துவரை கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணம் குறித்து நடக்கும் விசாரணையும், அது குறித்து வெளியிடப்படும் செய்திகளும் குற்றம் சாட்டப்பட்டுள்ள தனியார் பள்ளி முதலாளியின் குடும்பத்தினர் மீது நடப்பதாக ஒரு செய்தியும் வரவில்லை.

ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக தற்போது வெளிவரும் செய்திகள் குறிப்பாக ஒரு செய்தியை நம் எல்லோருக்கும் சுட்டிக் காட்டுகின்றன.

அரசின் ஒவ்வொரு உறுப்புகளும் சக்தி இண்டர்நேசனல் தனியார் பள்ளி முதலாளிக்கு சாதகமாக மிக இயல்பாக செயல்பட்டிருக்கின்றன, செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான செய்தி.

இது ஒருபக்கமிருக்க, தற்போது வருகின்ற தகவல்களின்படி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் ஸ்ரீமதி “அடையாளம் தெரியாத உடல்” (Unidentified body) என்று குறிப்பிடப்பட்டு வைக்கப்பட்டிருந்ததாக தெரிய வருகிறது. இதைவிட வேறென்ன நம்மை இழிவுபடுத்த முடியும்?

பள்ளி நிர்வாகத்தில் இருந்துதான் மருத்துவமனைக்கு ஸ்ரீமதியின் உடலை கொண்டு வந்துள்ளனர். அப்படியென்றால் அனைத்து விபரமும் தெரிந்துதான் இருக்கும். ஆனாலும் “அடையாளம் தெரியாத உடல்” என்று மருத்துவமனை ஆவணத்தில் குறிப்பிட முடிகிறதென்றால் இந்த விசயத்தை முதுகெலும்புள்ள யாராவது அமைதியாக கடந்து செல்ல முடியுமா?


படிக்க : தனியார் கல்விக்கு எதிரான போராட்ட(கள்ளக்குறிச்சி)மாடல் பரவி விடக்கூடாது என்பதே திமுக அரசின் நோக்கம்! | மருது வீடியோ


கல்வி தனியார்மய பயங்கரவாதத்தால் அரசின் துணையோடு பணக் கொழுப்பெடுத்து திரியும் சக்தி இண்டர்நேசனல் போன்ற முதலாளிகளின் லாபம் மட்டுமே புனிதமானது. அவர்களின் லாபத்தின் முன் நம் வீட்டுப் பிள்ளைகளின் உயிரெல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்பதுதானே மருத்துவமனை ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைக்கு பொருள்.

போலீசால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டார்கள் சாத்தான்குளம் ஜெயராஜும், பென்னிக்ஸும். சிறைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட அவர்களின் உடல்நிலை குறித்த சான்றிதழில் இருவரும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று போலீசுக்கு சாதகமாக குறிப்பிட்டு மருத்துவர்களே கொலைக்கு துணை போனார்களே, அந்த சம்பவம் நம் நினைவை விட்டு இன்னும் அகலவில்லை.

அரசின் உறுப்புகள் ஒன்றுக்கொன்று இணைந்து உழைக்கும் மக்கள் மீது தொடர்ந்து நடத்திக் கொண்டே இருக்கும் இந்தக் கொடூரத்திற்கும் “அடையாளம் தெரியாத உடல்” என்று ஸ்ரீமதியின் உடலுக்கு கொடுக்கப்பட்ட கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையின் குறிப்புக்கும் ஏதேனும் வேறுபாடு இருக்கிறதா?

தொழிலாளி வர்க்கம் இந்தப் பிரச்சினையில் இருந்து ஒதுங்கியிருக்க முடியுமா? ஓ, தொழிலாளி வர்க்கமே! நீயும், ஸ்ரீமதியும் வேறுவேறா? யோசித்துப் பார்! நம் வர்க்கத்துப் பிள்ளை என்பதால்தானே அவளுக்கு இந்தக் கதி! நாளை நாமும் ”அடையாளம் தெரியாத உடல்கள்தானே!” அப்படித்தானே முதலாளிகளும், அரசும் நம்மைக் கருதுகின்றனர்.

முதலாளித்துவப் பயங்கரவாதம் ஒவ்வொரு ஆலையிலும், ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் தொழிலாளி வர்க்கத்தின் மீது ஏவும் கொடூரங்களை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். கொரோனா காலகட்டத்தில் பாசிசக் கோமாளியின் முட்டாள்தனமான நடவடிக்கையால் சொந்த ஊர்களை நோக்கி அநாதைகளைப் போல விரட்டப்பட்ட தொழிலாளிகள் இரயில்களில் அடிபட்டு உடல் சிதைந்தும், பசியினாலும் மடிந்தார்களே, அப்போது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பெயர் என்ன தெரியுமா? “அடையாளம் தெரியாத உடல்கள்” என்பதுதான்.

முதலாளிகளின் கொள்ளை லாபத்திற்காக எந்தப் பணிப் பாதுகாப்புமின்றி, எந்த உத்தரவாதமுமின்றி பாய்லர்களில் விழுந்து உருக்குலைந்த தொழிலாளிகளின் உடல்களுக்கு கொடுக்கும் பெயர் என்ன? இன்று ஸ்ரீமதிக்கு என்ன பெயர் கொடுத்தார்களோ அதேதான்.

ஒவ்வொரு நாளும் நாடெங்கும் ஆலைகளிலும், சுரங்கங்களிலும், முதலாளி வர்க்கத்தின் ஏவல்நாயான அரசின் பயங்கரவாதத்தாலும், முதலாளித்துவம் உருவாக்கும் பசியாலும், பட்டினியாலும், வேலையின்மையாலும் உழைக்கும் வர்க்கத்தின் ”அடையாளம் தெரியாத உடல்கள்” உருவாகிக் கொண்டே இருக்கின்றன. கேட்பாரற்று அநாதையாக மண்ணுக்குள் செல்கின்றன.

முதலாளித்துவப் பயங்கரவாதமோ ”உயிருள்ள லாபத்தை” நம் உடலில் இருந்து எடுத்துக் கொண்டு தன்னை யாரும் அசைக்க முடியாதென்று கொக்கரிக்கிறது.

இன்று தொழிலாளர் நலச் சட்டத்தை திருத்தி, எவ்வித உரிமைகளுமற்ற அடிமைகளாக நம்மை மாற்றி நம்மீது மிகப் பெரிய பயங்கரத்தை ஏவக் காத்திருக்கும் இந்த முதலாளித்துவப் பயங்கரவாதிகளுக்கு நாம் உயிரோடிருக்கும்போதே ”அடையாளம் தெரியாத உடல்கள்” தானே. நம் உழைப்பைச் சுரண்டிக் கொள்வதைத் தவிர வேறெதைப் பற்றியும் எக்காலத்திலும் அவர்கள் கவலைப்படப் பட்டதுமில்லை, கவலைப்படப் போவதுமில்லை.


படிக்க : கள்ளக்குறிச்சியில் போராடியவர்கள் மீதான ஒடுக்குமுறை: உ.பி.யோகிக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை! | மருது வீடியோ


ஸ்ரீமதிக்காக தொழிலாளி வர்க்கம் தனது குரலை உயர்த்த வேண்டும். அவ்வாறு உயர்த்துவது தனக்காகவும்தான் என்பதை உணர வேண்டும்.

நாம் அடையாளம் தெரியாத உடல்கள் அல்ல. நமக்கென்று ”வர்க்கம்” என்ற அடையாளம் உள்ளது. அந்த வர்க்கத் திமிர் மட்டும்தான் முதலாளித்துவப் பயங்கரவாதத்தை அச்சுறுத்தும். முதலாளித்துவச் சுரண்டலை அடியோடு வீழ்த்தும்.

முதலாளித்துவச் சுரண்டலை அடியோடு வீழ்த்துவது மட்டும்தான் ஸ்ரீமதி என்ற நம் வீட்டுப் பிள்ளைக்கு நேர்ந்த துயரம் மற்ற பிள்ளைகளுக்கும் நேராமல் நிரந்தரமாக தடுக்கும்.

இனியன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க