டந்த மார்ச் 28-ம் தேதி மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா நாடாளுமன்றத்தில் குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா-2022-ஐ அறிமுகப்படுத்தினார். இதற்கு பல எதிர் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவும் குற்றவியல் நடைமுறை மசோதா – 2022 குரல் வாக்கெடுப்பு மூலம் (120 உறுப்பினர்கள் ஆதரவு, 58 உறுப்பினர்கள் எதிர்ப்பு) நிறைவேற்றப்பட்டது. எதிர் கட்சிகளின் எதிர்ப்புகள் இருந்தும் அதையும் மீறி மசோதா நிறைவேற்றப்பட்டது. பொதுவாகவே மக்களுக்கு எதிரான சட்டங்களும் மசோதாக்களும் இப்படிதான் நிறைவேற்றியும் வருகிறார்கள் என்பதையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதேவேளையில் இந்த மசோதவில் உள்ள அபாயத்தையும் பார்க்க வேண்டும்.
குற்றவியல் நடைமுறை மசோதா, 1920-ம் ஆண்டு அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்தால் நாட்டின் விடுதலைக்காகப் போராடுபவர்களை ஒடுக்குவதற்காக இந்தியாவில் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டத்தின்படி, குறைந்தபட்சம் ஓராண்டு தண்டனை பெற்றவர்கள், ஆயுள் தண்டனை பெற்றவர்கள், நீதிமன்றத்தால் விசாரணைக்கான அடையாளங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டவர்கள், குற்றவியல் நடைமுறை சட்டத்தின்கீழ் நன்னடத்தைக்கான பிணை பெற்றவர்கள் உள்ளிட்டோரின் அடையாள மாதிரிகளை சேகரிக்க முடியும். குறிப்பாக, குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு, சிறைதண்டனை விதிக்கப்பட்டவர்களின் ‘கைரேகைகள், கால் ரேகைகள்’ ஆகிய அடையாள மாதிரிகள் மட்டும் சேகரிக்கப்படுவது வழக்கமாக இருந்து வந்தது.

படிக்க :

நீட் விலக்கு மசோதா : திருப்பி அனுப்பிய ஆளுநரின் கொட்டத்துக்கு முடிவு கட்டுவோம்!

குழந்தைத் திருமண தடுப்பு மசோதா : காவிகளின் ‘திடீர் அக்கறைக்கு’ப் பின்னுள்ள நோக்கம்!

ஆனால், இப்பொழுது இன்று இருக்கும் நெருக்கடி சூழலில், மக்கள் கொந்தளிப்புடன் இருக்கும் சூழலில் நம்மை ஒடுக்கவே அவசர அவசரமாக பல எதிர்கட்சி தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி எந்த விதமான பதிலும் அளிக்காமல் பல விதிகளை உள்ளடக்கி பல மாற்றங்களை செய்து இந்த மசோதாவை ஒன்றிய அரசு நிறைவேற்றி உள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவர் மட்டும் அல்லாது, நீதிமன்றத்தினால் எந்த சட்டத்தின்கீழ் தண்டனை பெற்றவராக இருந்தாலும் அதாவது குற்றவியல் நடைமுறைச் சட்டம் – 1973ல் பிரிவு 53, 53A-யில் சொல்லப்பட்டுள்ள அவர்களின் கை விரல்ரேகை, உள்ளங்கை அச்சு பதிவுகள், பாதரேகை மட்டுமல்லாது, சளி எச்சில், கருவிழி மற்றும் விழித்திரை ஸ்கேன், உடல் மற்றும் உயிரியல் மாதிரிகளின் (குருதி, விந்தணு மாதிரிகள், தலைமுடி மாதிரிகள்) பகுப்பாய்வுகள். மேலும் கையொப்பம் மற்றும் கையெழுத்து, நடத்தை பண்புகள் உள்ளடக்கிய தனிப்பட்ட உயிரியல் தரவுகளையும் சேமித்து வைக்கும் அதிகாரத்தை போலீசுத்துறை மற்றும் சிறை அதிகாரிகளுக்கு வழங்கும் வகையில் வழிவகை செய்கிறது. மேலும் யாரை வேண்டுமானாலும் நீதித்துறையோ, போலீசுத்துறையோ சந்தேகப்படும் வேலையில், அவர்களுக்கும் உயிரியல் மாதிரிகளை எடுக்க கோரிக்கை வைக்கவும், அவற்றை சேகரித்து வைக்கவும் முடியும். இவற்றை எதிர்த்தால் கூட இந்திய தண்டணை சட்டத்தின்கீழ் குற்றமாக கருதப்படும்.
சேகரிக்கப்பட்ட இந்த தரவுகளை தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் 75 ஆண்டுகள் வரை பாதுகாத்து வைக்க வழி செய்கிறது. ஆனால், இந்தியாவின் கட்டமைப்பு என்பது இந்திய குடிமக்களின் இரகசியங்களை காக்கும் வகையில் இல்லை. அப்படியானால் இது எந்த வகையில் பார்த்தாலும் நாட்டு மக்களுக்கே எதிரானதாகதான் உள்ளது.
இந்த மசோதா குறித்து பதிலளித்துள்ள அமித்ஷா, “இந்த சட்டத்தால் ஒருவரின் தனிப்பட்ட உரிமைகள் மீறப்படாது, இரகசியங்கள் வெளியாகாது. போலீசு தடவியல் நிபுணர்களுக்கு உதவும் நோக்கில்தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளன” என கூறுகிறார். ஆனால், இந்த சட்டத்தின் முதன்மையான நோக்கமே போலீசுத்துறையின் கையில் தூக்கி அதிகாரத்தை கொடுப்பதுதான்.
ஒன்றிய அரசின் இந்த குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா – 2022 என்பது, ஒரு குறிப்பட்ட சமூகத்தை மட்டுமே குற்றப்பரம்பரை என்று சொல்லும் வகையில் வரலாற்றையே பிற்காலங்களில் மாற்றியமைக்கவும் முடியும். மேலும் அரசின் அடக்குமுறைக்கு எதிராக போராடும் போராளிகளை ஒடுக்கவும் இந்த வழிமுறை அரசுக்கு துணை புரியும். அரசியல் ரீதியிலான போராட்டங்களில் கைது செய்யப்பட்டால் கூட அவர்களின் மாதிரிகளை எடுத்து வைத்து அவர்களின் ஒட்டுமொத்த குடும்பத்தையோ, அமைப்பையோ கூட ஒடுக்க முடியும். யாரும் எதற்கும் வாய் திறக்க கூடாது, போராடக்கூடாது, கேள்வி கேட்க கூடாது என்ற வகையிலான அடக்குமுறை (பாசிச அபாயம்) நெருங்குகிறது. இவையும் பாசிசத்தின் அடுத்த அடியாக உள்ளது. அரசின் இந்த சட்ட ரீதியிலான அடக்குமுறை என்பது அரசியலமைப்புச் சட்டத்தில் மக்களுக்கு கொடுக்கப்பட்ட பிரிவு 20(3)ன் படி மனித உரிமைகளுக்கு எதிராகவே உள்ளது.
ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் தன்னுடைய பாசிச அடக்குமுறையின்கீழ் அடிபணிய வைப்பது, அதிலும் குறிப்பாக சட்ட ரீதியிலான அடக்குமுறையின்கீழ் அடக்கி யாரையும் போராடவிடாமல் தடுத்து ஒட்டு மொத்த நாட்டு மக்கள்மீதும் பாசிச காட்டாட்சியை மோடி தலைமயிலான ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல் நிகழ்த்துகிறது. இத்தாலியில் முசோலினியும், ஜெர்மனியில் ஹிட்லரும் ஒரு குறிப்பிட்ட இனத்திற்காக பெரும்பாலான மக்களை கொன்று குவித்து பாசிசத்தை அரங்கேற்றி ஆளும் வர்க்கங்களுக்கு சேவை செய்ததை வரலாற்றில் படித்திருப்போம். அதேபாணியில் அதைவிட கொடுரமான முறையில், அதைவிட நாலுக்கால் பாய்ச்சலில் பாசிசமயமாக்கும் வேலையை செய்து வருகிறது என்பதற்கான சான்றுதான் குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா – 2022. மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல் ஒட்டு மொத்த நாட்டையும் காவி – கார்ப்பரேட் பாசிசமயமாக மாற்றி மக்களை அடக்கி ஒடுக்கி இந்துராஷ்டிர கனவை நிறைவேற்றவும், ஒட்டுமொத்த மக்களின் உழைப்பை கார்ப்பரேட் முதலாளிகள் சுரண்டும் வகையில் நாட்டை மாற்றியமைக்கும், வேலையை இரத்த வெறிப்பிடித்த ஓநாயாக இந்த காவி கும்பல்கள் செய்து வருகிறது.

படிக்க :

♦ திருமண வயது 21 மசோதா : பெண்களை மேலும் அடிமைப்படுத்தும் சதித் திட்டம் !

♦ ஆதாரோடு வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் தேர்தல் சட்ட திருத்த மசோதா – 2021 !

நாடாளுமன்ற ஜனநாயகம் என்று இந்நாள் வரை பெயரளவில் பேசப்பட்டதை எல்லாம் ஒழித்துகட்டி அதனை பாசிசமாக்கும் வேலை அரங்கேறும் இந்த தருணத்தில், அந்த தேர்தல் ஜனநாயகத்தின் மூலமாகவே பாசிசத்தை வீழ்த்திவிடலாம் என நினைப்பதெல்லாம் வெறும் பகற்கனவு மட்டுமே. இதற்குமுன் நிறைவேற்றப்பட்ட பல மக்கள் விரோத சட்ட மசோதாக்களை நிறைவேற்றியபோது என்ன வேலையை செய்தார்களோ? அதேவேலை செய்து தங்களின் கடமையை முடித்துக் கொண்டனர். ஆனால், நாம் அவ்வாறு இருக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது. அப்படி இருப்பதால் நமக்கும் வாழ்வில்லை. எனவே காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தும் வகையிலான களப்போராட்டங்களை நடத்துவதே நமது பணி என்பதை நமக்கு உணர்த்துகிறது.

ஓவியா