அதற்கு ஒரு சிறந்த உதாரணம் பீமா கொரேகான் வழக்கு. தலித் மக்கள் ஒன்றுகூடி நடத்திய விழாவில் ஆர்.எஸ்.எஸ். – பாஜகவினர் ஏற்படுத்திய வன்முறையை ஒரு கலவரமாக மாற்றி மாவோயிஸ்டுகளுடன் இணைத்து மோடியை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக வளர்த்து அதற்கான சதி இலண்டனில் நடைபெற்றதாக விளக்கி 17 சமூக செயற்பாட்டாளர்களை ஊபா, ராஜதுரோகம் ஆகிய பிரிவுகளில் கைது செய்து 3 ஆண்டுகளுக்கு மேலாக சிறை வைத்திருக்கிறது மோடி அரசு.
முக்கியமான கொள்கைகளை வரையறுக்கும்போது அது நாடு முழுமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற உண்மையை புறந்தள்ளி அது சம்பந்தமாக மாநில அரசுகள் கருத்துகள் தெரிவித்தாலும் அதை ஏற்றுக் கொள்ளாமல் தன்னிச்சையாக செயல்படுவது; பெரும்பாலான சட்டங்கள் பாராளுமன்றத்திலோ ராஜ்யசபாவிலோ விவாதிக்கப்படாமல் பிரதமர் அலுவலகத்திலிருந்து நேரடியாக அவசர சட்டங்களாக நிறைவேற்றப்படுவது ஆகியவற்றின் மூலம் சொல்லிக் கொள்ளப்படும் பாராளுமன்ற ராஜ்யசபா மாண்புகளை மோடி அரசு புதைகுழிக்கு அனுப்பிவிட்டது. இதன் மூலம் மாநில அரசுகளை கட்டளைகளை நிறைவேற்றும் இடத்தில் மட்டுமே வைத்திருக்கிறது.
அரசியல் ரீதியாக தன்னை விமர்சிப்பவர்களை முடக்கி போட அவர்கள் மீது சட்ட விரோதமான முறையில் ஊபா(UAPA) சட்டத்தை ஏவுகிறது. மாநிலங்களுக்குள் அவர்களுக்கு தெரியாமலேயே தேசிய விசாரணை ஆணையத்தை(NIA) அனுப்பி மிரட்டுகிறது. இதன் மூலம் சட்ட ஒழுங்கு உட்பட நாட்டின் அத்தனை அதிகாரத்தையும் தன் கைகளுக்குள் முடக்கிகொண்டிருக்கிறது மோடி அரசு.