07.05.2022
தருமபுர ஆதீனத்தின் பட்டினப் பிரவேசம் :
தமிழ்நாட்டை மதக் கலவர பூமியாக்க முயற்சிக்கும் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் கும்பலின் சதியை முறியடிப்போம்!
ஆதீன சொத்துக்களை பறிமுதல் செய்!
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலை சிறையில் அடை!
பத்திரிகை செய்தி
ருகின்ற மே 22-ம் தேதி தருமபுர ஆதீனம் பட்டினப் பிரவேசம் நடத்த உள்ளதாக தெரிவித்ததை அடுத்து ஜனநாயக மற்றும் முற்போக்கு அமைப்புகளின் கடும் எதிர்ப்பு காரணமாக கோட்டாட்சியர் அந்த நிகழ்ச்சிக்கு தடை விதித்தார்.
தருமபுர ஆதீனத்தின் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை கண்டிப்பாக நடத்த வேண்டும் அது காலம் காலமாக பின்பற்றி வரும் மரபு என்றும், அதற்காக தன்னுடைய உயிரையே கொடுக்கவும் தயார் என்றும் மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். அதற்கும் மேலே ஒரு படி போய் மன்னார்குடி சோடாபாட்டில் புகழ் ஜீயரோ, அமைச்சர்கள் யாரும் சாலையில் நடமாட முடியாது என்று திமிர்த்தனமாக கொக்கரிக்கிறார்.
பேரூர் ஆதீனம் முதல் பல ஆதீனங்களும் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன மதவெறி கும்பலும் சேர்ந்து கொண்டு பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று தமிழ்நாட்டு அரசை மிரட்டி வருகின்றனர்.
500 ஆண்டுகளாக மனிதனை மனிதன் சுமக்கும் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதே பொய். 1968-ல் தந்தை பெரியாரின் எதிர்ப்புக்குப் பிறகு நிறுத்தி வைக்கப்பட்ட இந்த பட்டினப் பிரவேசம், 2020-ல் நடக்க இருப்பதாக தற்போது பொறுப்பேற்றுள்ள ஆதீனம் தெரிவித்தார்.
இதற்கு எதிராக பெரியாரிய மற்றும் முற்போக்கு அமைப்புகள் போராட்டங்களை அறிவித்தனர். இதனால் அன்றைய தினம் பல்லக்குத் தூக்கும் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு சென்ற தற்போதைய ஆதீனம், இந்த ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் பட்டினப் பிரவேசம் நடத்தவுள்ளதாக தெரிவிப்பதும், அதற்கு பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல் மற்றும் தமிழால் தொந்தி வளர்த்த ஆதீனங்கள் உடன் நிற்பதும் தமிழ்நாட்டை மதக் கலவர பூமியாகும் சதியே ஆகும். ஆர்.எஸ்.எஸ் ஆளுநர் ரவியின் வருகைக்குப் பிறகே இப்படிப்பட்ட அறிவிப்பை தருமபுர ஆதீனம் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
படிக்க :
‘பட்டினப் பிரவேசத்தைத் தடுக்கும் அருகதை அரசுக்கு கிடையாது’ – மிரட்டல் விடும் மன்னார்குடி ஜீயர் !
‘Oh My God’ செய்தியாளர் சந்திப்பு கண்டு அஞ்சும் பாசிச மோடி | கருத்துப்படம்
இந்த வரலாற்று சம்பவங்களை வெளியிடாமல் ஏதோ தொடர்ச்சியாக நடக்கும் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்து விட்டது என்பதைப் போல ஊடகங்களும் செய்தி வெளியிடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.
மனித சமூகம் என்பது, ஒவ்வொரு காலத்திலும் அந்தக் காலத்துக்கு ஒவ்வாத எல்லாவித மரபுகளையும் விட்டொழித்ததன் காரணமாக மட்டுமே முன்னேறி வந்திருக்கிறது. அப்படி முன்னேறி வரும் மனித சமூகத்தை பின்னோக்கி இழுக்கும் விதமாக சாதி, மதம மூடநம்பிக்கைகள் இருக்கின்றன.
ஒரு மனிதன் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் அது என்னுடைய உரிமை என்று கூறினால் அதை இந்த அரசு ஏற்றுக்கொள்ளுமா இல்லை அறிவார்ந்த சமூகம்தான் ஏற்றுக் கொள்ளுமா?
ஒரு காலத்தில் சதி எனும் உடன்கட்டை ஏறுதல் மரபாக பின்பற்றப்பட்டு வந்தது. பிற்காலத்தில் அந்த கேடு கெட்ட பழக்கம் ஒழிக்கப்பட்டுவிட்டது. மீண்டும் அந்த மரபை பின்பற்ற வேண்டும் என்று யாராவது ஒருவர் கேட்டாராயின் அது அறிவார்ந்த செயலாகுமா?
சூத்திரன் வேதத்தை கேட்டால் அவன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும் என்ற மரபை மீண்டும் நாம் பின் தொடர அனுமதிக்க முடியுமா?
ஒரு விசயம் சரியா? தவறா? அது சுயமரியாதைக்கு ஏற்றதா? இல்லையா? என்று பகுத்து ஆராயாமல் மரபு வழியாக வந்தது பழக்க வழக்கமாக நடக்கிறது என்று எதையும் இனி ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
மனிதக் கழிவுகளை மனிதனே சுமப்பதும் மனிதனை மனிதன் பல்லக்கில் வைத்து சுமப்பதும் ஒன்றுதான். இதை யாரும் மனமுவந்து செய்ய தயாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.
நாயன்மார்கள் யாரும் சமஸ்கிருதத்தில் பாடவில்லை, சமஸ்கிருதத்தில் சிவனை வழிபடவில்லை, சைவத்தை சமஸ்கிருதத்தில் வளர்க்கவில்லை. ஆனால் இப்போது உள்ள சைவ மடங்கள் தமிழ் வழிபாட்டு அர்ச்சனைக்கும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்துக்கும் தொடர்ந்து கள்ள மௌனியாக இருந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் நுழைந்த வாயில் தீட்டு என்று அடைக்கப்பட்டதற்கு எதிராக ஒரு மடமும் இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை.
தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் தமிழ் பாடும் உரிமைக்காக நீண்ட நெடிய போராட்டம் நடத்தியபோது ஒரு சைவ மடமும் அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆனால் இப்பொழுது மரபு போய்விட்டது என்று தன்மானம் அற்ற மூடத்தனமான ஒரு பழக்க வழக்கத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த துடிக்கின்றனர். இதை சாக்காக வைத்துக்கொண்டு ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன பாஜக கும்பல் தமிழ் நாட்டில் கலவரம் ஏற்படுத்த முயற்சி செய்கிறது.
ஆகவே, தமிழ்நாட்டு அரசு ஒருபோதும் மனிதனை மனிதன் சுமக்கும் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கக் கூடாது. மேலும்,  இப்பிரச்சினையை வைத்து தமிழ் நாட்டில் மதக்கலவரம் செய்ய முயலும் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களையும் இந்து மதவெறி கும்பலையும் கைது செய்து தடுப்புக் காவலில் வைக்க வேண்டும்.
மேலும் தமிழால் வயிறு வளர்த்த ஆதீன மடங்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்று நடத்தி மடங்களுக்கு சொந்தமான நிலங்களை அந்தந்த இடத்தில் குடியிருப்போருக்கும் விவசாயம் செய்வோருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு புதுவை
9962366322.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க