ங்களை நிம்மதியாக வாழவிடுங்கள்; போராட்டமே எங்கள் வாழ்க்கையாகி விட்டது; ஜிண்டால் குழுமத்திற்கு எதிரான போராட்டம், எட்டுவழிச் சாலைக்கு எதிரான போராட்டம், குப்பை கிடங்கிற்கு எதிரான போராட்டம் – எனத் தொடர்ந்து போராடியுள்ளோம். இப்போது எங்களது நிலங்களைப் பறித்து எங்களை ஊரைவிட்டே விரட்டிவிட்டு சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு எதிராகப் போராடி வருகிறோம். நாங்கள் ஒருபோதும் எங்கள் நிலத்தை விட்டுகொடுக்க மாட்டோம். போராட்டத்தின்போது சாகவும் நாங்கள் தயங்க மாட்டோம்” என்கிறார்கள் போராடும் மக்கள்.
திருவண்ணாமலையில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் செங்கம் வட்டத்திற்கு உட்பட்ட சின்ன பாலியப்பட்டு, பழைய காலனி, புதிய காலனி, செல்வபுரம், அண்ணா நகர், மாரியம்மன் நகர், சின்ன புனல்காடு, அருந்ததியர் காலனி, வாணியம்படி – என்று பாலியப்பட்டு பஞ்சாயத்திற்கு உட்பட்ட சுற்றுவட்டார கிராமப்புற பகுதியில்தான் போராடும் மக்கள் குறிப்பிடும் சிப்காட் தொழிற்பேட்டை அமையவுள்ளது. விளைநிலங்களையும், கவுத்தி – வேடியப்பன் மலையையும் அழித்து சுற்றுச்சூழலையும் அம்மக்களின் வாழ்வாதாரத்தையும் நாசமாக்கி சிப்காட் அமைக்கப்படவுள்ளது. 1,500 ஏக்கர் நிலத்தையும் 500 வீடுகளையும் அரசு கையகப்படுத்தி கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக அமைக்கப்படவுள்ள இந்த சிப்காட் தொழிற்பேட்டைக்கு எதிராக 54 நாட்களுக்கும் மேலாக தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் 9 கிராம மக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தின் செங்கம் வட்டாரமானது நெல், நிலக்கடலை, மலர்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான வேளாண் பொருட்கள் விளையும் பகுதியாகும். இங்கு சிப்காட் தொழிற்பேட்டை அமைந்தால், விளைநிலங்களும் பாரம்பரியமாக தாங்கள் வாழ்ந்துவந்த வீடுகளும் பறிக்கப்பட்டு சொந்த நாட்டில் அகதிகளாகத் திரியும் நிலைமை உருவாகும் என்பதை உணர்ந்த 9 கிராம மக்களும் உடனடியாக கிராமசபைக் கூட்டத்தை நடத்தி சிப்காட் தொழிற்பேட்டையை எதிர்க்க வேண்டும் என முடிவெடுத்தனர்.
படிக்க :
திருவண்ணாமலையை முழுங்க வரும் ஜிண்டால் – பின்னணி செய்திகள்
வெள்ளாற்றை பாதுகாக்க திரள்கிறது மக்கள் படை
மேலும், பாலியப்பட்டு ஊராட்சியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் சாதிய வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைந்து “சிப்காட் எதிர்ப்பு விவசாய மக்கள் இயக்கம்” என்ற பெயரில் ஒரு போராட்ட அமைப்பையும் உருவாக்கினர். சிப்காட் திட்டத்தை முழுமையாகக் கைவிடும் வரை தொடர்ந்து போராட்டத்தை நடத்தப்போவதாக பிரகடனப்படுத்தினர்.
தொடர் காத்திருப்புப் போராட்டத்தின் மூன்றாம் நாளன்று (24.12.2021) கிராமசபைக் கூட்டத்தைக் கூட்டி எங்கள் கிராமத்தின், கிராம மக்களின் நலனைக் காக்கும் விதத்தில் பாலியப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படக் கூடாது என்று அரசை வலியுறுத்தி தீர்மானமும் இயற்றியுள்ளனர்.
சிப்காட் எதிர்ப்பு விவசாய மக்கள் இயக்கத்தின் சார்பில், காத்திருப்பு போராட்டம், வீடுகளில் கறுப்புக் கொடியேற்றும் போராட்டம், கஞ்சி காய்ச்சும் போராட்டம், பொங்கல் தினத்தைக் கறுப்பு தினமாக அறிவித்தது – என 50 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தமிழக அரசோ, முதல்வரின் தனிப்பிரிவிற்குக் கூட மனுக்கள் அனுப்பியுள்ள இப்பகுதிவாழ் மக்களின் போராட்டத்தை கண்டும் காணாமல் அலட்சியப்படுத்தி வருகிறது. தமிழகத்தின் பெரும்பாலான ஊடகங்கள் இப்போராட்டம் குறித்த செய்திகளை இருட்டடிப்பு செய்து வருகின்றன.
அதிகாரத் திமிரும்; அலட்சியப் போக்கும்
இது தொடர்பாக பி.பி.சி தமிழ் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மு.பெ. கிரி, பாலியப்பட்டு கிராமங்களைச் சுற்றி விவசாயம் சரியாக நடைபெறவில்லை; குடில்கள் அமைத்து வேறு விவகாரங்கள்தான் நடைபெறுகிறது; சிப்காட் தொழிற்பேட்டை வந்தால் பாதிக்கப்பட்ட நிலங்களுக்கும், வீடுகளுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
இயற்கை எழில் கொஞ்சும் பாலியப்பட்டு கிராமம்.
போராட்டம் தொடங்கிய 5-ம் நாளன்று அமைச்சர் எ.வ. வேலு, செங்கம் கிழக்கு பகுதியில் “ஒரு சில போலி விவசாயிகள் பச்சை துண்டு போட்டுக் கொண்டு போலியான முறையில் காத்திருப்புப் போராட்டம் நடத்துகிறார்கள்; அதற்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம்; கண்டிப்பாக சிப்காட் தொழிற்பேட்டை அந்த பகுதியில் அமைந்தே தீரும்” என்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.
தொடர் போராட்டத்தின் 9-ம் நாளன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைத் தீர்ப்புக் கூட்டத்திற்குச் சென்றிருந்த 250–க்கும் மேற்பட்ட மக்களை மாவட்ட ஆட்சியர் நேரில் வந்துகூடச் சந்திக்கவில்லை. 10 பேரை மட்டும் அவரின் பங்களாவுக்குத் தனியாக அழைத்து, அரசுக்கு எதிராக எதாவது செய்து கொண்டிருந்தால் உங்களை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யக்கூட தயங்க மாட்டோம் என்று அதிகார திமிரோடு பேசியுள்ளார். அதுமட்டுமின்றி, ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைச் சொல்லி அதைப்போல ஆகிவிடும் என்றும் மக்களை மிரட்டியுள்ளார்.
36-ம் நாளன்று மீண்டும் கிராமசபைக் கூட்டத்தில் சிப்காட் தேவையில்லை என்று தீர்மானம் நிறைவேற்றவிருந்த நிலையில், அக்கூட்டத்தை அரசு ரத்து செய்துவிட்டது. 45-ம் நாளன்று 500-க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து சிப்காட் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக 25 கேள்விகள் அடங்கிய 424 மனுக்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தாக்கல் செய்துள்ளனர், மக்களின் மனுக்களைக் கூட ஆட்சியர் நேரடியாக வாங்காமல், அவரின் உதவியாளர் மூலம் வாங்கச் சொல்லி அலட்சியப்படுத்தியுள்ளார்.
மக்களின் போராட்ட வரலாறு
ஏற்கனவே, 2006-ம் ஆண்டு கவுத்தி – வேடியப்பன் மலையிலிருந்து 23 ஹெக்டேர் பரப்பளவில் 10 ஆண்டுகளுக்கு இரும்புத் தாதுவை வெட்டியெடுக்க தமிழக அரசின் டிம்கோ நிறுவனத்துடன் இணைந்து ஜிண்டால் என்ற கார்ப்பரேட் நிறுவனம் ஒப்பந்தம் போட்டது. இவ்வாறு மண்ணில் இருந்து இரும்புத் தாது எடுக்கப்படுவதால் கவுத்தி மலையின் அருகில் உள்ள 55 கிராமங்களின் வாழ்வாதாரமும் நீராதாரமும் விவசாய நிலங்களும் முழுமையாக அழிக்கப்படும் அபாயம் உருவானது.
கவுத்தி – வேடியப்பன் மலையை அழித்து இரும்பு தாதுவை வெட்டியெடுக்க ஜிண்டால் நிறுவனத்திற்கு வழங்கிய இத்திட்டத்தை எதிர்த்து 2008-ம் ஆண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் கவுத்தி – வேடியப்பன் மலைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு தொடங்கப்பட்டு பாலியப்பட்டு பகுதி உட்பட 55 கிராம மக்களும் ஜனநாயக சக்திகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் விளைவாக, அப்போதைக்கு அந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டது. பின்னர், 2014-ம் ஆண்டு ஜிண்டால் நிறுவனத்துடன் மீண்டுமொரு ஒப்பந்தம் போடப்பட்டது. இதை எதிர்த்தும் இக்கூட்டமைப்பு சார்பாக தொடர் பிரச்சாரமும் உறுதியான போராட்டமும் நடத்தியதன் விளைவாக அது தடுத்து நிறுத்தப்பட்டது.
2018-ம் ஆண்டு அ.தி.மு.க அரசால் கொண்டு வரப்பட்ட சேலம் – சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராக எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியமைத்து போராட்டம் நடத்தியதன் விளைவாக அத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
2022 ஜனவரி மாதம் நகர்ப்புறக் குப்பைகளை பெரிய புனல்காடு பகுதியில் கொட்டுவதைக் கண்டித்து பாலியப்பட்டு பஞ்சாயத்தின் 500-க்கும் மேற்ப்பட்ட மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் தொடர் போராட்டத்தால் பெரிய புனல்காடு பகுதியில் குப்பை கொட்டும் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது அரசு. இவ்வாறாக கடந்த சில ஆண்டுகளில் மட்டும் பல்வேறு நாசகரத் திட்டங்களுக்கெதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர் இப்பகுதிவாழ் மக்கள்.
சிப்காட் அமைக்கும் திட்டத்திற்கு எதிராகப் போராடும் பாலியப்பட்டு கிராம மக்கள்.
நேரடியாக இரும்புத் தாதுவை வெட்டியெடுப்பதற்கான கார்ப்பரேட்டுகளுடன் போடப்பட்ட ஒப்பந்தங்கள் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டதால், தற்போது சிப்காட், தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு இந்நிலத்தையும் கவுத்தி – வேடியப்பன் மலையையும் தாரைவார்க்கும் சதித்தனமான வழிமுறையைத் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. சிப்காட் என்ற முகமூடியை அணிந்துகொண்டு கார்ப்பரேட் நிறுவனங்களை உள்ளே நுழைத்து, பாலியப்பட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்களைத் துரத்துயடித்துவிட்டு கவுத்தி மலையைக் கொள்ளையிடுவதற்குத் தந்திரமாக சேவை செய்து வருகிறது. இதை முழுவீச்சில் செயல்படுத்தப்போவதைத்தான் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலுவின் பேச்சும் வெளிப்படுத்துகிறது.
கார்ப்பரேட் நிலக்கொள்ளைதான் வளர்ச்சியா?
பாலியப்பட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் முறையான பேருந்து மற்றும் சாலை வசதி கிடையாது. சில ஆண்டுகள் வந்து கொண்டிருந்த தனியார் மினி பேருந்தும் இப்போது வருவதில்லை. செல்வபுரம், புனல்காடு, அருந்ததியர் நகர், மாரியம்மன் நகர் போன்ற இடங்களில் சாலை அமைப்பதற்குக் கொட்டப்பட்ட கற்கள் அப்படியே இருக்கிறது. கரடுமுரடான மண் சாலையில்தான் தினம்தோறும் மக்கள் வேலைக்குச் சென்று வருகின்றனர். மாணவர்கள் தினமும் 3 கீலோ மீட்டர் பள்ளிக்குச் நடந்து செல்கின்றனர்.
அவசர உதவிக்குக் கூட மருத்துவமனைகள் கிடையாது. தமிழ்நாட்டிலிருந்து பிரிந்த தனித்தீவு போல இப்பகுதி காட்சியளிக்கிறது. அடிப்படை வசதிகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டுள்ள இப்பகுதியில் விவசாயத்தை நம்பியே மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
“ஆடு, மாடு வைத்துத்தான் எங்கள் வயிறைக் கழுவி வருகிறோம்; சிப்காட் வந்தால் நிலம் முழுவதும் அழிக்கப்படும்; நிலத்தடி நீர் அனைத்தையும் அவர்கள் உறிஞ்சி கொள்வார்கள்; குடிநீருக்கு எங்கள் குடும்பம் அலைய வேண்டியிருக்கும்; இந்த இடத்தைவிட்டு எங்களை விரட்டினால் நாங்கள் எங்கு சென்று, எப்படி வாழ முடியும்?” என்கிறார் போராட்டத்தில் கலந்து கொண்ட புனல்காட்டை சேர்ந்த ஒரு பெண்மணி.
கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபத்திற்காக இத்தகைய விவசாயக் குடும்பங்களை அடித்து விரட்டிவிட்டு, அவர்களின் நிலங்களைப் பறித்து அமைக்கும் சிப்காட் தொழிற்பேட்டையை ‘வளர்ச்சி’ என்று கூறுகிறது தமிழக அரசு. பாலியப்பட்டு கிராமத்தில் சிப்காட்டிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அடுத்த நாளே, ஆளும் கட்சி உதவியுடன் அரசு அதிகாரிகள் மக்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி, பாலியப்பட்டு தீர்மானத்திற்கு எதிராக சிப்காட் தொழிற்பேட்டை எங்களுக்கு வேண்டுமென 10 கிராமங்களில் தீர்மானம் நிறைவேற்ற வைத்துள்ளனர். பாலியப்பட்டு மக்களை இரவும் பகலும் கண்காணிப்பதற்குப் போலீசாரையும் உளவுத்துறையையும் அரசு ஏவிவிட்டுள்ளது.
இதுபோன்ற தொழிற்பேட்டைகளை திருவண்ணாமலை மட்டுமின்றி, இன்னும் புதிதாக பத்திற்கும் மேற்பட்ட பகுதிகளில் தொடங்கப்போவதாக 2021 சட்டசபைக் கூட்டத்தொடர் விவாதத்தின்போது தெரிவித்துள்ளது தி.மு.க அரசு.
படிக்க :
சிறப்புக் கட்டுரை : சேலம் உருக்காலையை விழுங்கும் ஜிண்டால் !
விவசாயிகளை காவு வாங்கும் கெயில் – சிறப்புக் கட்டுரை
தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற மறுகாலனியக் கொள்கைக்கு எதிராக தாங்கள் எதிர்க்கட்சிகளாக இருக்கும்போது சவடால் அடிப்பதும், ஆட்சிக்கு வந்ததும் அதையே “வளர்ச்சி, முன்னேற்றம், வேலைவாய்ப்பு’’ என்ற பெயரில் மூர்க்கமாகச் செயல்படுத்துவதையுமே எல்லா ஓட்டுக் கட்சிகளும் நடைமுறையாகக் கொண்டுள்ளன. தி.மு.க அரசின் நடவடிக்கைகளிலிருந்து நாம் பெறும் அனுபவமும் இதுதான்.
கவுத்தி – வேடியப்பன் மலையைக் கொள்ளையடிப்பது என்பது ஏதோ அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல. எட்டுவழிச் சாலை, சாகர்மாலா, பாரத்மாலா, கூடங்குளம் அணுஉலை, அணுக்கழிவு மையம், நியூட்ரினோ ஆய்வுக் கூடம் உள்ளிட்டு நாட்டின் மீதும் கோடானுகோடி மக்கள் மீதும் தொடுக்கப்பட்டுள்ள கார்ப்பரேட் பாசிசத் தாக்குதலின் ஓர் அங்கம்தான் இது.
நாசகார ஜிண்டாலை எதிர்த்து ஒடிசா மாநிலத்தின் திங்கியா மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். கனிம வளங்களைச் சூறையாடும் கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராக சத்தீஸ்கர் மாநில மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பாலியப்பட்டு உழைக்கும் மக்கள் அத்தகைய போராட்டங்களுடன் இணைந்து நிற்பதும், கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிரான அனைத்து தரப்பு உழைக்கும் மக்களின் ஒன்றிணைந்த போராட்டங்களைத் தொடுப்பதும்தான் இன்றைய அவசர, அவசியக் கடமையாக முன்னே நிற்கிறது.

பு.ஜ. களச் செய்தியாளர்