16.07.2022

பெரியார் பல்கலைக்கழகத்தில் சாதி அடிப்படையிலான கேள்வி:
பாசிச உளவாளி ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கையின் நீட்சி!

சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் ஜூலை 14 அன்று நடைபெற்ற முதுகலை வரலாறு முதலாம் ஆண்டு தேர்வுக்கான வினா தாளில் சாதி தொடர்பாக ஒரு கேள்வி  இடம் பெற்றிருந்தது. இதில், எம்.ஏ வரலாறு பாடத்திற்கான முதலாம் ஆண்டு இரண்டாவது செமஸ்டர் தேர்வு வினா தாளில், “இதில் எது தமிழ்நாட்டுக்குரிய தாழ்ந்த சாதி” என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கான விருப்ப பதில்களாக மஹர், நாடார், ஈழவர், ஹரிஜன் ஆகிய நான்கு சாதிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன், “சம்பந்தப்பட்ட வினாத்தாள் பெரியார் பல்கலைக்கழகத்தில் தயாரிக்கப்படவில்லை. பிற பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்களால் தயாரிக்கப்பட்டது. தேர்வு வினா தாள் வெளியே கசிந்து விடுவதை தவிர்க்கவே அதை படித்துப் பார்க்கும் வழக்கம் பல்கலைக்கழகத்தில் இல்லை, இது குறித்து எந்த புகாரும் எனக்கு வரவில்லை. அப்படி வந்தால் அதன் மீது உரிய விசாரணை நடத்தப்படும்” என்றும் தெரிவித்தார்.

இன்று பல்கலைக்கழகங்களில் கேள்வித்தாள் தயாரிப்பதற்கான நடைமுறைகள் பற்றி பேராசிரியர்கள் கூறும்போது, பல்வேறு கட்ட பரிசீலனைகளை கடந்துதான் கேள்வித்தாள் தயாராகிறது என்பதை பார்க்க முடிகிறது. குறிப்பாக என்ன பாடத் திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்க வேண்டும் என்பதற்கு வரையறைகள் உண்டு. மேலும், ஒருவர் எடுக்கும் கேள்வித்தாளை இரண்டு பேர் வரை திரும்பவும் பார்ப்பார்களாம்; அதன் பிறகுதான் தேர்வு செய்வார்களாம். அப்படி தேர்வு செய்து மூன்று கேள்வித்தாள்கள் வரை தயார் நிலையில் வைத்துக் கொள்வார்கள் என்கிறார்கள். இதில் தேர்வுக்கு முன்பு கடைசி நேரத்தில் ஏதாவது ஒரு கேள்வித்தாளை எடுத்துக்கொண்டு மாணவர்களுக்கு தருவார்கள் என்பதுதான் நடைமுறையாம்.


படிக்க : “பிஎம் ஸ்ரீ பள்ளிகள்”: புதிய கல்விக் கொள்கையின் ‘விசக் குஞ்சுகள்’ | புமாஇமு


இதிலிருந்து பார்க்கும்போது துணைவேந்தர் ஜெகநாதன் கூறுவது அப்பட்டமான பொய் என்பதும் திமிராக பேசுவதும் அப்பட்டமாக தெரிகிறது.

பல்கலைக்கழக, கல்லூரி வளாகங்களில் பயிலும் மாணவர்கள் பல்வேறு அமைப்புகள் பெயரில் அரசியல் சார்ந்த பரப்புரைகளை, விவாதங்களை நடத்த தடை என உத்தரவு பிறப்பித்ததும் இதே துணைவேந்தர் தான். அதற்கு முன்பே வேதசக்தி என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்-ன் புராண குப்பைகளையும் பிற்போக்கு குப்பைகளையும் பரப்புவதற்கு ஒரு கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்தார். அந்தக் கருத்தரங்கம் கலைஞர் ஆய்வு மையத்துடன் இணைந்து நடத்துவதாக இருந்தது. இது பல்வேறு தரப்பினராலும் கண்டிக்கப்பட்டது. அத்துடன் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இப்படி தொடர்ச்சியாக தனது காவி நடவடிக்கை அரங்கேற்றி வருகிறார் துணைவேந்தன் ஜெகநாதன்.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தார்போல் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் பாசிச உளவாளியாக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சார்ப்பு நபர்களை துணைவேந்தர்களாக நியமித்து வருகிறார். பல்கலைக்கழக பேராசிரியர்களையும் துணைவேந்தர்களையும் சந்தித்து உரையாடுகிறார். புதிய கல்விக்கொள்கை போன்ற நவீன குலக்கல்விக்கொள்கையை பல்கலைக்கழகங்களில் திணிப்பதற்கு பரப்புரை செய்கிறார்.

இந்த கேள்வி இவ்வளவு தூரம் தணிக்கைகளையும் கடந்து வந்துள்ளது என்றால் அதை இந்த பின்புலத்தில் இருந்துதான் பார்க்க முடியும்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பா.ஜ.க-வின் எல்.முருகனை அழைத்தார்கள். இதுவரை கௌரவ விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்கள் ஏதாவது ஒரு துறை சார்ந்த வல்லுனராகத்தான் இருப்பார்கள். இப்போது புதிதாக இந்த ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலை கௌரவ விருந்தினர்களாக அழைக்கிறார்கள். இதை எதிர்த்து கேள்வி கேட்ட தமிழக உயர் கல்வித்துறை அமைச்சருக்கு ஆளுநர் அலுவலகம் கொடுத்த பதில்தான் பாசிசத்தின் உச்சம்.

“அப்படித்தான் செய்வோம் உன்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்துகொள்!” என பேசினார்கள். இதற்கு தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்ததை தாண்டி வேறு என்ன செய்ய முடிந்தது.

இப்போது குழு அமைத்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ள தமிழக அரசின் நடவடிக்கைக்கும் மேற்கண்ட ஆளுநர் மாளிகையின் பதில்தான் வரப்போகிறது. கூடவே திமுக அரசு திராவிட மாடல் என்று சொல்லி ஒருபுறம் கார்ப்பரேட் மாடலை அமல்படுத்திக் கொண்டே இந்த காவி கும்பலுடன் சமரசமாக போகிறார்கள்.

ஆகவே ஆளுநர் ரவியின் பல்வேறு பாசிச நடவடிக்கைகளை களத்தில் நின்றுதான் போராடி முறியடிக்க முடியும். அதற்காக இன்று பேராசிரியர்கள் மாணவர்கள் ஜனநாயக முற்போக்கு சக்திகள் அனைவரும் ஓரணியில் திரண்டு இந்த காவி – கார்ப்பரேட் பாசிச கும்பலின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி போராட முன் வர வேண்டும்.


தோழர் ரவி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புமாஇமு, தமிழ்நாடு.
94448 36642.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க