கடந்த ஜூலை 18 அன்று நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைப்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் 104 என்ற மன நல ஆலோசனை உதவி மைய எண்ணை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார். 104 என்ற எண்ணை இலவசமாக தொடர்பு கொண்டு தங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை மருத்துவர்களிடம் பேசி குறைத்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கச் சொல்லும் அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதே மாணவர்கள் யாரால் அந்த நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பதை பற்றி ஏன் வாயை திறக்கவில்லை?
பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறவே தலைக்குமேல் குவிக்கப்படும் பாடச்சுமையால் மாணவர்கள் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகுகின்றனர். இதில் தனியார் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு நடுப் பகுதியிலேயே 12-ம் வகுப்பு பாடத்தை எடுக்க தொடங்கிவிடுகின்றனர். இவ்வாறு ஆண்டு தொடங்கியதிலிருந்தே தொடர்ச்சியாக தேர்வு, படிப்பு என மாணவர்கள் வாட்டி வதைக்கப்படுகின்றனர். இதனால் பாடச் சுமை தாங்காமல் பல மாணவர்கள் தற்கொலை செய்துக்கொள்கின்றனர்.
படிக்க : செவிலியர்கள் முதல் மருத்துவர்கள் போராட்டம் வரை – நம்மிடம் கோருவது என்ன? ஒன்றினைந்த போராட்டமே !
இதற்கிடையில் நீட் தேர்வு வந்ததிலிருந்து, பன்னிரண்டு ஆண்டுகள் படித்த படிப்பு முக்கியமில்லை என புதிதாக NCERT முறையில் படித்தால்தான் மருத்துவ படிப்பிற்கு சீட்டு பெற முடியும் என்ற நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். நீட் தேர்விற்கும் படிக்க சொல்லி மனதளவில் அவர்களை பாதிப்படைய செய்து தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு அவர்களின் மனநிலை மாற்றப்படுகிறது.
நீட் தேர்வில் எப்படியாவது தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்று தொடர்ந்து இரண்டு மூன்று ஆண்டுகள் படித்துக் கொண்டே இருக்கும் மாணவர்கள் மனநிலை எப்படி இருக்கும் என்பதை யோசித்து பாருங்கள். உண்மையில் மனநல ஆலோசனை வழங்கப்பட வேண்டியது மாணவர்களுக்கா? இல்லை அவர்களின் உளவியலை பற்றி சிறிதும் சிந்திக்க முடியாத அதிகாரத்தில் இருக்கும் மூடர்களுக்கா?
மன நல ஆலோசனை வழங்கப்பட வேண்டியது யாருக்கு ?
தமிழ்நாட்டில் மனநல ஆலோசனை தேவைப்படுவதுபோல் நடந்து கொள்பவர்கள் யார்? மின் தடை ஏற்படுவதற்கு காரணம் மின் கம்பிகளில் அணில்கள் ஓடுவதுதான் என்கிறார் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் போக்குவரத்து துறை ஊழியர்களிடம் சாதி பாகுபாடு பார்த்ததற்காக வேறு துறைக்கு மாற்றப்படுகிறார். விருதுநகர் மாவட்டத்தில் மனு கொடுக்க வந்த பெண்ணை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அந்த மனுவை வைத்தே தலையில் அடிக்கிறார். பசு மாட்டுக்கு மடம், மாட்டுக்கறி பிரியாணிக்கு தடை என ‘திராவிட’ ஆட்சியில் சங்கி வாடையை மணக்க செய்கிறார் அமைச்சர் சேகர்பாபு.
மேலும், தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு, நீட் தேர்வு எதிர்ப்பு, மின் கட்டணத்திற்கு எதிரான போராட்டம், சாத்தான்குளம் போலீசு செய்த படுகொலைக்கான நீதி, ஸ்டெர்லைட் போராட்டத்தில் கொல்லப்பட்டோர்க்கு நீதி என மேடைக்கு மேடை கூவிய திமுக-வினர், இப்போது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவுடன் அதை எல்லாம் நாங்களா சொன்னோம் என்பதுபோல குட்டிக்கரணம் அடிக்கின்றனர். தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் மறந்துவிட்டு அதிமுக என்ன செய்ததோ அதை அப்படியே செய்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக தேர்தலுக்கு முன்பு நீட்-ஐ ஒழிப்போம் என்று வீராவேசமாக பேசியவர்கள், தற்போது பெயரளவில் நீட்டிற்கு எதிராக தீர்மானத்தை மட்டும் நிறைவேற்றிவிட்டு கள்ளமௌனம் காத்து வருகின்றனர். ஒன்றிய அரசோ அந்த தீர்மானத்தை கழிவறை காகிதமாக கூட மதிக்காமல் தூக்கி எறிந்துவிட்டு தொடர்ந்து நீட் தேர்வை நடத்தி வருகிறது.
படிக்க : மருத்துவத்தில் அரங்கேறும் மனுதர்மம் ! பார்ப்பன மேலாண்மையை முறியடிப்போம் !!
எல்லா ஆண்டும் மக்கள் போராட்டத்தோடு நிறைவடையும் நீட் தேர்வோ இந்த ஆண்டு போராட்டங்களுக்கான அறிகுறி சிறிதும் இல்லாமல் மௌனமாக நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. கூட்டணியில் இருக்கும் எதிர் கட்சிகள் கூட தங்களுடைய சுய மரியாதையை எங்கோ தொலைத்து விட்டு ‘கூட்டணி தர்ம’ கீதம் பாடி கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர்களின் பொய் மூட்டைகளுக்குள் மூச்சி திணறி பலியானவர்கள் என்னவோ “மருத்துவராக வேண்டும்” என்று கனவு கண்ட அப்பாவி மாணவர்கள் தான்.
இப்படி ஆளும் வர்க்கத்திடம் சமரசம் செய்துகொண்டு தங்களுடைய சந்தர்ப்பவாததிற்கு மாணவர்களின் கனவையும் உயிரையும் பலியிடும் சமரச அற்பவாதிகளான ஆட்சியாளர்களுக்கும் அமைச்சர்களுக்கும் தான் முதலில் மன நல ஆலோசனை வழங்க வேண்டுமே தவிர மாணவர்களுக்கு அல்ல!
பாரி