மக்களிடயே அறிவியல் கண்ணோட்டத்தை உருவாக்க, பார்ப்பன பாசிசத்தை எதிர்த்த புஷ்ப மித்ர பர்கவா! – பாகம் 1

மக்களிடயே அறிவியல் கண்ணோட்டத்தை உருவாக்க,
பார்ப்பன பாசிசத்தை எதிர்த்த புஷ்ப மித்ர பர்கவா! – பாகம் 2

திருட்டு!

ஜனவரி 7-ம் தேதி தில்லி வந்தபோது அவசரநிலை ஆட்சி இருந்தது. தேர்தல் அறிவித்து, தேர்தல் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. நாங்கள் கண்காட்சி வேலைகளை முழுதும் முடித்து திறப்பு விழாவிற்கு தயாராயிருந்த மார்ச் 21ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்திரா காந்தி தோற்று, மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார். புதிய அரசாங்கத்திற்கு, இன்று நாம் வெளிப்படையாக அனுபவித்து வருகிறோமே அந்த இந்துத்துவ அஜண்டா, மறைமுகமானதாக இருந்தது. ஏற்கனவே குறிப்பிட்ட போஸ் போன்றோர் ஆதிக்கம் செலுத்தவும், திறன் மிக்க ரியாஸ் அகமது போன்றோர் அடங்கியிருக்கவும் ஆனது. எங்கள் கண்காட்சியில் இருந்த பல செய்திகளும் மத அடிப்படைவாதத்திற்கு எதிரானதாக இருந்தது. மூடநம்பிக்கைகளை எதிர்த்து, அறிவியல் கண்ணோட்டம், காரண-காரிய தேடல், பகுத்தறிவு, புறநிலை உண்மையிலிருந்து முடிவுக்கு வருவது போன்றவை இயல்பாகவே மத அடிப்படைவாதங்களுக்கு எதிரானதாகத்தானே இருக்கும்!

மார்ச் 21க்குப் பின் காட்சிகள் வேகமாக மாறத் தொடங்கின. சில நாட்களில் ரியாஸ் அகமது தனது என்சிஇஆர்டி இயக்குனர் பதவியை ராஜினாமா செய்தார். போஸ் போன்றோர் காட்டில் மழை! எங்களுக்கு உள்ள பாராளுமன்ற தொடர்புகள் மூலம் பிரதமர் மொரார்ஜி தேசாயை வைத்து திறப்பு விழா நடத்த முயன்றோம். என்சிஇஆர்டி-யும் புதிய கல்வி அமைச்சரும் ஒத்துழைக்கவில்லை. வேறு வழியின்றி கண்காட்சியைப் பூட்டி வைத்து விட்டு அனைவரும் ஐதராபாத் திரும்பினோம்!


படிக்க : ஜூலை 1, 1921 : சீன கம்யூனிஸ்ட் கட்சி உதய நாளை நினைவுக்கூறுவோம்!


தற்செயல் நிகழ்வாக எனது மிக நெருங்கிய உறவுப் பெண் ஆஷா சிங் பால் பவனில் பணியாற்றி வந்தார். பால் பவன் இயக்குனருடன் எனக்கு நல்லுறவும் இருந்தது. அவரிடம் பேசி, ஆஷாவிடம் ஒரு சாவியைக் கொடுத்து கண்காட்சி அரங்கை பராமரித்து வரச் சொன்னேன். அரசாங்கத்தை அணுகி கண்காட்சியை அரசே ஏற்று நடத்த பேசுவது, அல்லது கண்காட்சியை யாருக்காவது விற்றுவிடுவது என இரு யோசனைகள் இருந்தது. முதல் வாய்ப்பு மிகக் குறைவு எனத் தெரிந்தது. எனவே விற்பதற்கான ஆட்களைத் தேடத் தொடங்கினேன்.

ஆந்திரப் பிரதேச அரசு கண்காட்சியை வாங்கி, ஐதராபாத்தில் அமைக்க முன்வந்தது. கல்வித் துறை அதிகாரிகளும், கல்வி அமைச்சரும் தில்லி சென்று கண்காட்சியைப் பார்த்து மிகவும் திருப்தியுற்று, கட்டாயம் வாங்கிக் கொள்வதாக கூறினர். 6000 சதுர அடிக்கு மேல் மத்திய நூலகத்தில் இடமும் ஏற்பாடு செய்தனர். 1978 ஆகஸ்ட் 7 அன்று ஆந்திர அரசின் முதன்மை நிதித் துறை செயலர் எனது அலுவலகம் வந்து, கண்காட்சியை வாங்கிக் கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது என்றார். அன்றே, இந்திய தேசிய அறிவியல் அகாடமி கவுன்சிலில் என்னை உறுப்பினராக தேர்வு செய்ததைப் பற்றி பாதுகாப்புத் துறை அறிவியல் ஆலோசகர் என்னிடம் நேரில் வந்து தெரிவித்தார். அதே நேரம் தில்லி பால் பவனிலிருந்த உறவுப் பெண் ஆஷா தொலைபேசியில் அழைத்து, கண்காட்சியை மொத்தமாகக் காணோம் என்றார். இடி விழுந்தது போலாயிற்று.

உடனடியாக ஆகஸ்ட் 9ம் தேதியே தில்லி விரைந்து சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பார்த்தேன். யாரும் என்னுடன் முகம் கொடுத்துப் பேசாதது மட்டுமின்றி, குறிப்பாக கண்காட்சி பற்றி வாயே திறக்க மறுத்தனர். அரசாங்கம் மாறியதும் எல்லோரும் மாறி விட்டனர். யார் எடுத்துச் சென்றனர், எங்கே உள்ளது என எதையும் என்னிடமே சொல்ல மறுத்தனர். என்சிஇஆர்டி-யின் புதிய இயக்குனரைச் சந்திக்க முயன்று, அவரைப் பார்க்கவே முடியவில்லை. வேறு வழியின்றி, ஆகஸ்ட் 11ல் தில்லியிலேயே செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினேன். நிறையப் பேர் கலந்து கொண்டனர். அடுத்த இரண்டு நாட்களுக்கு நாட்டின் எல்லா இதழ்களிலும் கண்காட்சி திருடப்பட்டு, காணாமற் போனதுதான் பரபரப்புச் செய்தியாகவும் தலைப்புச் செய்தியாகவும் ஆனது. அலெக்சாண்ட்ரியா நூலகம், வெற்றி பெற்ற ரோமானியர்களால் எரிக்கப்பட்டதுடன் ஒப்பிட்டு செய்திகளை எழுதினார்கள். உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் அறிவியல் கண்காட்சி மறைந்த மாயம் பற்றி விரிவாக எழுதினர். புகழ் பெற்ற அறிவியல் இதழ்களான நேச்சர் (NATURE), சயின்ஸ் (SCIENCE) இதழ்களும் விரிவாகவே எழுதின.

ஜனதா அரசாங்கத்தின் கல்வி அமைச்சர் உத்தரவில், என்சிஇஆர்டி-யின் தூண்டுதலின் பேரில் கண்காட்சி சில மணி நேரங்களில் வாரிச் சுருட்டி, களவாடப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் தான் வாகனங்களில் வந்து வழித்தெடுத்துச் சென்றுள்ளனர். (இன்று சாலைகளில் மனித உயிர்களை படுகொலை செய்யும்) இந்த கொலைகார கும்பல், அறிவியல் உபகரணங்களைப் பற்றி அறிந்திருக்குமா? விலைமதிப்பற்ற வண்ணப் படக்  காட்சிகளைப் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்? முறையாக, விவரம் தெரிந்தோர் இதை எடுப்பது என்றால் கூட இரு வாரங்கள் ஆகும்! இரவு பகல் பாராமல் பரபரப்பாக செய்தால் கூட ஒரு வாரமாவது ஆகும்! சிலமணி நேரங்களில் அப்புறப்படுத்துவது என்றால் அழித்தொழித்து விட்டார்கள் என்றே பொருள்! மின் வயர்கள் மட்டும் பல மைல் நீளம் என்றால் எத்தனை கருவிகள், மின்விளக்குகள் உட்பட மின்சாதனங்கள் எனக் கணக்கிட்டுப் பாருங்கள்!

இந்தக் கண்காட்சி இந்தியாவில் எங்குமே நடக்கக் கூடாது என்றே ஆர்.எஸ்.எஸ். வெறியர்கள் இதைப் பெயர்த்தெடுத்துள்ளனர். (அன்றைய ஜனதா அரசாங்கத்தில் கேபினட் அந்தஸ்தில் ஒரு பிஜேபி அமைச்சர்தான் இருந்தார். இன்றோ அவர்களின் ஆட்சி. அதனால்தான் பயமே இன்றி தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கௌரி லொங்கேஷ் என பகுத்தறிவாளர்களும், அறிவியல் சிந்தனையைப் பரப்புவோரும் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இது மக்களிடம் எதிர்க் கருத்துக்களை உருவாக்கவே, அதிலிருந்து  கற்றுக் கொண்டு, இன்று சுய சிந்தனை உள்ள அறிவுத் துறையினரை நகர்ப்புற நக்சல்கள் என அவதூறு செய்து, சிறையிலிட்டு சித்திரவதை செய்து கொல்கிறார்கள்!) 2500 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டுமிராண்டிக் காலத்திற்கு சமூகத்தை பின்னுக்கு இழுத்துச் செல்ல முனையும் மத அடிப்படைவாதிகள், முன்னோக்கிச் செல்லத் தூண்டும் அறிவியல் கண்காட்சியை அனுமதிப்பார்களா?

கண்காட்சி பற்றி பிரதமர் மொரார்ஜியை செப்டம்பர் 27ல் சந்திக்க முடிந்தது. அவரது அறையில் நுழைந்தபோது வரவேற்கவுமில்லை, அமரச் சொல்லவுமில்லை. கீழே குனிந்து கொண்டிருந்தார். நானே சென்று அவருக்கு முன் உள்ள நாற்காலியில் அமர்ந்து காணாமற் போன கண்காட்சி பற்றிக் கூறினேன். தலையை உயர்த்தாமலே ஏன் முதலிலேயே என்னிடம் கூறவில்லை எனக் கேட்டார். எல்லாப் பத்திரிகைகளிலும் செய்தியாக வந்ததே என்ற போது நான் பத்திரிக்கை படிப்பதில்லை என்றார்! பாராளுமன்றத்திலேயே கடும் விவாதம் நடந்ததே என்றேன். நல்லவேலை பாராளுமன்றமே செல்வதில்லை என்று கூறவில்லை. பின்னர் டாக்டர் மாத்தூர் என்பவர் தலைமையில் ஒருநபர் விசாரனைக் கமிசன் அமைத்தார். அது எதிர்பார்த்தது போலவே அரசாங்கம், என்சிஇஆர்டி இரண்டுக்கும் இதில் (களவாடியதில்) தொடர்பில்லை என நற்சான்று தந்து முடித்துக் கொண்டது.

இந்தியப் பகுத்தறிவாளர் கழகம் ஆந்திர உயர்நீதி மன்றத்தில் ஒரு ரிட் மனுப் போட்டு, அது விசாரணைக்கும் எடுத்துக் கொள்ளப்பட்டது. என்சிஇஆர்டி-யின் நடவடிக்கை இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்ற அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டது. புகழ்பெற்ற மனித உரிமைப் போராளி, வழக்கறிஞர் கண்ணபிரான் அவர்கள் எங்கள் தரப்புக்கு ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் அமர்வில் விசாரிக்கப்பட்டது. ஆயினும் நீதி மட்டும் கிட்டவில்லை. (எப்போது இந்திய நீதிமன்றங்கள் இயற்கை நீதி வழங்கியிருக்கின்றன? நீதி என்பது விதிவிலக்கானதாகி வருகிறது.)

அறிவியல் கண்காட்சி மீண்டும் உயிர்த்தெழுந்தது!

இதற்கிடையே ஆந்திர கல்வித் துறை அதிகாரிகள் மெனக்கெட்டு தில்லி சென்று, பலரிடமும் பேசி, கடைசியில் ஒருவழியாக கண்காட்சியைக் கண்டு பிடித்துவிட்டார்கள்! இவர்களின் இமாலய முயற்சியைப் பாராட்டியே ஆக வேண்டும்! என்சிஇஆர்டி வளாகத்திலேயே, அங்குள்ள ஒரு குடௌனில் குப்பையாக கண்காட்சிப் பொருட்கள் போடப்பட்டிருந்தது. ஆந்திர கல்வித் துறை அதிகாரிகள், என்சிஇஆர்டி அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி, அவர்கள் செலவு செய்த தொகையைத் தந்து கண்காட்சிப் பொருட்கள் அனைத்தையும் 1980ல் எடுத்து வந்தனர். மீண்டும் 2 ஆண்டுகள் வேலை செய்து கண்காட்சி உருவாக்கப்பட்டது. கண்காட்சி காணாமல் போய் ஆந்திர அரசு கண்டு பிடித்து எடுத்த அந்த இடைப்பட்ட காலத்தில் வெளிநாடுகள் பலவும் (ஹாலந்து, அமெரிக்கா போல) அந்தக் கண்காட்சியை தங்கள் நாடுகளுக்கு அனுப்ப இயலுமா என விசாரித்தனர். அந்த அளவு கண்காட்சி பற்றிய செய்தி உலகம் முழுவதும் கல்வித் துறை வட்டாரத்தில் பிரபலமாகி இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை!

மத்தியில் அரசியல் மாற்றம் ஏற்பட்டு, மீண்டும் இந்திரா காந்தி பிரதமர் ஆனார். ஆந்திராவிலோ என்டிஆர் முதல்வராகி விட்டார். இதன் காரணமாக, கண்காட்சி திறப்பு விழா தள்ளித் தள்ளிப் போய் இறுதியில் இந்திரா காந்தி கொல்லப்பட்ட பின்பு 1984 நவம்பர் 12ல் திறக்கப்பட்டது. புகழ் பெற்ற அறிவியலாளர்கள் பலரும் வந்து திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். ஆந்திர முதல்வர் என்டிஆரும் கலந்து கொண்டார். மக்கள் ஆர்வமாக வந்து கண்காட்சியைப் பார்த்து கொண்டாடினர் என்றே சொல்ல வேண்டும். இதை தொடர்ந்து நடத்துவதற்கு மாணவர்கள், அரசு-தனியார் ஊழியர்கள், குடும்பப் பெண்கள் என 700க்கும் மேற்பட்டோர் தன்னார்வலர்களாக தொண்டாற்ற முன்வந்தனர். அவர்களை நேர்காணல் செய்து சில நூறு பேரை தெரிவு செய்து, முறையான பயிற்சி அளித்து பயன்படுத்தினோம். அறிவியல் கண்ணோட்டம் தந்து மக்களை மூட நம்பிக்கைகளிலிருந்து மீட்க வேண்டிய ஆட்சியாளர்களோ, இன்று, பிற்போக்கு சாதி-மத மோதல்களைத் தூண்டி மக்களைக் கூறு போட்டு படுகொலைகளைச் செய்கின்றனர்!


படிக்க : பாசிச எதிர்ப்புப் போராளி நிகோலா வாப்சரோவ்–வை நினைவு கூர்வோம்!


அறிவியல் முறை பற்றிய இந்தக் கண்காட்சியை இந்திய அரசாங்கத்தின் ஃபிலிம்ஸ் டிவிசன் 35mm திரைப்படமாக எடுத்து, 1980களின் இறுதியில் வெளியிடப்பட்டது. அது வீடியோவாகவும் வெளிவந்தது. இதே ஃப்லிம்ஸ் டிவிசன் இக் கண்காட்சியை ஒரு குறும்படமாகவும் எடுத்து வெளியிட்டது. நாடு முழுவதும் 700க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இக் குறும்படம் 1980 களின் இறுதியில் திரையிடப்பட்டது.

***

அறிவியல் கண்ணோட்டத்தை மக்களிடம் உருவாக்க வேண்டும் என 1970களிலேயே போராடிய அறிவியலாளர் புஷ்ப மித்ர பர்கவா போன்றவர்கள் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? 1977 கூட்டணி மந்திரி சபையில் இடம் பெற்ற உடனே பாஜக-வும் ஆர்.எஸ்.எஸ். கும்பலும் தங்களின் இந்துத்துவா அஜண்டாவைத் துவங்கி விட்டனர் என்பது மேற்கூறிய சம்பவத்திலிருந்து தெரிய வருகிறது. இந்த பார்ப்பன பாசிச கும்பல் ஏன் இந்த அளவு வெறி பிடித்து அலைந்தது என்பது பற்றி சயன்ஸ் இதழ் கட்டுரை மூலம் தெரிய வருகிறது. சாய்பாபா போன்ற மோசடி நபர்களை அறிவியல் கண்ணோட்டம் கேள்வி கேட்க வைக்கிறது.

சாமியார்கள், சாதுக்கள், வேதங்கள், ஜோதிடங்கள் எல்லாம் கேள்வி கேட்கக் கூடாதவை என பார்ப்பன பாசிசம் கட்டமைக்கிறது. ஆனால் எதையும் ஏன், எதற்கு, எப்படி என கேள்வி கேட்கச் சொல்கிறது அறிவியல் கண்ணோட்டம். தவிர அறிவியலின் வரலாறு பகுதியில் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் படங்கள் வைத்து அறிவியல் கோட்பாடுகளை சமூக மாற்றங்களுக்கும் பொருளாதார திட்டங்களுக்கும் பயன்படுத்தியவர்கள் என விளக்கப்பட்டிருந்தது என சயன்ஸ் இதழ் கட்டுரை குறிப்பிடுகிறது.

பார்ப்பன பாசிச கும்பல் வெறியாட்டம் போட இவை போதாதா? இந்த பார்ப்பன பாசிச கும்பலை வீழ்த்தி, நாம் என்றைக்கு அரசியல் சட்டம் குறிப்பிடும் அறிவியல் கண்ணோட்டத்தை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்கப் போராடப் போகிறோம்? அந்த நாள் தான் பர்கவா போன்ற அறிவியலாளர்களை உண்மையாக நாம் நினைவு கூறும் நாளாகும்!

(முற்றும்)

(Angel, Devil and Science என்ற புஷ்ப மித்ர பர்கவா எழுதிய புத்தகத்தை தழுவி எழுதிய சுருக்கமான கட்டுரை.)


நாகராசு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க