பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி தந்திரத்தைத் தந்த கம்யூனிச அகிலத்தின் தலைவராக இருந்த டிமிட்ரோவின் பல்கேரிய நாட்டில், பிரின் என்ற மலையடிவாரத்தில் உள்ள ஒரு சிறிய நகரமான பான்ஸ்கோ-வில் 1909, டிசம்பர் 7-ம் தேதி பிறந்த நிகோலா வாப்சரோவ், 2-ம் உலகப் போரின் போது 1942 ஜூலை 23-ம் நாளில் பாசிஸ்டுகளால் கொல்லப்பட்டார். அவரது பாசிச எதிர்ப்பின் மரபை, உரிமையை வரித்துக் கொள்ளவும், பாசிச எதிர்ப்புப் போரைத் தொடரவும் இந்நாளில் நாம் சபதமேற்போம்!

நிகோலா வாப்சரோவ் ஒரு போர்க்குணமிக்க தொழிலாளி, களப் போராளி மட்டுமல்ல, கார்க்கி, மாயகோஸ்க்கி வழியில் சிறந்த கவிஞரும் கூட. இவர் 19-ம் நூற்றாண்டின் பல்கேரிய தேசியக் கவிஞரான ஹிரிஸ்டோவ் போடெவ்-வின் கவிதை மரபை வரித்துக் கொண்டவர். இவர் வாழ்ந்த காலத்தில் தனியாக இல்லை.

இவர் இங்கிலாந்தின் டேவிட் கஸ்ட் அல்லது கிரிஸ்டோபர் காட்வெல், ஸ்பெனின் லோர்கா, துருக்கியின் நசீம் இக்மத் பாஷா, ஜெர்மனியின் பெட்ரோல்ட் ப்ரெக்ட், இந்தியாவின் ஃபைஸ் அகமது ஃபைஸ்…  இன்னும் பல முற்போக்கு எழுத்தாளர்களின் சம காலத்தில் வாழ்ந்து, பாசிசத்திற்கு எதிராகப் போராடி உயிர் நீத்த உன்னத தியாகி.


படிக்க : ஜூன் 30, 1855 : சந்தால் எழுச்சி தொடங்கிய நாளை நினைவுக்கூறுவோம் !


இரண்டாவது உலகப் போரின் சம காலத்தில், அதற்கு முன்னும் பின்னும், உலகெங்கும் அநீதிகளுக்கு எதிராக கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல ஜனநாயக சக்திகளும் களத்தில் நின்று பாசிசத்திற்கு எதிராகப் போராடி உயிர் நீத்துள்ளார்கள். ஸ்பெயின் நாட்டில் தொடர்ந்து நிலவிய பாசிச ஆட்சிக்கு எதிராக பிரிட்டனின் கிரிஸ்டோபர் காட்வெல்லும், பிரான்சின் ஜார்ஜ் பொலிட்சரும் போராட்டக் களத்தில் தோட்டாக்களுக்கு பலியான பாசிச எதிர்ப்புப் போராளிகள். ஹிட்லரின் பாசிசத்திற்கெதிராகப் போராடி, தூக்குக் கயிற்றில் உயிர் நீத்த செக் நாட்டின் ஜூலியஸ் ஃபூசிக் பற்றி நம் அனைவருக்கும் தெரியும்.

கனடாவின் மருத்துவர் நார்மன் பெதூன் சீனத்தில் செம்படைக்கு உதவச் சென்று உயிர் துறந்தார். அதே சீனத்தில் செம்படைக்கு உதவி உயிர் நீத்த இந்திய மருத்துவர் கோட்னிஸ்-சின் (இவர் இன்றைய குஜராத் பகுதியில் பிறந்தவர்) ஜனநாயக உணர்வே அவரை சீனக் கம்யூனிஸ்டுகளுக்கு உதவ உந்தித் தள்ளியது என்றால் அது மிகையல்ல. இந்த பாசிச எதிர்ப்புப் போராளிகளின் உன்னத வரிசையில் வைத்து போற்றத் தக்கவர் தான் வாப்சரோவ். இவர் ஒரு வகையில் தனித்துவம் மிக்கவர் தான்.

எளிய, வறிய குடும்பத்தில் பிறந்த வாப்சரோவ் இளம் வயதிலேயே கவிதை எழுதத் துவங்கினார். பல்கலைக் கழகத்தில் இணைந்து இலக்கியம் பயில விரும்பினாலும், குடும்ப வறுமைச் சூழல் இவரை ஒரு காகித ஆலையின் மெக்கானிக்காக நெட்டித் தள்ளியது. முன்னதாக ஒரு கடலோடியாக வேலை பார்த்த காலத்தில் புரட்சிகர மார்க்சியத் தத்துவம் அறிமுகமாகி இவரை ஆட்கொண்டது.

ஆலையில் மெக்கானிக் ஆக வேலை பார்த்தாலும் தொழிலாளர்களை அமைப்பாக்கும் வேலையையும் மேற்கொண்டார். பாசிசம் தனது கோரப் பிடியை இறுக்கிக் கொண்டிருந்த பல்கேரிய நாட்டில், குறிப்பாக தொழிலாளர் இயக்கத்தை மிக கொடூரமாக ஒடுக்கிக் கொண்டிருந்த சூழலில் இது மிகவும் சிரமமான வேலை.

தொழிலாளர் இயக்கத்தின் மீது அப்பட்டமான, அம்மணமான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்ட அதே நேரத்தில் அவர்களைப் பிளவுபடுத்தவும், போராட்ட இலட்சியத்தை சிதைத்து, போராட்ட உணர்வை மழுங்கடிக்கவும் ஊடகங்களில் வரம்பற்ற பொய்களும் அவதூறுகளும் கட்டவிழ்த்து விடப்பட்டன. வாப்சரோவ் தனது ஒரு கவிதையில் இது பற்றி இவ்வாறு எழுதுகிறார்:

‘என்னவொரு போராட்டம் இது
மக்களின் வாழ்வைத்
தட்டியெழுப்புவதற்கு
அவர்களின் வாழ்க்கை மீது
படிந்து
அவர்களின் வாழ்வை
அழுத்திக் கொண்டுள்ள
பொய்களின்
பொதி மூட்டைகளை
உடைத்தெறிவது!’

(தற்போதைய பார்ப்பன பாசிச பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் கும்பலின் செயலை அப்படியே படம் பிடித்துக் காட்டுவது போல இந்த வரிகள் உள்ளதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை அல்லவா?)

இவர் மிகவும் ஜனரஞ்சகமான, முற்போக்கான ஒரு நாடக மன்றத்தையும் அரசின் கெடுபிடிகளுக்கிடையிலும் தொடர் சென்சார் கட்டுப்பாடுகளுக்கிடையிலும் வெற்றிகரமாக நடத்தி வந்தார். மக்களிடையே இலக்கிய சிந்தனைகளை உருவாக்கினார். மார்க்சிய படிப்பு வட்டங்களை அமைத்து, தொடர்ந்து நடத்தினார்.

1936-ல் ஒரு ஆலை மூடல் நடவடிக்கைக்குப் பின் ஆலையைத் திறந்த நிர்வாகம் 300 தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கியது. இதற்கெதிராக தொழிலாளர்களைத் திரட்டிப் போராடி அனைவரையும் வேலையில் சேர்த்தார். ஆனால் நிர்வாக இவரை வேலையிலிருந்து துரத்தியடித்தது. வேறு வழியின்றி தனது மனைவி குழந்தையுடன் தலைநகர் சோஃபியாவிற்கு குடிபெயர்ந்தார்.

முதலாளிகளால் வெறுத்தொதுக்கப்பட்ட இவருக்கு வேலை ஏதும் கிடைக்கவில்லை. கையில் சேமிப்பு ஏதுமின்றியும், புதிய நகரில் நண்பர்கள் பரவலாக இல்லாத சூழலில் வறுமையின் கோரப் பிடியில் தள்ளப்பட்ட இவர், அந்த வறுமையில் தனது பிஞ்சுக் குழந்தையைப் பறி கொடுத்தார்.

இறுதியில் ஒரு மாவு ஆலையில் வேலைக்குச் சேர்ந்தார். எந்தப் பாதுகாப்புச் சாதனங்களும் இன்றி மிக கொடூரமான சூழலில் தொழிலாளர்கள் வேலை செய்து வந்ததால் டிபி என்ற கொடிய காச நோய்க்கு எண்ணற்ற தொழிலாளர்கள் பலியாயினர். இவர்களின் நினைவாகவும் அந்த கொடூர வேலை சூழலைப் பற்றியும் பல கவிதைகள் எழுதிய இவர், தானே டிபி நோய்க்கும் ஆளானார்.

இதனால் இந்த வேலையை விட்டுவிட வேண்டியதாகியது. 1939-ல் ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்த இவர் ஓராண்டுக்குப் பின் நகர எரியூட்டிக் கிடங்கில் வேலைக்குச் சேர்ந்தார். அந்த கால கட்டம் மிகக் கடுமையான உடலுழைப்பைக் கோரிய காலகட்டம். இந்த கடும் வேலைக்குப் பின் ரகசியமாக தொழிலாளர்களைத் திரட்டும் அரசியல் வேலையைச் செய்ய வேண்டியிருந்தது.

இரவு மிகத் தாமதமாக வந்து படிப்பது, பின் கவிதை எழுதுவது என மூளை உழைப்பையும் கடுமையாகச் செய்தார். இப்படியான கடும் போராட்டத்தின் விளைவாக இயல்பாகவே இவரது கவிதைகள் புடம்போடப்பட்ட உண்மைகளைத் தாங்கியிருந்ததால் மக்களால் பெரிதும் விரும்பப் பட்டன.

1941-ல் பல்கேரிய ஆளும் வர்க்கத்தால், சோசலிச சோவியத் மீது தாக்குதல் நடத்துவதற்கு வசதியாக நாஜி ஜெர்மன் படைகளிடம் நாடு ஒப்படைக்கப்பட்டது. வாப்சரோவ் ஆயுத எதிர்ப்பு இயக்கத்தில் இணைந்து துடிப்பாக செயல்பட்டு, ‘இராணுவ மையத்தின்’ முக்கியமான செயல்வீர்ராக ஆனார். மெக்கானிக்காக வேலை செய்த அனுபவம் இந்த கால கட்டத்தில் இவருக்கு மிகவும் கைகொடுத்தது. இது மிக கடுமையான உடலுழைப்பையும் ஆபத்தையும் கோருகின்ற வேலைச் சூழல்.

இவருக்கு கவிதைகள் எழுத நேரமே இல்லாமற் போனது. ஆனாலும் தோழர்கள், நண்பர்கள் கவிதை எழுதும்படி ஊக்குவித்தனர். அவரது நண்பர் ஒருவர் கூற்றுப்படி, “இந்தத் தருணத்தில் ஆயுதங்களால் உலகின் தலைவிதி தீர்மாணிக்கப்பட்டாலும், (மக்களைத்) தட்டியெழுப்பும் சமகாலக் கவிதை ஆயுதத்திற்கு சற்றும் குறைவில்லாதது”.

1942-ல் கைது செய்யப்பட்ட வாப்சரோவ் மிகக் கொடூரமாக, மனிதத் தன்மையற்ற முறையில் சித்திரவதை செய்யப்பட்டு 1942 ஜூலை 23-ம் தேதி தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார். மரணத்தின் இறுதிவரை எழுதிக் கொண்டே இருந்தார். அவரது கடைசிக் கவிதை அவரது துனைவியாருக்கு எழுதப்பட்ட ஒன்று. இப்போதும் நம்மை எழுச்சியுறச் செய்யும் ஒன்று.

இந்தப் போராட்டம் கடினமானது ஈவிரக்கமற்றது
அவர்கள் கூறுவது போல போராட்டம் காவியமானது
நான் வீழ்வேன். மற்றொருவர் எனது இடத்தை எடுப்பார்—-
தனிப்பட்ட பெயரில் என்ன இருக்கிறது?

துப்பாக்கிச் சனியனின் சுடுதலுக்குப் பின் —- புழுக்கள்
இந்த எளிய லாஜிக் இப்படிச் செல்கிறது
ஆனால் புயலின் போது நாங்கள் உங்களுடன் இருப்போம்
அன்பான மக்களே, நாங்கள் உங்களை அவ்வளவு நேசிக்கிறோம்.
(மதியம் 2 மணி – 23 ஜூலை 1942)

வரலாறு பற்றிய வாப்சரோவின் பார்வை முதலாளித்துவ தனி நபர் பார்வையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட மார்க்சியக் கண்ணோட்டம் கொண்டது. கம்யூனிச அறிக்கையில் பிரகடனப்படுத்தப்பட்டது போல, “அறியப்பட்ட வரலாறுகள் அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே” என்ற தனித்துவமிக்க, மக்களை மையப்படுத்திய வரலாற்றுப் பார்வையைக் கொண்டது.


படிக்க : பொதுவுடைமை பத்திரிகையின் முன்னுதாரணம் “பிராவ்தா” !


ப்ரெக்ட் ஒரு பாடலில் எழுதுவார்.

தேபசின் ஏழு வாயில்களைக் கட்டியது யார்?
புத்தகங்களில் நீங்கள் பார்க்கலாம் அரசர்களின் பெயர்களை.
மன்னர்களா பாறைக் கற்களைச் சுமந்தார்கள்?

இதே போன்று வாப்சரோவும் வரலாறு பற்றி ஒரு கவிதை எழுதியுள்ளார். ஆனால் ப்ரெக்ட் கவிதையைப் போல அப்படி பலரின் கவனத்தைக் கவராமலே போய்விட்டது வாப்சரோவின் கவிதை. ஆனால் இன்றைக்கும் மிகத் தேவையான ஒன்று!

வரலாறே, நீ எங்களைக் குறிப்பிடுவாயா
உனது மங்கிப் போன பட்டியலில்?

எனத் தொடங்குகிறார். முதலாளிகளின் நிறுவனங்களில் உரிமை கோரவில்லை. மாறாக, அவற்றை ரத்தமும் சதையுமான மக்களாகப் பார்க்கிறார்.

உன்னை செய்திகளால் கொழுக்க வைத்தோம்
உனது தாகத்தை மிக உயர்ந்த முறையில் தணித்தோம்
படுகொலை செய்யப்பட்ட மக்கள் கூட்டத்தின் ரத்தத்தால் அல்லவோ?

எங்கள் வாழ்க்கை குறிப்பிட ஏதுமற்றதா
எங்கள் வாழ்க்கை அசைபோட்டுப் பார்க்க ஏதுமற்றதா?
தோண்டியெடுத்தால், விசம் நிரம்பியிருக்கும்
கோப்பையில் சுவைக்கையில் கசக்கும்

கவிதை கடைசியில் இவ்வாறு முடியும்:

அந்த கடின உழைப்பிற்கும் துன்பத்திற்கும்
நாங்கள் பரிசுகளை எதிர்பார்க்கவில்லை,
மாறாக எங்கள் நிழற்படங்களைக்
காலண்டர்களில் எதிர்பார்க்கவில்லை

எங்களின் கதைகளை எளிமையாகச் சொல்லுங்கள்
நாங்கள் பார்க்க இயலாதவர்களிடம்,
எங்களுக்கு மாற்றாக வந்திருப்பவர்களிடம் சொல்லுங்கள்,
நாங்கள் அச்சமின்றி தீரமாகப் போரிட்டோமென்று

ஆம்! வாப்சரோவ் கூறுவது போல நமது வரலாறு, வர்க்கப் போராட்ட வரலாறு, நமது வருங்காலத் தலைமுறைக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும்! பாசிசத்திற்கு எதிராக அச்சமற்றுப் போராடினோம் என்று! வாப்சரோவ், தோழனே! கவிஞனே! பார்ப்பன பாசிசத்தை எதிர்த்து முறியடிக்க உனது பாதையில் அச்சமின்றி போராடுவோம் என உனது நினைவு நாளில் உறுதியேற்கிறோம்!

(குறிப்பு : REVOLUTIONARY DEMOCRACY, Vol. VI. No.1.  ஏப்ரல் 2000 இதழில் சி.என். சுப்ரமணியன் என்பவர் எழுதிய கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது.)


நாகராசு

3 மறுமொழிகள்

 1. உணர்வூட்டும் இத்தகைய பதிவுகளையும் தொடர்ந்து வினவு வெளியிட வேண்டும். எழுதிய தோழருக்கு நன்றிகள்!

 2. அந்த கடின உழைப்பிற்கும் துன்பத்திற்கும்
  நாங்கள் பரிசுகளை எதிர்பார்க்கவில்லை,
  மாறாக எங்கள் நிழற்படங்களைக்
  காலண்டர்களில் எதிர்பார்க்கவில்லை

  ### எங்களின் கதைகளை எளிமையாகச் சொல்லுங்கள்
  நாங்கள் பார்க்க இயலாதவர்களிடம்,
  எங்களுக்கு மாற்றாக வந்திருப்பவர்களிடம் சொல்லுங்கள்,
  நாங்கள் அச்சமின்றி தீரமாகப் போரிட்டோமென்று ###

  அச்சம் இன்றி போராடுவோம்…

 3. முதலாளித்துவ கொடிய உற்பத்தி முறையில் தொழிலாளர் வர்க்கம் உடல்சோர்ந்தாலும் மூளை சோர்வடைவதில்லை என்பதை உணரமுடிகிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க