சூத்திரனுக்கு படிப்பு எதற்கு என்று கல்வி மறுக்கப்பட்ட காலம் போய், பணம் இல்லாத ஏழை மாணவர்களுக்கு படிப்பு எதற்கு என்று கல்வி நிலையத்திலிருந்து மாணவர்களை விரட்டியடிக்கும் வேலையில் அரசு இறங்கியுள்ளது.

பல ஆண்டுகளாக பார்ப்பன கொடுங்கோல் ஆதிக்கத்தால் கல்வி மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் கிராமப்புற மக்கள் இன்று சிறிதளவேனும் அரசுப் பணிகளும் மற்ற துறைகளுக்கும் செல்ல அடிப்படை காரணமாக இருந்தது வருவது இடஒதுக்கீடும் கிராமத்திற்கு அருகில் உள்ள அரசு கல்லூரிகளும்தான். ஆனால் அதற்கும் இப்போது முடிவுகட்டத் தொடங்கியுள்ளது அரசு.

திருவாரூர் அருகே உள்ள கிடாரம்கொண்டான் பகுதியில் அமைந்துள்ள திரு.வி.க அரசினர் கலைக்கல்லூரியில் 4000-க்கும் மேற்பட்ட ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் அதிகப்படியான மாணவர்கள் கூலி விவசாயக் குடும்ப பின்னணியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஏற்கனவே கல்வி கட்டணம், பேருந்து கட்டணம் மற்றும் புத்தகமென அதிகப்படியான செலவை தன் தலையில் சுமக்கின்றனர். ஆனால் எதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் சென்ற வாரம் தீடீரென்று முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் மாணவர்களின் தேர்வுக் கட்டணத்தை உயர்த்தி உள்ளது.

படிக்க : அண்ணா பல்கலையில் சான்றிதழ் கட்டண உயர்வு : கல்வி என்ன கடைச்சரக்கா? | புமாஇமு

சென்ற ஆண்டு இளங்கலை ஒரு பேப்பருக்கு ரூ.75-ஆக இருந்ததை தற்போது ரூ.120-ஆகவும், செய்முறை தேர்வுக்கு ரூ.100-ஆக இருந்ததை ரூ.200-ஆகவும் உயர்த்தி உள்ளது. அதேபோன்று, முதுகலை படிப்பிற்கும் ஒரு பேப்பர்க்கு ரூ.120-ஆக இருந்ததை ரூ.200-ஆகவும், செய்முறை தேர்வுக்கு ரூ.200-ஆக இருந்ததை ரூ.300-ஆகவும் உயர்த்தி உள்ளது. இளங்கலைக்கு மொத்தம் ரூ.950-ஆகவும் முதுகலைக்கு மொத்தம் ரூ.1500-ஆகவும் உயர்த்தி உள்ளது.

ஏற்கனவே, மாணவர்கள் குடும்ப வறுமையின் காரணமாக படிப்பதற்கே கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், இந்த தேர்வு கட்டண உயர்வு என்பது மாணவர்களை கடும் நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளது.

இந்த தேர்வுக் கட்டண உயர்வை கண்டித்து 600-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பாக அக்டோபர் 17, 2022 அன்று போராட்டம் நடைபெற்றது.

அப்போதைக்கு போராட்டத்தை கலைப்பதற்காக மாணவர்களிடம், “பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உடனடியாக தேர்வு கட்டண உயர்வை பற்றி பேசுகிறேன்” என்று சொன்ன கல்லூரி முதல்வர் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

போராட்டம் நடத்தி இரண்டு நாட்கள் ஆகியபோதும் தேர்வு கட்டண குறைப்பு பற்றி எந்த அறிவிப்பும் வரவில்லை. பல்கலைக்கழகம் உயர்த்திய தேர்வு கட்டணத்தை அப்படியே வசூலிக்க தொடங்கியுள்ளனர்.

படிக்க : கியூட் நுழைவு தேர்வு – 1 முதல் 12 வகுப்பு வரை படித்ததற்கு மதிப்பில்லையா?

அனைவருக்கும் தரமான இலவச கல்வியைக் கொடுக்க வேண்டிய இந்த அரசு தொடர்ச்சியாக கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டண உயர்வு என்றப் பெயரில் மாணவர்களை வஞ்சித்து வருகிறது. இலவசம் என்று படிக்கவரும் ஏழை எளிய மாணவர்களும் இதுபோன்ற தேர்வுக் கட்டண உயர்வால் கல்லூரியில் இருந்து பின்வாங்கும் நிலையும் உருவாகியுள்ளது.

திரு.வி.க அரசினர் கலைக்கல்லூரியில் பேதிய கழிவறை வசதியோ குடிதண்ணீர் வசதியோ கிடையாது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற ஆசிரியர்களும் கிடையாது. கல்லூரி கட்டிடத்தில் அங்கங்கே விரிசல் காணப்படுகிறது. திருவாரூர் சுற்றியுள்ள அனைத்து கிராமப்புற மாணவர்கள் இந்த அரசுக் கல்லூரிக்குதான் படிக்க வருகின்றனர். மாணவர்கள் எண்ணிக்கை ஏற்ற பேருந்து வசதியும் கிடையாது. கிடைத்த ஒன்று இரண்டு பேருந்துகளும் மாணவர்கள் கூட்ட நெரிசலில் தொங்கி கொண்டு வருகின்றனர். ஆனால் இதைப்பற்றி துளியும் கவனம் செலுத்தாத அரசு தேர்வுக் கட்டணத்தை மட்டும் உயர்த்தி உள்ளது.

இராணுவ செலவுக்கு இந்திய வருமானத்தில் இருந்து 30 சதவிகிதம் செலவு செய்யும் அரசு, மாணவர்களுக்கு கல்வி என்று வரும்போது மட்டும் மாணவர்களிடமே பணம் வசூலித்து கல்லூரியை நடத்த சொல்கிறது. இது முற்றிலும் ஏழை எளிய மாணவர்களை கல்வியிலிருந்து விரட்டியடிக்கும் செயலாகும்.


பாரி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க