் அறுக்க வேண்டியிருக்கும். கோவிட் நியூமோனியாவினால் மரணிக்கும் இளம் வயதுடையவர்களின் சடலங்களைக் கட்டாயமாக அறுத்துப் பார்க்க வேண்டியிருக்கும். நான் ஒவ்வொரு சடலத்தை அறுக்கும் முன்பும் கடவுளுக்கு பூ வைத்து பூஜை செய்து, விளக்கேற்றி விட்டுத்தான் அறுக்கிறேன்.

This slideshow requires JavaScript.

கடந்த பதினான்கு வருடங்களாக நான் பிணவறையில் பிணங்களை அறுக்கும் வேலையைச் செய்து வருகிறேன். எனது வறுமையின் காரணமாக இந்த பிணம் அறுக்கும் வேலையைச் செய்கிறேனே ஒழிய விருப்பத்தோடு நான் இதைச் செய்வதில்லை. இது மிகவும் சாபம் பிடித்த தொழில்.
நான் கொரோனா சடலங்களை அறுப்பதனால் எனது குழந்தைகளின் முகங்களைப் பார்த்தே ஐந்து மாதங்களாகின்றன. வீட்டுக்குப் போகவேயில்லை. என்னைக் காணும்போது நெருங்கிய நண்பர்கள் கூட பின்னால் நகர்ந்து போய் விடுகிறார்கள். நண்பர்கள், உறவினர்கள் கூட என்னைத் தள்ளியே வைத்திருக்கிறார்கள். அவற்றை யோசித்துப் பார்க்கும்போது மிகுந்த கவலை தோன்றுகிறது.
எனது தொழிலில் மிகவும் மோசமான காலத்தை இப்போது கடந்து கொண்டிருக்கிறேன். இதுவரையில் கொரோனா தொற்றி மரணித்த ஆறு குழந்தைகளை நான் அறுத்திருக்கிறேன். எத்தனை வருட கால அனுபவம் இருந்த போதிலும், ஒரு குழந்தையொன்றின் சடலத்தைக் கைகளில் ஏந்தியதும் எனது கை கால்கள் வலுவிழந்து போய் விடுகின்றன. மிகுந்த மன உளைச்சலை உணர்வேன்.
நான்கு நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றி மரணித்த இருபத்தெட்டு வயதான நிறைமாத கர்ப்பிணித் தாய் ஒருவரின் சடலத்தை இங்கு கொண்டு வந்தார்கள். பிரசவம் நிகழ்ந்திருக்கவில்லை. அந்தத் தாயின் வயிற்றுக்குள் பூரண வளர்ச்சியடைந்த குழந்தை இருந்தது. அதைக் கையில் எடுத்த பிறகு வேறு இடத்தில் வைக்க எனக்கு மனம் இடமளிக்கவில்லை. அந்தக் குழந்தையைத் தாயின் கால்களிரண்டின் அருகிலேயே வைத்திருந்தேன்.
அந்தச் சடலத்தைப் பொறுப்பேற்க ஒரு இளைஞர் வந்தார். அவரைக் கட்டுப்படுத்த என்னால் முடியவேயில்லை. சடலத்தைக் காண்பித்ததும் என்னையும் தள்ளிக் கொண்டு போய் கால்களருகே வைக்கப்பட்டிருந்த குழந்தையைக் கையிலேந்தி அரவணைத்து முத்தமிட்டுக் கொண்டேயிருந்தார். ‘கிருமியிருக்கும், முத்தமிடாதீர்கள்’ என்று நான் கத்தினேன். அவர் அந்தச் சடலங்களிரண்டையும் பார்த்து அழுது புலம்பியதைக் கண்டு நான் செய்வதறியாது நின்று கொண்டிருந்தேன். எனது கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
வேறு வியாதிகள் தொற்றி மரணிப்பதைக் காட்டிலும் இவ்வாறான திடீர் மரணங்கள் மிகுந்த கவலையைத் தருபவை. வீட்டிலிருந்து பத்திரமாக பிரசவத்துக்காக வந்த பெண் கடைசியில் பிணவறையில் துணிப்பொதி போல கிடைக்கிறார். அந்த இளைஞர் என்னிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். அப்போது சடலத்தைப் பெட்டியிலிட்டு ஆணியடிக்கும் வேலை மாத்திரமே மீதமிருந்தது. திருமணத்தின் போது தனது மனைவி கட்டியிருந்த சேலையை அந்தச் சடலத்துக்கு அனுவிக்க முடியுமா என்று கேட்டார்.
நான் அதையும் செய்து கொடுத்தேன். அந்தச் சடலத்துக்கு ஆடையணிவித்து, குழந்தைக்கும் அழகான ஆடையொன்றை அணிவித்தேன். நான் ஆடையணிவித்து முடிக்கும்வரை அந்த இளைஞர் அழுது கொண்டே தனது மனைவியின் தலையைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார். இங்கிருப்பவை கொரோனா மரணங்கள் என்பதால் யாரையும் உள்ளே நுழைய நாங்கள் அனுமதிப்பதில்லை. ஆனாலும், அவருக்கு அனுமதியளிக்காதிருக்க எனது மனம் அன்று இடமளிக்கவில்லை.
அதன் பிறகு வந்த இரண்டு நாட்கள் எனக்கு உறக்கம் வரவேயில்லை. இப்போதும் எனக்கு அந்தச் சம்பவம் நினைவுக்கு வந்து கொண்டேயிருக்கிறது. தொடக்கத்தில் கொரோனா தொற்றிய முதியவர்களது சடலங்களே நிறைய வந்தன. இப்போது இளைஞர்களது சடலங்கள் நிறைய வருகின்றன. சில நாட்கள் இந்தப் பிணவறையில் சடலங்கள் கொசுக்களைப் போல நிறைந்திருக்கும்.
குடும்பத்தவர்கள் இந்த இடத்தில் அழுது புலம்புவத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. சிலர் சடலத்தைப் பார்த்து விட்டு இந்த இடத்திலேயே மாரடைப்பு வந்து நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உயிரிழந்திருக்கிறார்கள். மிக அண்மையிலும் அவ்வாறானதோர் சம்பவம் நடந்தது. கொரோனா தாக்கி மரணித்த கணவனைப் பார்க்க மனைவியும், மகளும் வந்திருந்தார்கள். கணவனின் முகத்தைப் பார்த்ததுமே மனைவி நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழுந்து விட்டார். திடீர் மாரடைப்பால் அந்தத் தாய் மரணமடைந்திருந்தார். மகளுக்குப் பத்து வயது.
நதீஷா அத்துகோரல
இவற்றையெல்லாம் காணும் அளவிற்கு நான் போன ஜென்மத்தில் நிறைய பாவம் செய்திருக்கக் கூடும் என்று நினைக்கிறேன். பத்தே வயதான அந்தச் சிறுமி தனது அம்மாவினதும், அப்பாவினதும் சடலங்களுக்கு முன்னால் எந்தளவு துயரங்களைத் தாங்கிக் கொண்டிருந்திருக்கக் கூடும்? இவற்றையெல்லாம் கண்டு கண்டே இரவில் தூக்கம் வருவதேயில்லை. பசியை நான் உணர்வதேயில்லை. எனது வறுமையின் காரணமாகத்தான் இவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு இந்தத் தொழிலைச் செய்து வருகிறேன்” என்றார்.
மற்றுமொரு பிணவறை ஊழியர் தனது அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.
“பெரும்பாலான நாட்களில் இரவாகும்போது என்னைக் காய்ச்சல் பீடித்தது போல உணர்வேன். இந்தச் சடலங்களைத் தூக்கித் தூக்கியே தாங்க முடியாத அளவு உடல் வலியெடுக்கும். கொரோனா சடலங்கள் என்று பார்க்காமல் அந்தச் சடலங்களையும் குளிப்பாட்டித் தூய்மையாக்கித்தான் பிணப்பெட்டியில் நாங்கள் இடுவோம். சில சடலங்கள் பல நாட்களாக இங்கேயே கிடப்பதால் அவற்றின் தோல் தனியாகக் கழன்று வந்த சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. இங்கு குளிர்பதன வசதியும் குறைவாகவே இருக்கிறது. சில சடலங்களை யாருமே உரிமை கோர மாட்டார்கள்.
அண்மையில் பாடசாலைக்குப் போகும் சிறுமியின் சடலமொன்று வந்தது. கொரோனா தாக்கி மரணமடைந்த சடலம் அது. அதன் தாய் அவளது குழந்தைப் பராயத்திலேயே மரணித்து விட்டிருந்தார். தந்தைதான் கைக்குழந்தையிலிருந்தே அவளை வளர்த்து வந்திருக்கிறார். அந்தச் சடலத்தை அறுக்க நேர்ந்தது. அறுத்துப் பார்த்து, குளிப்பாட்டித் தூய்மையாக்கி, பெட்டியில் இட முன்பு தூர இருந்தே பிள்ளையைப் பார்த்து விட்டுப் போய் விடுமாறு தந்தையிடம் கூறியதும் அவர் சடலத்தைப் பார்த்து நிலத்தில் விழுந்து புரண்டு ஓலமிட்டு அழுதார். பொலிதீன் உறையால் சடலத்தை மூட முற்பட்ட போது ஓடி வந்து சடலத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்து அழுதார்.
படிக்க :
கடன் சுமைக் கடலில் தத்தளிக்கும் இலங்கை ! தீர்வு என்ன ?
இலங்கை : இராணுவ போலீசு வன்முறைகளை எதிர்த்தல் !
அவர் அழுததைக் கண்டு எனக்கும் அழுகை வந்தது. எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள். அந்தத் தந்தையின் கவலையை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. கொரோனா சடலங்களின் அருகில் யாரையும் நெருங்க விட வேண்டாம் என்று எமக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள். இருந்தாலும் நான் அந்தத் தந்தைக்கு வேண்டிய மட்டும் தனது மகளின் அருகில் இருக்க இடமளித்தேன். அந்தத் தந்தை தனது மகளின் தலையைத் தடவித் தடவி என்னென்னவோ கூறிக் கொண்டிருந்தார். நான் அந்தச் சடலத்தைப் பெட்டியிலிட்டு ஆணியடிக்க முற்பட்ட வேளையில், திரும்பவும் அவர் ஓடி வந்து என்னிடம் அவரது புகைப்படமொன்றைத் தந்தார்.
“என்னுடைய மகள் ஒருநாளும் தனியாகத் தூங்கியதில்லை ஐயா. அம்மா காலமானதிலிருந்து நான் இவளைத் தனியாகத்தான் வளர்த்து வந்தேன். இருந்தாலும் இந்த நோயிடமிருந்து இவளை என்னால் பாதுகாக்க முடியாமல் போய் விட்டது. நான் சாகும்வரை இந்த வேதனையை அனுபவித்துக் கொண்டேயிருப்பேன். நான் சாகும்வரைக்கும் அவளுடைய தனிமையைப் போக்க இவற்றை அவளின் நெஞ்சின் மீது வைத்து மூடுங்கள்” என்று கூறி என்னிடம் அவரது புகைப்படம் ஒன்றையும், கரடி பொம்மையொன்றையும் ஒப்படைத்தார். இது எனது இந்தத் தொழில் வாழ்க்கையில் மறக்கவே முடியாத, எனக்கு அடிக்கடி நினைவுக்கு வரும் சம்பவமாகும்.
நான் எவ்வளவுதான் சடலங்களை அறுத்திருந்த போதிலும், இங்கு அனுபவிக்க நேரும் சில சம்பவங்களை என்னால் தாங்கிக் கொள்ள முடியாத வேளைகளில் ஒரு ஓரமாகப் போய் அழுது தீர்த்த சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு. இந்தளவு துயரங்களைத் தாங்கிக் கொண்டுதான் நாங்கள் இவையனைத்தையும் செய்து வருகிறோம். தொழிலொன்று இல்லாமல் வாழ முடியாது என்பதனால்தான் உண்மையிலேயே இந்தத் தொழிலைச் செய்து வருகிறேன். தமது சொந்தங்களை கொரோனா அரக்கன் பறித்துக் கொள்ளாதவரைக்கும் இந்த நோயின் பயங்கரத்தையும், அந்த வலியையும் எமது மக்கள் உணர்வதேயில்லை” என்றார்.
(கட்டுரையாளர் குறிப்பு :- நதீஷா அத்துகோரல, இலங்கையைச் சேர்ந்த பெண் ஊடகவியலாளரான நதீஷா அத்துகோரல, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பட்டதாரி ஆவார். கொழும்பு நகரத்தைக் குறித்து ஆய்வு செய்து நூலொன்றை எழுதி வருகிறார்.)
கட்டுரையாளர் : நதீஷா அத்துகோரல
புகைப்படங்கள் : திரு. லஹிரு ஹர்ஷன
தமிழில் : எம். ரிஷான் ஷெரீப்

disclaimer