ஆர்.எஸ்.எஸ்-ன் திட்டமிட்ட குண்டுவெடிப்புகள் பற்றி முன்னாள் ஊழியர் ஒப்புதல் வாக்குமூலம்!

இந்தியாவின் பல்வேறு கலவரங்களை ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டு பயிற்சி அளித்து செய்துள்ளது என்பது அந்த அமைப்பின் முன்னாள் ஊழியர் ஷிண்டே-வின் வாக்குமூலம் அம்பலப்படுத்துகிறது.

0

காராஷ்டிரா மாநிலம் நான்டேட் பகுதியை தளமாகக் கொண்ட ராஷ்ட்ரிய ஸ்வயன்சேவக் சங்க (ஆர்.எஸ்.எஸ்) உறுப்பினர்களின் வீட்டில் பதினாறு ஆண்டுகளுக்கு முன் வெடிகுண்டு வெடித்தது. இந்த வெடிகுண்டு சம்பவத்தில் அந்த அமைப்பின் பல மூத்த இந்துதுவ தலைவர்கள் நேரடியாக தொடர்ப்புடையவர்கள் என்று கூறி ஆர்.எஸ்.எஸ்-ன் முன்னாள் ஊழியர் ஒருவர் சிபிஐ நீதிமன்றத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளார்.

விண்ணப்பம் தாக்கல் செய்துள்ள யஷ்வந்த் ஷிண்டே, 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆர்.எஸ்.எஸ் ஊழியராக இருந்தவர். மேலும் விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி) மற்றும் பஜ்ரங் தள் போன்ற இந்துமதவெறி அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தவர்.

குண்டுவெடிப்புக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, “நாடு முழுவதும் குண்டுவெடிப்புகளை நடத்துவதற்கான” பயங்கரவாத பயிற்சி முகாம் நடத்தப்பட்டது பற்றி ஒரு மூத்த வி.எச்.பி உறுப்பினர் தன்னிடம் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி இரவில் நிகழ்ந்த நான்டேட் குண்டு வெடிப்பு, பர்பானி (2003) மற்றும் பூர்ணா (2004) மசூதிகள் மீது குண்டுகள் வீச்சு என சில ஆண்டுகளில் மகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதியில் மூன்று குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. குண்டு வெடிப்புகளின் அனைத்து குற்றவாளிகளையும் நீதிமன்றங்கள் ஏற்கனவே விடுவித்துள்ளன.

படிக்க : இசுலாமியர்களை தனிமைப்படுத்தித் தாக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.

இந்த நான்டேட் குண்டு வெடிப்பு வழக்கை மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்புப் பிரிவிடமிருந்து சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் ஊழியர் என்று கூறப்படும் லஷ்மன் ராஜ்கோந்த்வார் வீட்டில் தற்செயலாக குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகக் கூறியுள்ளது சிபிஐ. ராஜ்கோந்த்வாரின் மகன் நரேஷ் மற்றும் வி.எச்.பி செயல்பாட்டாளரான ஹிமான்ஷு பான்சே ஆகியோர் வெடிகுண்டைச் சேகரிக்கும்போது வெடித்ததால் இறந்தனர். அவுரங்காபாத்தில் உள்ள மசூதியை குறிவைக்க இந்த வெடிகுண்டு பயன்படுத்த திட்டமிட்டிருக்கலாம் என சிபிஐ கருதுகிறது.

***

யஷ்வந்த் ஷிண்டே, 1999 ஆம் ஆண்டு முதல் கோவாவில் முழுநேர வி.எச்.பி ஊழியராகப் பணி புரிந்து வருகிறார். அதிலிருந்தே ஹிமான்ஷு பான்சே-வை தனக்குத் தெரியும் என்று கூறுகினார். ஜம்முவில் ஆயுதப் பயிற்சி பெற பான்சே-வும் அவரது நண்பர்கள் ஏழு பேரும் ஒப்புக்கொண்டதாகக் கூறினார். இந்தப் பயிற்சி இந்திய ராணுவ வீரர்களால் அளிக்கப்பட்டது என்று ஷிண்டே கூறினார்.

இந்த வழக்கில் ஷிண்டே அரசு தரப்பு சாட்சியாக இல்லை. ஆனால் அவரது விண்ணப்பத்தில், “பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மோகன் பகவத் உட்பட ஒவ்வொரு ஆர்.எஸ்.எஸ் தலைவர்களையும் கடந்த 16 ஆண்டுகளாக நான் வேண்டுகோள் விடுத்துவந்தேன். என் வேண்டுகோளுக்கு யாரும் செவிசாய்க்கவில்லை. எனவே, நான் இவ்வளவு காலமாக எனக்குத் தெரிந்த அனைத்தையும் நீதிமன்றத்தின் முன் பதவி செய்யத் தயாராக இருக்கிறேன் என்றார்.

நான்டேட் நீதிமன்றத்தில் ஷிண்டே-வின் வழக்கறிஞர் சங்கமேஷ்வர் டெல்மேட், ஷிண்டே இப்போது ஏன் முன் வருகிறார் என்பது குறித்து ஆரம்பத்தில் தனக்கும் சந்தேகம் இருந்ததாக கூறினார். “உண்மையில் நான் அவரிடம் இந்தக் கேள்வியை முன்வைத்தேன். தனக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் என்னிடம் கூறினார். இப்போது அவர் அமைதியாக இருக்க அவரது மனசாட்சி அனுமதிக்கவில்லை” என்று கூறினார்.

ஷிண்டே, தனது வாக்குமூலத்தின்படி, அவருக்கு 18 வயதில் ஆர்.எஸ்.எஸ்.-ல் சேர்ந்தார். அவருக்கு இப்போது 49 வயது. ஷிண்டேவின் வாக்குமூலம் அவரது இளமைக்காலத்தில் அவர் பங்கேற்ற நிகழ்வுகளை பட்டியலிடுகிறது.

1995 ஆம் ஆண்டில், ஜம்முவில் உள்ள ரஜோரிக்கு சென்றபோது, பரூக் அப்துல்லாவைத் தாக்கியதற்காக ஷிண்டே பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் பின்னர் ஷிண்டேவை விடுவித்தாலும், இந்த விண்ணப்பத்தில் அவர் தாக்குதலுக்கு பொறுப்பேற்கிறார். இந்த நிகழ்வை தொடர்ந்து, ஷிண்டே ஒரு “பிரசாரக்” பிரச்சாரகராக பயிற்சி பெற்றார். இறுதியில் 1999 இல் பஜ்ரங் தளத்தின் மும்பை பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஷிண்டே தனது வாக்குமூலத்தில், மாலேகான் 2008 குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் உட்பட மூன்று நபர்களை புனேவில் உள்ள சிங்ககாட்டில் ஆயுதப் பயிற்சி மற்றும் வெடிகுண்டு தயாரிப்பு பயிற்சியில் பங்கேற்றதாகக் குறிப்பிட்டுள்ளார். “பயங்கரவாத நடவடிக்கைகளை நான் ஏற்கவில்லை. ஆயினும், பயங்கரவாதப் பயிற்சியில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை அறிந்து கொள்வதற்காகவே நான் சதித்திட்டத்தில் பங்கேற்றேன்” என்று ஷிண்டே கூறுகிறார்.

படிக்க : தமிழ்நாட்டை மதக் கலவர பூமியாக்க முயற்சிக்கும் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் கும்பலின் சதியை முறியடிப்போம் !

2000-களின் முற்பகுதியில் மகாராஷ்டிராவில் நடந்த குண்டுவெடிப்பு வழக்குகள், இந்து சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய முதல் நிகழ்வுகளாகும்.

பர்பானி குண்டுவெடிப்பு மற்றும் 2004 ஜல்னா மசூதி குண்டுவெடிப்பு இரண்டும் நான்டேட் வழக்கின் அதே செயல் முறையைப் பின்பற்றியதாக ஷிண்டே கூறுகிறார். ஆனால் அவர் நான்டேட் வழக்கில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளார். “அந்த வழக்குகளில், குற்றஞ்சாட்டப்பட்ட நபரை நீதிமன்றங்கள் ஏற்கனவே விடுவித்துள்ளன. நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் மட்டுமே நான் கவனம் செலுத்த விரும்புகிறேன்” என்றார். மேலும், வழக்கறிஞர் டெல்மேட், சிபிஐ வழக்கறிஞர் (அரசு வழக்கறிஞர்) மற்றும் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளதாகவும், செப்டம்பர் 22 ஆம் தேதிக்குள் அவர்களின் பதிலைக் கேட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்தியாவின் பல்வேறு கலவரங்களை ஆர்.எஸ்.எஸ் பிஜேபி திட்டமிட்டு பயிற்சி அளித்து செய்துள்ளது என்பது அந்த அமைப்பின் முன்னாள் ஊழியர் ஷிண்டே-வின் வாக்குமூலம் அம்பலப்படுத்துகிறது. காவி பயங்கரவாதிகளை உருவாக்கி குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி கலவரங்களை உருவாக்கும் காவி பயங்கரவாத பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதனுடன் தொடர்புடைய சங் பரிவார அமைப்புகளை தடை செய்து, ஒழித்துக்கட்ட உழைக்கும் மக்கள் படையாய் ஒன்றிணைய வேண்டியது அவசியம்.

சந்துரு
செய்தி ஆதாரம்: the wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க