ழுபது ஆண்டுகள், 214 நாட்கள் என்று மிக நீண்ட ஆட்சிகாலம் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் சென்ற மாதம் 8 ஆம் தேதி இறந்தார். இறக்கும் வரை இங்கிலாந்து உட்பட காமன்வெல்த்தின் 15 நாடுகளுக்கு ராணியாக இருந்தார். இந்தியாவில் இருந்து திருடிக்கொண்டுப்போன கோஹினூர் வைரத்தை தன்னுடைய கிரீடத்தில் வைத்துக்கொண்டு எவ்வித மான ஈனமின்றி திரிந்த எலிசெபத் மறைவு குறித்து பிரதமர் மோடியும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”பிரிட்டன் ராணி நம் காலத்தில் வாழ்ந்த மிகுந்த மரியாதைக்கும், நம்பிக்கைக்கும் உரியவர். தனது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் தலை சிறந்த ராணியாக அவர் பொறுப்பேற்றிருந்தார். பொது வாழ்க்கையில் கண்ணியத்தையும், நாகரீகத்தையும் கடைப்பிடித்து வந்தார்.

அவருடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தாருக்கும், இங்கிலாந்து நாட்டு மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருந்தார். ”மறைந்த மகாராணி 2 ஆம் எலிசெபத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் வருகிற 11 ஆம் தேதி ஒருநாள் இந்தியா முழுவதும் துக்க தினம் அனுசரிக்கப்படும்” என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

காலனிய கால மிச்ச சொச்சங்களை ஒழித்துக்கட்டுவோம் என்ற பெயரில் கடந்த செப்டம்பர் மாதம் தில்லி ராஜ பாதையை கடமை பாதை என்று மாற்றினார் மோடி. மேலும் இராணுவத்தில் இருந்த காலனிய கால பழக்க வழக்கங்களும் மாற்றப்பட்டிருக்கின்றன என்று பெருமையாக பீற்றிக்கொள்ளப்பட்ட சூழலில்தான் எலிசபெத்தின் மறைவும் அதற்கு ஒன்றிய அரசின் ஒரு நாள் துக்க அறிவிப்பையும்  பார்க்க வேண்டும்.

படிக்க : கொடூர குற்றவாளிக்கு ஒப்பாரியா? எலிசபத் ராணியின் உண்மை முகம் | மருது வீடியோ

என்னதான் இருந்தாலும் இறந்துபோன ஒருவருக்கு அஞ்சலி செலுத்துவது தவறா? என்னதான் ஊரில் ஒரு கெட்டவன் இறந்தாலும் அஞ்சலி செலுத்துவது மரபல்லவா என்று பலரும் வகைவகையாக பல வினாக்களை எழுப்புகிறார்கள். எல்லாவற்றிலும் அரசியல் பேசக் கூடாது. அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதாபிமானத்துடன் பாருங்கள் என்கிறார்கள்.

வாழ்க்கை என்றால் சரி, தவறு என இரண்டுமேதான் இருக்கும் உங்களுக்கு தேவையான நல்லதை எடுத்துக்கொண்டு கெட்டதை விட்டுவிடுங்கள் என்கிறார்கள். இப்படி பேசத் தொடங்கினால் முசோலினி, ஹிட்லர், இடி அமீன், எம்.ஜி.ஆர், ஜெயா, அத்வானி, மோடி உள்ளிட்ட அனைத்து பாசிஸ்டுகளுமே ஏதோ ஒரு வகையில் நல்லவர்களாகிவிடுவார்கள்.

மோடியின் காவி – கார்ப்பரேட் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களை  ஈர்ப்பதற்காக 56 இன்ச் மார்பும் இல்லாத ரயில் நிலையத்தில் டீ விற்ற சிறப்பும் பேசப்படுகின்றது. எம்.ஜி.ஆர் என்னதான் பாசிஸ்டாக இருந்தாலும் வெள்ளையாக, அழகாக இருக்கிறார் அல்லவா அதற்காகவே ரசித்துத்தான் தீர வேண்டும் என்று மறைமுகமாக பழக்கப்படுத்தப்படுகிறார்கள். இதுநாள் வரை பாசிஸ்டுகள் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் நியாப்படுத்துவதற்கு அவர்களின் மரணம் பயன்படுத்தப்படுகின்றது.

இது ஏதோ ஹிட்லர் முதல் மோடி வரையிலான பாசிஸ்டுகளை நியாயப்படுத்துவதற்காக மட்டுமல்ல; இப்படிப்பட்ட பாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டு சொல்லொண்ணா துயரங்களை உனக்கு தருவோம் நீ ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்ற ஆளும் வர்க்கத்தின் மறைமுக கட்டளை. ஒருவரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்வதோ அல்லது அஞ்சலி செலுத்துவது என்பதோ அவர் இது நாள் வரை மேற்கொண்ட செயல்களுக்கு அங்கீகாரம் அளிப்பதாகும்.

ஒரு நாட்டிடம் இத்தனை ஆண்டுகள் அடிமையாக இருந்தோம் என்பதை  அவமானமாகக் கருதாமல் அதை பெருமையாகவும் நினைப்பதே எலிசபெத் மறைவுக்கான இரங்கலின் சாரம்சம். காலனிய மிச்ச சொச்சங்களை மாற்றுவது என்ற பெயரில் யோகி ஆதித்யநாத் நகரங்களின் முசுலீம் பெயர்களை ஒழிப்பதையே வேறு வெர்ஷனில் செய்யப்போகிறார் மோடி.

ஏனென்றால் மேக் இன் இந்தியா என்று அறிவித்த பின்னர்தான் உலகின் மிகப்பெரிய படேல் சிலையை சீனாவில் தயாரித்து கொண்டுவந்து நிறுவினார்கள். காலனிய மிச்சசொச்சங்களை ஒழிக்க வேண்டுமென்றால் தற்போது நாட்டை சூறையாடிக்கொண்டிருக்கும் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயக் கொள்கைகளை எதிர்க்க வேண்டும். அப்படி எதிர்த்தால் ஆர்.எஸ்.எஸ்-ன் இந்து கனவெல்லாம் இறுதி வரை பகற்கனவாக மட்டுமல்லவா இருக்க முடியும்?

இரண்டாம் எலிசபெத் என்றழைக்கப்பட்ட எலிசபெத் அலெக்சாந்திரா மேரி தனது 94வது வயதில் இறந்து போனார். இங்கிலாந்தின் மக்கள் தொகையில் அல்லது உலக மக்கள் தொகையில் ஒன்று கழிந்தது என்பதைத்தாண்டி பேசுவதற்கு ஏதுமில்லை என்ற போதிலும் இரண்டாம் எலிசபெத் பற்றிய பழைய தகவல்கள் எல்லாவற்றையும் விசிறியடித்து அவற்றுக்கு எல்லாம் மக்களை உச் கொட்ட வைத்திருக்கிறது.

இப்படி வயதான பெண்மணி இருந்தது உலகில் உள்ள பெரும்பான்மை மக்களுக்கு தெரியாத அல்லது அவசியமில்லாத நிலைதான் இருக்கிறது. ஆனால் இரண்டாம் எலிசபெத்தின் மரணம் ஏன் எதற்காக மக்களின் சோகமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிய வேண்டும்.

இருக்கும் வரை ஜெயலலிதாவை பாசிசப்பேய் என்று கூறிவிட்டு அவர் இறந்த பின்னர் இரும்பு மங்கை என்பதன் அர்த்தம் என்ன? இது வரை ஜெயலலிதா மேற்கொண்ட அனைத்து பாசிச நடவடிக்கைகளுக்கும் அங்கீகாரம் அளிப்பதுதானே. பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு அஞ்சலி செலுத்திவிட்டு தான் செலுத்திய அஞ்சலி பாடும் திறமைக்குத்தானே தவிர, தன்னுடைய வீட்டை சங்கர மடத்துக்கு எழுதி வைத்ததற்காக அல்ல என்று ஒருவன் கூறினால் அது எவ்வளவு கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதமோ அதை விட மோசமானது எலிசபெத்துக்காக வருந்துவது.

எலிசபெத்தின் மரணத்தை மிகப்பெரிய செய்தியாக்கி உலகின் பெரும்பான்மை மக்களையும் அதைப்பற்றி பேச வைத்ததில் ஆளும் வர்க்கத்தின் நோக்கம் என்னவாக இருக்கும்? பிரிட்டனுக்கு சூரியன் மறையாத சாம்ராஜ்யம் என்றிருந்த பெயருக்குப் பின்னால் சொல்லொண்ணா கொடூரங்கள் மறைந்திருக்கின்றன.

அவுரிச்செடியை பயிரிட மறுத்த இந்திய விவசாயிகளின் கட்டை விரலை வெட்டியெடுத்ததும், முதலாம் சுதந்திரப்போரான வேலூர் சிப்பாய் கலகத்தில் ஈடுபட்ட போராளிகளை புளியம் விளார்களால் அடித்தேக் கொன்றதும், பீரங்கி வாயிலில் கட்டிவைத்து சிதற வைத்ததும், ஜாலியன் வாலாபாக்கில் நூற்றுக்கணக்கான நிராயுதபாணியான மக்களை துப்பாக்கியில் குண்டுகள் தீரும் வரை சுட்டுக்கொன்றதும், திப்புசுல்தான் முதல் தீரன் சின்னமலை, பூலித்தேவன், கட்டபொம்மன், மருதுபாண்டியர் என அனைவரையும் பலியெடுத்ததும் எது?

பகத்சிங், சுகதேவ், ராஜகுரு என ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளை தூக்கிலிட்டது எது? சாவர்க்கர் அந்தமான் சிறையிலிருக்கும் போது புல்புல் பறவையில் ஏறிப்போய் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்ததும் யாரிடம்? இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் கனிம வளங்களையும் மனித வளங்களையும் கொள்ளையடித்து சேர்த்த பணத்தில் அல்லவா இப்போதும் இங்கிலாந்து பணக்கார நாடாக மிளிர்கிறது.

படிக்க : கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலகின் மிக மோசமான ஐந்து தலைவர்கள் !!

இதற்கும் செத்துப்போன இரண்டாம் எலிசபெத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லையா? மாட்சிமை தாங்கிய மன்னரின் பேரால் நடைபெற்ற அனைத்து போர்க்குற்றங்களையும் இரங்கல் என்ற பெயரில் மன்னிப்பதற்கு மோடிக்கு யார் உரிமையை தந்தது?

இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தை அனைவரும் பேசும் பொருளாக்கி அதன்மூலம் ஏகாதிபத்தியம், இதுவரை தான் நடத்திய சுரண்டல், கொள்ளை, போர் உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களையும் மக்களை ஏற்க வைத்து அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறது.

செத்துப்போன இரண்டாம் எலிசபெத்தின் மகனும் தற்போதைய மன்னனுமான இரண்டாம் சார்லசின் மகனான ஹாரி, நிற வேறுபாட்டு இழிவை ஆதரிக்கும் மாட்சிமை தாங்கிய மன்னர்குல பாரம்பரியங்களின் மீது சிறுநீர் கழித்துவிட்டு இளவரசர் பட்டத்தை துறந்தோடினார். கருப்பர் இனப்பெண்ணை மணந்ததால் தன்னுடைய குடும்பம் மீது ஏவப்பட்ட நிறவெறியை, இராஜ குடும்பம் போற்றிப் பாதுகாப்பதை சொல்லி தூற்றினார். அவர் சொன்ன ராஜ குடும்பத்தில் இரண்டாம் எலிசபெத் வரமாட்டாரா?

இப்படி இனவெறி, நிறவெறி, ஏகாதிபத்திய ஆதிக்கவெறி ஆகியவற்றை தன்னுள்ளே வீற்றிருந்த 96 வயது ஒரு மூதாட்டி செத்துப்போயிருக்கிறார். பிரிட்டனின் காலனியாதிக்கப் போர்களால் கொல்லப்பட்ட பல இலட்சக்கணக்கான மக்களின் படுகொலைகளுக்கு தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளியை தண்டிக்கப்பட முடியாமல், அந்த ராஜவம்சத்தை மக்களால் வீழ்த்த முடியாமல் போய்விட்டதே என்றெண்ணி மட்டுமே நாம் வருத்தமடைய முடியும்.


மருது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க