4-ஜி சேவைக்காக CDOT/TCS நான்-குவாலிஃபைடு ட்ரயல் 4G கருவிகள் வாங்க BSNL நிறுவனம் வழங்கியுள்ள கண்துடைப்பு உத்தரவு, நீண்ட காலமாகப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட BSNL நிறுவனத்தின் வளர்ச்சி மாற்றத்தை நிச்சயமாகச் சிக்கலில் (இறுதியான வாட்டர்லூ போரில்) ஆழ்த்தப் போகிறது.
BSNL நிறுவனத்தின் ஊழியர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் – விருப்ப ஓய்வுத் திட்டம் 2019 மற்றும் 4-ஜி உள்ளிட்ட – ரூ.70 ஆயிரம் கோடி BSNL புத்துயிர்ப்பு தொகுப்புத் திட்டத்தை 2019 அக்டோபரில் ஒப்புக்கொண்டனர். லாபம் ஈட்டும் ஆரோக்கியமான பொதுத்துறை நிறுவனமாக (எதிர்காலத்தில்) BSNL தழைக்கும் என்றும், அனைத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் 3-வது ஊதிய மாற்றத்தைப் பெறுவார்கள் என்றும் ஒவ்வொருவரும் நம்பினர். துரதிருஷ்டவசமாக விருப்ப ஓய்வுத் திட்டம் மற்றும் ரூ.8500 கோடி அளவுக்கு BSNL-க்கு (அரசின்) இறையாண்மை உத்தரவாதம் தவிர வேறு எதுவும் நடைபெறவில்லை.
இப்போதும் கூட நிறுவனம் மிகவும் கடினமான காலத்தைக் கடந்து வருகிறது, கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. புத்துயிர்ப்புத் திட்டத்தால் கிடைத்த ஒரே ஆதாயம், நிதியாண்டு 2019 – 2020-ல் நிறுவனம் அடைந்த ரூ.15,000 கோடி நட்டத்திலிருந்து 2020 – 2021 நிதியாண்டில் நட்டம் ரூ.7,500 கோடி எனப் பாதியாக குறைந்ததுதான். நட்டத்தின் இந்த மேஜிக் வீழ்ச்சி, விருப்ப ஓய்வு திட்டம் 2019-ன் காரணமாக நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் சுமார் பாதி, அதாவது 78,569 ஊழியர்கள், விருப்ப ஓய்வைத் தேர்வு செய்ததே ஆகும். அப்படி அந்த 50% ஊழியர்கள் விருப்ப ஓய்வு குறித்து முடிவு செய்யாது இருந்திருப்பின், இந்நேரம் நிறுவனம் ஒரேயடியாக மூடப்பட்டிருக்கும்.
படிக்க :
பி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி ?
பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு !
ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறனை மதிப்பிடுவதற்கான நான்கு அளவுகோல்கள் 1) லாபம்/நட்டம்  2) வருவாய்  3) நிறுவனத்தின் நிகர மதிப்பு மற்றும் 4) அதன் கணக்கில் உள்ள கடன். அந்த வகையில் மதிப்பிட, மிகக் கடுமையாக ரத்தம் வடிக்கும் நிலையில் BSNL இருப்பதைச் சுட்டிக் காட்டுவதுடன் BSNL எதிர்காலமும் நம்பிக்கை தருவதாக இல்லை.
(1) நட்டம் : நிறுவனம் நாள் தோறும் 20 கோடிக்கு மேல் நட்டத்தில் நடக்கிறது; வி.ஆர்.எஸ் அமலாவதற்கு முன் தினசரி நட்டம் ரூ.40-லிருந்து ரூ50 கோடிக்கு மேல் இருந்தது.
(2) வருவாய் : நிறுவனத்தின் செயல் இயக்கங்களிலிருந்து வருமானம் (ஆப்பரேஷனல் ரெவின்யு) நிதியாண்டு 2019 – 2020-ன் வருமானமான ரூ.18,906.56 கோடியை ஒப்பிட, நிதியாண்டு 2020 – 2021-ன் வருவாய் மாதம் தோறும் 1500 கோடியுடன், 1.6% குறைந்து ரூ.18,595.12 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டு 2021 – 2022-ன் வருவாய் ரூ.17 ஆயிரம் கோடி மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது. இது அபாயகரமான அளவு குறைவானதாகும்.
(3) நிகர மதிப்பு : BSNL நிறுவனத்தின் நிகர மதிப்பு அதற்கு முந்தைய நிதியாண்டில் இருந்த ரூ.59,139.82 கோடியிலிருந்து கீழே இறங்கி 2021 நிதியாண்டின்போது ரூ.51,686.8 கோடியாக குறைந்துள்ளது. நிறுவனத்திற்குப் புதிய மூலதனம் செலுத்துதல் எதுவும் இல்லை என்பதால், நிறுவன நிகர மதிப்பு நிதியாண்டு 2022-ன் இறுதியிலும் கூட மேலும் கீழிறங்கவே செய்யும்.
(4) கடன் : 2019 – 2020-ம் நிதியாண்டில் நிறுவனத்தின் கடன் ரூ.21,674.74 கோடி. இக்கடன் 2020 – 2021-ம் நிதியாண்டில் அதிகரித்து ரூ.27,033.6 கோடியாகியுள்ளது. இப்போது கடன் ரூ.32 ஆயிரம் கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 4-ஜி தொழில்நுட்ப சேவை:
இந்தியாவில் முதன் முதலாக 4-ஜி தொலைத்தொடர்பு வலைப்பின்னல் ஏர்டெல் நிறுவனத்தால் 2012-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. மொபைல் நெட்ஒர்க்கில் 4-ஜி கிடைப்பதற்கு மேலும் இரண்டாண்டு ஆகி, ஏர்டெல் நிறுவனம் 2014-ல் 4-ஜி மொபைல் நெட்ஒர்க்கைத் தொடங்கியது. செய்தி நிறுவனங்களின் தகவல்களின்படி, நமது அரசு 5-ஜி அலைக்கற்றை ஏலத்தை 2022-ம் ஆண்டின் இரண்டாவது பாதியில் நடத்தத் திட்டமிட்டுள்ளது; மேலும், அடுத்த தலைமுறை கம்பியில்லா பிராடு பாண்டு நெட்ஒர்க்ஸ் 5-ஜியை பின்னர் 2023-ல் வெளிவிடவும் திட்டமிட்டுள்ளது. (இந்தியாவில்தான் டெட்டா மிகவும் குறைவான கட்டண விகிதத்தில் கிடைக்கிறது என நமது பிரதமர் வெளிநாடுகளில் பெருமிதத்துடன் கூறினார்.)
இந்நிலையில் இந்தக் காட்சி நகைமுரணாகத் தோன்றலாம், இந்தியாவில் புதிய தலைமுறை தொழில்நுட்பம் அறிமுகமாகி 10 ஆண்டுகள் கடந்த பிறகும், இந்திய அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனமான BSNL நிறுவனத்திற்கு 4-ஜி சேவை அளிக்க இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை – அதே நேரம் தனியார் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் மற்றும் வெளிநாட்டு மொபைல் கேரியர்கள் இந்தியாவிற்கு 5-ஜியை திணிக்க தயாராக இருக்கிறார்கள். (ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு?)
உலகம் முழுமையும் 5-ஜி மற்றும் அதற்கு மேல் உள்ள தொழில்நுட்பங்களுக்கு மாறி நகர்ந்து வரும்போது, 4-ஜி என்பது காலம் கடந்த, வழக்கொழிந்த பழைய தொழில்நுட்பமாகி விடும். எனினும் 4-ஜி, BSNL நிறுவனத்திற்கு லாபம் அளிக்கும் செயல்பாட்டிற்குரிய களமாகவே இருக்கும்; ஏனெனில் இன்றைய நிலையில் 3-ஜி சேவையுடன் ஒப்பிட, சி.எம் வெர்ட்டிகல் சேவையிலிருந்து BSNL 15 மடங்கு வருவாயை பெற முடியும்: காரணம் 3-ஜி மாதிரியான தொலைபேசியால் இணைய தளத்தை அதிகபட்சம் 21Mbps வேகத்தில் மட்டுமே இணைக்க முடியும்; அதுவே 4-ஜி போன், தியரிபடி அதிகபட்சம் 300 Mbps வேகத்தில் இணைக்க முடியும்.
தற்போது BSNL 6 ஆயிரம் 4-ஜி BTS (பேஸ் டிரான்ஸ் – ரிசிவர் ஸ்டேஷன்) வாங்குவதற்காகப் பர்ச்சேஸ் ஆர்டர்ஸ் (PO) வெளியிட்டுள்ளது. இந்த BSNL உத்தரவு வெறும் கண் துடைப்பு என்பதைத் தவிர வேறில்லை? மார்ச் 2020-ல் டெலிகாம் கருவிகள் வாங்க ரூ.9,300 கோடி மதிப்புள்ள 4-ஜி டெண்டர் வெளியிட்டது; பின்னர் இந்த 4-ஜி டெண்டர் வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் சாதகமாகச் சாய்ந்து இருப்பதாகக் காரணம் காட்டி ரத்து செய்யப்பட்டது.
அதிகாரத்தில் உள்ள சில தன்னலக் குழுக்கள், அரசு பொதுத்துறை நிறுவனம் 4-ஜிக்காக வெளிநாட்டு கருவிகளை நாடி செல்ல முடியாது என்ற கருத்தை முன்வைத்தன; அது நமது நாட்டிற்கு எதிரான மோசமான வணிகச் செயல்பாடு; சீன ஆக்கிரமிப்புக்கு எதிராக நமது நாட்டின் நலனைப் பாதுகாக்க… என்றெல்லாம் கதைத்த அதே அதிகார வர்க்கத் தன்னலக் குழு நமது நாட்டின் எல்லைகளில் 4-ஜிக்காக வெளிநாட்டுக் கருவிகளை வைத்துக் கொள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை அனுமதித்தது – அதுவும், யூ.எஸ்.ஓ நிதியிலிருந்து அரசு நிதி வழங்கி. இது, ரிலையன்ஸ் ஜியோவுக்கு ஆதரவான, அரசு பொதுத்துறை நிறுவனத்தின் நலன்களுக்கு எதிரான தன்னலக் குழுவின் அப்பட்டமான இரட்டை நிலைபாடு.
அடுத்து, 2020 அக்டோபர் 31-ல் உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன் 4-ஜி சேவைக்காக, 57 ஆயிரம் சைட்களுக்குக் கருவிகள் வாங்க டெண்டர் வெளியிட்டது; அதில் உள்நாட்டுத் தொழில்நுட்பம் என்ற வகையில் (கோர் ஸ்விட்சுக்காக) CDOT, (மென் பொருளுக்காக) TCS மற்றும் (டிரான்ஸ்போர்டேஷனுக்காக) Tejas நிறுவனங்களிடமிருந்து ‘‘ஆத்மநிர்பார் பாரத்” (சுயசார்பு இந்தியா) திட்டத்தின்கீழ் டெண்டர் கோரப்பட்டது. இப்படி ‘‘ஆத்மநிர்பார் பாரத்” கீழ் 4-ஜி சேவை தருவதற்குக் கால்கோள் நடத்தப்பட்டதிலிருந்து நல்லது நடக்க வேண்டும் என நாம் நம்புவோம், அதற்காகப் பெருமையுடன் காத்திருப்போம்!
4–ஜிக்கான பர்ச்சேஸ் ஆர்டர் குறித்து நமது சில சந்தேகங்கள்
1. எலெக்ட்ரானிக் தொலைபேசியகங்களின் சகாப்தத்தின்போது, CDOT-டுடன் BSNL-ன் அனுபவம் பாராட்டும்படி இருந்தது, அதன் காரணமாகவே நாம் OCB 283, 5ESS போன்ற வெளிநாட்டு ஸ்விட்ச்களுக்காக சென்றோம். திறனற்ற CDOT NGN, ஹுவாய் மற்றும் யுடிஸ்டார்காம் போன்றவற்றை விட செயல்திறனில் பின்தங்கியே இருந்தது. வெளிநாட்டு ஸ்விட்ச்களுடன் ஒப்பிட CDOT ஸ்விட்ச்களின் மின் பயன்பாட்டு நுகர்வு மிகவும் அதிகம்.
2. உடனடியாக 6000 டவர்களுக்கும், பின்னர் மேலும் 6000 டவர்களும் BSNL உத்தரவிடும் நிகழ்முறையில் ஈடுபட்டுள்ளதாக அறிகிறோம். இப்படி இறுதியில் மொத்தம் ஒரு லட்சம் டவர்களுக்கும் அதிகமாக – அதாவது, 1.12 லட்சம் டவர்களுக்கான 4-ஜி பி.டி.எஸ்.கள் பெறுவதற்காக உத்தரவு வழங்கப்படும் எனத் தெரிய வருகிறது. (இவ்வாறு 1.12 லட்சம் 4-ஜி பிடிஎஸ்-கள் வாங்க உள்ள) BSNL-ல், அறிக்கைகளின்படி, சுமார் 70 ஆயிரம் டவர்கள் மட்டுமே உள்ளன. தேவைக்கும் அதிகமாக மீதம் உள்ள 4-ஜி பிடிஎஸ்களை என்ன செய்யப் போகிறோம், அவற்றைப் பயன்படுத்தி நிர்மாணிப்பதற்கான திட்டம் குறித்தும் எதுவும் தெரியவில்லை.
3. 4-ஜி சேவை அளிக்கும் டவர்கள் ஃபைபர்மயமாக்கப்படுவது கட்டாயமாகும். பெரும்பான்மையான BSNL டவர்கள் ஃபைபர் கேபிள் (கண்ணாடி இழை கேபிள்) இணைப்பு பெறாதவை மற்றும் ஒர்க் ஆன் இ-1 அல்லது மைக்ரோ வேவ் டவர்களாகும். அதற்கான மூலதனம் மற்றும் செயல் திட்டம் தற்போதைய திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.
4. தேவையான அடிப்படை கட்டமைப்பின் பற்றாக்குறை / குறைபாட்டின் காரணமாக நமது சில பிடிஎஸ்கள், மின்சாரம் தடைபடும்போது, ஏற்கனவே அணைக்கப்பட்டு விடுகின்றன; இதே நிலை 4-ஜி சேவைக்குப் பிறகும் தொடர்ந்தால், அது BSNL நிறுவனத்திற்கு அழகன்று, வாய்ப்புள்ள வருங்கால வாடிக்கையாளர்களும் BSNL-ஐ விட்டு விலகி விடுவர். அடிப்படை கட்டமைப்பு தர-மேம்பாட்டிற்குத் தேவையான மூலதனம் குறித்த யோசனை எதுவும் இதுவரை முன்வைக்கப்படவில்லை.
5. சண்டிகார் / அம்பாலா நகர்களில் பரிசோதனை முயற்சியாக நிறுவப்பட்டுள்ள CDOT/TCS தொழில்நுட்பத்தின்  4-ஜி ப்ரோடோ டைப் பிடிஎஸ் களிலிருந்து நூற்றுக் கணக்கான தொழில்நுட்ப / செயல்திறன் குறைபாடுகள் குறித்த செய்திகள் வெளிவந்துள்ளன. இந்தக் குறைபாடுகளில் எவ்வளவு குறைபாடுகளுக்குத் தீர்வு காணப்பட்டன என்பது யாருக்கும் எதுவும் தெரியாது.
6. CDOT/TCS சிஸ்டத்தில் CISCO ரௌட்டர்களுக்கான சிப்-கள் பெறுவதற்குச் சுமார் ஒரு வருடம் காத்திருப்புக் காலம் (வெயிட்டிங் டைம்) இருப்பதாக நம்பிக்கைக்குரிய வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.
பல காரணங்களால் ஏற்கனவே வாடிக்கையாளர்கள் தற்போதைய BSNL சேவையில் அதிருப்தி அடைந்துள்ளர்; இந்நிலையில் 4-ஜிக்கு ஆர்வமாக காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் 4-ஜி சேவையை அனுபவிக்கத் தயாராக உள்ளபோது, BSNL தரமான 4-ஜி சேவையை வழங்க வேண்டும்; தாக்குப் பிடித்து நிலைத்து நிற்கும் 4–ஜி (சஸ்டைன்டு 4-ஜி), BSNL நிறுவனம் நிலைத்து நிற்கவும், BSNL வளர்ச்சி மாற்றத்திற்கும் நல்லது.
படிக்க :
பி.எஸ்.என்.எல் சூறையாடப்பட்ட வரலாறு | சி.கே. மதிவாணன்
ஐந்து மாதங்களாக சம்பளம் தராமல் வஞ்சிக்கப்படும் பி.எஸ்.என்.எல். ஒப்பந்தத் தொழிலாளர்கள் !
4-ஜி சோதனை சைட்டுகளுக்காகப் பர்ச்சேஸ் ஆர்டர் சமர்ப்பித்துள்ள BSNLன் செயல்பாடு புரிந்து கொள்ளக்கூடியது. 4ஜி/ 5ஜி மிகவும் நுட்பமான மேம்பட்ட தொழில்நுட்பம். எனவே CDOT/TCS 4G சிஸ்டங்களின் சேவைத் தரத்தை (க்வாலிட்டி ஆஃப் சர்வீஸ்) பரிசோதிக்காமல், தற்போது நெருக்கடியான காலத்திலும், 4-ஜிக்காக ஆர்வத்துடன் காத்துக் கொண்டுமிருக்கும் BSNL, பர்ச்சேஸ் ஆர்டர்ஸ் வழங்கி இருக்கக் கூடாது. சாதாரணமாக BSNL போன்ற எந்த அமைப்பும் தேசிய அல்லது சர்வதேசிய முகமைகளால் பரிசோதிக்கப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்படும் தரமான உற்பத்தி பொருட்களுக்கு மட்டுமே பர்ச்சேஸ் ஆர்டர்கள் வழங்கும். (ஆனால் BSNLல் தற்போது அவ்வாறு நடக்கவில்லை)
BSNL டவர்களுடன் BSNL கட்டமைப்பைப் பயன்படுத்தி தங்களின் பரிசோதனைகளை நடத்த CDOT/TCS நிறுவனங்களை அனுமதிக்கலாம்; அப்படிச் செய்வதற்குத் தேவையான காலத்தையும் அவர்கள் எடுத்துக் கொண்டு, 4-ஜியுடன் நிலைப்படுத்தி, தங்களின் 4-ஜி சிஸ்டம் தரமான உற்பத்திப் பொருள்தான் என நிரூபித்து அவற்றை BSNL-ல் புகுத்தலாம். சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்படும் காலத்தில் ’CDOT/TCS நிறுவனங்களால் நடத்தப்படும் 4-ஜி பரிசோதனை’ என்ற பெயரைத் தவிர BSNL-ன் பெயர் எங்கும் பயன்படுத்தப்படக் கூடாது. (இந்தப் பரிசோதனை வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப தரமான சேவையாக இல்லாது போகுமானால் அதனால் ஏற்படும்) வாடிக்கையாளர்களின் அதிருப்தி BSNL நிலைத்திருப்பதற்கு கேடு நேர்வதாகிவிடும்; BSNL பெயரில் அவர்கள் அளிக்கும் இந்த 4-ஜி சேவை குறைபாட்டால் வாடிக்கையாளர்களின் கோபம் அதிகரிக்கத் தொடங்கும். பர்ச்சேஸ் ஆர்டர்களால் கிடைக்கும் தரமில்லாத 4-ஜி சிஸ்டத்தைப் பயன்படுத்தி அடுத்து BSNL அளிக்கும் 4-ஜி சேவை, எதிர்காலத்தில் நம்மை நாடிவர நினைக்கும் வாடிக்கையாளர்களையும் மேலும் அதிருப்தியுறச் செய்யும்.
மேலே விவரித்த காரணங்களால், உள்நாட்டு தொழில்நுட்ப மேம்படுத்துநர்களான CDOT/TCS நிறுவனங்கள், பரிசோதிக்கப்பட்ட தரமான மற்றும் சந்தையில் போட்டியிடத்தக்க 4-ஜி சிஸ்டத்தை BSNL நிறுவனத்திற்குத் தயாராக வழங்கும் வரையில், BSNL தற்போது வழங்கியுள்ள பர்ச்சேஸ் ஆர்டர்கள் வெறும் கண்துடைப்பே!
கட்டுரையாளர் : எஸ்.சிவக்குமார்
மேனாள் பொதுச் செயலாளர், AIBSNLEA
தமிழாக்கம் : நீலகண்டன்
என்.எப்.டி.இ, கடலூர்.