குறிப்பு : அறிவியலாளர் புஷ்ப மித்ர பர்கவா 2017-ம் ஆண்டு, ஆகஸ்ட் 1-ம் தேதி நம்மைவிட்டு பிரிந்தார். ஐதராபாத்தில் Centre for Cellular and Molecular Biology என்ற ஒன்றிய அரசின் ஆய்வகத்தை நிறுவி அதன் இயக்குனராக இருந்தவர். நூற்றுக்கும் மேற்பட்ட தேசிய –  சர்வதேசிய கௌரவ பட்டங்களையும் விருதுகளையும், – பத்ம பூஷன், பிரான்ஸ் அதிபரிடமிருந்து லீஜன் தி’ஹானர், தேசிய குடிமகன் விருது உட்பட – வாங்கியவர். ஒன்றிய அரசின் பல துறைகளிலும், தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு உட்பட, ஆலோசகராக இருந்தவர். தனது இறுதி மூச்சு வரை அறிவியல் கண்ணோட்டத்தைப் பரப்பி வந்த பர்கவா, 1975-ம் ஆண்டில் அறிவியல் சிந்தனைகளை உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் மனதில் பதிய வைப்பதற்கு முடிவு செய்து, அறிவியல் கண்காட்சி ஒன்றை நிறுவ வேண்டும் என முனைந்தார். இதற்காக கடுமையாக 2 ஆண்டுகள் உழைத்து டில்லியில் ஒரு நிரந்தர கண்காட்சியையும் அமைத்தார்.

‘எதையும் அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று ஏற்காதே! உனக்கு சரி எனப்படும் வரை எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என கேள்வி கேள்’ என கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸ் (அடிமைச் சமூகத்தில் ஆண்டையாக வாழ்ந்த இவர் நம்மைப் போன்ற மனிதர்கள் ஏன், எப்படி, எதற்காக அடிமையானார்கள் என்ற கேள்வியைக் கேட்கவே இல்லை என்பது தனியே பரிசீலிக்க வேண்டிய ஒன்று) சொன்னார் அல்லவா, அந்த வழியில் உண்மையான அறிவியல் அறிஞர். அவரது அறிவியல் கண்காட்சியின் இறுதியில், இங்கு சொல்லப்பட்டவை நிரந்தர உண்மைகள் என்று ஏற்காதே, கேள்வி கேள் என்று மனதில் ஆழப் பதியும் வண்ணம் கூறியவர். ஆனால் அந்தக் கண்காட்சி தலைநகர் தில்லியில் அமையவில்லை! ஐதராபாத்தில் அமைந்தது. இன்று பார்ப்பன பாசிச கும்பல் அறிவுத் துறையினரை நரவேட்டையாடி வருகிறதே, அந்தக் கொடுமைகளை அன்றே அனுபவித்தவர் தான் இந்த அறிவியல் அறிஞர் பர்கவா! அது பற்றிய வரலாற்றை (பர்கவா அவர்களே எழுதியதிலிருந்து) இக்கட்டுரை சுருக்கமாகக் கூறுகிறது.

மக்களிடயே அறிவியல் கண்ணோட்டத்தை உருவாக்க, பார்ப்பன பாசிசத்தை எதிர்த்த புஷ்ப மித்ர பர்கவா!

***

அறிவியல் சிந்தனை முறை பற்றிய கண்காட்சியின் வரலாறு

இந்த வரலாறு ரியாஸ் அகமதுவிலிருந்து தொடங்குகிறது. கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்சிஇஆர்டி) என்ற அமைப்பின் இயக்குனரான ரியாஸ் அகமது, அலிகார் இசுலாமிய பல்கலைக் கழகத்தின் பௌதிகப் பேராசிரியராக, விஞ்ஞானியாக இருந்தவர். என்சிஇஆர்டி இயக்குனர்களிலேயே மிகவும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டவர் இவர். வாழ்நாள் முழுதும் பகுத்தறிவாளராகவும் தேசியவாதியாகவும் வாழ்ந்தவர். இன்று நாடு முழுதும் உள்ள 10+2+3 கல்வி முறையை ஏற்படுத்தியவர். அதே போல உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடிந்ததும் வொகேசனல் கல்வி (ஐடிஐ, டிப்ளமோ என தொழிற்கல்வி), பல்கலைக் கழக கல்வி என இரு துறைகளாகப் பிரித்துப் பயிலும் முறையை உருவாக்கியவர்.

நேருவின் பிறந்த நாளில் தில்லியில் ஆண்டு தோறும் கல்வி கண்காட்சி நடைபெரும். 1975 மே 14 அன்று தில்லி சென்ற போது, ரியாஸ் அகமதுவைச் சென்று சந்தித்தேன். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியல் கண்ணோட்டம், அறிவியல் முறை பற்றி எழுதி வருகிறீகளே, நீங்கள் தேசிய அறிவியல் கண்காட்சியின் ஒரு அங்கமாக அறிவியல் முறை பற்றிய கண்காட்சியை ஏன் நிறுவ முன்வரக் கூடாது என என்னிடம் கேள்வி எழுப்பினார். இதைச் செய்ய ஏற்றுக் கொண்டால் என்சிஇஆர்டி பொருளாதார ரீதியாக உதவும் எனக் கூறினார்.

அறிவுப்பூர்வமாக சவாலானதாக இருந்ததால், இந்த யோசனை என்னைக் கவர்ந்தது. அறிவியல் முறை என்பது பற்றி கருத்து ரீதியாகவும் அறிவியல் நிபுனத்துவம் கொண்டவர்களுக்குப் புரியும் படியும் விளக்கி வந்த அறிவியல் முறை பற்றி, இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை புரிந்து கொள்ளும்படியாக, காட்சி வடிவில் ஒரு கண்காட்சியை நிறுவுவது என்பது உயர்ந்த மட்டத்திலான படைப்பாற்றலைக் கோருகின்ற ஒன்று. இதனாலேயே ரியாஸ் அகமதுவின் அழைப்பை நான் ஏற்றுக் கொண்டேன்.

ஐதராபாத் திரும்பிய உடனே ஒரு நாள் இரவு முழுதும் விழித்திருந்து, 50 பக்கங்களில் ஒரு திட்டத்தை அந்த இரவே எழுதித் தயாரித்தேன். அடுத்த சில நாட்கள் திட்டத்தில் எழுதியுள்ளதை காட்சிப் படுத்த ஆடியோ-வீடியோ காட்சிகள் என்னென்ன தேவைப்படும், நேரடியான பரிசோதனைகள் என்னென்ன செய்வது என தோராயமாக எழுதினேன். நான் என்ன எழுதியுள்ளேனோ அது கண்காட்சியை ஆதிக்கம் செய்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த திட்டமும் ஆடியோ-வீடியோ காட்சிகளும் (நேரடி பரிசோதனைகள், செய்முறை விளக்கங்கள் உட்பட) பல மாற்றங்களுக்கு ஆளானது. ஆனால் முதல் ஓரிரு நாட்களில் முடிவு செய்த அடிப்படையான திட்டங்கள் எந்த மாற்றமுமின்றி கடைசிவரை நின்று நீடித்தது.


படிக்க : பார்ப்பனியத்தை ஏற்காத அறிவியலாளர் புஷ்ப மித்ரா பர்கவா மறைவு


அடுத்ததாக கண்காட்சிக்கு தேவையானவற்றைத் தயாரிக்க ஐதராபாத்தில் உள்ள துறை சார்ந்த வல்லுனர்கள் 11 பேரிடம் பேசியதில் அனைவரும் இதில் பங்கேற்க ஆர்வமுடன் இசைந்தனர். முதல் கூட்டம் எனது (பர்கவா) வீட்டில் நள்ளிரவு வரை உற்சாகமாக நடந்தது. அன்றைக்கு இளம் வயதினராக இருந்த அந்த வல்லுனர்கள், இன்றைக்கு அவரவர் துறைகளில் பல்வேறு சாதனைகள் புரிந்து அறிவியல் உலகில் மட்டுமல்ல பொதுவில் நன்கு அறிமுகமானவர்களாக உள்ளனர். இந்தக் கண்காட்சி வேலைகள் என்னை எப்படி மாற்றியதோ, அதே போல அவர்கள் வாழ்விலும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

என்சிஇஆர்டி தரும் பணம் கண்காட்சி வேலைகளுக்குப் போதுமானதாக இருக்காது என்பதை உணர்ந்தேன். இந்தக் கண்காட்சி அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்றால், தற்காலிகமாக இல்லாமல் நிரந்தரமான ஒன்றாக நிறுவப்பட வேண்டும் என அனைவருமே விவாதித்து முடிவுக்கு வந்தோம். இந்த இரு முடிவுகள் பற்றி என்சிஇஆர்டி-யிலும் அதன் இயக்குனர் ரியாஸ் அகமதுவிடமும் பேசி ஒப்புதல் பெற்றோம்.

நிதிக்காக விஎஸ்டி தொழிற்சாலைகளின் தலைவர் ஆன்ந்த்லால் என்பவரை அணுகினேன். அவர் உடனடியாகவே ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார். இவர் நிதி தரவில்லை என்றால் இந்தக் கண்காட்சியே உருவாகியிருக்காது. (இன்றைய பிஜேபி ஆட்சி அன்று இருந்திருந்தால் இந்த திட்டமே உருவாகியிருக்காது. ஒரு வேளை தொடங்கியிருந்தால் ஆன்ந்த்லாலிடம் பணம் வாங்கி மோசடி செய்துவிட்டார் என பர்கவா மீது குற்றம் சாட்டி சிறையிலடைத்து, சாகும்வரை கம்பி எண்ணிக் கொண்டிருந்திருப்பார் என்பதே உண்மை. – நாகராசு). தவிர நான் பணிபுரியும் ஆய்வகமும் நல்ல ஒத்துழைப்பு நல்கி, கண்காட்சி வேலைகள் நடக்க, தனி ஒரு கட்டிடமும் ஒதுக்கித் தந்தது. எனது ஆய்வகம் (Centre for Cellular and Molecular Biology) அறிவியல் மற்றும் தொழிற்சாலை ஆய்வு மையத்தின் (சிஎஸ்ஐஆர்) கீழ் தனித்து இயங்கும் ஒரு நிறுவனம். இது கடைசிவரை தடையின்றி கண்காட்சியை நிறுவ உதவியது. அன்றைய சிஎஸ்ஐஆர் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த நாயுடம்மாவும் முழு ஆதரவு தந்தார்.

இவர்கள் தவிர உலகம் முழுவதிலுமிருந்து தனிநபர்களும், நிறுவனங்களும் அரிதான, மதிப்பு மிக்க பொருட்கள், விவரங்கள், காட்சிப் படுத்த ஆடியோ-வீடியோ கொடுத்து உதவினர். தனிநபர்கள் துறை சார்ந்த வல்லுனர்கள் ஆவர். மேலும் தேசிய ஜியோபிசிகல் ஆய்வுக் கழகம்-ஐதராபாத், மாக்ஸ் முல்லர் பவன்-ஐதராபாத், ஆந்திர பிரதேஷ் விவசாய பல்கலைக் கழகம்-ஐதராபாத். தெற்கு மத்திய ரயில்வே, இந்திய வானிலையியல் துறை-புது தில்லி, பாபா அணு ஆராய்ச்சி மையம்-ட்ராம்பே, இந்துஸ்தான் ஆண்டிபயாடிக்ஸ் லிட்.-பிம்ப்ரி, வைரஸ் ஆய்வு மையம்-பூனா, பிரிட்டிஷ் கவுன்சில்-சென்னை, அமெரிக்க தகவல் சேவை-சென்னை,பம்பாய், ராயல் சொசைட்டி-லண்டன், பாஸ்டர் இன்ஸ்டிடூட்-பாரிஸ் போன்ற பல நிறுவனங்களும் உதவின.  பல்வேறு பதிப்பகத்தினர், எழுத்தாளர்களின் நூல்களில் இருந்து விவரங்கள், அரிய புகைப்படங்களை எடுத்துக் கையாண்டோம்.

இந்தக் கண்காட்சியை உருவாக்க சுமார் 2 ஆண்டுகள் ஆனது. 1976 இறுதியில் கண்காட்சி முழு வடிவம் பெற்ற போது, இதைக் காட்சிப் படுத்தவே 5000 சதுர அடிக்கும் மேலான இடம் தேவைப்படுவதோடு, நிர்வாகத்திற்கும் கூடுதலாக இடம் இருந்தால் தான் சிறப்பாக அமையும் என உணர்ந்தோம்! ஐதராபாத்தில் அமைத்தபோது வந்து பார்த்த பலரும், இது நாட்டின் தலைநகரான தில்லியில் நிரந்தரமாக அமைக்கப்படுவதே சிறப்பாக இருக்கும் என்றனர்.

ரியாஸ் அகமது, அன்றைய ஒன்றிய கல்வி அமைச்சர் நூருல் ஹாசன் இருவருமே கண்காட்சி நிரந்தரமானதாக நிறுவப்பட வேண்டும் என முழு மனதோடு ஏற்றுக் கொண்டனர். தில்லி கோட்லா மார்க்கில் உள்ள பால பவன் வளாகத்தில் உள்ள போலிஷ் பெவிலியன் இதற்கு ஏற்ற இடம் என தெரிவு செய்தனர். அது தனியாக உள்ள கட்டிடம். கண்காட்சி தனித்துவமாக விளங்கும் என முடிவானது.

கண்காட்சி அமைக்கும் காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். என்சிஇஆர்டி-யின் அறிவியல் பிரிவு தலைமையில் இருந்த அதிந்திர போஸ், என்னுடன் லக்னௌ பல்கலைக் கழகத்தில் இளங்கலை, முதுகலை பட்டப் படிப்பில் 1942-1946ல் ஒன்றாகப் படித்தவர். என்சிஇஆர்டி-யில் ஒரு பாடப் புத்தகம் எழுதுகையில் நெருங்கிப் பழக வேண்டியது வந்தது. லேனிங் சயின்ஸ்-பார்ட் 1 (Learning Science-Part 1) என்ற 6ம் வகுப்புக்கான அறிவியல் பாட நூல் எழுதும் அமர்வில் நானும் இருந்தேன். (இந்த நூல்தான் 6ம் வகுப்பு அறிவியல் நூலாக பல ஆண்டுகள் இருந்தது.) இது பல வழிகளிலும் மரபான நூலிலிருந்து மாறி இருந்தது. தீவிர வலதுசாரி சிந்தனை கொண்ட போஸ் நூலை எழுதும் போது நிறைய சிக்கல்களை ஏற்படுத்தினார். அதையெல்லாம் கடந்து வந்தோம். ஆனால் அறிவியல் கண்ணோட்டத்துடன் அறிவியல் முறை பற்றிய கண்காட்சி அமைக்கும் எங்களின் அறிவியல் பற்றிய சிந்தனை, போசின் சிந்தனை முறைக்கு முற்றிலும் நேர் எதிரானதாக இருந்தது.


படிக்க : வரலாற்றுப் பார்வையில் E = mc2 – வீடியோவும் விளக்கமும்


கண்காட்சிக்கான பொருட்கள் தில்லி பாலபவனுக்கு ஐதராபாத்திலிருந்து கொண்டுவரப்பட்டன. ஒரு குட்ஸ் ரயில் பெட்டி நிறைய எடுத்து வந்தது மட்டுமின்றி நாங்களும் கைகளில் கணிசமாக கொண்டுவர வேண்டியதாகியது. 1977 பிப்ரவரி 6 – 17க்குள் எல்லா பொருட்களும் வந்து சேர்ந்தன. இதற்கான செலவுகள் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமானது. தவிர வேலை செய்தவர்களுக்கான கூலியும் தர வேண்டும். என்சிஇஆர்டி பணம் தந்துவிடும் என்ற தைரியம் இருந்தது. 1977 மார்ச் 7ம் தேதி கல்வி அமைச்சர் நூருல் ஹாசன் சாஸ்திரி பவனுக்கு தேநீர் அருந்த அழைத்தார். எனது தோளில் தட்டிக் கொடுத்து இந்திய அறிவுத்துறை வரலாற்றிலேயே இந்தக் கண்காட்சி ஒரு மைல்கல்லாக இருக்கப் போகிறது எனப் பாராட்டினார்.

நாங்கள் மேலும் உற்சாகம், ஊக்கத்துடன் திறப்பு விழாவிற்கு வேலை செய்தோம். அதைத் திறந்து வைக்க இருந்தவர் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள்! அவர் நூருல் ஹாசன், ரியாஸ் அகமது மூலம் மட்டுமின்றி மேலும் பலர் மூலம் கண்காட்சி பற்றித் தெரிந்து கொண்டார். தில்லியில் கண்காட்சியை நிறுவிக் கொண்டிருந்த போது, சிஎஸ்ஐஆர் டைரக்டர் ஜெனரல் மறைந்த நாயுடம்மா, ஐஎஸ்ஆர்ஓ தலைவரும் விண்வெளித் துறை செயலாளருமான மறைந்த சதீஷ் தாவன், யஷ் பால் இன்னும் இது போன்ற எண்ணற்ற பிரபலங்கள் வந்து பார்த்துப் பாராட்டியது எங்களை மேலும் உற்சாகப்படுத்தியது. மார்ச் மத்தியில் கண்காட்சி பற்றி ஏகமாக பலரும் தெரிந்து கொண்டதோடு, அதைக் காணவும் ஆவலாக இருந்தனர்.

நாங்கள் எல்லோரும் பரபரப்பாக இரவு பகல் பாராது வேலை செய்தோம். எங்களுக்கு என்சிஇஆர்டி வளாகத்திலேயே ஒரு வீடும் கொடுத்து விட்டனர். நண்பர்களிடமிருந்து பொருட்களை வாங்கியும் ஐதராபத்திலிருந்து சில கொண்டு வந்தும் அங்கேயே அனைவரும் ஒரு குடும்பமாக சமைத்து சாப்பிட்டோம்! தொடர்ந்து 8 வாரங்கள் கடுமையாக வேலை செய்து மார்ச் 3வது வாரம் கண்காட்சி திறப்பு விழாவிற்குத் தயாராகி விட்டது. கண்காட்சியின் மின் இணைப்பு வயர்கள் மட்டும் பல மைல்கள் நீளம் கொண்டதாக இருந்தது.

(தொடரும்…)

(Angel, Devil and Science என்ற புஷ்ப மித்ர பர்கவா எழுதிய புத்தகத்தை தழுவி எழுதிய சுருக்கமான கட்டுரை.)


நாகராசு

1 மறுமொழி

  1. மக்களிடயே அறிவியல் கண்ணோட்டத்தை உருவாக்க, பார்ப்பன பாசிசத்தை எதிர்த்த புஷ்ப மித்ர பர்கவா
    கட்டுரை, மக்கள்மீது பற்றுக்கொண்ட அறிவுதுறையினரின் மீதான மதிப்பை பன்மடங்கு கூட்டுகிறது.
    இந்திய குழந்தைகளின் அறிவு கருவூலங்களை சங்கிகள் கைப்பற்றுவது ஏறக்குறைய முடிவடைந்துவிட்டது. காவிகளின் போரில், நாடு எரிந்து இந்துத்துவ சாம்பல் நெடி நாற்புறமும் சூழ்கிறது. மனசு கனக்கிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க