13000 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவு: இது பள்ளிக்கல்வித்துறையின் ‘அக்னிபாத்’
இந்த ஆண்டு பட்ஜெட்டில் கல்வித்துறையில் கூடுதலாக 4 ஆயிரம் கோடி ஒதுக்கினாலும் அது பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கே போதாது என்கிறார்கள் ஆசிரியர்கள். அப்படியானால் புதிதாக ஆசிரியர் பணியை நிரப்ப எந்தப் பணத்தை செலவு செய்வார்கள்.
13000 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவு: இது பள்ளிக்கல்வித்துறையின் ‘அக்னிபாத்’
13,000 ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த ஊதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமனம் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ரூ.7500 முதல் ரூ.12,000 வரை சம்பளம் வழங்கப்போவதாக அறிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை 10 மாதங்களுக்கு மட்டுமே என்றும் கூறப்படுகிறது.
ஜூலை 1-ம் தேதி முதல் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய மாவட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள். இது ஆசிரியர் பணியை எதிர்நோக்கி காத்திருக்கும் தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட டெட் தேர்வை 5 இலட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். கொரோனா நெருக்கடியில் இரண்டு ஆண்டுகளாக டெட் தேர்வு நடைபெறாததால் இந்தத் தேர்வை எழுத ஏழு இலட்சம் பேர் வரை காத்திருப்பதாக தெரிகிறது.
இவர்களின் வாழ்க்கையில் மண்ணள்ளிப் போட்டுள்ளது அரசின் மேற்கண்ட அறிவிப்பு.
ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட 2022-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையின்படி, இடைநிலை ஆசிரியர் பதவியில் 4,989 காலியிடங்களும் பட்டதாரி ஆசிரியர் பதவியில் 1,087 இடங்களும் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், சில ஆசிரியர்கள் குறிப்பிடுவதிலிருந்து 4989 – இடைநிலை ஆசிரியர்கள், 5154 – பட்டதாரி ஆசிரியர்கள், 3188 – முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் மொத்தமாக நிரப்ப வேண்டியுள்ளது.
இதுபோக கொரோனா காலத்தில் கடந்த இரு வருடங்களாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை புதியதாக 5.80 இலட்சம் உயர்ந்துள்ளது. இதற்கு ஏற்றார்போல் புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்போவதாகவும் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தப் போவதாகவும் அறிவிப்பை வெளியிட்டார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
இதுபோக, அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி – யு.கே.ஜி தொடங்க அனுமதி கொடுத்து 2381 ஆசிரியர்களை இடைநிலைப் பள்ளியில் இருந்து மழலையர் பள்ளிகளுக்கு பணியை மாற்றி அமைத்தனர். இதை இடையில் ரத்து செய்வதாக அறிவித்து மீண்டும் பின்வாங்கிக் கொண்டார்கள். இதனால் இடைநிலைப் பள்ளியில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன.
இதுபோக அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியை பெரிய அளவிற்கு புகுத்தியுள்ளார்கள் இதற்கான ஆசிரியர்கள் எவ்வளவு பேர் தேவை. எதார்த்தத்தில் ஆசிரியர் பற்றாக்குறையால் தமிழ்வழி கல்வி புறக்கணிக்கப்பட்டு அதனிடத்தில் ஆங்கிலவழிக் கல்வி மேலும் வளர்கிறது. சென்னை போன்ற மாநகரங்களில் தமிழ்வழிக் கல்வி பள்ளிக் கூடங்களை தேடித்தான் பிடிக்க வேண்டியுள்ளது என்கிறார்கள் பெற்றோர்கள்.
இப்படி ஆசிரியர் பற்றாக்குறை தலைவிரித்தாடும் இந்த சூழ்நிலையில்தான் மாணவர்கள் 12 பேர் தற்கொலை செய்துள்ளனர். நாற்பத்தி ஏழு ஆயிரம் மாணவர்கள் தமிழில் தேர்ச்சி அடையவில்லை கணிதத்தில் 83 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி அடையவில்லை. பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.
இந்த நிலையில்தான் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் பள்ளி கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என தொடர்ச்சியாக கல்வியாளர்களும் பெற்றோர்களும் பல்வேறு ஜனநாயக முற்போக்கு சக்திகளும் அமைப்புகளும் கோரிவந்த நிலையிலும் கூட அதையெல்லாம் பெயரளவிற்கு சரி, சரி என்று சொல்லிவிட்டு எதுவும் செய்யாமல் இப்போது புதிதாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கப் போவதாக அறிவிக்கிறார்கள்.
இந்த அறிவிப்பு ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நியமிப்பதன் பெயரில் நவீன கொத்தடிமை முறையை புகுத்துகிறார்கள்.
இதுதான் இன்று தனியார் பள்ளிகளில் வேலை செய்யக்கூடிய ஆசிரியர்களின் நிலைமை. மாதம் ரூ.7000 – ரூ.8000 சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை செய்யும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் கடும் வேலை நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். எந்த வேலை உத்தரவாதமும் இல்லை. இவர்கள்தான் பெரும்பாலும் அரசு நடத்தக்கூடிய இந்தத் ஆசிரியர் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கின்றனர். இவர்களை மீண்டும் அதே நிலையில் அரசுப்பள்ளியில் வைத்துக்கொள்வதற்காகதான் மேற்கொண்ட அரசின் தற்காலிக பணியிடங்கள் நிரப்பும் உத்தரவு.
இன்று இந்த 13 ஆயிரம் பேரை தற்காலிகமாக நியமிப்பதன்மூலம் அரசு மிச்சப்படுத்த கூடிய தொகை ஒப்பீட்டளவில் மிக அதிகம்.
இதைப்போல, 2022 மார்ச் மாத பட்ஜெட்டில் கல்லூரி செல்லும் அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் என அறிவித்தார்கள். ஆனால், அதே நேரத்தில் ஏழைக் குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு திருமண உதவி தொகை 50 ஆயிரம் (பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு), 25 ஆயிரம் ஒரு பவுன் தங்கம் என வழங்கி வந்தார்கள்.
இதன்மூலம் ஒரு பெண்ணுக்கு ரூ.90 ஆயிரம் வரை செலவு செய்தார்கள். இந்த திட்டத்தை ரத்து செய்துவிட்டுதான் கல்லூரி பெண்களுக்கான திட்டம் என புகுத்தினார்கள். கல்லூரிப் பெண்களுக்கு மாதம் வழங்குவது வரவேற்கக் கூடியதுதான் என்றாலும் இப்போது பெண்களுக்கு வழங்கிவந்த ரூ.90 ஆயிரம், ரூ.36 ஆயிரமாக குறைத்துவிட்டார்கள்.
பள்ளிக்கல்வித் துறைக்கு கடந்த 2020-ம் ஆண்டு 34 ஆயிரத்து 181 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் 2021-ம் ஆண்டு 32 ஆயிரத்து 599 கோடி நிதி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்து ரூ.1,582 கோடி நிதியை குறைத்தார்கள்.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் கல்வித்துறையில் கூடுதலாக 4 ஆயிரம் கோடி ஒதுக்கினாலும் அது பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கே போதாது என்கிறார்கள் ஆசிரியர்கள். அப்படியானால் புதிதாக ஆசிரியர் பணியை நிரப்ப எந்தப் பணத்தை செலவு செய்வார்கள்.
அரசு கல்விக்கு ஒதுக்கும் நிதியை குறைப்பது தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது; கல்வியிலிருந்து ஒதுங்கிக்கொள்வது போன்றவை தனியார்மயம் – தாராளமயம் – உலகமயக் கொள்கையின் அடிப்படையிலானது.
இதேபோல்தான், கிரீசில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு வழங்கக்கூடிய சம்பளம் உதவிகளை தொடர்ச்சியாக வெட்டி குறைப்பார்கள். இதுதான் ஐ.எம்.எப், உலக வங்கி கிரீசுக்கு இட்ட கட்டளை. அதுதான் இந்தியாவிலும் நடந்து வருகிறது. தனியார்மயம் – தாராளமயம் – உலகமயக் கொள்கைகளை தீவிரப்படுத்தி பெயரளவுக்கு கூட மக்கள் நல அரசு என்பது இல்லாமல் ஒழித்துக் கட்டுகிறார்கள். இதற்கு திராவிட மாடல் ஒன்றும் விதிவிலக்கல்ல. இதைத்தான் இன்று தமிழக அரசு நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. பத்து மாதத்தில் நிறுத்திக் கொள்வோம் என்ற உத்தரவு இப்போது எழும் எதிர்ப்பு குரல்களை சமாளிக்க மட்டும்தான் பயன்படுத்துவார்கள்.
இல்லம் தேடி கல்வித்திட்டம் ஆறுமாதத்தில் நிறுத்தப்படும் என்றார்கள். ஆனால், இந்த ஆண்டும் ரூ.200 கோடி ஒதுக்கி திட்டத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதைத்தான் மோடி புதிய கல்விக்கொள்கையாக, மூன்று வேளாண் சட்டங்களாக, தொழிலாளர் விரோத சட்டங்களாக தீவிரமாக அமல்படுத்துகிறார்.
இதை எதிர்த்து முறியடிக்க மாணவர்கள் – இளைஞர்கள் – பெற்றோர்கள் – ஆசிரியர்கள் – பேராசிரியர்கள் – கல்வியாளர்கள் மற்றும் முற்போக்கு ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து களப் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டியுள்ளது.
தோழர் ரவி, மாநில ஒருங்கிணைப்புக் குழு, புமாஇமு, தமிழ்நாடு. 94448 36642.