30.08.2022

கள்ளக்குறிச்சி; குற்றம்சாட்டப்பட்டவர்கள் பிணையில் விடுதலை!
போராடியவர்களுக்கு குண்டாஸ்!

மக்கள் அதிகாரம் கண்டனம்!
பத்திரிகை செய்தி

டந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிணை வழங்கியது. அவ்வாறு வழங்கப்பட்ட பிணைக்கான விரிவான உத்தரவு, நேற்றைய தினம் 29.08.2022 அன்று வெளியாகி உள்ளது.

ஒரு வழக்கில் புலன் விசாரணை நடைபெற்று முடிவதற்கு முன்னரே -குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்னரே- அவ்வழக்கு தொடர்பாக நீதிமன்றம் தெரிவிக்கும் கருத்துக்கள், குற்ற புலன் விசாரணையையும் நீதிமன்ற விசாரணையையும் பாதிக்கும் என்று உயர்நீதிமன்றம் அறியாத ஒன்று அல்ல. சட்டப்படியும் நியாயப்படியும் நீதிமன்றங்கள் செயல்பட வேண்டிய அவசியமில்லை என்பதை நீதிமன்றங்கள் தங்களுடைய பல்வேறு பரிபாலனங்கள் மூலம் நிரூபித்து வருகின்ற காலகட்டம் இது.

தமிழகமே ஸ்ரீமதியின் மர்ம மரணத்திற்கும் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியின் அராஜகத்துக்கும் எதிராக ஓரணியில் நிற்கின்ற இவ்வேளையில், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாகவும் பிணை உத்தரவில் குறிப்பான சில கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

படிக்க : கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளி நிர்வாகம் ஓர் குற்ற கும்பல் | தோழர் அமிர்தா வீடியோ

நன்றாக படிக்க வேண்டும், சிறப்பாக படிக்க வேண்டும் என்றதற்காகவே ஆசிரியர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது துரதிருஷ்டவசமானது; வேதனையானது. ஸ்ரீமதியின் மரணம் என்பது கொலையோ, பாலியல் பலாத்காரமோ அல்ல; ஸ்ரீமதியை தற்கொலைக்கு  தூண்டியதற்கும் சம்பந்தப்பட்ட இவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் கேட்டது பிணை. ஆனால் நீதிமன்றம் அவர்களுக்கு வழங்கி இருப்பது விடுதலை. நீதிமன்றம் தெரிவித்துள்ள இந்த கருத்துக்களிலிருந்து குற்றம்சாட்டப்பட்டவர்கள், முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உருவாகி உள்ளன.

கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஸ்ரீமதியின் தாய் செல்வியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “குற்றவாளிகளை நிச்சயம் தண்டிப்போம்” என்று தெரிவித்தார். இப்பொழுது யார் குற்றவாளி என்பதை எப்படி கண்டுபிடிக்க முடியும். பள்ளி நிர்வாகத்துக்கும் மாணவி இறப்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று நீதிமன்றம் கூறிவிட்டது. ஆகவே குற்றவாளி யாராக இருக்க முடியும்; ஸ்ரீமதி அல்லது ஸ்ரீமதி பெற்றோராக மட்டுமே இருக்க முடியும். ஏனென்றால் அவர்கள்தான் தன் பிள்ளையை அங்கே படிக்க வைத்தார்கள். மற்ற குழந்தைகள் தற்கொலை செய்யாதபோது உன் குழந்தை மட்டும் ஏன் தற்கொலை செய்து கொண்டது என்ற கேள்வியை வைத்து அவர்கள்தான் குற்றவாளிகள் என்றும் நாளை தீர்ப்பும் வெளியாகலாம்.

இதேவேளையில் நேற்றைய தினம்(29.8.22), கடந்த ஜூலை 17 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது மாடுகளை திருடியதாகவும் பள்ளியை சேதப்படுத்தியதாகவும் கூறி 3 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்  போடப்பட்டுள்ளது.

ஸ்ரீமதி படிப்பு சுமை தாங்காமல் தற்கொலை செய்துகொண்டு இறந்து போனார், பள்ளியை திட்டமிட்டு கலவரக்காரர்கள் தாக்கினார்கள் என்று இந்த அரசு நடத்திவரும் நாடகத்தின் இன்னொரு பகுதியே இந்தப் பிணை உத்தரவு.

பள்ளி நிர்வாகிகள் மீது காட்டப்பட்ட எவ்வித கரிசனையும் போராடிய மக்கள் மீது துளியும் காட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு ஆர்.எஸ்.எஸ் பின்புலம் உள்ள பள்ளி, தனியார்மயக் கல்விக் கொள்ளையை தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக நடத்தி வந்த பள்ளி, இந்த பள்ளியில் 7 பேர் இதுவரை மர்மமான முறையில் இறந்து போயிருக்கிறார்கள். 2007 ஆம் ஆண்டு எம்.எஸ் பிரகாஷ் என்று ஒரு மாணவன் மர்மமான முறையில் இறந்து போனது தொடர்பான வழக்கு இப்போது வரை விசாரணைக்கு வரவில்லை. அந்த வகையில் இந்த பள்ளி ஒரு தொடர் முறை குற்றவாளி என்பதை பற்றி எல்லாம் எவ்வித பரிசீலனையும் இன்றி, பிணை உத்தரவில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

படிக்க : கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: ஆதாரங்களை மறைத்தது அயோக்கியத்தனம் | தோழர் அமிர்தா வீடியோ

பல்வேறு மக்கள் பிரச்சினைகளிலும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களிலும் மக்களுக்கு எதிராகவே நீதிமன்றம் உள்ளிட்ட அரசின் அனைத்து உறுப்புகளும் செயல்பட்டிருக்கின்றன. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஆணையம் அமைத்தது, ஜெயராஜ் கொலை வழக்ககில் குற்றவாளிகள் சிறையில் இருப்பது போன்றவை அரிதினும் அரிதே. அதற்கான காரணம் என்பது இந்த அரசும் நீதிமன்றமும் அல்ல. மாறாக மக்களின் கொந்தளிப்பான உணர்வும் அவர்களின் போராட்ட வழிமுறைகளும் மட்டுமே.

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்பது அரசின் அரசியல் பொருளாதார சமூக கொள்கை. ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யின் இந்துராஷ்டிர கனவை நிறைவேற்றுவது என்பதும் அரசின் இன்னொரு முக்கியமான கொள்கை. இந்த கொள்கைகளுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய எவ்விதமான அணுகுமுறையையும் எவ்விதமான தீர்ப்பையும் இந்த அரசு ஒருபோதும் கொடுக்காது. ஸ்ரீமதி மர்ம மரணம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை இது.

தொடர்ச்சியாக பல்வேறு பாசிச நடவடிக்கைகளை நீதிமன்றத்தின் வாயிலாகவே இந்த அரசு நிறைவேற்றி வருகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

மக்கள் பிரச்சினைகளிலும் எந்தளவுக்கு நாம் தலையிட்டு போர்க்குணமாக மக்களைத் திரட்டி போராடுகின்றோமோ அந்தளவுக்கு மட்டுமே நீதி கிடைக்கும் என்பதை மீண்டும் மீண்டும் கீழ் வெண்மணி முதல் ஸ்ரீமதி வரையிலான வழக்கின் தீர்ப்புகள் நமக்கு தெரிவிக்கின்றன.


தோழமையுடன்,
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு-புதுவை.
99623 66321.