மதுரை: கப்பலூர் சுங்கச்சாவடியின் அடாவடித்தனத்தை எதிர்த்து மாபெரும் கடையடைப்பு போராட்டம்!

நவம்பர் 22 அன்று கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி திருமங்கலத்தில் முழு கடையடைப்பு - கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வம்பர் 22 அன்று கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி திருமங்கலத்தில் முழு கடையடைப்பு – கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு அனைத்து வாகன உரிமையாளர்கள், வியாபாரிகள், வழக்கறிஞர்கள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் கூடி ஆதரவை தெரிவித்தனர். திருமங்கலத்தில் ஒரு கடை பாக்கி இல்லாமல் முழுவதுமாக அடைத்து ஆதரவு தந்தார்கள் வியாபாரிகள்.

***

கப்பலூர் சுங்கச்சாவடியில், திருமங்கலம் பகுதிகளுக்கு மட்டுமல்ல நான்கு வழிச்சாலையை பயன்படுத்தாமல், சுங்கச்சாவடி வழியாக இப்பகுதியை கடக்கும் (ராஜபாளையம், தென்காசி பகுதிகளில் இருந்துவரும்) உள்ளூர் வாகனங்களையும் கட்டாயமாக மிரட்டி வசூல் செய்யும் வழிப்பறி கொள்ளை இங்கு அரங்கேறி வருகிறது. இந்தப் பிரச்சினையால் இந்த சுங்கச்சாவடியில் பலமுறை கலவரம் ஏற்பட்டுள்ளது. ஒருமுறை துப்பாக்கிச்சூடு கூட நடைபெற்றது. அந்த அளவுக்கு சுங்கச்சாவயில் வழிப்பறியில் ஈடுபடும் நிர்வாகம், குண்டர்களை வைத்து உள்ளூர் வாகன ஓட்டிகளை மடக்குவது, மிரட்டுவது, கெட்ட வார்த்தைகளால் திட்டுவது போன்ற  ரவுடித்தனங்களை இங்கே அரங்கேற்றுகிறது.

மக்களிடம் தொடர் ரவுடித்தனத்தை அரங்கேற்றும் இந்த சுங்கச்சாவடியை முன்பு பலமுறை அகற்றக்கோரி போராட்டம் நடைபெற்றிருக்கிறது. ஒவ்வொரு போராட்டத்தின் போதும் உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் கட்டண வசூலிக்க மாட்டோம் என்று அதிகாரிகள் முன்பு நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் பின்வாங்குவது போல் நாடகமாடும் சுங்கச்சாவடி நிர்வாகம், மீண்டும் மீண்டும் உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிப்பது, மிரட்டுவது போன்ற ரவுடித்தனங்களை அறங்கேற்றி வருகிறது.

தற்போதும் கடந்த நவம்பர் 9 ஆம் தேதியிலிருந்து உள்ளூர் வாகனங்கள் கட்டாயம் கட்டணம் செலுத்த வேண்டும்; அதாவது ஒவ்வொரு வாகனமும் மாதம் ரூ.310 செலுத்த வேண்டும் என்று வாகன உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது சுங்கச்சாவடி நிர்வாகம்.

தொடர்ந்து உள்ளூர் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி மிரட்டி கட்டணம் வசூலித்து வரும் சுங்கச்சாவடி நிர்வாதத்தின் மீது மிகுந்த கோவமும் ஆத்திரமும் அடைந்திருக்கும் பொருமக்கள் சங்கமாய் ஒன்றிணைந்து, சங்கமாய் சேர்ந்து இந்த ஒருநாள் முழு கடையடைப்பு – கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்து நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு அனைத்து மக்களும் ஆதரவு தந்ததால் முதல் கட்ட வெற்றி அடைந்துள்ளது. இந்த போராட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே கலெக்டர் தலைமையில் மந்திரிகள் போராட்ட கமிட்டி தலைவர்கள் கூடி பேச்சுவார்த்தை நடத்தினார்கள் உள்ளூர் வாகனங்களுக்கு இனி கட்டணம் வசூலிப்பதில்லை என்று மீண்டும் முடிவானது.

ஆனாலும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், நிரந்தரமாக இந்த கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும்; சட்டப்படி நகராட்சியில் இருந்து நான்கு கிலோமீட்டருக்கு அப்பால்தான் சுங்கச்சாவடி அமைய வேண்டும் என்பது சட்ட விதி; ஆனால் இந்த கப்பலூர் சுங்கச்சாவடி இரண்டு கிலோமீட்டரில்தான் உள்ளது என்பதாலும் கட்டாயம் இந்த சுங்கச்சாவடியை அகற்ற வேண்டுமென்று உள்ளூர்வாசிகள் உறுதியாக இருக்கிறார்கள்.

அந்தப் போராட்டம் மீண்டும் மீண்டும் தொடரும் என்பதுதான் உண்மை. தனியார்மயம் வந்த பின்புதான் இலவச சேவை என்பதை நிறுத்திவிட்டு கட்டணம் வசூலிக்கும் இந்த டோல்கேட் முறை வந்துள்ளது. தனியார்மயம் திட்டம் ஒழிக்கப்படும் வரை இந்த போராட்டம் ஓயாது என்பதுதான் நிதர்சனம். இந்தப் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் சுவரொட்டிகளை ஒட்டி ஆதரித்தும் தோழர் சிவகாமு, பரமன், நாகராஜ் போன்ற தோழர்களும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

தகவல்:
மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க