ரந்து விரிந்த இந்தியாவை குறுக்கு நெடுக்காக பிளக்கின்றன தேசிய நெடுஞ்சாலைகள். இந்த சாலைகளில் பயணிப்பதற்கு சேவைக்கட்டணம் என்ற பெயரில் வாகன ஓட்டிகளை ஒட்டச் சுரண்டுகிறார்கள் பணம் திண்ணும் கழுகுகளான கார்ப்பரேட் முதலாளிகள். அரசானது மக்களாகிய நம்மிடம் சாலை வரி, மோட்டார் வரி என வசூலித்த பிறகும், இக்கட்டணக் கொள்ளையை நம்மீது திணிக்கிறது. சுங்கச்சாவடிகள் மூலம் நம்மீது சுரண்டலை நிலைநாட்டியவர்கள், தற்போது ஜிபிஎஸ் கருவி மூலம், சாலையில் வாகனங்கள் பயணிக்கும் குறிப்பிட்ட கிலோமீட்டர்களை கணக்கிட்டு அதன் அடிப்படையில் கட்டணம் வசூலிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செப்டம்பர் 9 அன்று டெல்லியில், இந்திய – அமெரிக்க வர்த்தகக் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி, “சுங்கச்சாவடிகளில் வாகனங்களை நிறுத்தாமல், தானியங்கி வாகனப் பதிவெண் அங்கீகார முறையில் (Automatic Number-plate Recognition) தாமாக சுங்கக்கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை மத்திய அரசு சோதனை முறையில் நடைமுறைப்படுத்த உள்ளது. இதன் மூலம் நெடுஞ்சாலைகளில் பயன்பாட்டின் அடிப்படையில், அதாவது செல்லவிருக்கும் தொலைவின் அடிப்படையில் கட்டணங்களை வசூலிக்கலாம்” எனக் கூறியுள்ளார்.

படிக்க : பாரதிதாசன் பல்கலையில் தேர்வு கட்டண உயர்வு! திரு.வி.க அரசுக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

டிஜிட்டல் முறையில் கட்டணம் வசூலிப்பது ஒருபுறமிருக்கட்டும், முதலில் சுங்கச்சாவடிகளில் ஏன் கட்டணம் வசூலிக்கிறார்கள்? கட்டணங்கள் ஏன் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே செல்கின்றன? இப்போது ஜி.பி.எஸ் மூலம் கட்டணம் வசூலிப்பதன் தேவை என்ன? போன்ற கேள்விகள் நம்முன் எழுகின்றன. இக்கேள்விகளுக்கு விடை காண்பது அவசியமாகிறது.

***

நாடு முழுவதிலும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 800 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் 50 சுங்கச்சாவடிகள் உள்ளன. தனியார் முதலாளிகள் சாலைகளை அமைத்துப் பராமரித்து, செலவிட்ட தொகையை கட்டணங்கள் மூலம் வசூலித்து முடித்த பின்னர், அவற்றை நாட்டுக்கு அர்ப்பணிப்பது எனும் “உருவாக்கு – பயன்படுத்து – ஒப்படை” என்ற திட்டத்தின் கீழ் பொதுச் சாலைகள் அமைக்கப்பட்டன.

சாலைகள் அமைத்ததற்கான செலவை ஈடுகட்ட, முதலில் தனியார் முதலாளிகளுக்கு சுங்கம் வசூலிக்கும் உரிமை 15 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டது. பின்னர் 30 ஆண்டுகள் வரை நீடிக்கப்பட்டது. சாலைகள் அமைத்ததற்கான முழுத்தொகையையும் வசூலித்த பிறகு, அச்சாலைகளை பராமரிப்பதற்காக 40 சதவீதம் கட்டணம் வசூலித்துக் கொள்ள அனுமதி தரப்பட்டது. ஆனால் சாலை அமைத்த நிறுவனங்கள் ஒப்பந்தங்களை மீறி நீண்டகாலமாக முழுஅளவுக் கட்டணத்தை வசூலித்து வருகின்றன. அவ்வப்பொழுது அக்கட்டணத்தையும் உயர்த்துகின்றன.

2013ஆம் ஆண்டு மத்திய அரசானது, ஆண்டுத்தோறும் சுங்கக்கட்டணத்தை உயர்த்த தனியார் முதலாளிகளுக்கு அனுமதி அளித்தது. மத்திய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி, 1992ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன. அதன்படி, ஆண்டுக்கு 10 – 15 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது.

2021 ஆம் ஆண்டு மார்ச் புள்ளிவிவரப்படி, தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் மட்டும் ஓராண்டு வருமானம் 2,400 கோடி. தமிழகத்தில் மட்டும் இவ்வளவு பணத்தைக் தனியார் முதலாளிகள் கொள்ளையடிக்கிறார்கள் என்றால், ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் ஓராண்டில் எவ்வளவு பணத்தை கொள்ளையடிப்பார்கள். மேலும் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டதிலிருந்து இதுவரை எவ்வளவு பணத்தைக் கொள்ளையடித்து இருப்பார்கள் என்பதை நாம் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

***

தனியார் முதலாளிகள் ஆண்டுத்தோறும் சுங்கச்சாவடி கட்டணங்களை அதிகரித்து வாகன ஓட்டிகள் பணத்தை கொள்ளையடிக்க வழிசெய்த மத்திய அரசானது, தற்போது அக்கொள்ளையை மேலும் அதிகரிக்கும் விதமாக ஜி.பி.எஸ் மூலமாக – டிஜிட்டல் முறையில் – சுங்கக் கட்டணங்களை வசூலிக்கும் புதிய முறையை உருவாக்கி உள்ளது.

சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணவே, இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக மோடி அரசால் காரணம் கூறப்படுகிறது. இக்காரணத்தை இப்பொழுது மட்டும் கூறவில்லை. பாஸ்டேக் மூலம் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறையை அறிமுகப்படுத்திய போதும், இதே காரணத்தைக் கூறியது. பாஸ்டேக் முறை இருக்கும் போது ஏன் ஜி.பி.எஸ் மூலம் கட்டணம் வசூலிக்கும் புதிய முறையை கொண்டுவருகிறார்கள் என்று கேள்வி கேட்டாலே, இத்திட்டத்தின் உண்மையான நோக்கத்தை புரிந்துக்கொள்ள முடியும்.

படிக்க : சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு : உழைக்கும் மக்களை ஒட்டச் சுரண்டும் ஒன்றிய அரசு !

பாஸ்டேக் முறையானது, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு வாகன ஓட்டிகளை பழக்கப்படுத்தியது. அதாவது சுங்கச்சாவடிகளில் நேரடியாக கட்டணங்களை செலுத்திக் கொண்டிருந்த வாகன ஓட்டிகளை, ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டணங்களை செலுத்த வேண்டும் என நிர்பந்தித்து டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்குள் நெட்டித் தள்ளியது. பாஸ்டேக் முறை மற்றும் அதில் நடக்கின்ற குளறுபடிகளால், வாகன ஓட்டிகளின் பணம் கூடுதலாக சுரண்டப்படுகிறது என்பது தனிக்கதை.

ஜி.பி.எஸ் முறையில், பாஸ்டேக் மற்றும் சுங்கச்சாவடிகளுக்கான தேவையும் இல்லாமல் போகும். இம்முறையில் முக்கியமாக வாகனங்கள் செல்லும் சாலைகளின் தூரத்தை பொறுத்து சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளது. இதற்காக நாட்டின் அனைத்து வாகனங்களுக்கும் அதன் நம்பர் பிளேட் மின்னணு தொழில்நுட்பத்துடன் மாற்றப்பட உள்ளது. இந்த பணி முடிந்தால் தான் ஜிபிஎஸ் முறையில் சுங்கக்கட்டணம் சாத்தியமாகும்.

இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால், சாலையில் வாகனங்கள் பயணிக்கும் தூரமும் ஜி.பி.எஸ் முறையில் கணக்கிடப்படும். அதற்கேற்ப வாகன ஓட்டிகளின் வங்கிக் கணக்கில் இருந்து கட்டணம், தனியார் நிறுவனங்களால் நேரடியாக பிடித்துக் கொள்ளப்படும். இனிமேல் தேசிய நெடுஞ்சாலையில் 2 அல்லது 3 கிலோமீட்டர் தூர பயணங்களுக்கே கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிலை உருவாகலாம். கைநீட்டி செலவுசெய்வதற்கு பதில், டிஜிட்டல் முறையில் வங்கிக் கணக்கில் இருந்து உருவப்படுவதால், இந்தக் கொள்ளையை நம்மால் உணர முடியாது என்பது அவர்களுக்குச் சாதகமான மற்றொரு அம்சம். கிட்டத்தட்ட பிட்பாக்கேட்டுக்கு நிகரான இதை, டிஜிட்டல் பிக்பாட்கெட் என்றே கூட அழைக்கலாம்.


குப்பு

1 மறுமொழி

  1. 1.வாகனம் செல்லும் நேரத்தை வைத்தும் கட்டணம் தீர்மாணிக்கப் படும் போது விபத்துகள் ( Accident ) மேலும் அதிகமாகும்.
    2. எடையை வைத்து கட்டணம் வசூலிக்கும் போது. சரக்குகளின் விலை ஏற்றமும் நடந்தேறும்.

    இதையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க