பெட்ரோல்-டீசல், கேஸ் விலை உயர்வு மற்றும் ஜி.எஸ்.டி வரி உயர்வு ஆகிய தாக்குதல்களால் ஏற்கெனவே நிலைகுலைந்து கிடக்கும் உழைக்கும் மக்களின் தலையில் அடுத்த இடியாக அறிமுகமாகியிருக்கிறது மின்சார சட்டத் திருத்தம் 2022.

இம்மசோதா ஏற்கெனவே 2019 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டபோதே கடுமையான எதிர்ப்பு நிலவியதால் நிறைவேற்றாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி மீண்டும் இம்மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனினும், மின்துறை ஊழியர்களின் போராட்டம் மற்றும் எதிர்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளின் காரணமாக, சட்டமாக நிறைவேற்றப்படாமல் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

000

மின்சார சட்டம் 2003-இன் சில பிரிவுகளில் திருத்தங்களை முன்வைக்கும் இம்மசோதா, மின் துறையை கார்ப்பரேட்டுகளுக்கு விருந்தாக்கும் நோக்கம் கொண்டதாகும். எனினும் மின் துறையைத் தனியாருக்கு தாரைவார்ப்பது இம்மசோதாவின் மூலம் மட்டுமே தொடங்கப் படவில்லை. இதுவொரு நிகழ்ச்சிப் போக்காகும். 1990களில் புதிய தாராளவாதக் கொள்கைகள் அமல்படுத்தத் தொடங்கியபோதிலிருந்து இப்போக்கு தொடங்குகிறது.

இப்போக்கின் முதல் சுற்று, மின் உற்பத்தியில் தனியாரின் நுழைவுக்கு அனுமதி வழங்கியதாகும். மின் உற்பத்தியில் தனியார் நுழைந்த பிறகு, அரசுப் படிப்படியாக உற்பத்தி மீது கவனம் செலுத்துவதைக் கைவிட்டது; வளர்ந்துவரும் மின் நுகர்வின் தேவைக்கு திட்டமிட்டே தனியார் முதலாளிகளை சார்ந்திருக்கும் நிலைக்கு அரசு சென்றது.

படிக்க : ஏழைகளுக்கும் நடுத்தரவர்க்கத்திற்கும் இனி மின்சாரமும் எட்டாக்கனிதான் !

எடுத்துக்காட்டாக, 1998 ஆம் ஆண்டு தன்னுடைய மின்சார தேவையில் 8 சதவிகிதம் மட்டுமே தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்கிய தமிழக அரசானது, தற்போது 50 சதவிகிதம் மின்சாரத் தேவைக்குத் தனியாரைச் சார்ந்தே உள்ளது. தனியாருக்கு டெண்டர் விடுவதன் கோடிகளைச் சுருட்டிக் கொள்ள முடியும் என்பதால், எந்த கட்சி ஆண்டபோதும் தனியார் மின் கொள்முதல் போட்டிபோட்டுக் கொண்டு செய்யபட்டன.

ஒருபக்கம் கொள்ளை விலைக்கு தனியாரிடம் மின் கொள்முதல் செய்வது; மறுமுனையில், அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட மின்சாரத்தை தொழில்துறை மண்டலங்களின் முதலாளிகளுக்கு அடிமாட்டு விலைக்கு கொடுப்பது – என்ற நிலையால் மின்சாரத் துறை கடுமையான கடன் நெருக்கடிக்கு உள்ளாகின.

தற்போது, இரண்டாவதும் இறுதியானதுமான சுற்றிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது மோடி அரசு. சென்ற சுற்றில், மின்சார உற்பத்தித் துறை மட்டுமே தனியாருக்கு திறந்துவிடப்பட்டது. மின்விநியோகம் முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. மின்சார சட்டத் திருத்தம் 2022, மின் விநியோகத்திலும் தனியாரை அனுமதிக்கும் வகையில் திருத்தப்பட்டுள்ளது.

000

சட்டப் பிரிவு 14 மற்றும் 42-ல் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தமானது ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட தனியார் முதலாளிகளை மின் விநியோகம் செய்ய அனுமதிக்கிறது. மேலும் அரசின் மின் விநியோகக் கட்டமைப்பை தனியார் முதலாளிகள் பயன்படுத்துவதற்கும் அனுமதிக்கிறது. மின் விநியோகம் செய்வதற்கு தனியார் நிறுவனங்களுக்கு கட்டமைப்பு வசதிகள் இல்லாவிட்டாலும் சட்டத்தில் உள்ள சரத்துகளின் அடிப்படையில், அரசின் மின் விநியோகக் கட்டமைப்பையே அவர்களும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மின் விநியோகத்தில் தனியார் நுழைவதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு பல்வகையான (multiple choice) மற்றும் தரமான (quality) மின் விநியோகம் கிடைக்கும் என்று நமக்கு இச்சையூட்டுகிறது மோடி அரசு. 90களில் தனியார்மயக் கொள்கையை அமல்படுத்தத் தொடங்கிய காலம் தொடங்கி, அளந்துவிடப்படும் அதே புளித்துப்போன மோசடிப் பிரச்சாரமே இது.

‘மக்கள் சேவை, மகேசன் சேவை’ என்ற தொண்டுள்ளத்தோடு தானா தனியார் முதலாளிகள் மின் விநியோகத்தில் நுழைவார்கள்; லாபவெறி நோக்கம் மட்டுமே முதலாளிகளின் குறிக்கோள். இச்சட்டம் அமலுக்கு வந்தால் மின் நுகர்வு அதிகமுள்ள பெருநகரங்கள் மற்றும் தொழிற்சாலைப் பகுதிகளில் மின் விநியோகம் முழுவதும் தனியாரிடம் போய்விடும்.

மின் நுகர்வு அதிகம் இல்லாத கிராமப்புற, மலைவாழ் பகுதிகளுக்கு சேவை வழங்க தனியார் முதலாளிகள் முன்வர மாட்டார்கள், மேலும் விவசாயிகள், நெசவாளர்களுக்கு இலவச, மானிய மின்சாரத்தை அரசே வழங்குவதால், அங்கு தனியார் முதலாளிக்கு சந்தையும் குறைவு. மேற்சொன்னவாறு, மின் நுகர்வு அதிகமுள்ள பகுதிகளைத் தனியார்கள் கைப்பற்றிக் கொண்டு, மக்கள் நலச் சேவைகளை மட்டும் அரசிடம் தள்ளிவிட்டால், ஏற்கெனவே கடனில் தள்ளாடிக் கொண்டிருக்கும் அரசு, திவாலாகி மொத்தமாக மின் துறையை விட்டே வெளியேறும் அபயாம் உள்ளது.

மின்சார சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்.

மின் விநியோகக் கட்டமைப்பை தனியார் முதலாளிகள் பயன்படுத்துவதற்கு பயனீட்டுக் கட்டணம் வசூலிப்பதாகக் கூறப்படுகிறது. ஆகவே அரசுக்கு ஒன்றும் நட்டமில்லை என்று பாஜக வாதம் புரியலாம். ஆனால், ‘கருணையே உருவான பாஜக’ கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகைகளையும் மானியங்களையும் வாரி வழங்குவது நாம் அறியாததா, கார்ப்பரேட்டுகள் வாங்கிய கடன் வாராக் கடன்களாக மாறி பல வங்கிகளைத் திவாலாக்கிய கதை நமக்குத் தெரியாதா! ஆகவே இவையெல்லாம் வெறும் ஏமாற்று வாதங்களே.

65வது பிரிவில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது, மாநில அரசுகள் மின் கட்டணத்தை உற்பத்திச் செலவுக்கு இணையாக நிர்ணயிக்கக் கூறுகிறது. மக்களுக்கு மானியம் வழங்க வேண்டுமென்றால் அதை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டுமென்றும் முன்மொழிகிறது. இலவச மற்றும் மானிய மின்சாரத்தை படிப்படியாகவும் மிக எளிதாகவும் ஒழித்துக்கட்டும் வழி இது.

கேஸ் சிலிண்டருக்கு இதேபோல் அறிமுகம் செய்யப்பட்ட மானியமே இதற்கு சிறந்த சான்றாகும். ஆரம்பத்தில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட தொகை, படிப்படியாகக் குறைந்து தற்போது நின்றே போய்விட்டது. நாள்தோறும் பெட்ரோல்-டீசல் விலை உயருவதைப் போல, மின் கட்டணம் உயரும் அபாயமும் உள்ளது.

மேலும் இம்மசோதா, மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அதிகப்படியான அதிகாரங்களை வழங்குகிறது. மாநில ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர்களை நியமிப்பது மற்றும் அவற்றின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவது என முழு அதிகாரமும் மத்திய அரசிற்கு வழங்கப்படுகிறது.

மின் ஒப்பந்த அமுலாக்க ஆணையம் என்ற புதிய ஆணையமும் உருவாக்கப்படுகிறது. மின் உற்பத்தி, விநியோகம் மற்றும் பகிர்மான நிறுவனங்களுக்கிடையே உள்ள ஒப்பந்தங்களில் ஏற்படும் தகராறுகளை விசாரிக்கவே இந்த ஆணையத்தை உருவாக்குவதாகக் கூறுகிறார்கள். அரசுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் போடப்படும் ஒப்பந்தங்களில், தனியாருக்கு ஆதரவாகக் கட்டப்பஞ்சாயத்து செய்வதற்காகவே இந்த புதிய அமைப்பு உருவாக்கப்படுகிறது.

படிக்க : மின்சார திருத்த மசோதா 2022: மின்துறையை தனியாருக்கு தாரைவார்க்க துடிக்கும் மோடி அரசு!

சுருக்கமாகக் கூறவேண்டுமென்றால், மத்திய மற்றும் மாநில மின்சார வாரியங்கள் இழுத்து மூடிவிட்டு தொலைத்தொடர்புத் துறையில் அம்பானியின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டது போல், மின்சாரத் துறையில் அதானியின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதே இம்மசோதாவின் குறிக்கோள்.

000

நீட், புதிய கல்விக் கொள்கை, ஜி.எஸ்.டி, தேசிய பணமயமாக்கல் திட்டம், மூன்று வேளாண் சட்டங்கள், தொழிலாளர் சட்டத் திருத்தம் ஆகிய மக்கள் விரோத கார்ப்பரேட் திட்டங்களைப் பாசிசக் கும்பலானது எவ்வித சமரசமும் இல்லாமல் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது; அதன் வரிசையில் இன்று இந்த மின்சார சட்டத் திருத்த மசோதா சேர்ந்துள்ளது.

நாட்டின் பெரும்பான்மையான ஏழை மற்றும் நடுத்தர மக்கள், விவசாயிகள், நெசவாளிகள் மற்றும் மின்துறை ஊழியர்களுக்கு எதிராகவே இம்மசோதா கொண்டுவரப்படுகிறது. இம்மசோதாவிற்கு எதிராக, போராடும் மின்துறை ஊழியர்கள் மற்றும் விவசாய சங்கங்களுடன் பாதிக்கப்படும் மக்கள் பிரிவுகள் அனைவரும் ஒன்றிணையும்போதே, மின் துறையை விழுங்கவரும் கார்ப்பரேட் மலைப்பாம்பை விரட்டியடிக்க முடியும்.

சிவராமன்