நேற்று (ஜனவரி 21 அன்று) அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்துறையை இணைக்கக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி வளாகத்தில் தரையில் அமர்ந்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.
போராட்டம் குறித்து மாணவர்கள் கூறியதாவது:
“தொழில்நுட்ப கல்வியான (Technical Education) நுண்கலைத் துறைப் (Fine Arts) படிப்பான ஆர்ட்ஸ் அண்ட் கிராப்ட்ஸ் (Arts and Crafts) படிப்பை கலை மற்றும் அறிவியல் (Arts and Science) கல்வியாக மாற்ற, கலைப் பண்பாட்டு துறைச் செயலர் தன்னிச்சையாக புதுச்சேரி பல்கலைக்கழகத்துக்கு வழங்கிய கடிதத்தைத் திரும்பப் பெற வேண்டும். புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நுண்கலைத் துறையை இணைக்க வேண்டும்.
கடந்த இருபது ஆண்டுகளாக புதுடெல்லி அகில இந்தியத் தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) அனுமதி பெற்று நடத்தப்படும் நுண்கலைத் துறைத் (Fine Arts) தொழில்நுட்ப படிப்பான ஆர்ட்ஸ் அண்ட் கிராப்ட்ஸ் படிப்பு ஏ.ஐ.சி.டி.இ அங்கிகாரத்தைப் பெற மறுத்தாலோ, அங்கிகாரத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டாலோ அந்த படிப்பை நடத்தக் கூடாது. அதற்காக வழங்கப்படும் பட்டம் செல்லாது என ஏ.ஐ.சி.டி.இ கூறியிருக்கும் நிலையில், கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து நுண்கலைத் துறையின் தனித்தன்மையை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதைக் கைவிட வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் தொழில்நுட்ப கல்விக்கான நுண்கலைத் துறை படிப்பான ஆர்ட்ஸ் அண்ட் கிராப்ட்ஸ் படிப்பை ஏ.ஐ.டி.சி.இ அனுமதி பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும். நுண்கலைப் படிப்பு தொழில்நுட்ப கல்வியில் வராது என்று பொய் ஆவணங்களைக் கொடுத்து கலைப் பண்பாட்டு துறைச் செயலரை திசை திருப்பிய முன்னாள் முதல்வர் பி.வி.போஸ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த முறை போராட்டத்தின் போது பேச்சுவார்த்தையை நடத்திய கலைப் பண்பாட்டுத்துறை இயக்குநரும், பாரதியார் பல்கலைக்கூட உறுப்பினர் செயலரும் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதுடன், கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் என எழுத்துமூலம் உறுதி அளித்தனர். ஆனால், இதுநாள்வரையில் எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. அதனால் இன்று அடையாள உண்ணாவிரதம் போராட்டம் நடத்துகிறோம். கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தொடர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்துவோம்” போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறினர்.
முன்னதாக, செப்டம்பர் 25, 2024 அன்றே புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்துறையை இணைக்கக்கோரி பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினேஷ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram