மாணவர்களின் உரிமையையும், அரசின் விதிமுறைகளையும்
காலில் போட்டு மிதிக்கும் திருவாரூர் வ.சோ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தளாளர்கள்!
அரசே பள்ளியை ஏற்று நடத்த போராடுவோம்!

திருவாரூர் நகர மையத்தில் சுமார் 2500 மாணவர்கள் பயிலும் வ. சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் (VHBHSchool), நடப்பு கல்வியாண்டில் (2022 -2023) இருந்து +1 வகுப்பு வரலாற்றுப் பாடப் பிரிவை தன்னிச்சையாக நீக்கியுள்ளனர். இச்செயல் மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், முன்னாள் மாணவர்கள், ஜனநாயக சக்திகளின் மத்தியில் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

1916-ஆம் ஆண்டு அன்றைய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட இப்பள்ளி, அக்காலத்தில் “கழகப் பள்ளி” என்றும் ஆங்கிலத்தில் “Board High School” என்றும் பெயரிடப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் திரு.மு. கருணாநிதி, முன்னாள் அமைச்சர்கள் க.அன்பழகன், முரசொலி மாறன், புகழ்பெற்ற பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி ஆகியோர் பயின்ற இப்பள்ளி நூற்றாண்டைக் கடந்து புகழ்பெற்று இயங்கிக்கொண்டிருக்கிறது.

அரசு பள்ளியாக இருந்த இப்பள்ளி திரு.காமராஜர் தமிழக முதலமைச்சராக இருந்தப்பொழுது 1961 – 1962 கல்வியாண்டில் V. S. தியாகராஜ முதலியாரிடம் கொடுக்கப்பட்டது. அதாவது அரசு பள்ளி, அரசு உதவிப்பெறும் தனியார் பள்ளியாக மாற்றப்பட்டது. V S தியாகராஜ முதலியாரின் வளர்ப்பு தந்தையாகிய “வடபாதிமங்கலம் சோமசுந்தரம் முதலியார்” பெயரில் இப்பள்ளி இயங்கி வருகிறது. 1978-79 கல்வியாண்டில் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளி நகரத்தின் மையத்தில் இருப்பதால் ஆண்களுக்கு வேறு அரசு பள்ளிகள் எதுவும் தொடங்கவில்லை.

திருவாரூர் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் நடுத்தர, ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களின் கல்வி தேவையை இப்பள்ளி பூர்த்தி செய்து வருகின்றது. அத்தகைய இப்பள்ளியில் தற்போது தாளாளர்களாக இருப்பவர்கள் மாணவர்கள் நலன், சமூக நலனில் இருந்து செயல்படாமல் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப தன்னிச்சையாக அடாவடியாக நடந்துக்கொள்வதையே வரலாற்று பாடப் பிரிவை நீக்கியதில் இருந்து தெரிந்துக்கொள்ள முடிந்தது.


படிக்க : 13000 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவு: இது பள்ளிக்கல்வித்துறையின் ‘அக்னிபாத்’


அரசு பள்ளி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட வரலாற்று பின்னணி:

பல்லாயிரம் ஆண்டுகளாக பெரும்பான்மை மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட சமூகமாகவே நம்நாடு இருந்து வந்தது. பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் கல்வி கற்க முடியாத நிலையிலே “மனுதர்மம்” இந்நாட்டை ஆண்டு வந்தது.

ஆங்கிலேயர்கள் இந்நாட்டை காலனியாக்கியப் பிறகு பல்வேறு துறைகளாக நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர். அதேசமயத்தில் கல்வி அறிவு பெற்றால் தமக்கு எதிராக போராட தொடங்கிவிடுவார்கள் என்பதையும் கவனத்தில் கொண்டு மெக்காலே என்பவரின் ஆலோசனையின் அடிப்படையில் 1835-ல் ஆங்கில கல்வி சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதன் நோக்கம் எண்ணத்தால், கலாச்சாரத்தால் ஆங்கிலேயனாகவும் (அதாவது ஆங்கிலேயனுக்கு சேவகம் செய்வது), நிறத்தால், உடலால் இந்தியராகவும் இருக்க வேண்டும் என்பதை முன்னறிவித்தே கொண்டுவரப்பட்டது. தனது நிர்வாகத்தில் “குமாஸ்தாக்களை” உருவாக்குவதற்குதான் அக்கல்வியின் நோக்கம், ஆகவே சாதி, மதம் போன்றவை தடையில்லை என்பதை ஒதுக்கி தள்ளிவிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

1947 போலியான சுதந்திரததிற்கு முன்பும், பின்பும் இன்று வரை பல்வேறு கல்வி கொள்கைகள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தி வருகின்றன. 1960களில் அனைவருக்கும் கல்வி கொடுக்க வேண்டியது ஆளும் வர்க்கங்களின் தேவைக்கு அவசியமாகியது. அதுவரை ஜமின்தார்களின் பண்ணைகளில் பணிபுரந்த பண்ணையடிமைகளுக்கு கல்வி அவசியமாக இருக்கவில்லை. உள்நாட்டில் தொழில்கள் வளர்ச்சியடைய தொடங்கிய காலகட்டத்தில், தொழிற்சாலைகளில் பணிபுரிய கல்வியறிவு அவசியம் ஏற்பட்டது.

உதாரணமாக பெரும் பண்ணையாராக இருந்த வடபாதிமங்கலம் தியாகராஜ முதலியார் போன்றோர்கள் தொழிற்சாலைகள் தொடங்கினர். “திரு ஆரூரான் சுகர்ஸ்” அதற்கான ஒரு எடுத்துக்காட்டு. பண்ணையார்கள், தொழிற்துறை முதலாளிகளாக மாறத்தொடங்கிய உடன், அவர்களது மில்கள், தொழிற்சாலைகளில் கல்வி அறிவு பெற்றவர்கள் தேவைபட்டனர். இந்த ஆளும் வர்க்கங்களின் தேவையை  அரசே முன்னின்று அனைவருக்கும் கல்வி கொடுக்க பல்வேறு முயற்சிகளை தொடங்கியது.

இதுவரை பெரும் பண்ணைகள், ஜமீன்தார்களாக இருந்தவர்கள் தங்களின் ‘பெருந்தன்மை, கௌரவம், வள்ளல்’ தன்மையை வெளிப்படுத்துவதற்காக பள்ளிகளை தொடங்குவது, பள்ளிகளுக்கு நிலங்களைக் கொடுப்பது, பொருளுதவி செய்தது போன்றவை நடந்தன.

அத்தகைய சூழலில் அரசும் -குறிப்பாக காமராஜர் முதலமைச்சராக இருந்த காலகட்டம்- பல்வேறு சலுகைககளை செய்துக்கொடுத்தது. இத்தகைய பின்னணியில்தான் அரசு பள்ளியாக இருந்த இப்பள்ளி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

எனினும் 1986-க்குப் பிறகு தனியார்மயம் தாராளமயம் உலகமயம் கொள்கைக்கு ஏற்ப குறைந்தபட்சம் சேவையாக இருந்த கல்வி, வியாபார பண்டமாக்கப்பட்டு, இன்று கார்ப்பரேட்டுகளின் கைகளில் சென்றுவிட்டது. இன்றைய தனியார் கல்விக்கும், அன்றைய குறைந்தபட்ச சேவை என்கிற நிலையில் இருந்த தனியார் (அரசு உதவிப்பெறும்) கல்விக்கும் வேறுபாடு உள்ளதை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

வரலாற்று பிரவு பாடத்தை நீக்கியது பற்றி கல்வியாளர்களின் கருத்துகள் என்ன?

“அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில், வரலாற்றுப் பாடப் பிரிவையோ, வேறு எந்த பாடப்பிரிவையோ மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (Cheif Education officer) ஒப்புதல் இன்றி நீக்கவோ, புதிதாக சேர்க்கவோ கூடாது.

வரலாற்றுப் பாடப்பிரிவை நீக்குவதற்கு கூட தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ளதை தெரிவித்து, அதாவது 10 மாணவர்களுக்கு கீழ்தான் சேர்க்கை நடந்துள்ளது என்பதை முறையாக தெரிவித்துதான் அப்பாடப் பிரிவை CEO ஒப்புதலுடன் நீக்க முடியும்.

ஒருவேளை மாணவர்கள் சேர்க்கை அதிகரித்தால், மாணவர்கள் கோரும் பட்சத்தில், அதற்காக புதிய ஆசிரியர் பணியிடங்களை நியமிக்க CEO-விடமிருந்து கேட்டு பெற வேண்டியது அவசியம்” என்று கூறியுள்ளனர்.

ஆனால் இப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை இருந்தும், மாணவர்கள் கோரியும் தன்னிச்சையாக யாருடைய அனுமதியும் இன்றி இப்பாடப்பிரிவை இப்பள்ளி நிர்வாகம் நீக்கியுள்ளது.

அரசாணை (GO) எண் 101 -ன் படி பள்ளிகளை நிர்வகிக்கும் அதிகாரம் CEOவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்பள்ளி தாளார்களோ, வரலாற்றுப் பாடப் பிரிவை எடுக்கக்கூடாது என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் ஆணையிட்டும் அவற்றை கொஞ்சமும் மதிக்காமல் அடாவடியாக நடந்துக்கொள்கின்றனர்.


படிக்க : மாதிரிப் பள்ளிகளில் மெரிட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை : காசு இல்லாதவனுக்கு கல்வி இல்லை !


மாணவர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், பல்வேறு ஜனநாயக இயக்கங்கள், கல்வியாளர்களின் கோரிக்கையையும் இப்பள்ளி தாளாளர்கள் மதிக்கவில்லை, மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர் ஆணைகளையும் பொருட்படுத்தவில்லை, அரசின் விதிமுறைகளையும் மதிக்கவில்லை.

உதாரணத்திற்கு அனைத்து அரசு உதிவிப்பெறும் பள்ளிகளும் தங்களின் பள்ளி பெயரின் அருகில் “அரசு உதவிப் பெறும் பள்ளி” எனப் பெயரிட உத்தரவிட்டும் இப்பள்ளி மதிக்கவில்லை.

போராடும் இயக்கங்கள், மக்கள் இப்பள்ளியை அரசு திரும்பவும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து போராடுவது சரியென்பதே நடந்துக்கொண்டிருக்கும் நிகழ்வுகள் காட்டுகின்றன. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிதிநெருக்கடியில் சிக்கியப்பொழுது அரசு தனது பொறுப்பில் எடுத்துக்கொண்டது. இப்பள்ளியும் அரசின் விதிமுறைகளை காலில் போட்டு மிதித்துள்ளது.

1961-1962-ன் ஆண்டுகளில் அரசு இப்பள்ளியை தனியாரிடம் கொடுக்க வேண்டிய சூழல் இருந்திருக்கலாம், ஆனால் தற்போது அத்தகைய சூழல் இல்லை. அரசே இப்பள்ளியை ஏற்று நடத்துவது ஒன்றும் தவறில்லை. ஆகவே தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட வேண்டும், தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தை தொடருவோம்.


ஆசாத்
மக்கள் அதிகாரம்,
திருவாரூர். (9943494590)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க