பொதுத்துறை காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி நிறுவனத்தின் 3.5 சதவீதப் பங்குகளை (அதாவது 22,13,74,920 பங்குகள்) விற்று 20550 கோடி திரட்ட உள்ளதாக மத்திய அரசு அறிவித்து மே 4 முதல் பங்கு விற்பனைகளை தொடங்கிவிட்டது.
ஒரு பங்கின் விலை ரூ.907 முதல் ரூ.949 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பங்குகளில் 50% நிறுவன முதலீட்டாளர்களுக்கு, 35% சில்லறை முதலீட்டாளர்களுக்கு, 10% எல்.ஐ.சி பாலிசிதாரர்களுக்கு, 5% எல்.ஐ.சி ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எல்.ஐ.சி பாலிசிதாரர்களுக்கு ரூ.60 தள்ளுபடியும், எல்.ஐ.சி ஊழியர்கள் மற்றும் சில்லறை முதலீட்டாளர்களுக்கு ரூ.40 தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சில்லறை முதலீட்டாளர்கள், எல்.ஐ.சி ஊழியர்கள் மற்றும் எல்.ஐ.சி பாலிசிதாரர்களுக்கு பங்குகளை வாங்க ரூ.2 லட்சம் உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது மேற்கூறியவர்கள் அதிகபட்சமாக 14 லாட்டுகளை வாங்க முடியும். அதைத் தாண்டி பங்குகளை வாங்க முடியாது. முதலீட்டாளர்கள் என்ற வரம்புக்குள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வருவர். அவர்களுக்கு வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை என்பதால் எல்.ஐ.சி.யில் அவர்கள் ஆதிக்கம் செலுத்தவே வழிவகுக்கும்.
***
காப்பீட்டு துறையில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டு கிட்டதட்ட 20 ஆண்டுகள் கடந்த பின்பும், எல்.ஐ.சி.யானது 2021-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி 66% சந்தைப் பங்குகளை கொண்டு முதலிடத்தை வகித்து வருகிறது.
படிக்க :
எல்.ஐ.சி பங்கு விற்பனையை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்? | கருத்துப்படங்கள் – பாகம் -1
எல்.ஐ.சி பங்கு விற்பனையை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்? | கருத்துப்படங்கள் – பாகம் -2
29 கோடி பாலிசிதாரர்கள், 13 லட்சம் எல்.ஐ.சி ஏஜெண்டுகள் என மிகப்பெரிய வலைப்பின்னலை எல்.ஐ.சி.யானது கொண்டுள்ளது. அரசு நிறுவனங்கள் எல்லாம் திவால் ஆகும் நிலைக்கு செல்லும்போது, எல்.ஐ.சி அந்நிறுவனங்களில் முதலீடு செய்து அவற்றை காப்பாற்றும். மக்களுக்கு மட்டுமில்லாமல் அரசுக்கும் அரணாக செயல்பட்டு வந்துள்ளது.
நாட்டில் உள்ள எல்லா மியூச்சூவல் பண்டுகளின் சந்தை முதலீட்டை ஒன்று சேர்த்து கணக்கிட்டாலும், எல்.ஐ.சி.யின் சந்தை முதலீட்டில் பாதித்தொகையை தான் தொட முடியும். எல்.ஐ.சி பாலிசிதாரர்களின் காப்பீடு பணம் மட்டுமே கிட்டதட்ட 50 லட்சம் கோடி.
இப்படி எல்.ஐ.சி.யானது பொன்முட்டையிடும் வாத்தாக காட்சியளிப்பதால், அதை அறுத்து சாப்பிட வேண்டும் என உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் துடித்துக் கொண்டிருந்தனர்.
அதற்கேற்ப அரசானது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதியன்று பொதுக்காப்பீடு சட்டதிருத்த மசோதாவை நிறைவேற்றியது. அதன்படி பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் 51% பங்குகளை மத்திய அரசானது கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதை இந்த மசோதா ரத்து செய்கிறது.
அதுமட்டுமில்லாமல் தற்போது மத்திய அரசானது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஐ.பி.ஒ.வில் நேரடியாக விண்ணப்பிக்கும் வகையில் ஐ.பி.ஒ விதிகளை மாற்றியமைத்த பிறகுதான் பங்கு விற்பனையே தொடங்கியுள்ளது.
அகில இந்திய காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் சென்னை மண்டல் செயலாளர் எஸ். ரமேஷ் குமார், “எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்கு ஒன்று ரூ.1900-ல் இருந்து ரூ.2200 வரை விற்பனை செய்ய முன்பு முடிவு செய்யப்பட்டது. தற்போது பங்குகளின் மதிப்பைக் குறைத்து ஒரு பங்கு ரூ.907 முதல் ரூ.949 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
மத்திய அரசானது 5 சதவீதப் பங்குகளை 8 பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் கிட்டதட்ட 60,000 கோடி) விற்க முன்பு முடிவு செய்தது. தற்போது அந்த முடிவை மாற்றி 3.5% மட்டும் விற்பனை செய்கிறது.
முன்னர் நிர்ணயித்த விலையின் படி பார்த்தால், 5% பங்குகள் – 60000 கோடி. அப்படியென்றால், 1% பங்குகள் – 12160 கோடி; 3.5% பங்குகள் – 42560 கோடி; இதன்படி பார்த்தால் ஒரு பங்கின் விலை ரூ.2000 அல்லது அதற்கு மேல் வருகிறது.
ஆனால் தற்போது மத்திய அரசானது அதே 3.5% பங்குகளை விற்று ரூ.20,550 கோடி மட்டும் திரட்ட முடிவு செய்துள்ளது. கிட்டதட்ட 22,000 கோடி அளவுக்கு முன்னர் நிர்ணயம் செய்த விலையில் இருந்து குறைத்துள்ளது.
எல்.ஐ.சி நிறுவனமானது நஷ்டத்தில் இயங்கவில்லை, இலாபத்தில் தான் இயங்குகிறது. அப்படிப்பட்ட நிறுவனத்தின் ஒரு பங்கு ரூ.2000 என்று விலை முன்னர் நிர்ணயித்ததே அடிமாட்டு விலைதான். தற்போது அதையும் குறைத்து ஒரு பங்கின் விலை ரூ.907 முதல் ரூ.949 வரை நிர்ணயம் செய்து, மக்களின் சேமிப்பை கார்ப்பரேட்டுகளுக்கு தூக்கி கொடுக்கும் இவர்களை நாம் என்ன செய்வது?
படிக்க :
எல்.ஐ.சி. தனியார்மயம் : சூறையாடப்படவிருக்கும் நம் காப்பீடு
மோசடியாளர்களிடமிருந்து மீட்கப்பட்ட எல்.ஐ.சி மீண்டும் மோசடியாளர்கள் கையில் ?
2021-ம் ஆண்டு அக்டோபர் முதல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கிட்டதட்ட 20 பில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் 1.5 லட்சம் கோடி) பங்குச் சந்தையில் இருந்து வெளியே கொண்டு சென்றுள்ளனர். எல்.ஐ.சி.யின் செல்வாக்கும், நிலையான மதிப்பீடும் முதலீட்டாளர்களின் ஆர்வத்தை ஈர்க்கும் என்று ஒன்றிய அரசு இவ்விலை குறைப்புக்கு நியாயம் கற்பிக்கிறது.
முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மை துறையின் செயலாளர் துஹின் கண்டா பாண்டே,” நமக்கு கொஞ்சம் கட்டுப்பாடான சூழல் நிலவினாலும், முதலீட்டாளர்களின் ஆர்வத்தை ஈர்க்க முடியும்” என மும்பையில் கடந்த வாரம் கூறியுள்ளார்.
எல்.ஐ.சியின் காப்பீடு தொகை மற்றும் போனஸூக்கு மத்திய அரசே பொறுப்பு என எல்.ஐ.சி சட்டத்தின் 37 வது பிரிவு கூறுகிறது. மற்ற தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு இந்த விதி கிடையாது. எனவே, தொடர்ந்து பங்குகள் விற்பனை செய்யப்பட்டு எல்.ஐ.சி நிறுவனமானது, தனியார் நிறுவனங்களின் கைகளில் செல்லும்போது இவ்விதி நீர்த்துப்போகக்கூடும். அப்போது எல்.ஐ.சி.யில் இருக்கு மக்களின் காப்பீடு மற்றும் சேமிப்புகள் கபளீகரம் செய்யப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அமீர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க