பழங்குடியினப் பெண்ணான திரௌபதி முர்முவை ஆதரிக்காமல் உயர்சாதியைச் சேர்ந்த சின்ஹாவை ஆதரிப்பதுதான் சமூக நீதியா என்று பா.ஜ.க. அண்ணாமலை முதல் எடப்பாடி பழனிச்சாமி, பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ் வரையிலான ‘புதிய சமூகநீதியின்’ திருமுகங்கள் கொப்பளித்தன.
மகாராஷ்டிரத்தில் ஏக்நாத் ஷிண்டே மூலம் சிவசேனாவை உடைத்து ஆட்சியைக் கலைத்த பா.ஜ.க.வின் வேட்பாளருக்கு உத்தவ் தாக்கரே ஆதரவு தெரிவித்தார். இதுவரை மோடியை கடுமையாக விமர்சித்து வந்த சந்திரபாபு நாயுடுவும் முர்முவை ஆதரித்திருக்கிறார். இவர்கள் தவிர அசாம் மாநிலம் உட்பட சில மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் முர்முவுக்கு ஆதரவாக வாக்களித்து இருக்கின்றனர்.
பழங்குடியின பெண் வேட்பாளரை ஆதரிக்காமல் போனால், பழங்குடிகள் மத்தியில் தங்கள் வாக்கு வங்கிகளை இழந்துவிடுவோம் என்று அஞ்சிய எதிர்க்கட்சிகளில் ஒரு பிரிவினர் முர்முவை ஆதரித்தார்கள், மற்றொரு பிரிவினர் முர்முவை எதிர்க்கவில்லை.
எனவே முர்மு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வென்றார். குடியரசுத் தலைவராகும் முதல் பழங்குடியினப் பெண், இளம் வயது குடியரசுத்தலைவர், குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்கும் இரண்டாவது பெண் ஆகிய பெருமைகள் வழிய பதவியேற்றுக்கொண்டார்.
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிசக் கும்பல் குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் யாரை நிறுத்தும் என்ற ஊகங்கள் முன்னரே கிளம்பி இருந்தன. வெங்கையா நாயுடுவை குடியரசுத்தலைவர் வேட்பாளராக நிறுத்துவதன் மூலம் தென்மாநிலங்களில் தன்னுடைய பலத்தைப் பெருக்கிக்கொள்ளும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 100 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்திருக்கும் இந்துத்துவ பாசிச இயக்கத்தின் ஒவ்வொரு நகர்வும் எங்கே அடித்தால் சரியாக விழுமோ அதை நோக்கியே இருப்பது போல இப்போதும் இருந்திருக்கிறது.
***
ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டம், உபர்பேடா என்ற மிகவும் பின்தங்கிய கிராமத்தில் பிறந்த முர்மு, இக்கிராமத்தில் இருந்து கல்லூரி சென்ற முதல் பட்டதாரி ஆவார். ஆசிரியர்; 1997-ம் ஆண்டு கவுன்சிலர்; 2000, 2004-ம் ஆண்டுகளில் இருமுறை சட்டமன்ற உறுப்பினர்; பிஜூ ஜனதா தளம் – பா.ஜ.க. ஆட்சியில் அமைச்சர், ஜார்கண்ட் மாநில ஆளுநர் எல்லாவற்றையும் தாண்டி பா.ஜ.க.வின் பழங்குடியின பிரிவு தலைவராகவும் இருந்தவர் திரௌபதி முர்மு.
இவர் ஜார்கண்ட் மாநில ஆளுநராக பதவி வகித்த (2015 – 2021) காலத்தில், பழங்குடி இன மக்களின் மீது மத்திய – மாநில அரசுகள் நடத்திய அரசு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு வழிகாட்டியாக இருந்தார். குறிப்பாக, 2018-ல் பலாமு புலிகள் சரணாலயம் அமைந்திருக்கும் பகுதியில் புலிகள் மற்றும் விலங்குகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற காரணத்தை வைத்துக்கொண்டு எட்டு பழங்குடி கிராமங்களை காலி செய்ய வேண்டும் என்று அரசு கூறியபோது பழங்குடியினப் பெண்ணான முர்மு ஏழை பழங்குடியினருக்கு ஆதரவாக இருந்தாரா என்ன?
படிக்க : இஷ்ரத் ஜஹான் போலி மோதல் கொலை : மோடியின் கூட்டாளி முர்முவுக்கு கவர்னர் பதவி !
பாரம்பரியமாக வாழ்ந்த நிலத்தை விட்டுச் செல்லும் மக்களுக்கு 10 லட்ச ரூபாய் அல்லது 5 ஏக்கர் நிலம் என்று பரிந்துரைத்தாலும், ஜார்க்கண்ட் அரசிடம் நிலம் இல்லாததால் 10 லட்ச ரூபாயை வீசியெறிவோம் எடுத்துக்கொண்டு ஓடிப்போய்விடு என்று உத்தரவிட்ட மாநில அரசின் ஆளுநராக இருந்தவர் அவர் என்பதை கணக்கில் கொள்ள வேண்டும்.
2019-ல் பழங்குடிகளின் நிலத்திலிருந்து விரட்டும் ஒன்றிய அரசுக்கு எதிராக, அரசியலமைப்பு சட்டத்தில் பழங்குடிகளின் நில உரிமையை வலியுறுத்தும் பிரிவுகளை ஒவ்வொரு கிராமத்திலும் நடுகல்லாகச் செதுக்கிவைத்து தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்தனர் ஜார்கண்ட் பழங்குடிகள். மாபெரும் பதல்காடி இயக்கம் என்றழைக்கப்படும் இப்போராட்டத்தை ஒடுக்க 10,000 பழங்குடியினர் மீது தேசத்துரோக வழக்குகளை மாநில அரசு பதிவு செய்தபோதும் அம்மாநில ஆளுநராக தொடர்ந்தவர் முர்மு.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள லட்சக்கணக்கான பழங்குடி மக்களின் நிலம் கனிம வளமிக்கது. அந்த கனிமவளங்களை அதானி போன்ற கார்ப்பரேட்டுக்கு வாரிக்கொடுத்து விடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் ஒன்றிய – மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. பழங்குடி மக்களிடமிருந்து நில உரிமையைப் பறிக்க முயன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக பிரிட்டிஷ் ஆட்சி காலம் முதலே வீரஞ்செறிந்துப் போராடி வருபவர்கள் பழங்குடிகள். அம்மக்களின் கோரிக்கைக்காக தோள் கொடுத்துப் போராடிவரும் மாவோயிசப் போராளிகளை ஒடுக்குவது என்ற பெயரில் கொல்லப்பட்ட, சித்திரவதை செய்யப்பட்ட பழங்குடியின மக்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது.
நில உரிமையிலும் சுயமரியாதையிலுமே பழங்குடி மக்களின் கவுரவம் இருக்கிறது. முர்மு குடியரசுத் தலைவரானதில் இல்லை. சொல்லப்போனால் தங்களின் நில உரிமையை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் பணியை – கார்ப்பரேட் அடியாள் வேலையைத் திறம்பட மேற்கொண்ட முர்முவுக்கு கிடைத்ததே இப்பதவி.
***
இளையராஜாவின் இசையை ரசிக்காதவர் யாருமுண்டோ எனும் அளவுக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலும் பிரபலமானவர் அவர். கடந்த மாதம் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டுப்பேசினார். அதற்கெதிராக கடும் கண்டனங்கள் எழுந்த நிலையிலும் தன்னுடைய கருத்தை வாபஸ் பெற முடியாது என்று உறுதியாக இருந்தார். இளையராஜாவின் பிற்போக்குத்தனமான அரசியலைப் புறந்தள்ளி அவரது இசைக்கு அடிமைகளாக இருந்தவர்கள் கூட அவருக்கு எதிராக கருத்து சொல்ல ஆரம்பித்து விட்டனர்.
இளையராஜா தலித் என்பதால் அவரை விமர்சனம் செய்கிறார்கள் என்று சிலர் தங்கள் அடையாள அரசியலின் இழிநிலையை வெளிப்படுத்திக்கொண்டனர். இளையராஜாவுக்கு பம்பர் பிரைஸ் (Bumper Prize) கிடைக்கும் என எதிர்பார்த்தபடியே இம்மாதம் மாநிலங்களவை எம்.பி. பதவியை பா.ஜ.க. அளித்துள்ளது.
இளையராஜாவின் இசை அறிவுக்கு அடிப்படையே இந்த நாட்டின் உழைக்கும் மக்கள்தான். அவரது அண்ணன் பாவலர் தன் தம்பிகளுடன் கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளிலும் பல கிராமங்களுக்குச் சென்று பெற்ற அறிவு அது. ஆனால் அந்த இசை அறிவுக்கு தனக்கு மட்டுமே சொந்தம் என்றும் கடவுள் தனக்கு அளித்த வரம் என்று பிதற்றிக்கொண்டு இருக்கும் ‘ஞானி’ அவர்.
தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்திருந்தாலும், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான பார்ப்பனீய தீண்டாமைக்கெதிராகவும் ஆதிக்க சாதியினரின் வன்முறைக்கு எதிராகவும் சிறு துரும்பையும் கிள்ளிப்போடாதவர். திண்ணியத்தில் தாழ்த்தப்பட்டவரின் வாயில் மலத்தைத் திணித்த போதும், கொடியங்குளத்தில் வீடுகள் சூறையாடப்பட்ட போதும், மாஞ்சோலையில் தாமிரபரணியில் தள்ளிவிடப்பட்டு ஆற்றிலேயே அடித்துக் கொல்லப்பட்டபோதும் என்ன செய்தார் இளையராஜா? ஆதிக்க சாதிகளின் அடக்குமுறைக்கு எதிராக ஏன் பேச மறுத்தார் என்பதில்தான் இளையராஜாவின் பார்ப்பனீய அடிமைத்தனம் இருக்கிறது.
படிக்க : ஒடிசா : ஜிண்டால் எஃகு ஆலைக்கு எதிராக போராடும் பழங்குடி மக்கள் – அடக்குமுறைகளை ஏவும் பாசிச அரசு !
ஜெயராஜ் – பென்னிக்ஸ் காவல் படுகொலை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு போன்ற அரச வன்முறைக்கு எதிராக வாய்திறக்காமல் அமைதியாக இருந்த இசைஞானிக்குத்தான் கோடிக்கணக்கானோர் ரசிகர்கள் என்பது தமிழகத்தின் இழிநிலை.
தன்னை தலித் என்று யாராவது கூறினால் கடுமையாக எதிர்க்கும் இளையராஜா, திருவண்ணாமலை கோயிலுக்கு கோபுரம் கட்டுவதற்கு சில இலட்சங்களைக் கொடுத்தார். ஆனால் அக்கோயில் கும்பாபிஷேகத்துக்கூட வரக்கூடாது என்று பார்ப்பனர்கள் இட்ட கட்டளையை சிரமேற்கொண்டு செய்து முடித்தார். மனமுருகத் திருவாசகத்திற்கு இசையமைத்த ராஜாவுக்கு, திருவாசகத்தைப் பாட அடிபட்டு, உதைபட்டுப் போராடி இறந்த போன ஆறுமுகசாமியைப் பற்றி தெரியாமலிருந்திருக்குமா என்ன?
எல்லா நிகழ்வுகளுக்கு ஒருவர் பதில் சொல்லித்தான் ஆகவேண்டுமா? கருத்துச் சொல்லாதவர்கள் எல்லாம் குற்றவாளியா? என்று யாரும் எதிர் கேள்வி கேட்கலாம். ஆனால் நமது கேள்வி என்னவென்றால், எதற்கும் வாய்திறக்காத இளையராஜாவுக்கு மோடியோடு அம்பேத்கரை இணைத்துப் பேசமட்டும் எப்படி வாய்வருகிறது என்பதுதான். மேலும் இளையராஜாவின் மகனான யுவன்சங்கர் ராஜா இசுலாமியராக மாறியபோது, அது தனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்தாரே, அதுவே அவர் யாருக்காக சிந்தித்தார் என்பதைக் கூறும்.
***
தாழ்த்தப்பட்ட, பழங்குடி, சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களில் எவர் ஒருவர் அம்மக்களுக்கு எதிராகவே காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு அடியாள் வேலை பார்க்கிறாரோ, எந்த அளவு அம்மக்களுக்கு துரோகம் செய்கிறாரோ, அந்த அளவுக்கு பதவிகளையும் வெகுமானங்களையும் பா.ஜ.க. அள்ளி வீசும். அப்படித்தான் அர்ஜுன் சம்பத், கிருஷ்ணசாமி, எல்.முருகன், முக்தர் அப்பாஸ் நக்வி ஆகியோர் வெகுமதிகளையும் பதவிகளையும் பெற்றிருக்கின்றனர்.
குஜராத் கலவரத்துக்குப் பின்னர் உலக அளவில் இந்தியாவுக்கு ஏற்பட்ட தலைகுனிவை சரிக்கட்ட அப்துல்கலாம் பா.ஜ.க.வால் குடியரசுத் தலைவராக்கப்பட்டார். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த, பா.ஜ.க.வின் நடவடிக்கைகளை எதிர்த்த கே.ஆர்.நாராயணனுக்கு எதிராக கலாம் நிறுத்தப்பட்டார். குஜராத் உள்ளிட்ட பல பகுதிகளில் நடத்தப்பட்ட முசுலீம் மக்களின் படுகொலைகளை மூடி மறைத்து இசுலாமியரின் ரத்தக்கவுச்சியை நுகர்ந்தபடிதான் குடியரசுத் தலைவர் ஆகமுடியும் என்ற உண்மையை நன்கு அறிந்தவர் கலாம்.
அவர் இறந்த பின்னர் “ஒரு கையில் கீதையும் மறுகையில் ஏவுகணையும் வைத்திருந்தவர்” என்று ஆர்.எஸ்.எஸ். ஊடகத்தால் பாராட்டப்பட்டவர். தன்னுடைய பிழைப்பிற்காக எதையும் எப்போதும் செய்யத்துணிந்தவராக இருந்ததால்தான் அவரால் குடியரசுத்தலைவராக முடிந்தது. அந்த துரோக வரிசையில் தற்போது திரௌபதி முர்முவும் இளையராஜாவும்!
மருது
These people NAVEENA-SIRANJEEVI HANUMANS