டந்த ஏப்ரல் 11-ம் தேதி தமிழக அரசானது மத்திய பல்கலைக் கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி, சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
“அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களிலும், இளங்கலை உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கைகள், தேசிய தேர்வு முகமை நடத்தும் கியூட் எனப்படும், பொது பல்கலைக் கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு வழியாக மட்டும் நடத்தும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2 மதிப்பெண்ணை கணக்கில் கொள்ளாமல், பொது நுழைவித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெறும்.
பெரும்பாலான மாநிலங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள், மாநில பாடத்திட்டங்களில் படித்து வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் விளிம்புநிலை பிரிவினர். எனவே இந்நுழைவுத் தேர்வானது பெரும்பாண்மையினருக்கு பாதகமான நிலையை ஏற்படுத்தும். தமிழகத்தை சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்கும். இந்த நுழைவுத் தேர்வும் நீட் தேர்வைப் போன்றே பள்ளிக்கல்வி முறையை ஓரங்கட்டி, நீண்ட கால கற்றல் முறைகளை வெகுவாக குறைத்து மதிப்பிட வழிவகுக்கும்.
படிக்க :
புதிய குலக்கல்வி கொள்கை : 41 மத்தியப் பல்கலைக் கழகங்களில் பொது நுழைவுத் தேர்வு !
கலைக் கல்லூரிகளுக்கும் இனி நுழைவுத் தேர்வு ! ஏழைகளின் உயர்கல்விக்கு ஆப்பு !
மாணவர்கள் தங்களது நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை அதிகரிக்க, பயிற்சி மையங்களை சார்ந்திருக்கும் சூழலை ஏற்படுத்திவிடும். மாணவர்களுக்கான பயிற்சி மையங்கள் புற்றீசல் போன்று வளர மட்டுமே இது சாதகமாக அமையும்” என்று அத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
இத்தீர்மானத்திற்கு வி.சி.க, இ.க.க, இ.க.க(மா), பாமக, காங்கிரஸ், ம.ம.க, கொ.ம.தே.க மற்றும் த.வா.க ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. பாஜக மட்டும் தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்துள்ளது.
இந்தியாவில் 54 மத்திய பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன. இவை ஒன்றிய அரசின் நேரடுக் கட்டுப்பாட்டில் வரும். இவை கலை – அறிவியல் பாடங்களில் இளங்கலையும், முதுகலையும் கற்பிக்கின்றன. ஆய்வுப் படிப்பும் உண்டு. ஜவாஹர்லால் நேரு, பனராஸ், அலிகார், ஜாமியா முதலானவை மத்திய பல்கலைக் கழகங்கள்தான்.
இவை அனைத்தும் இதுவரை பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையிலும், கூடவே அவை நடத்தி வந்த நுழைவுத் தேர்வு அல்லது நேர்காணலின் அடிப்படையிலும் அனுமதி வழங்கி வந்தன. இனி அப்படி செய்ய முடியாது.
நாடு முழுவதும் கியூட் தேர்வு நடக்கும். அந்த மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே அனுமதி வழங்கப்படும். பிளஸ் 2 பாடங்களில் 50% வாங்கியிருந்தால் போதுமானது. தமிழகத்தில் (சென்னை, திருவாரூர்) மத்திய பல்கலைக் கழகங்கள் உள்ளன. புதுவையில் ஒன்று உள்ளது.
ஏற்கெனவே மருத்துவக் கல்லூரியில் நுழைய நீட் தேர்வு நடந்து வருகிறது. இது தவிர கேட் என்ற நுழைவுத் தேர்வும் நடந்து வருகிறது; இது பொறியியல் முதுநிலைப் படிப்பிறக்கான தேர்வு என்பதால் பரவலாக அறியப்படவில்லை. தற்போது மத்திய பல்கலைக் கழகங்களுக்கு கியூட் என்ற தேர்வும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மாதிரி நுழைவுத் தேர்வுகள் எல்லாம் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் என்கிறது ஒன்றிய அரசு. ஆனால், உண்மையான நிலைமை என்ன? நீட் தேர்வு அனுபவத்தில் இருந்து பார்ப்போம்.
ஆங்கில பயிற்றுமொழி வாயிலாக, நகர்ப்புறத்தில் பெரிய தனியார் பள்ளிகளில் படித்த, முக்கியமாகத் தனிப்பயிற்சி வகுப்புகளில் படிக்கும் வசதி படைத்த பிள்ளைகளால்தான் நீட் தேர்வை தாண்டி குதிக்க முடிகிறது.
பணவசதி இல்லாத மற்றும் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு இயல்பாகவே இத்தேர்வுகள் மூலம் +2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தும் படிக்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்ட அனிதா இதற்கு ஓர் சிறந்த உதாரணம்.
அதுமட்டுமில்லாமல் இத்தேர்வுகள்மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் தனியார் கோச்சிங் செண்டர்கள் கட்டணக் கொள்ளையை நடத்துகின்றன.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு 2.85 இலட்சம் முதல் 4 இலட்சம் வரை ஆண்டுக் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 12.50 இலட்சம் வரை ஆண்டுக் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் ஆண்டுக் கல்விக் கட்டணமாக ரூ.22 இலட்சம் வரை வசூலித்துக் கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நீட் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையங்களில் குறைந்தபட்ச கட்டணம் 40 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆண்டு தோறும் சராசரியாக 10 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். அவர்களில் சரிபாதி பேர் கோச்சிங் செண்டர்களில் படித்தவர்கள் என வைத்துக் கொண்டாலும் கூட, பல்லாயிரம் கோடி இந்த வணிகத்தில் புரளுகிறது என்பது உறுதியாகிறது.
தொகுப்பாக சொல்ல வேண்டுமென்றால் நீட் மற்றும் கியூட் போன்ற நுழைவுத்  தேர்வுகள் பண வசதியில்லாத மற்றும் கிராமப்புற ஏழை மானவர்களை படிப்பில் இருந்து வெளியேற்றி தனியார் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் தனியார் கோச்சிங் செண்டர்களின் பணப்பையே நிரப்புகிறது.
இம்மாதிரி நுழைவுத் தேர்வுகள்மூலம் கல்வியின் தரமானது, அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கத்திலிருந்து விலகி, காசு இருப்பவனுக்கே கல்வி என்று விலகிப் போய் நிற்கிறது.
ஒன்றிய அரசின் புதியக் கல்விக் கொள்கையானது பள்ளிக்கல்வி முடித்து கல்லூரிக்கு போவதற்கு மாணவர்கள் நாடு தழுவிய நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் என்கிறது. (பத்தி 4.42, பக்கம் 19)
அதனால்தான் ஒன்றிய அரசானது புதியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் மருத்துவத்திற்கு நீட் என்ற நுழைவுத் தேர்வுக்கு அடுத்து கலை – அறிவியலுக்கு கியூட் என்ற தேர்வை அறிவித்துள்ளது. புதியக் கல்விக் கொள்கையின் படி மற்ற படிப்புகளுக்கும் இது போன்ற நுழைவுத் தேர்வுகளை நடத்துவார்கள்.
சட்டமன்றத்தில் நயினார் நாகேந்திரன் கூறுவதைப் போல “கியூட் தேர்வை மத்திய பல்கலைக் கழகங்களுக்குதான் அறிவித்து உள்ளார்கள். மாநிலப் பல்கலைக் கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக் கழகங்கள் விரும்பினால் ஏற்கலாம் என்றுதான் கூறப்பட்டுள்ளது”. அதனால் தமிழக அரசுக் கல்லூரிகளில் படிக்கும் நமக்கு கியூட் தேர்வினால் ஆபத்து இல்லை என இருந்துவிட முடியுமா?
படிக்க :
நீட் தேர்வு : சட்டப் போராட்ட அனுபவம், களப்போராட்ட அவசியத்தை போதிக்கிறது!
போலி ஜனநாயகத்தை அம்பலப்படுத்தும் நீட் விவகாரம் !
முடியாது. முதலில் மத்திய பல்கலைக் கழகங்களில் 9 பல்கலைக் கழகங்களுக்குதான் நுழைவுத் தேர்வு இருந்தது. தற்போது 54 பல்கலைக் கழகங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மாநிலப் பல்கலைக் கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களை பொறுத்தவரை விரும்பினால் ஆரம்பித்து பின்னர் கட்டாயப்படுத்துவார்கள் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
தற்போது மத்திய பல்கலைக் கழகங்களுக்கு மட்டும் கியூட் கட்டாயம் என்று கூறியுள்ளார்கள். அதன்பிறகு நீட்டைப் போல கலை – அறிவியலுக்கு மாநிலக் கல்லூரிகள் உட்பட எல்லா கல்லூரிகளுக்கும் கியூட் கட்டாயம் என்று கூறுவார்கள். அதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் உள்ளது. நீட் எதிர்ப்பு தீர்மானத்தை ஆளுநர் திருப்பி அனுப்பிய போதும், மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கியூட் தேர்விற்கும் எதிராக தற்போது தீர்மான நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே திமுகவானது நீட் மற்றும் கியூட் தேர்வை தனது சட்டப் போராட்டத்தின்மூலம் ரத்து செய்யும் என இருந்துவிட போகிறோமா? அல்லது  திமுக ஆட்சிக்கு வந்தபிறகு நீட்டுக்கு எதிரான சட்டப்போராட்டம் தொடங்கவில்லை. அதிமுக ஆட்சியில் இருக்கும் போதிலிருந்தே சட்டப் போராட்டம் நடந்து வருகிறது. நீட்டுக்கு எதிரான தீர்மானங்கள் மற்றும் சிறப்புச் சட்டங்கள் இயற்றப்பட்ட போதும் அதை எல்லாம் மதிக்காமல் மோடி அரசானது இம்மாதிரி நுழைவுத் தேர்வுகளை திணித்து வருகிறது. எனவே சட்டப் போராட்டம் இம்மாதிரி நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்யாது என்பதை உணர்ந்து மோடி அரசை பணிய வைக்கும் ஜல்லிக்கட்டு மற்றும் ஸ்டெர்லைட் போன்ற மக்கள் திரள் போராட்டங்களை கட்டியமைத்து இத்தேர்வுகளை ரத்து செய்யப் போகிறோமா?

அமீர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க