03.10.2022

புதுச்சேரி: மின்சாரம் தனியார்மயத்துக்கு எதிரான மின் ஊழியர்களின்,
பொதுமக்களின் போராட்டம் வெல்லட்டும்!

பத்திரிகை செய்தி

டந்த இரண்டு நாட்களாக புதுச்சேரியில் மின்வாரியத்தை தனியார்மயமாக்க கூடாது என்பதை வலியுறுத்தி ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதன் விளைவாக புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் மின்சாரத் தடை, எங்கும் இருள் பரவியிருக்கிறது.

இதற்கு காரணமான ஆள்கின்ற என்.ஆர்.காங்கிரஸ் – பி.ஜே.பி அரசை கண்டித்தும் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை கண்டித்தும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் மக்கள் போராடி வருகிறார்கள். பல்வேறு அரசு அலுவலகங்கள் முன்பு மக்கள் போராடி வருகிறார்கள்.

எவ்வித கடன்களும் நட்டமும் இல்லாமல் செயல்படும் புதுச்சேரி மின்வாரியத்தை தனியாருக்கு தாரைவார்க்க வேண்டும் என்பதற்காக அண்மையில் எடுத்த முயற்சிகளை மின் ஊழியர் சங்கம் கடுமையாக எதிர்த்தது. ஊழியர்களுடைய ஒத்துழைப்பின்றி நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று கூறிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அரசு, திடீரென மின்வாரியத்தை தனியார்மயமாக்குவோம் என்று திமிராக அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

படிக்க : மின்சார சட்டத் திருத்தம் 2022 : மின் துறையை மொத்தமாக விழுங்கவரும் கார்ப்பரேட் மலைப்பாம்பு!

ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் “கண்டிப்பாக மின்வாரியத்தை தனியார்மயமாக்குவோம். இதை எதிர்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கிறார்.

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையை இறக்கி மின்வாரிய ஊழியர்கள் கைது செய்வது, போராட்டத்தை ஒடுக்குவது, மக்களின் போராட்டத்தை அடக்குவது என்று ஒட்டுமொத்தமாக புதுச்சேரி முழுவதும் பாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது என்.ஆர்.காங்கிரஸ் – பாசிச பிஜேபி அரசு.

இந்த மறுகாலனியாக்க காலகட்டத்தில் மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் சந்தையாக்குவதே அனைத்து அரசுகளின் ஒரே கடமை. அதன் விளைவாகவே மின்சாரமும் இன்று தனியார்மயமாக்கப்படுகிறது.

மின்சாரம் தனியார்மயமாக்கப்பட்டால் மக்கள் இதுநாள் வரை பெற்று வந்த இலவச மின்சார உரிமையும் சலுகைகளும் பறிக்கப்படும். மின்சாரம் இல்லாமல் எதுவும் இயங்காது என்ற சூழல் ஏற்படுத்தப்பட்ட பின்னர் தற்பொழுது மின்சாரத்தை தனியார்மயமாக்குவது கடும் மின் கட்டண உயர்வுக்கும் வழிவகுப்பது மட்டுமல்ல; மின்சாரத்தை மக்களிடம் இருந்து முற்றிலும் அந்நியப்படுத்துவதன் நோக்கத்தைக் கொண்டதாகும்.

மக்களை இருளில் தள்ளி உரிமை கேட்டுப் போராடுபவர்களை துணை ராணுவப் படையை கொண்டு அடக்குவதுதான் பாசிசம்.

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி, அம்பானி – அதானி பாசிசம் என்பது சிறுபான்மை மக்களுக்கு எதிரானது மட்டுமல்ல; ஒட்டுமொத்த நாட்டின் உழைக்கும் மக்களுக்கு எதிரானது என்பதை தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வரும் சம்பவங்கள் நமக்கு மீண்டும் உணர்த்துகின்றன.

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி, அம்பானி – அதானி பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியே புதுச்சேரி மக்களின், மின்வாரிய ஊழியர்களின் போராட்டம் ஆகும்.

புதுச்சேரி யூனியன் பிரதேச மக்களின், மின் ஊழியர்களின் போராட்டத்தை மக்கள் அதிகாரம் வாழ்த்துகிறது, வரவேற்கிறது.


தோழமையுடன்
தோழர் மருது,
செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க