ஆர்.எஸ்.எஸ் – பாஜக, அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்!

செப்டம்பர் 17 – சென்னையில் மாநாடு

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

பேயாட்சியின் பிடியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம். உழைக்கும் மக்கள் நிம்மதியாக வாழ முடிகிறதா இந்த ஆட்சியில் பசி, பட்டினிச்சாவு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வரி உயர்வு, வேலையின்மை, கார்ப்பரேட் நாசகரத் திட்டங்களால் வாழ்வாதாரப் பறிப்பு – என அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது நமது வாழ்வு!

2014-ல் ரூபாய் 400-க்கும் குறைவாக இருந்த  சிலிண்டர்  விலை, 170 சதவிகிதம் உயர்ந்து 1,100-ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் என எதையும் வாங்கிச் சமைக்க முடியவில்லை. விலைவாசி விஷம் போல ஏறுகிறது. தயிருக்கும் உப்புக்கும் கூட ஜி.எஸ்.டி வரியைக் கூட்டுகிறது பாசிச மோடி ஆட்சி.

வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. அதன் சதவிகிதம் 7.83 ஆக உயர்ந்திருக்கிறது. 15 முதல் 19 வயதே உள்ள இளந்தலைமுறையினரின் வேலையின்மை சதவிகிதம்தான் 50-க்கு மேல் உள்ளது. கடந்த மே-ஜூன் வரையிலான ஒரே மாதத்தில் 1.6 கோடி பேர் வேலையிழந்திருக்கிறார்கள். ‘அக்னிபத்’ என்ற பெயரில் இராணுவமே காண்டிராக்ட்மயமாக்கம். இனி அனைத்து அரசு வேலைகளும் காண்டிராக்ட் கொத்தடிமை மயமே என்பதற்கான கட்டியம் கூறல் இது.

2018 – 2020-க்கு  இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில், கடன் நெருக்கடி, வேலையின்மை, வியாபார நெருக்கடி போன்ற காரணங்களால் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 25,000 பேர். 20 ஆண்டுகளில் இல்லாத அளவு தானிய உற்பத்தி பெருகியிருக்கிறது. ஆனால், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் நாளொன்றுக்கு 4,500 குழந்தைகள் பட்டினியால் சாகின்றன. 70 சதவிகித மக்கள் சத்தான உணவு உட்கொள்ள முடிவதில்லை என்கிறது ஒரு ஆய்வறிக்கை.


படிக்க : ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்! | மாநாடு அறிவிப்பு !


மதவெறி, சாதிவெறி கலவரங்களைத் தூண்டிவிட்டு முசுலீம்கள், கிறித்தவர்கள், தலித்துகள் என சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஒரு உள்நாட்டு போரையே நடத்திவருகிறது ஆர்.எஸ்.எஸ் என்ற பாசிச குண்டர் படை. அதன் அரசியல் கட்சிதான் பாஜக.

ஒட்டுமொத்த முசுலீம்களையும் இனப்படுகொலை செய்ய வேண்டும் என்று வெளிப்படையாக அறைகூவுகிறது ஆர்.எஸ்.எஸ். இந்துப் பண்டிகைகளில் மதவெறி ஊர்வலங்கள் நடத்தி முசுலீம் மக்கள் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறார்கள் காவி குண்டர்கள்.  ஹிஜாப் அணியத் தடை, பாங்கு ஓதத் தடை, வியாபாரம் செய்யத் தடை என குடிமக்களின் அடிப்படை உரிமைகள் கூட பறிக்கப்படுகிறது. பாபர் மசூதி தீர்ப்பு தொடங்கி எல்லா வழக்கிலும் நீதிமன்றம் உட்பட அவர்களை வஞ்சிக்கிறது. இந்த அநீதிகளை எதிர்த்து போராடினால், புல்டோசரை வைத்து வீட்டை இடிக்கிறார்கள். அனைத்து உரிமைகளை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பாடுகிறார்கள் முசுலீம்கள்.

உண்மையில் இந்த ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி யாருக்கானது? கார்ப்பரேட்டுகளின் அதிலும் குறிப்பாக பார்ப்பன – பனியா சாதியைச் சேர்ந்த அம்பானி, அதானி கும்பலுக்கே இந்த ஆட்சி சுபிட்சம்.

அதானிக்கு ஆஸ்திரேலியாவில் சுரங்கம் வாங்க பேரம் பேசுவதற்கு மோடியே விமானத்தில் போகிறார்; மின் உற்பத்தி டெண்டர் தரச்சொல்லி இலங்கை அரசிடம் பேசுகிறார். இப்படி எட்டாண்டுகளில் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களால் மட்டும் அதானி அடைந்த லாபம் 3,39,700 கோடி. அம்பானியின் ஜியோவுக்கு மோடியே விளம்பரதாரராக நடித்ததை நாம் மறந்திருக்க முடியாது. கடந்த பத்தாண்டில் மட்டும் அதானியின் சொத்து மதிப்பு 1830 சதவீதமும் அம்பானியின் சொத்து மதிப்பு 400 சதவீதமும் உயர்ந்திருக்கிறது. இவர்கள் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் டாப் 10-இல் உள்ளார்கள். இதற்கு கைமாறாக தேர்தல் நிதி என்ற பெயரில் பாஜகவை கோடிகளால் குளிப்பாட்டுகிறது அம்பானி – அதானி கும்பல். இரயில்வே, விமானம், நெடுஞ்சாலை, மருத்துவம், எல்.ஐ.சி என மக்களுக்கு சேவையாற்றும் அனைத்து துறைகளையும் இக்கார்ப்பரேட்டுகளுக்கு விற்றுத் தள்ளுகிறது மோடி ஆட்சி.

இந்த ஆட்சிக்கு எதிராக துணிச்சலோடு களத்தில் நிற்கும் செயல்பாட்டாளர்கள் பொய்வழக்கில் கைதுசெய்யப்படுகிறார்கள். ‘மோடியைக் கொல்ல சதி’ என்ற பெயரில், ஒரு மொட்டைக் கடிதத்தை ஆதாரமாகக் கொண்டு 16 செயல்பாட்டாளார்கள் கைதுசெய்யப்பட்டார்கள். பழங்குடிகளுக்காக போராடிய 83 வயதான பாதிரியார் ஸ்டான் சுவாமி, சிறைக் கொடுமையால் கொல்லப்பட்டார். குஜராத் படுகொலை வழக்கில் மோடிக்கு எதிராக வழக்கு தொடுத்த தீஸ்தா சேதல்வாட், போலீசு அதிகாரி சிறீகுமார் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்; கொலைக்குற்றவாளி மோடியோ சட்டப்படி விடுதலை செய்யப்படுகிறார். ஆர்.எஸ்.எஸ்-பாஜகவின் போலிச் செய்திகளை அம்பலடுத்திய குற்றத்திற்காக ஆல்ட் நியூஸ் நிறுவனத்தின் இணையாசிரியர் ஜீபைர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மோடிக்கு எதிராக வாயைத் திறந்தாலே கைது வழக்குதான் என்பதை இயல்புநிலையாக்குகிறார்கள்.

ஏதோ ஐந்தாண்டுகள் ஆண்டுவிட்டுப் போகும் கட்சி அல்ல பாஜக. இதற்கு பின் ஆர்.எஸ்.எஸ். என்ற பாசிச பயங்கரவாத அமைப்பு இருக்கிறது. மக்களை நூறுகூறாகப் பிரித்து, சாதி ஏற்றத்தாழ்வை – பார்ப்பன ஆதிக்கத்தை மீண்டும் நவீன வடிவில் நிலைநாட்டுவதே இதன் குறிக்கோள். இதைத்தான் அவர்கள் ‘இந்துராஷ்டிரம்’ என்கிறார்கள். மறுபக்கம் தங்களுக்கு புரவலர்களாக இருக்கும் அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் கும்பல் நாட்டை சூறையாட ஏற்பாடு செய்துகொடுக்கிறார்கள். இந்த இரண்டு நோக்கத்திற்கும் சேவைசெய்யும் வகையில் பாராளுமன்றம், தேர்தல் ஆணையம், சிபிஐ, ரிசர்வ வங்கி, இராணுவம் என பல துறைகளின் உயர் மட்டங்களிலும் தங்கள் ஆட்களை நிரப்பியிருறார்கள். அரசமைப்புச் சட்டத்தையே கூட அவர்களுக்கு தோதான வகையில் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன், நாடாளுமன்றத்தில் என்னென்ன வார்த்தைகள் பேசவேண்டும் என பட்டியல் வெளியிட்டிருகிறார்கள்; நாடாளுமன்ற வளாகத்தில் போராடக்கூடாதாம். எதிர்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கிடையே கூட எத்தனையோ சட்டங்களை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. கூக்குரலிடவும் போரடவும் மட்டும்தான் எதிர்கட்சிகளால் முடிந்தது. தற்போது அதற்கும் தடை.

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற பெயரில் அனைத்து அதிகாரங்களையும் ஒற்றையாட்சியின் கீழ் கொண்டுவந்துகொண்டிருக்கிறார்கள். நீட், ஜி.எஸ்.டி. புதிய கல்விக் கொள்கை, வேளாண் சட்டங்கள், அணைகள் பாதுகாப்பு மசோதா என பல்வேறு சட்டங்களின் மூலம் பெயரளவிலான மாநில உரிமைகள் கூட பறிக்கப்பட்டுவிட்டன.


படிக்க : இந்து ராஷ்டிரத்தை அடித்து நொறுக்குவோம்!


தான் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீது அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்டவற்றை ஏவி அச்சுறுத்துவது; எம்.எல்.ஏ.க்களை விலைபேசுவது ஆகியவற்றின் மூலம் இதுவரை 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது பாஜக. புதுச்சேரி, கர்நாடகம், மத்தியப் பிரதேசம், தற்போது மஹாராஷ்டிரம் என நாறுகிறது சொல்லிக் கொள்ளப்படும் மக்களாட்சி. மற்றொரு பக்கம் ஆர்.எஸ்.எஸ். ஆளுநர்களைக் கொண்டு அறிவிக்கப்படாத இணையாட்சியை நடத்துகிறார்கள். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியே அதற்கு சாட்சி.

பாசிசப் பேயாட்சியால் நாடே குமுறி வருகிறது. ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, வேளாண் திருத்தச் சட்ட எதிர்ப்பு, குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பு, நீட் எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, பொதுத்துறை தனியார்மயமாக்க எதிர்ப்பு, காண்டிராக்ட் மயமாக்க எதிர்ப்பு, வேலையின்மைக்கு எதிராக, விலைவாசி உயர்வுக்கு எதிராக, மதவெறி-சாதிவெறித் தாக்குதல்களுக்கு எதிராக என உழைக்கும் மக்களாகிய நமது அனைத்து வகை குமுறலும் இந்த ஆட்சிக்கு எதிராகத்தான் நிற்கிறது.

இசுலாமியர்கள், தலித்துகள், வணிகர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள் என அனைவரும் தனித்தனியாப் போராடி வருகிறோம். நம்முடைய போராட்டங்களின் இலக்கு ஆர்.எஸ்.எஸ் – பாஜக அம்பானி அதானி பாசிசத்தை முறியடிப்பதாக மாறவேண்டும். ஆர்.எஸ்.எஸ் – பாஜக மக்கள் அடித்தளத்தில் ஊடுருவி ஆதரவு பெறுகிறார்கள். அதுபோல நாமும் ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு தொழிற்சாலையிலும், ஒவ்வொரு பள்ளியிலும் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணிகளை கட்டி காவி – கார்ப்பரேட் பாசிசக் கும்பலை நேருக்குநேர் சந்தித்து முறியடிக்க வேண்டும். அப்படிப்பட்ட முன்னணிகளே பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணிக்கு பின்புலமாக அமையும். அதுவே ஆர்.எஸ்.எஸ் – பாஜக, அம்பானி – அதானி பாசிச கும்பலை வீழ்த்தும். அதற்காகத்தான் உங்களை அறைகூவி அழைக்கிறோம்…! எங்களோடு இணையுங்கள், மாநாட்டுக்கு நிதி தாருங்கள் !

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை
தொடர்புக்கு :- 97916 53200, 94448 36642, 73974 04242, 99623 66321.


1 மறுமொழி

  1. துண்டறிக்கையில் உள்ள பா.ஜ.க ஆர்எஸ்எஸ் அதானி அம்பானி வார்த்தைகளை பாசிசம் என்ற வார்த்தையின் அளவுக்கு ஏன் பெரிதாக்கவில்லை?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க