க்கள் போராட்டங்களால் குலுங்கிக் கொண்டிருக்கிறது இலங்கை தீவின் வீதிகள். காலி முகத்திடலுக்கு தனது குண்டர்களை அனுப்பி, அமைதியாக போராடிக் கொண்டிருந்த போராட்டக்காரர்களை தாக்கி, போராட்ட முகாம்களை கொளுத்திய பாசிஸ்ட் மஹிந்த ராஜபக்சேவை பழிக்குப் பழி வாங்கிவிட்டார்கள் உழைக்கும் மக்கள். அம்பாந்தோட்டையில் அமைந்துள்ள ராஜபக்சேவின் பாரம்பரிய வீடு, கொழும்பில் உள்ள அரசு இல்லம் உள்ளிட்டு பல இடங்கள் மக்களின் கோபத்தால் தீக்கிரையாக்கப் பட்டிருக்கின்றன. இராஜபக்சே கட்சியினர் நாடெங்கும் அடித்து துரத்தப்படுகிறார்கள்.
சிங்கள மக்களை இனவெறிக்கு பலியாக்கி, ஈழத் தமிழ் மக்களை கொத்துக் கொத்தாக இனப்படுகொலை செய்த மஹிந்த ராஜபக்சே பதவியைத் துறந்துவிட்டு ஓடியதோடு, தாம் எங்கிருக்கிறோம் என்றே கூற முடியாமல் தலைமறைவாகிவிட்டார்.
“இலங்கையில் இனப் பிரச்சினையைத் தாண்டி, வர்க்க ஒற்றுமை உருவாக வாய்ப்பே இல்லை” என்று கதையளந்தவர்கள், இன்று தமது இனவாத அரசியலின் எதிர்காலத்தை நினைத்து விழிபிதுங்கி நிற்கிறார்கள். சிங்களர், தமிழர், முசுலீம், கிறித்துவர் என அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் கைகோர்த்து போராடுகிறார்கள்.
தமது நலனைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஆளும் வர்க்கம் பல்லாண்டு காலமாக பேணி வளர்த்த இனவெறி – மதவெறிக் கசடுகள் அனைத்தும் வர்க்கப் போராட்டத்தின் போக்கில் துப்புரவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.
படிக்க :
இலங்கை மக்கள் போராட்டம் வெல்லட்டும் ! பாசிஸ்டுகள் வீழ்வர் ! மக்களே வெல்வர் ! | மக்கள் அதிகாரம்
இலங்கை – இந்தியா மின் உற்பத்தி ஒப்பந்தம் : ஆதரவா? ஆதிக்கமா?
இவையெல்லாம் நமக்கு ஊக்கத்தைத் தந்தாலும், மக்கள் எழுச்சியை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றி எடுத்துச் செல்ல புரட்சிகர கட்சி ஒன்றின் தலைமை இல்லாத காரணத்தால், ஏகாதிபத்தியங்கள் இதை தம்முடைய நோக்கத்திற்கேற்ப வரம்புக்குட்படுத்திவிட்டன என்பது கசப்பான மறுபக்க உண்மையாக இருக்கிறது…
000
இலங்கையின் இன்றைய அரசியல் – பொருளாதார நெருக்கடிக்கு காரணம், அந்நாட்டில் 1970-களில் அமல்படுத்தப்பட்ட புதிய தாராளவாதக் கொள்கையின் தோல்வி மட்டும் அல்ல; தெற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் நடந்து கொண்டிருக்கும் மேலாதிக்கப் போட்டியின் விளைவே.
சீன ஆதரவு கும்பலான ராஜபக்சே அரசை தூக்கியெறிந்துவிட்டு, தமது விசுவாச கும்பலை ஆட்சியில் அமர்த்துவதற்காக அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் திட்டமிட்டே அந்நிய செலாவணி நெருக்கடிகளைத் தீவிரப்படுத்தின.
இதுகுறித்து கடந்த அக்டோபர் மாத புதிய ஜனநாயகம் இதழில் வெளிவந்த, கடன் சுமைக் கடலில் தத்தளிக்கும் இலங்கை : நெருக்கடியைத் தீவிரமாக்கி ஆதிக்க செலுத்தத் துடிக்கும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் என்ற தலைப்பிலான கட்டுரையில் விளக்கியிருந்தோம்.
இலங்கையில் தன்னெழுச்சியான மக்கள் போராட்டத்தில் தலையிட்டு செல்வாக்கு செலுத்துவமளவிற்கான மக்கள் அடித்தளம் கொண்ட புரட்சிகரக் கட்சி இல்லை என்பதால், தொடக்கத்திலிருந்தே அமெரிக்காவின் செயல்திட்டம் வெற்றிகரமாக முன்னேறிக் கொண்டிருந்தது. ராஜபக்சே கும்பலுக்கு நெருக்கடி கொடுத்து பணியவைப்பதற்கு அமெரிக்கா இப்போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டது.
000
சீனாவின் கடன் வலையில் சிக்கித்தான் இலங்கை பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேர்ந்தது என்ற ஒரு தலைபட்சமான கருத்தை பெரும்பான்மையான ஆளும் வர்க்க ஊடகங்கள் இடைவிடாமல் கூவிக் கொண்டிருந்தன. அமெரிக்க விசுவாசிகளான எதிர்கட்சிகளும் மஹிந்த ராஜபக்சேவின் சீன ஆதரவு கொள்கைகளாலேயே நாடு இந்நெருக்கடியை சந்தித்துள்ளதாக குற்றம் சாட்டினார்கள்.
இடதுசாரிகள், லிபரல் ஜனநாயகவாதிகளைத் தவிர பெருந்திரளான மக்களிடம் புதிய தாராளவாதக் கொள்கையின் தோல்வி பேசு பொருளாகவில்லை. பின்னிருந்து நெருக்கடியைத் தீவிரப்படுத்தும் அமெரிக்காவின் நடவடிக்கைகள் அம்பலப்படுத்தப் படவில்லை. எனவே “கோத்தபய அரசு பதவி விலக வேண்டும்” (Gota Go Home) என்ற கோரிக்கையோடு போராட்டம் வரம்புக்குட்படுத்தப்பட்டது. இதை அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டது.
ஒருகட்டத்தில், தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக மஹிந்த ராஜபக்சே அமெரிக்காவின் காலிலேயே விழுந்து சரணாகதி ஆகிவிட்டார். அமெரிக்கா கூறியதை தண்டனிட்டு ஏற்றார்.
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக, ஐ.எம்.எஃப்.யிடம் கடன் வாங்க வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் யோசனையை தொடக்கத்தில் ஏற்காத மஹிந்த ராஜபக்சே, பின்னர் தானே ஐ.எம்.எஃப்.யிடம் பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்றை அமைத்தார்.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த சீன விசுவாசியும் ராஜபக்சேவின் நெருங்கிய நண்பருமான அஜித் நிவார்டு கப்ரால் வெளியேற்றப்பட்டு முன்னாள் ஐ.எம்.எஃப் நிர்வாகியான நந்தலால் வீரசிங்கே ஆளுநராக நியமிக்கப்பட்டார். நீக்கப்பட்ட அஜித் நிவார்டு கப்ரால் ஐ.எம்.எஃப்.யிடம் கடன் வாங்குவதை கடுமையாக எதிர்த்தவர்; சீனாவிடம் கடன் பெறுவதை ஊக்குவித்தவர் ஆவார்.
“குடும்ப ஆட்சி”, “ஊழல் ஆட்சி” என்று மக்கள் மத்தியில் தமக்குள்ள அவப்பெயரை போக்குவதற்காக, ‘பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள’ என்ற பெயரில் ஏப்ரல் 18 அன்று அமைச்சரவையை புதுப்பித்தார் மஹிந்த. இதற்குமுன் அமைச்சர்களாக இருந்த சமல் ராஜபக்சே, மஹிந்தவின் மகன் நமல் ராஜபக்சே உள்ளிட்ட ராஜபக்சே குடும்பத்தினர் நீக்கப்பட்டு 17 பேர் கொண்ட புதிய அமைச்சரவையை அமைத்தார்.
நாடாளுமன்றக் கூட்டத்தில், ஐ.எம்.எஃப்.யிடம் கடன்பெற தாமதித்தது தவறுதான் என்றும் தம்முடைய சில தவறான முடிவுகள் காரணமாகவே நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகவும் சரணடைந்தார் மஹிந்த.
ஆனால், இந்த நாடகங்கள் எதையும் மக்கள் நம்பத் தயாராக இல்லை. பிரதமரும் அதிபரும் பதவி விலகக் கோரிய போராட்டங்கள் தொடர்ந்த படியே இருந்தன.
சரணடனைந்தாலும், ஆள்வதற்குரிய தார்மீக ஆதரவை மக்களிடம் இழந்துவிட்டபடியாலும் முழுமையாக ராஜபக்சே கும்பலை நம்பத் தயாராக இல்லாததாலும் அமெரிக்காவும் ராஜபக்சேவுக்கு உதவவில்லை. ஐ.எம்.எஃப் உடன் நடந்த பேச்சுவார்த்தையில், 300 முதல் 600 மில்லியன் டாலர்கள் வரை தருவதாக ஒப்புக் கொண்டாலும் ராஜபக்சே பதவி விலகி ஓடும் வரை நிதியை விடுவிக்கவில்லை. இதன் மூலம் நெருக்கடியை மென்மேலும் தீவிரப்படுத்தியது அமெரிக்கா.
000
தற்போது அமெரிக்க அடிவருடி ரணில் விக்ரம சிங்கே பிரதமராகப் பொறுப்பேற்றாலும் அதிபராக உள்ள கோத்தபய ராஜபக்சே பதவி விலகவில்லை. புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரணிலுக்கு மஹிந்தா ராஜபக்சே வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது முக்கியமானது. இதையெல்லாம் இணைத்துப் பார்க்கும்போது, ஒரு முன் திட்டமிட்ட சூழ்ச்சி அரங்கேறிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.
கோத்தபய குறிப்பிட்ட காலத்தில் பதவி விலகுவதாக ஒப்புக் கொண்டால், நான் இடைக்கால அரசமைக்க ஒப்புக் கொள்கிறேன் என்று கூறிய எதிர்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவை கோத்தபய அரசமைக்க அழைக்கவில்லை; மாறாக தன்னுடைய கட்சியில் அவர் மட்டுமே எம்.பி.யாக உள்ள ரணில் விக்ரம சிங்கவை பிரதமராக்கியுள்ளார்.
இதனை எதிர்க்கட்சிகள் யாரும் ஏற்கவில்லை. ரணில் விக்ரம சிங் அரசுக்கு ஆதரவளிக்க முன்வருமாறு எதிர்கட்களுக்கு கோத்தபய விடுத்த கோரிக்கையை அவர்கள் புறக்கணித்திருக்கிறார்கள். ஏனெனில், கோத்தபய அதிபர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் கைவிடவில்லை. போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. மக்கள் மனநிலையைத் தாண்டி, சந்தர்ப்பவாதமாக நடந்து கொள்ளும் துணிச்சல் இதுவரை யாருக்கும் ஏற்படவில்லை.
ஆனால் ஆட்டத்தின் சூத்திரதாரியான அமெரிக்கா, ரணில் விக்ரசிங்கை வரவேற்றிருக்கிறது. இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங், “பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு காணவும் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும் ரணில் பிரதமராக பொறுப்பேற்றுள்ளது முதல் படி” எனக் கூறியுள்ளார். மேலும் ஐ.எம்.எஃப் மூலம் நீண்டகால கடன்களைப் பெற்றுக் கொடுக்க தமது ஒத்துழைப்பை வழங்குவதாகவும்  தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மட்டுமல்லாது பிராந்திய வல்லரசாக உள்ள இந்தியாவும் இந்நெருக்கடியைப் பயன்படுத்தி தமக்குரிய பலனை அடைவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தது. இந்த நோக்கத்திலேயே உணவுப் பொருட்கள், பெட்ரோல் – டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அந்நாட்டிற்கு அனுப்பி வைத்தது. இந்த ஆண்டு தொடக்கம் முதல் இதுவரை 3 பில்லியன் டாலருக்கு மேலாக இலங்கைக்கு கடன் கொடுத்துள்ளது.
தற்போது, ரணில் பதவியேற்ற மறுநாளே (13.05.2022), இந்தியாவின் சார்பில் கோபல் பாகலே என்பவர் அரசு தூதராக அனுப்பப்பட்டு ரணில் விக்ரம சிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது மோடி அரசு. தமது ‘உதவி’களுக்கு பிரதிபலனாக இலங்கையை சூறையாடுவதில் அம்பானி – அதானிகளுக்குரிய பங்கை ஒதுக்குவதற்கான பேரம் நடந்திருக்கலாம்.
எனவே, இலங்கையில் சீனாவுக்கு எதிராக அமெரிக்க ஆதரவு பொம்மை ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளதே தவிர, அரசுக்கட்டமைப்பிலோ ஏகாதிபத்தியங்களுக்கு நாட்டை விற்பதிலோ எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
கோத்தபயவை பதவி விலகச் சொல்லி மக்கள் போராட்டங்கள் தொடர்கிறதே என்று நாம் கேட்கலாம். ஆம், கோத்தபயவை பதவி விலகக் கோருவதோடு போராட்டங்களின் கோரிக்கை வரம்பிடப்பட்டுவிட்டது. என்றாலும்கூட இப்போராட்டங்களின் மூலம் இனவாதத்தை உடைத்துக் கொண்டு உறுதிபடுத்தப்படும் வர்க்க ஒற்றுமையைக் கண்டு ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுங்கவே செய்கின்றன. அடக்குமுறை துரிதப்படுத்தப்படுகிறது.
படிக்க :
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை !
கடன் சுமைக் கடலில் தத்தளிக்கும் இலங்கை ! தீர்வு என்ன ?
போராட்டத்தின் தொடக்கத்தில், அரசுக்கு எதிரான அமைதியான போராட்டங்களை ‘ஆதரிக்கிறோம்’ என்று இலங்கை இராணுவம் தெரிவித்தது. அமெரிக்க தூதரும் மக்கள் போராட்டங்களை ‘ஆதரிப்பதாக’ தெரிவித்தார். ஆனால், காலி முகத்திடல் வன்முறைக்கு மக்கள் பதிலடி கொடுத்ததிலிருந்து ‘வன்முறையாளர்களை’ ஒடுக்க வேண்டும் என்று கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது செயல்திட்டம் வெற்றியடைந்துவிட்டதும் இவ்வாறு பேசுவதற்கு முக்கிய காரணம்.
ஆனால், இத்தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள் ஒரு புரட்சியை நோக்கி முன்னேறப் போகிறதா என்பதுதான் நாம் பரிசீலிக்க வேண்டிய கேள்வி. இல்லை என்பதுதான் அதற்கான பதில். ஒருவேளை போராட்டம் தீவிரமடைந்தால், அதைத் தணிப்பதற்காக கோத்தபய பதவி விலகலாம். அவ்வாறு விலகிவிட்டால் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்படும். இந்த அவலநிலைக்கு புரட்சிகர சக்திகள்தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
எகிப்து, துனிஷியா போன்ற நாடுகளில் ஏற்பட்ட அரபு வசந்தமாக இருக்கட்டும், இலத்தீன் அமெரிக்க நாடுகளில் புதிய தாராளவாதக் கொள்கைகளுக்கு எதிராக ஏற்பட்ட இளஞ்சிவப்பு அலையாக இருக்கட்டும் அவையாவும் ஆட்சி மாற்றத்தைத்தான் கொண்டுவந்தனவே அன்றி, நிலவுகின்ற அரசுக்கட்டமைப்பை அடித்து வீழ்த்திவிட்டு, மக்கள் அரசை நிறுவும் புரட்சியைக் கொண்டுவரவில்லை.
புறநிலை நெருக்கடிகள் எவ்வளவு முற்றி வெடித்தாலும், அவை புரட்சிக்கு சாதகமாகவே அமைந்தாலும் மக்களுக்கு தலைமை தாங்கக்கூடிய புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி இல்லையேல் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பதையே இவை நமக்கு கற்பிக்கின்றன. எனவே மக்கள் அடித்தளம் கொண்ட புரட்சிகர மார்க்சிய – லெனினியக் கட்சிக்காக உலகப் பாட்டாளி வர்க்கம் ஏங்கிக் கொண்டிருக்கிறது. இலங்கையும் கூட.

ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்.
(14.05.2022)