புதுச்சேரி மின்கட்டண உயர்வு: மின்சாரத் துறை கார்ப்பரேட்மயமாக்கப்படுவதன் விளைவே!

பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாலும் மக்களவைத் தேர்தல் குறுக்கிட்டதாலும், மின் கட்டண உயர்வை பா.ஜ.க - என்.ஆர் காங்கிரஸ் அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. ஆனால், தேர்தல் முடிந்த பின் ஜூன் 16 ஆம் தேதி அன்று முன்தேதியிட்டு மின் கட்டண உயர்வை அமல்படுத்தியுள்ளது.

செப்டம்பர் 18 ஆம் தேதி புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க அரசின் மின் கட்டண உயர்வைக் கண்டித்து “இந்தியா” கூட்டணி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரியில் பா.ஜ.க – என்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த மின்கட்டண உயர்வை அரசு அறிவித்தது. இதற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாலும் மக்களவைத் தேர்தல் குறுக்கிட்டதாலும், மின் கட்டண உயர்வை அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

ஆனால், தேர்தல் முடிந்த பின் ஜூன் 16 ஆம் தேதி அன்று முன்தேதியிட்டு மின் கட்டண உயர்வை அரசு அமல்படுத்தியுள்ளது. அதன்படி வீட்டு உபயோகத்திற்கு 50 யூனிட் வரை பயன்படுத்தினால் அதற்கான மின் கட்டணம் 1.45 ரூபாயிலிருந்து 1.95 ரூபாயாகவும், 100 யூனிட்டுக்கான மின் கட்டணம் 2.25 ரூபாயிலிருந்து 2.70 ரூபாயாக்கவும், 100 யூனிட் முதல் 200 யூனிட்டுக்கு 3.25 ரூபாயிலிருந்து 4 ரூபாயாகவும், 200 யூனிட் முதல் 300 யூனிட் வரையான மின்சார பயன்பாட்டிற்கான மின்கட்டணம் 5.40 ரூபாயிலிருந்து 6 ரூபாயாக்கவும், 300 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்கான மின் கட்டணம் 6.80 ரூபாயிலிருந்து 7.50 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் குறைந்தழுத்த தொழிலகங்களுக்கான மின்கட்டணம் 6.25 ரூபாயிலிருந்த 7 ரூபாயாக்கவும், அதிக மின்னழுத்த தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் 5.45 ரூபாயிலிருந்து 6 ரூபாயாக்கவும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 5.33 ரூபாயிலிருந்து 5.75 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மக்களிடம் கடும் எதிர்ப்பு உண்டானதால் 100 யூனிட் மின்சாரத்துக்கு 80 பைசா மானியம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. ஆனால் மின் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று இந்தியா கூட்டணி கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

அதன் ஒரு பகுதியாக செப்டம்பர் 2 ஆம் தேதி மின்கட்டண உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலத்தை இந்தியா கூட்டணி நடத்தியது. மேலும் செப்டம்பர் 18 ஆம் தேதி மின் கட்டண உயர்விற்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்தில் இந்தியா கூட்டணி காட்சிகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.


படிக்க: மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் | தோழர் விஜயன்


மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி மாநில தி.மு.க அமைப்பாளர் சிவா கூறுகையில் “கடந்த ஜூன் மாதம் மின்கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டது. மக்கள் கிளர்ந்தெழுந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அரசு பின்வாங்கியது. ஆனால் தற்போது மீண்டும் மின் கட்டண உயர்வை அமல்படுத்தியுள்ளனர். பொதுமக்களின் வருமானத்தில் பெருமளவு தொகையினை பிடுங்கிக் கொள்ளும் அளவிற்கு அரசானது மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. எனவே மின் கட்டண உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர் கோ. சுகுமாரன் கூறுகையில் “25 ஆயிரம் கோடி சொத்து மதிப்புள்ள பொதுத் துறையான மின்சாரத் துறையைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் முயற்சி தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. வணிகர்களும் பொதுமக்களும் பெரும் பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையில் மின் கட்டண உயர்வானது மேலும் அவர்களுக்குப் பொருளாதார ரீதியாகப் பின்னடைவையே ஏற்படுத்தும். எனவே, அரசானது மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இன்று மின்சாரத் துறையானது உற்பத்தித்துறை, விநியோகத்துறை, பராமரிப்புத்துறை என்று பிரிக்கப்பட்டு அதிகப்படியான சலுகைகளுடன் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மின்கட்டண உயர்வு என்பது கார்ப்பமயமாக்கத்தின் ஒரு விளைவே ஆகும்.

எனவே, மின் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடும் இந்தியா கூட்டணி கட்சிகள் மின்சாரத்துறை கார்ப்பரேட் மயமாக்கப்படுவதையும் எதிர்த்துப் போராட வேண்டும். அதேபோல், தாங்கள் ஆட்சி புரியும் மாநிலங்களிலும் மின்சாரத் துறையை கார்ப்பரேட்மயமாக்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க