அதிகரித்து வரும் காலநிலை மாற்றம் : முதலாளித்துவத்தை வீழ்த்தாமல் தீர்வு இல்லை !

கடந்த 10 ஆண்டுகளில் கடல் மட்டம் 4.5 சென்டிமீட்டர் உயர்ந்துள்ளது. இது 1993 முதல் 2002-ம் ஆண்டுகளுக்கிடையிலான கடல்நீர்மட்ட அதிகரிப்பை விட இரண்டு மடங்கு அதிகம்.

0
Climate-Change-Slider
க்ரைனில் நடக்கும் போர், உலக காலநிலை உறுதிப்பாட்டை கைவிடுகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்தது. இதைத்தொடர்ந்து தற்போது உலக பெருங்கடல்களின் நீர் மட்டமானது கடந்த ஆண்டுகளை காட்டிலும் உயர்ந்துள்ளதாக உலக வானிலை அமைப்பு (WMO) கூறுகிறது. அதுமட்டுமில்லாமல் பெருங்கடல்களின் அமிலத்தன்மை அதிகரித்திருப்பதாகவும் கூறுகிறது. 2021-ல் பனிக்கட்டிகள் அதிகம் உருகுவதால் கடல் மட்டம் புதிய உயரத்தை எட்டி இருப்பதாக உலக வானிலை அமைப்பு கூறியுள்ளது.
நமது காலநிலை நம் கண் முன்னே மாறி வருகிறது எனவும், மனிதனால் தூண்டப்படும் பசுமை இல்ல வாயுக்களால் பூமியில் பல தலைமுறைகளுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் எனவும் WMO-ன் பொதுச்செயலாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து ஐ.நா.வின் சமீபத்திய அறிக்கையில், “மனிதகுலம் பசுமை இல்ல வாயுகளின் வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும் அல்லது பேரழிவு மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.
போர்களின் காரணமாக காலநிலை உறுதிப்பாட்டை உலக நாடுகள் கைவிடுவதாகவும், இது எரிசக்தி விலைகளை உயர்த்தி, ஐரோப்பிய நாடுகளை எரிசக்தி வழங்குனராக மாற்ற முற்படுகிறது எனவும் ஐ.நா பொதுச்செயலாளரின் காலநிலை நடவடிக்கைக்கான சிறப்பு ஆலோசகர் செல்வின் ஹார்ட் கூறியுள்ளார். இங்கு மேற்கொள்ளப்படும் பல பொருளாதார நடவடிக்கைகள் கூட நமது காலநிலை இலக்குகளை ஆபத்திற்கு கொண்டு செல்லும் எனவும் கூறியுள்ளார்.
படிக்க :
♦ இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலை – ஐ.எம்.டி அறிக்கை !
♦ COP26 பருவநிலை மாநாடு : முதலாளித்துவ அரசுகளின் மற்றுமொரு அரட்டை மடம்!
ரஷ்யா நிலக்கரியை எரிவாயுவாக மாற்றுவதை நிறுத்தாவிட்டால் உலகம் பசுமை இல்ல வாயுக்களின் அபாயகரமான அதிகரிப்பை எதிர்கொள்ளும் என்று உலகளாவிய சம பங்கு குறியீட்டு நிறுவனமான MSCI எச்சரித்தது. 2021-ம் ஆண்டில் வளிமண்டலத்தில்  வெப்பமயமாதலால், கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் மீத்தேன் அளவுகள் முந்திய பதிவுகளைவிட மிஞ்சி விட்டதாக WMO-ன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலகளவில் தொழில் துறைகளின் மூலம் வெப்பநிலையானது முந்தைய சராசரியைவிட 1.11 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கிறது. இது 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு நெருக்கமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் நீர்நிலைகள் புவியின் திரட்டப்பட்ட வெப்பத்தில் 90% மற்றும் மனித நடவடிக்கைகளில் 23% கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றத்தை உறிஞ்சுகிறது. இதனால் கடலின் வெப்பநிலை அளவானது 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2021-ல் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள, மாற்றங்கள் அனைத்தும் தலைகீழாக மாற பல நூற்றாண்டுகள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.
கடல், வளிமண்டலத்திலுள்ள அதிக கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சி வினை புரிவதால், இப்போது 26,000 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிக அமிலத்தன்மை கொண்டதாக மாறியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் கடல் மட்டம் 4.5 சென்டிமீட்டர் உயர்ந்துள்ளது. இது 1993 முதல் 2002-ம் ஆண்டுகளுக்கிடையிலான கடல்நீர்மட்ட அதிகரிப்பை விட இரண்டு மடங்கு அதிகம்.
உலகெங்கிலும் உள்ள தீவிர வெப்ப அலைகள், காட்டுத் தீ, வெள்ளம் மற்றும் பிற காலநிலை தொடர்பான பேரழிவுகளை WHO பட்டியலிட்டது. இதில், 100 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஏகபோக இலாபத்திற்காக உலகையே தன் ஆதிக்கத்திற்கு கீழ் கொண்டுவரத் துடிக்கும் அமெரிக்கா, ரஷ்யா போன்ற ஏகாதிபத்தியங்களால்தான், இன்று உலகமே அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இலாபவெறி கொண்டு இயற்கையை அழித்து வரும் இந்த கொடூர உலக ஏகாதிபத்தியங்களை (முதலாளித்துவத்தை), உலகப் பாட்டாளி வர்க்கத்தை கொண்டு வீழ்த்தாமல் காலநிலை மாற்றங்களை தடுக்க முடியாது.


தேன்மொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க