மங்களூர் குண்டு வெடிப்பு: ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதத்தை ஒழிக்காமல் குண்டுவெடிப்புகள் ஒருபோதும் நிற்காது !

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்று முசுலீம்களுக்கு அறிவுரை சொல்வதை விட்டுவிட்டு ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி பாசிச சக்திகளை வீழ்த்துவேண்டுமெனில் மக்கள் படையாக மாறவேண்டும். இதைப்புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.

ர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 19 ஆம் தேதி ஓடும் ஆட்டோவில் திடீரென குண்டுவெடித்தது. இதில் ஆட்டோ ஓட்டுனரும் குக்கர் குண்டுடன் பயணித்த ஷாரிக் என்பவரும் படுகாயமடைந்ததாகவும் கூறப்பட்ட சம்பவமானது அடுத்து சில மாதங்களில் கர்நாடகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் மற்றும் தற்போது குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்று வருகின்ற சட்டமன்றத் தேர்தல்களில் முக்கிய பங்கிக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

இச்சம்பவம் நடைபெற்ற அடுத்த நாள் கர்நாடகவின் டிஜிபி “இது ஒரு பயங்கரவாத சம்பவம்” என்று அறிவித்தார். உடனேயே ஷாரிக் எங்கெங்கெல்லாம் சென்றார் என்று ஊர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஊடகங்களில் பரப்பப்பட்டது. தமிழ்நாட்டில் நாகர்கோயில், மதுரை, ஊட்டி உள்ளிட்ட இடங்களுக்கு அவர் வந்ததாகவும் கூறின ஊடகங்கள். ஷாரிக்கிற்கு சிம்கார்டு வாங்கிக்கொடுத்த ஆசிரியர் ஒருவரை தமிழ்நாடு போலீசு விசாசித்து முடித்து இப்போது கர்நாடக போலீசு விசாரித்துக்கொண்டு இருக்கிறது.

குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு இஸ்லாமிக் ரெசிடென்ஸ் கவுன்சில் என்ற அமைப்பு பொறுப்பெடுத்துக் கொண்டதும், இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு பரிந்துரை செய்ததும் என அடுத்தடுத்து இரு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இசுலாமிய பயங்கரவாத சம்பவமாக இது இருக்க வாய்ப்பில்லை என்றோ காவி பாசிஸ்டுகளின் சதியாக இருக்குமோ? என எதையும் உறுதியாகக் கூறமுடியாத நிலையே உள்ளது.

படிக்க : கோவை கார் எரிவாயு உருளை வெடிப்பு வழக்கு | மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை!

மதச்சார்பின்மை பேசுவோரும் அறிவு ஜீவிகளும் இப்படிப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் – இசுலாமிய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டிருக்கலாம் எனும்போது – நடைபெறும்போது முசுலீம்களுக்கு அறிவுரை கூறுவதும் முசுலீம் இளைஞர்கள் தவறான பாதைக்கு சென்றுவிடக் கூடாது என்றும் புலம்பி வருகின்றனர். ஆனால் முசுலீம் இளைஞர்கள் இசுலாமிய பயங்கரவாதத்தை நோக்கிச் செல்வதற்கு ஊற்றுக்கண் எது என்பதை பேசுவதில்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான ஆதிக்க சாதியினர் தாக்குதலின்போது “இரண்டு பேரும் அமைதி காக்கவும்” என்பதற்கு ஒப்பான அறிவுரைகள். பாதிக்கப்பட்டோருக்கு வர்க்க மற்றும் சமூக நல்லிணக்க அரசியலின் மீது நம்பிக்கை இன்றி பயங்கரவாத செயல்கள் மீதே நாட்டம் ஏற்படும்.

நீங்கள் சாலையில் அல்லது பேருந்தில் அல்லது ரயிலில் சென்றுகொண்டு இருக்கிறீர்கள். யாரையும் சோதனையிடாத போலீசு நீங்கள் தாடி வைத்திருப்பதனாலேயும் குல்லா அணிந்திருப்பதனாலேயும் மட்டுமே சோதிக்கப்படுகிறீர்கள். அச்சுறுத்தப்படுகிறீர்கள் புகைப்படம் எடுக்கப்படுகிறீர்கள், அலைக்கழிக்கப்படுகிறீகள், முசுலீம் என்பதலேயே நீங்கள் சந்தேகப்படுவதற்கும் நிராதரவாக இருப்பதற்கு தகுதியானவராகிறீர்கள். உங்களுக்கு இழைக்கப்படும் இக்கொடுமைகளுகு எதிராக இச்சமூகம் அமைதியாக இருக்கும், உங்கள் மீதான அடக்குமுறைகளை நியாயப்படுத்தும் என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதிலிருந்து இப்பிரச்சினையை பார்க்கத்தொடங்க வேண்டும்.

எவ்விதப் பிரச்சினைக்கும் தனிநபர் பயங்கரவாதம் தீர்வாகப்போவதில்லை. ஆனால் தனிநபர் பயங்கரவாதம் உருவாகுவதற்கான அடிப்படைகள் என்ன என்பதை நாம் பரிசீலிக்க வேண்டும். “இப்படிப்பட்ட முசுலீம்களின் பயங்கரவாத நடவடிக்கைகளே ஆர்.எஸ்.எஸ்–ஐ வளர்த்துவிடுகிறது” என்று தலைகீழாக சிந்திப்பது என்பதே பார்ப்பனிய – காவி மன நிலையே.

“தாழ்த்தப்பட்ட மக்கள் சங்கம் அமைத்து உரிமைகளுக்காக போராடுவதால்தான் ஆதிக்க சாதியினரின் கொடுமைகள் அதிகமாக இருக்கின்றன, தொழிற்சங்க கூலி உயர்வுப் போராட்டமே முதலாளிகளின் அடக்குமுறைக்கு காரணம், கம்யூனிஸ்டுகள் விவசாயிகளை தூண்டிவிட்டதால்தான் கீழ்வெண்மணி சம்பவம் நடைபெற்றது”. இப்படி காலம் காலமாக ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட மக்கள் மீது பழியைத் தூக்கிப்போடும் பழக்கம் ஒன்றும் புதிதல்ல. அதன் தொடர்ச்சியாகவே இசுலாமிய பயங்கரவாதத்தால் காவி பயங்கரவாதம் வளர்கிறது என்ற பொய்யான கருத்து -அது பொய்யாக இருந்தாலும்- பலர் மனதில் நிலைபெற்றுவிட்டது.

மோடி தன்னுடைய எட்டாண்டு ஆட்சியை நிறைவு செய்திருக்கிறார். இந்த எட்டாண்டுகளில் சிறுபான்மையினர் குறிப்பாக முசுலீம்கள் இழந்த உரிமைகள் சொல்ல முடியாது. காசுமீரின் சிறப்புரிமை பறிப்பு – கொடும் அடக்குமுறைகள் – ராணுவத்தாக்குதல்கள், பாபர் மசூதி பறிப்பும் தீர்ப்பளித்த பின்னர் நீதிபதிகளுக்கு அளிக்கப்பட்ட விருந்தும் – அடுத்து காசி, மதுரா மசூதிகள் இடிபடுவதற்கு காத்திருப்பு, உத்தரபிரதேசத்தில் தொழுகை நடத்தவும்-பாங்கு ஓதவும் தடை, ஹிஜாப் தடை – இது தொடர்பான வழக்கில் நீதிமன்றங்களின் அணுகுமுறை, மாட்டுக்கறி சாப்பிட்டார் – மாடு வைத்திருந்தார் என்று கூறி அடித்துக் கொல்லப்பட்ட (mob lynching) முசுலீம்கள் ஏராளம், ஒரு கண்ணியமான வாழ்வை இனியும் இந்த மண்ணில் எதிர்பார்க்க முடியாது என்றே சூழலை உருவாக்கிய ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி பாசிசத்தை ஒழித்துக்கட்டாமல் அல்லது ஒழித்துக்கட்டுவதற்கான தீர்க்கமான முன்னெடுப்பை முசுலீம் அல்லாத மற்றவர்கள் முன்னெடுக்காமலேயே அல்லது நாங்கள் இருக்கிறோம் என்று நம்பிக்கை உருவாக்காமலேயே முசுலீம்களை மட்டும் குறை சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது?

மாலேகான், சம்ஜவ்தா உள்ளிட்ட குண்டுவெடிப்புகள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் நடத்தப்பட்டதென்பது உலகறியும். ஷிண்டே என்ற ஆர்.எஸ்.எஸ்-ன் முன்னாள் ஊழியர் நாடெங்கு நடைபெற்ற பயங்கவாதத் தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ்-க்கு பங்கு இருப்பதை நீதிமன்றத்தில் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்திருக்கிறார். கேரளாவைச் சேர்ந்த சதீஷ் மின்னி என்ற ஆர்.எஸ்.எஸ்-ன் முன்னாள் முழுநேர ஊழியர் இது தொடர்பாக நூலே எழுதியுள்ளார். ஆனாலும் நாடு அமைதியாகத்தானே இருக்கிறது.

நாடெங்கும் ஆயுத பயிற்சி எனும் ஷாகாக்கள் நடத்தப்படுகின்றன, ஆயுத பயிற்சி எனும் ஷாகாக்கள் நடத்தப்படுகின்றன, வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் நாடெங்கும் தயாரித்துக்கொண்டு இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் நேரடியான உள்நாட்டுப்போரை தொடங்கவும் தயாராக இருக்கிறார்கள். அதற்கெதிராக மக்கள் அரசியல் ரீதியாகவும் படையாகவும் திரட்டப்படாமலிருக்கும் போது, பாதிக்கப்படும் தனது சமூக மக்களுக்கு தன்னால் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கும் ஒரு முசுலீம் இளைஞன் என்ன செய்வார்?

வழிதவறி அவர் போக வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்-ன் திட்டம். அதன் மூலம் தான் இசுலாமிய பயங்கரவாதம் என்று கூறியே மக்களை பிளவுபடுத்தவும் முடியும்.

படிக்க : ஆர்.எஸ்.எஸ்-ன் திட்டமிட்ட குண்டுவெடிப்புகள் பற்றி முன்னாள் ஊழியர் ஒப்புதல் வாக்குமூலம்!

ஆர்.எஸ்.எஸ் பாசிச அமைப்பிடம் படை உள்ளது, ஆயுதம் உள்ளது, இராணுவம் உள்ளது ஏன் ஒட்டு மொத்த அரசே அவர்களிடம் தான் உள்ளது. நிராயுதாபாணியாக இருக்கும் மதசார்பற்ற மற்றும் பாசிச எதிர்ப்பாளர்களை நம்பி வருவதற்கு என்ன இருக்கிறது? பார்ப்பன – இந்து மதவெறி பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டாமல் இசுலாமிய பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது.

விரக்தியடைந்த முசுலீம் இளைஞனிடம் “பொறுமையாக இரு தேர்தல் வரை” என்று இன்னமும் சொல்லிக்கொண்டு இருப்பதன் பயன் என்ன?. அந்த இளைஞன், ஆர்.எஸ்.எஸ் ஒரு பாசிச அமைப்பு, அதை தேர்தல் மூலமாக வீழ்த்த முடியாது என்பதும் ஆர்.எஸ்.எஸ்-ன் முதல் இலக்கு முசுலீம்கள் என்பதும் சிஏஏ நடைமுறைப்படுத்தப்பட்டால் தாங்கள் எப்போதும் வேண்டுமானாலும் அகதிகளாக்கப்படுவோம் என்பதும் அவன் நன்கு அறிவான்.

தேர்தலை நம்பிக்கொண்டு திட்டமும் இலக்கும் இல்லாதவர்களுக்கு, வழி தவறும் முசுலீம் இளைஞர்களைப் பார்த்து குறை கூறுவதற்கு தார்மீக உரிமை இருக்கிறதா என்ன?

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்று முசுலீம்களுக்கு அறிவுரை சொல்வதை விட்டுவிட்டு ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி பாசிச சக்திகளை வீழ்த்துவேண்டுமெனில் மக்கள் படையாக மாறவேண்டும். இதைப்புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.

ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி பாசிச சக்திகளுக்கெதிரான உண்மையான தடுப்பரணை கட்டுவது இன்றைய தலையாயக்கடமை. பாசிஸ்டுகளை வீழ்த்த ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு பள்ளியிலும், கல்லூரியிலும், தொழிற்சாலையிலும் என அனைத்து இடங்களிலும் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணிகளை கட்டியமைத்து பாசிஸ்டுகளை களத்தில் சந்திக்க வேண்டும் என்பதை திட்டமாக்குவோம். ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி பாசிஸ்டுகளுக்கு எதிரான தடுப்பரணை உருவாக்குவோம். சிறுபான்மை மக்களுக்கு நம்பிக்கையை உருவாக்குவோம்.

மருது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க