26.09.2022

தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்றத்துடிக்கும்
பாசிச ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யை எதிர்கொள்வோம் ! முறியடிப்போம் !

பத்திரிகை செய்தி

டந்த சில தினங்களுக்கு முன் பி.ஜே.பி.யின் தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா தமிழ்நாடு வந்த நாள் முதல் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, பி.ஜே.பி பாசிச சக்திகளின் வீடுகள், அலுவலகங்கள் என சில இடங்களில் பெரிதும் சேதமுறாத வகையில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.

இதைக் காரணமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் உள்ள இசுலாமியர்கள் குறிப்பாக எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாக கூறப்பட்ட உடனேயே கோவையில் அதிரடிப்படை போலீசு உள்ளிட்ட 3000 பேர் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டைகள் தீவிரப்படுத்தப் படுகின்றன.

இப்பிரச்சினை தொடர்பாக இந்து மற்றும் இசுலாமிய தலைவர்களிடம்  பேசிக் கொண்டிருப்பதாகவும் சமுதாய நல்லிணக்கக் கூட்டங்கள் நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.

இப்பிரச்சினை தொடர்பாக 250 பேரிடம் விசாரணை செய்வதாகவும் நேற்று மாலைக்குள் (25.09.2022) குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார். அவர் கூறியபடியே  கோவையில் பெட்ரோல் குண்டு வீசியதாக இருவரும் சேலத்தில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கண்ட நான்கு பேருமே எஸ்.டி.பி.ஐ அமைப்பின் நிர்வாகிகள்.

ஆர்.எஸ்.எஸ், பிஜேபி, இந்து முன்னணி ஆகியோரது வீடுகளில் முசுலீம்கள்தான் பெட்ரோல் குண்டு வீசியிருப்பார்கள் என்று முன் முடிவின் அடிப்படையில் தொடங்கிய திட்டம் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. கோவை, ராமநாதபுரம், சேலம், மதுரை என தமிழ்நாடு முழுவதுமே எஸ்.டி.பி.ஐ கட்சியினர், இசுலாமியர்கள் கைது செய்யப்பட்டும் போலீசால் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டும் வருகின்றனர்.

படிக்க : தமிழகத்தை குஜராத்தாக மாற்ற துடிக்கும் காவி பாசிஸ்டுகளை முறியடிப்போம்! புமாஇமு கண்டன அறிக்கை!

ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, இந்து முன்னணி போன்ற பாசிஸ்டுகள் சுய விளம்பரத்துக்காக பெட்ரோல் குண்டுகளை தனக்குத்தானே வீசிக்கொண்டு பலமுறை அம்பலப்பட்டு இருக்கிறார்கள். இந்த கோணத்தின் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, இந்து முன்னணியைச் சேர்ந்த எத்தனை பேரிடம் போலீசு விசாரணை செய்தது?

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களையும் எஸ்.டி.பி.ஐ மீது என்.ஐ.ஏ நடத்திய சோதனைகளையும் இணைத்து டிஜிபி சைலேந்திரபாபுவால் அளிக்கப்பட்ட அறிக்கையே ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, இந்து முன்னணி பாசிச திட்டத்துக்கு ஆதரவாக இருக்கின்றது.

“தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், பா.ஜ.க நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் ஒன்றும் இயேசு அல்ல ஓரளவுக்குத்தான் அமைதி காப்போம். பா.ஜ.க தொண்டர்கள் களத்திற்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று மிரட்டுகிறார் பி.ஜே.பி.யின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை.

பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் அறிக்கை கேட்டுள்ளோம் என்கிறார் ஒன்றிய இணையமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும் அது குறித்து இன்று (26.09.2022) உளவாளி ஆர்.என்.ரவி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதே நேரத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்ய ஒன்றிய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது என்பது தலைப்புச் செய்திகளில்  இடம்பெறுகின்றது. இவை அனைத்தும் எதேச்சையானவை அல்ல; மாறாக திட்டமிட்ட நோக்கத்தின் அடிப்படையில் நடைபெற்றே வருகின்றன.

காந்தியை கொன்ற ஆர்.எஸ்.எஸ் கோட்ஸே, காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதி தமிழ்நாட்டில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததும் தற்போதைய நடவடிக்கைகளும் வேறுவேறல்ல.

***

இப்பிரச்சினை தொடர்பாக இந்து – இசுலாமியர்கள் மத்தியில் மத நல்லிணக்கக் கூட்டம் நடத்துவதாக கோவை ஆட்சியர் சமீரன் அறிவித்து இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. பெரும் சேதமுறாத பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட விவகாரம் என்பதை இந்து மற்றும்  இசுலாமிய மக்களுக்கிடையிலான பிரச்சினையாக மாற்ற முனைகிறார் மாவட்ட கலெக்டர். பெட்ரோல் குண்டு வீசியது இசுலாமியர்கள்தான் அவர்களுக்கு ஆதரவாக இசுலாமிய மக்கள் இருக்கிறார்கள் என்ற தோற்றத்தையே இது உருவாக்குகிறது.

பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார் என்பதே இதுவரை முடிவாகாத நிலையில்  திட்டமிட்டு இசுலாமியர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்து ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, இந்து முன்னணி போன்ற பாசிஸ்டுகளின் திட்டத்தை நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டு வந்தது தமிழ்நாடு போலீசு.

எங்கள் கட்சியினர் மீது பெட்ரோல் குண்டு வீசியது எஸ்.டி.பி.ஐ.தான் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை சொல்வதை வைத்துக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் போலீசு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.

சேலத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று போலீசு நிலையத்தில் முறையிட்ட எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகளை போலீசு கைது செய்திருக்கிறது.

கோவையில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட போலீசை குவிப்பதன் நோக்கம் என்ன? ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, இந்து முன்னணி போன்ற பாசிஸ்டுகள் கோவை உள்ளிட்ட இடங்களில் கலவரங்களை மேற்கொள்வதற்கு தயாராக இருப்பதையும் அதற்கு தடையாக எஸ்.டி.பி.ஐ போன்ற அமைப்பினர் இருப்பார்கள். ஆகவே அவர்களை ஒடுக்கி அரசியலில் இருந்து அகற்றுவது என்ற நோக்கத்திற்காகவே என்.ஐ.ஏ சோதனை முதல் அக்கட்சி நிர்வாகிகள் கைது வரையிலான சம்பவங்கள் நிகழ்த்தப்படுகின்றன.

ஆர்.எஸ்.எஸ் – தமிழ்நாடு போலீசின் கூட்டு நடவடிக்கைகளை 1998 கோவை குண்டு வெடிப்பு கலவரத்தின் போதே நாம் கண்டோம். மாமூல் பிரச்சினையில் கொல்லப்பட்ட போலீசின் பிணத்தை வைத்துக்கொண்டு போலீசும் ஆர்.எஸ்.எஸ்-ம் இசுலாமியர்களை குறிவைத்து தாக்கியதையும் அப்போது தமிழ்நாடு போலீசும் ஆர்.எஸ்.எஸ்-ம் இசுலாமியர்களை வேட்டையாடியதையும் யாரும் மறந்துவிடப் போவதில்லை.

“தமிழ்நாட்டில் தேசத்திற்கு எதிரான சக்திகள் அனைவரையும் கட்டுக்குள் கொண்டுவர வெறும் அரை மணி நேரம் போதும். அடுத்த இரண்டு நாள் பார்ப்போம் போலீசுத்துறையின் நடவடிக்கைகளைப் பார்த்துவிட்டு எங்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை அறிவிப்போம்” என்று கலவரம் செய்வதற்கு தயாராக இருக்கிறோம் என்று மிரட்டல் விடுத்த அண்ணாமலை இதுவரை கைது செய்யப்படவில்லை.

போலீசு பாதுகாப்புடன் தமிழ்நாட்டில் இசுலாமியர்கள் மீது கலவரம் நடத்துவதற்கான அனைத்துவித ஏற்பாட்டையும் ஆர்.எஸ்.எஸ், பிஜேபி செய்துவிட்டதையே அறிய முடிகிறது. அதற்கு தோதாக தமிழ்நாடு போலிசுத்துறை செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.

இசுலாமியர்கள் மீது திட்டமிட்டு தாக்குதலை ஏற்படுத்தி அதன்மூலம் கோவை போன்ற பகுதிகளில் தனது செல்வாக்கை மீண்டும் நிலை நிறுத்த முடியும். இதை சாக்காக வைத்து திமுக ஆட்சியை கலைத்து தனது சொர்க்கத்தை மீட்டுவிட முடியும். கலவரம் நடைபெறவில்லை என்றாலும் இதை சாக்காக வைத்துக்கொண்டு ஆட்சியை கலைத்துவிடுவோம் என்று மிரட்டல் விடுத்தபடி இசுலாமிய, புரட்சிகர அமைப்புகளை கட்சிகளை தடை செய்ய வைப்பதும் அக்கட்சியினரை கைது செய்ய வைப்பதும் அதன் மூலம் எதிர்காலத்தில் நிகழ்த்தப்போகும் கலவரங்களுக்கு முன்தயாரிப்பு வேலை செய்ய முடியும். கலவரம் நடந்தாலும் நடக்காவிட்டாலும் வெற்றி ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி பாசிஸ்டுகளுக்கே.

நடப்பதோ திராவிட மாடல் ஆட்சி, இந்த ஆட்சியில் நாம் நடத்தும் போராட்டங்கள் அனைத்துமே திராவிட ஆட்சிக்கு எதிரானதாக மாறிவிடுமே என்று பலரும் எண்ணுகின்றனர். உலக அளவில் இருந்த பாசிச நிறுவனங்களிலேயே ஆர்.எஸ்.எஸ் என்பது மட்டும்தான் 100 ஆண்டுகள் அனுபவம் பெற்றது.

கடந்து நூறு ஆண்டுகளில் உலகில் உள்ள பல்வேறு பாசிச நிறுவனக்களின் அனுபவம் படிப்பினைகளை எடுத்துக்கொண்டு, இந்தியாவில் நிலவும் அரசமைப்பில் பெரிய அளவில் எவ்வித மாற்றமும் இல்லாமல் போலீசு, ராணுவம், நீதித்துறை என அனைத்துத் துறைகளிலும் தனது ஆட்களை நிரப்பி எவ்வித தடையுமின்றி இந்துராஷ்டிரத் திட்டங்களை நிறைவேற்றி வருகின்றது. அப்படிப்பட்ட அமைப்பு தனது ஆக்டோபஸ் கரங்களால் தமிழ்நாட்டை இறுக்கக்கட்டி நெரித்துக்கொண்டு இருக்கிறது.

இந்த அரசும் போலீசும் நம்மை காப்பாற்றும் என்று நினைத்தால் அது ஒரு போதும் நடக்கப்போவதில்லை. பெரியார் திடலில் நடைபெற்ற தாலி அகற்றும் நிகழ்ச்சியின்போது, தோழர்கள் அனைவரும் சென்ற பிறகு போலீசின் வழிகாட்டுதலில் இந்து மதவெறி பாசிஸ்டுகள் வந்து தாக்குதல் நடத்தினார்கள். அப்போது கூட கருப்புச்சட்டை அணிந்தவர்கள் மீதுதான் போலீசு தாக்குதல் நடத்தியது; இந்து மதவெறி பாசிஸ்டுகள் மீதல்ல.

ஆளுனர் ஆர்.என்.ரவி என்ற உளவாளி மூலம் தமிழ்நாட்டின் போலீசு, மாவட்ட நிர்வாகம் என அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளது. யார் பொறுப்பில் இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ்-ன் நிகழ்ச்சியே நிரலுக்கு வரும். அது இன்று ஒருவேளை தள்ளி போகலாம் என்றாலும் நாளை நிச்சயம் நடக்கும். ஒரு போதும் தவிர்க்க முடியாது, பாசிஸ்டுகளை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழிஇல்லை.

படிக்க : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை!  மக்கள் அதிகாரம் கண்டனம்

நாம் வீழ்த்த வேண்டிய இலக்கு ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி, அம்பானி – அதானி பாசிசம்தான். அதை எப்போதும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.

பாம்பையும் பார்ப்பானையும் கண்டால், பார்ப்பானை முதலில் அடி என்றார் பெரியார். ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி, அம்பானி – அதானி பாசிஸ்டுகள்தான் மக்களின் எதிரி, அவர்களை புறக்கணிக்க வேண்டும் என்பதை மக்களின் இயல்பாக ஒன்றாக மாற்ற வேண்டும்.

ஆப்பரேசன் சவுத் என்ற திட்டத்தின் அடிப்படையில் தெலுங்கானாவும் தமிழ்நாடும்தான் முதற்கட்ட ஆர்.எஸ்.எஸ்-ன் இலக்குகள். ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி, அம்பானி – அதானி பாசிஸ்டுகளின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் எதிரான நடவடிக்கையை மக்களை திரட்டி மேற்கொள்ள வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி  பாசிச கும்பலுக்கு இந்துராஷ்டிரத்துக்கான சோதனைக்களம்தான் தற்போதைய நடவடிக்கைகள் என்றால் அதை வீழ்த்துவதற்கான நடவடிக்கைகளுக்கும் பாசிச எதிர்ப்பு சோதனைக்களம்தான். அந்தக்களம் நமது தெருக்களில்தான் தொடங்கும். எதிர்கொள்வோம் தமிழகமே!


தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச்செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

1 மறுமொழி

  1. “…போலீசு பாதுகாப்புடன் தமிழ்நாட்டில் இசுலாமியர்கள் மீது கலவரம் நடத்துவதற்கான அனைத்துவித ஏற்பாட்டையும் ஆர்.எஸ்.எஸ், பிஜேபி செய்துவிட்டதையே அறிய முடிகிறது. அதற்கு தோதாக தமிழ்நாடு போலிசுத்துறை செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.
    …ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பலுக்கு இந்துராஷ்டிரத்துக்கான சோதனைக்களம்தான் தற்போதைய நடவடிக்கைகள் என்றால் அதை வீழ்த்துவதற்கான நடவடிக்கைகளுக்கும் பாசிச எதிர்ப்பு சோதனைக்களம்தான். அந்தக்களம் நமது தெருக்களில்தான் தொடங்கும். எதிர்கொள்வோம் தமிழகமே!”
    பத்திரிகை செய்தி;பாட்டாளிவர்க்கத்தின் ஆவணமாக, தமிழக அரசியல் போக்கை வரைபடமாக தருகிறது.இதன் ஓளியில் தீரமுடன் முன்னேறுவோம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க