நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கின் தாக்கத்தால் கடந்த 2020-ம் ஆண்டு மக்கள் செத்துக் கொண்டிருந்த சமயத்தில், “புதிய கல்விக் கொள்கை 2020”-ஐ மோடி அரசின் மத்திய அமைச்சரவை நிறைவேற்றியது நினைவிருக்கலாம். இந்தப் புதிய கல்விக் கொள்கையின் ஒரு சரத்தாக, கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்து பட்டப்படிப்புகள் மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கும் நீட் பாணியிலான நுழைவுத் தேர்வு எழுத வேண்டியது அவசியம் எனக் கொண்டு வரப்பட்டதும் நினைவிருக்கலாம்.

அதனை தற்போது நடைமுறைப்படுத்தும் விதமாக 41 மத்தியப் பல்கலைக் கழகங்களில் (Central Universities) சேரும் மாணவர்களுக்கு பொது நுழைவுத் தேர்வுகளை நடத்தவுள்ளது மோடி அரசு. அதுவும் தற்போதைய கல்வியாண்டிலேயே (ஜீன் 2021) இது அமல்படுத்தப்படவுள்ளது.

படிக்க :
♦ புதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 ! மின்னிதழ்
♦ NEP 2019 : மனுநீதியின் புதிய பதிப்பு | பேராசிரியர் கருணானந்தன் நேர்காணல்

டிசம்பர் 2020-ல் யு.ஜி.சி. அமைத்த 7 பேர் கொண்ட குழுவானது, வரும் கல்வியாண்டிலிருந்து மத்தியப் பல்கலைக் கழகங்களில் சேரவுள்ள இளங்கலை, முதுகலை, பி.எச்.டி. மாணவர்களுக்கு பொது நுழைவுத் தேர்வுகளை (CUCET – Central Universities Common Enterance Test) நடத்த வேண்டும் என்றும் ஆண்டுக்கு இரண்டு முறையாவது இத்தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

இது குறித்துப் பேசிய மத்தியக் கல்வித்துறைச் செயலாளர் அமித் கரே, தற்போதைய கல்வியாண்டில் இளங்கலைப் படிப்புக்கு மட்டும்தான் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும், அதுவும் ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார். இதன் பொருள் படிப்படியாக அனைத்துக்கும் அமல்படுத்தப்படும் என்பதுதான்.

பிரிவு A, B என இரண்டு பிரிவுகளாக இத்தேர்வுகள் அமைந்திருக்கும். முதல் பிரிவில் மாணவர்களின் திறனறிவு, பொது அறிவு சார்ந்த கேள்விகளும் இரண்டாம் பகுதியில் குறிப்பிட்டத் துறை சார்ந்த கேள்விகளும் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. 3 மணிநேரம் இணையவழியில் கணினியில் நடக்கும் இத்தேர்வில், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே மாணவர்கள் தேர்வெழுத வேண்டும். வேறு எந்த மாநில மொழியிலும் தேர்வுகள் எழுத முடியாது. தாய்வழிக் கல்வி பயின்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்லூரிக் கல்வி என்பதை எட்டாக்கனியாக மாற்றும் செயல்பாடே இது.

இந்த பொது நுழைவுத் தேர்வில் மாணவர்கள் 50%-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பல்கலைக் கழகத்தில் சேர முடியும். அதிலும் பிரிவு A, B இரண்டையும் சராசரியாக கணக்கில் எடுத்துக் கொள்வதா அல்லது எந்தப் பிரிவுக்கு எப்படி மதிப்பளிப்பது என்பதையும் பல்கலைக் கழகங்களே தீர்மானிக்குமாம்.

வழக்கமாக நுழைவுத் தேர்வுகளுக்கு மோடி அரசும் அதன் எடுபிடிகளும் கூறிவரும் காரணம் “தகுதி, திறமை” என்பது மட்டும்தான். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக அம்பலப்பட்டு வரும் நீட் தேர்வு முறைகேடுகளால், இத்தேர்வுகளின் ‘தகுதி’ எத்தகையது என்பது பட்டவர்த்தனமாக அம்பலமாகியுள்ளது.

மத்தியப் பல்கலைக் கழகங்களில் அமுலாகவிருக்கும் இந்த நீட் பாணியிலான பொது நுழைவுத் தேர்வு முறைதான் நாளை எல்லா உயர் கல்வி நிறுவனங்களுக்கும் அமலாகவுள்ளது. காசிருப்பவனுக்குத்தான் கல்வி என்ற கார்ப்பரேட் இலாபவெறியும், சூத்திரர்கள் – தாழ்த்தப்பட்டவர்களுக்கு கல்வி எதற்கு என்ற பார்ப்பன கண்ணோட்டமும் ஒருங்கே இணைந்ததுதான் இப்புதிய கல்விக் கொள்கை.

அதன் ஒரு பகுதியாக அமலாக்கப்படும் இந்த பொது நுழைவுத் தேர்வுகளை எதிர்த்துக் களமாடத் தவறினால் நாளை நம் தலைமுறைகள் தற்குறிகளாகும் என்பது உறுதி.


மதி

செய்தி ஆதாரம் : Times of India

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க