03.10.2022

புதுச்சேரி மின் துறை தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்கும் பாசிச அரசு!

பத்திரிகை செய்தி

புதுச்சேரி அரசு மின் துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை எதிர்த்து மின் துறை தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். கடந்த 5 நாட்களாக புதுவை இருண்டு கிடக்கிறது.

புதுவை மக்கள் ஆங்காங்கே போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆளும் கட்சியைத் தவிர்த்து பிற அரசியல் கட்சிகள் அனைத்தும் தொழிலாளர் போராட்டத்திற்கு ஆதரவு  தெரிவித்ததோடு இணைந்து போராடி வருகின்றன.

அண்டை மாநிலமான தமிழகத்தின் மின் துறை ஊழியர் சங்கங்கள் நேரில் சென்று தங்களது ஆதரவை பதிவு செய்து வருகின்றன. 27 இலட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அகில இந்திய அமைப்பான All India Power Engineers Federation (AIPEF) தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் துணை இராணுவப் படையை வரவழைத்து தொழிலாளர்களை அச்சுறுத்துகிறது புதுச்சேரி அரசு. போராடும் தொழிலாளர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என்கிறது, புதுவை அரசு.

புதுவை யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் பொது    மக்களுக்கு ‘இடையூறு’ ஏற்படுத்தும் வகையில் போராட்டம் தொடர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்கிறார்.

படிக்க : புதுச்சேரி: மின்சாரம் தனியார்மயத்துக்கு எதிரான மின் ஊழியர்களின், பொதுமக்களின் போராட்டம் வெல்லட்டும்! | மக்கள் அதிகாரம்

மின்துறை மட்டுமல்ல நாட்டின் கேந்திரமான பொதுத் துறைகள் பலவற்றை தனியார்மயமாக்கும் நடவடிக்கை நாட்டு மக்களுக்கு எதிரானதுதான். மக்களுக்கு  இடையூறு ஏற்படுத்த கூடியவைதான். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் ‘உங்கள்’ அரசு மீது யார் நடவடிக்கை எடுப்பது, புதுவை துணைநிலை ஆளுநரே?

மின்சார சட்டத் திருத்தம் 2022 மசோதாவை கடந்த ஆகஸ்டு 8-ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது கடும் எதிர்ப்புக்குரல் வெளிப்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்ற  நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு, அதன் பரிந்துரைகள் இன்னும் வராத நிலையில் புதுவை அரசு அவசர அவசரமாக மின் துறையை தனியார்மயமாக்குவதின்  நோக்கம் என்ன? சிறிய யூனியன் பிரதேசமான புதுவையில் சோதனை ஓட்டம் நடத்திப் பார்க்கலாம் என்கிற உத்தியாக இருக்கக் கூடும்.

பெயரளவில் உள்ள சட்டத் திட்டங்களை கூட நடைமுறைப்படுத்தாமல் போராடும் தொழிலாளர்களை அச்சுறுத்துவது யாருக்காக?

கால் நூற்றாண்டுக்கு மேலாக அமலாக்கப்பட்ட தனியார்மயமாக்கல் நடவடிக்கையால்  நாட்டு மக்களுக்கு கிடைத்த பலன் என்ன?

மக்கள் நிம்மதியுடன் வாழமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டதும், அதானி – அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகள் உலக பணக்காரர் வரிசையில் முதல் இடத்துக்கு போட்டியிடுவதும்தான் நடந்திருக்கிறது.

உண்மையில் மின் துறை தனியார்மயமாக்கல் என்பது இதுவரை மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களிலேயே மிகக் கொடூரமான தாக்குதலாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மின்துறையை மொத்தமாக அதானிக்கும் டாடாவுக்கும்  தாரை வார்ப்பதைதான் மோடி ஆட்சியின் இலக்காக இருக்கிறது.

புதுச்சேரியில் RSS ஊர்வலத்திற்கு அனுமதி கொடுத்ததும், மின் துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கை எதிர்த்து போராடும் தொழிலாளர்களை ஒடுக்க துணை இராணுவப் படையை ஏவிவிட்டு எஸ்மா சட்டத்தை காட்டி மிரட்டுவதும் காவி – கார்ப்பரேட்  பாசிசத்தின் கொடூர முகமே அன்றி வேறல்ல.

படிக்க : மின்சாரம் தனியார்மயத்திற்கு எதிராக போராடும் புதுச்சேரி மக்களை இருளில் மூழ்கடிக்கும் பாசிச அரசு! | மருது வீடியோ

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பு குழு மேற்கண்ட  தனியார்மயமாக்கல் மற்றும் அச்சுறுத்தும்  நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறது. போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவளிப்பது அனைத்து உழைக்கும் மக்கள் மற்றும் தொழிற்சங்க இயக்கங்களின்  கடமை என்ற வகையில் ஆதரவளிப்போம்.!

நாளை நம் வீட்டையும் மின் துறை தனியார்மயம் இருட்டாக்கும் என்பதை உணர்ந்து போராடும் தொழிலாளர்களுடன் கரம் கோர்க்க உழைக்கும் மக்களை அழைகிறோம்!

இவண்,
ஆ.கா.சிவா,
மாநில ஒருங்கிணைப்புக்குழு,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க