சர்வதேச  அச்சுறுத்தலாக வளர்ந்துவரும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்!

இந்தியாவில் நடப்பதைப் போல லெய்ஸ்டர் நகரிலும், “நீ இஸ்லாமியனா” என்று கேட்டு தாக்கும் பழக்கமும் உருவாகியுள்ளது. கடந்த மே மாதம் ஒரு இஸ்லாமிய இளைஞரும், செப்டம்பர் மாதம் இஸ்லாமியர் என்று சந்தேகிக்கப்பட்ட ஒரு சீக்கிய இளைஞரும் இந்துத்துவ கும்பல்களால் இத்தகைய தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

ங்கிலாந்தில் இந்திய மக்கள் அதிகமாக வாழும் லெய்ஸ்டர் பகுதியில் கடந்த சில வாரங்களாக இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் நடந்து வரும் கலவரம் அப்பகுதி மக்களையும், அங்கிருக்கும் மதத் தலைவர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஆகஸ்ட் மாதம் நடந்த இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை முகாந்திரமாகக் கொண்டு இந்துத்துவ கும்பல் தொடங்கி வைத்த இக்கலவரம், பலரை வெளியில் வர முடியாதவாறு வீட்டிற்குள்ளேயே முடக்கியது. இங்கிலாந்தின் இப்பகுதியில், பல்வேறு வகைப்பட்ட மதம், இனத்தைச் சார்ந்த மக்கள் வாழ்ந்தாலும் கடந்த ஐம்பது ஆண்டுகளில் இதுபோன்ற எந்தக் கலவரத்தையும் பிரிவினையையும் இந்நகரம் கண்டதில்லை.

கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ஆம் தேதி துபாயில் இந்தியா-பாகிஸ்தான் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து, லெய்ஸ்டர் நகர தெருக்களில் குவிந்த இந்துத்துவ கும்பல் ஒன்று, 1947-இல் பாகிஸ்தான் பிரிவினையின் போது எழுப்பப்பட்ட “பாகிஸ்தான் முர்தாபாத்” (பாகிஸ்தானுக்கு மரணம்) என்ற முழக்கத்தை எழுப்பியது. பின்னர் இந்த பேரணி வன்முறையாக மாறியது.

இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் கழித்து கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி முஸ்லிம்களின் வணிகத் தெருவான கிழக்கு லெய்ஸ்டரின் கிரீன் லேன் ரோட்டில் மீண்டும் கலவரம் தொடங்கியது. ஒரே மாதிரி முகமூடி அணிந்த சுமார் 200 இந்துத்துவ பயங்கரவாதிகள், அந்த தெருவிற்குள் இருக்கும் ஒரு கோயிலிலிருந்து மட்டைப்பந்து உள்ளிட்ட ஆயுதங்களுடன் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று முழக்கமிட்டபடி அணிவகுத்துச் சென்றனர். அப்போது பாட்டில்களை வீசி வன்முறையைத் தூண்டுவது, மசூதியைக் கடந்து செல்லும் போது முஸ்லிம் மக்களை இழிவாகப் பேசுவது, அவர்களின் மீது தாக்குதல் நடத்துவது போன்ற செயல்களிலும் இந்துத்துவ கும்பல் ஈடுபட்டது. இதனால், ஆத்திரமடைந்த இஸ்லாமியர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இது பின்னர் பெரிய கலவரமாக வெடித்தது.

இது போன்ற கலவரங்களை இதற்கு முன்பு பார்த்திடாத லெய்ஸ்டர் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக லெய்ஸ்டர் நகரைச் சேர்ந்த ஜேம் மசூதி மற்றும் இஸ்கான் இந்து கோயில் மத தலைவர்கள் இணைந்துக் கூட்டறிக்கை வெளியிட்டனர். அதில், “இரு மதத்தைச் சேர்ந்த நாங்கள், ஒன்றாகதான் இந்நகரத்திற்கு வந்தோம். இங்குள்ள இனவெறி உள்ளிட்ட சவால்களை ஒன்றாகதான் எதிர்கொண்டோம். லெய்ஸ்டர் குடும்பமாகிய நாங்கள் இந்து, இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்று. நாங்கள் சகோதர சகோதரிகளும் கூட. எனவே, பிரிவினையை ஏற்படுத்தும் சித்தாந்தத்திற்கு இங்கு இடமில்லை” என்று கூறியுள்ளனர்.

லெஸ்டர் மதவெறிக் கலவரத்திற்கு பிறகு, பதற்றத்தைத் தவிர்ப்பதற்காக மதநல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை பேணுமாறு அலைக்கூவல் விடும் இஸ்லாமிய தலைவர்

மேலும், “எந்த மதத்திற்கும் எதிரான இழிவான கோஷங்கள், வழிபாட்டிற்கு எதிரான தாக்குதல்கள் என எதையும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம். மக்களும் இந்த செயலில் ஈடுபடுபவர்களுக்கு இடமளிக்க வேண்டாம்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

***

செப்டம்பர் 17-ஆம் தேதி நடந்த முஸ்லீம்கள் மீதான தாக்குதல் குறித்து தெரிவித்த போலீஸ், அத்தாக்குதலைத் ‘திட்டமிடப்படாதப் போராட்டம்’ என்றே குறிப்பிடுகிறது. அதைபோல, பெரும்பாலான பத்திரிகைகளும் இக்கலவரம் கிரிக்கெட் போட்டியை ஒட்டி நடந்ததாகவே சித்தரித்தன.

ஆனால், கலவரம் தொடர்பான காணொளிகளும் சமீப காலமாக இங்கிலாந்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல் சம்பவங்களும் இது ஒரு திட்டமிடப்பட்ட கலவரம் என்பதையே அம்பலப்படுத்துகின்றன.

கலவரம் நடந்த அன்று, இந்து கோயிலுக்குள் இருந்து வெளியேறிய கூட்டத்தைப் பார்க்கும் போது, அது தற்செயலாகக் கூடிய கூட்டம் இல்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. அந்த கும்பல் அணிந்திருந்த ஆடைகள் முதல் முழங்கிய முழக்கங்கள் வரை அனைத்தும் கனகச்சிதமாகவும் ஒருங்கமைக்கப்பட்டதாகவும் இருந்தன.

கார்டியன் பத்திரிகை வெளியிட்ட செய்தியில், “கலவரத்திற்குப் பிறகு கைது செய்யப்பட்ட 18 பேரில் 8 பேர் லெய்ஸ்டர் நகரைச் சாராதவர்கள். அதில் 5 பேர் பிர்மிங்காம் நகரையும், 3 பேர் சோலிஹஸ், லூடன் மற்றும் ஹவுன்ஸ்லோ நகரங்களையும் சேர்ந்தவர்கள்” என்று குறிப்பிடுகிறது. இதன்மூலம், இந்தக் கலவரத்தில் பங்கேற்பதற்காகவும் இக்கலவரத்தைத் தூண்டுவதற்காகவும் பல இந்துபயங்கரவாதிகள் திட்டமிட்டே லெய்ஸ்டர் நகரினுள் நுழைந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.

கலவரம் குறித்து லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்-இன் பேராசிரியர் ஒருவர் கூறும்போது, “லெய்ஸ்டரில் நடந்த நிகழ்வுகள் தனிமைப்படுத்தப்பட்டவையோ, தன்னிச்சையானவையோ  அல்லது உள்ளூர் சமூகங்களுக்கு இடையிலான மோதல்களோ அல்ல. லெய்ஸ்டரில் குறிப்பிட்ட நோக்கத்திற்காக நகரத்திற்கு வந்த இந்து ஆண்களின் குழுக்களால் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் இவை” என்று குறிப்பிட்டார்.

மேலும், “கொடிகள் மற்றும் தடிகளுடன் தெருக்களில் அவர்கள் அணிவகுத்துச் செல்வது இந்தியாவிலிருந்தும் அதன் இந்துப் பேரினவாத அரசாங்கத்திலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்ட இந்துத்துவா நாடகப் புத்தகத்திலிருந்து நேராக வெளிப்பட்டது” என்றும் கூறினார்.

லெய்ஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் நீல் சக்ரோபர்தி என்பவரும் ஏறக்குறைய இதே கருத்தை வெளிப்படுத்தினார். “இந்தியாவின் மதப் பதட்டங்களும், அங்குள்ள ஒரு கடுமையான, வன்முறை, தேசியவாத அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் நாம் [லெஸ்டரில்] பார்த்தவற்றில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்றார். இதன் மூலம் இக்கலவரம் கிரிக்கெட் போட்டியை ஒட்டி நடந்த தன்னெழுச்சியான நிகழ்வு அல்ல என்பது தெளிவாகத் தெரியவருகிறது.

சமீப காலமாகவே லெய்ஸ்டர் பகுதியில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. முன்னெப்போதும் இல்லாத வகையில், ஆகஸ்டு 15, ‘சுதந்திர தினத்தில்’ அங்குள்ள மசூதிக்கு வெளியில் சத்தமிட்டுக் கொண்டாடும் வழக்கம் லெய்ஸ்டரில் உருவாகியுள்ளது. சமீபத்தில் இணையத்தில் பரவிய ஒரு காணொளியில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் மெல்டன் சாலை அருகில் உள்ள தெருக்களில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானின் பக்கங்கள் கிழிந்து கிடப்பதையும், அதை இஸ்லாமியர்கள் பொறுக்கும் காட்சியும் இடம் பெற்றிருந்தது.

மேலும், இந்தியாவில் நடப்பதைப் போல லெய்ஸ்டர் நகரிலும், “நீ இஸ்லாமியனா” என்று கேட்டு தாக்கும் பழக்கமும் உருவாகியுள்ளது. கடந்த மே மாதம் ஒரு இஸ்லாமிய இளைஞரும், செப்டம்பர் மாதம் இஸ்லாமியர் என்று சந்தேகிக்கப்பட்ட ஒரு சீக்கிய இளைஞரும் இந்துத்துவ கும்பல்களால் இத்தகைய தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர். ஆனால், இவை தொடர்பான எந்த புகார்களுக்கும் லெய்ஸ்டர் காவல்துறை முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறது ஒரு இஸ்லாமிய பத்திரிகை.

இங்கிலாந்தின் லெய்ஸ்டர் நகரத்தில் வாழ்பவர்களில் கிட்டத்தட்ட 40 சதவிகிதத்தினர் இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர்கள். இங்கிலாந்தில் லெய்ஸ்டர் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் மட்டும்தான் இந்துக்களும் இஸ்லாமியர்களும் சீக்கியர்களும் இத்துணை அதிகமாக வாழ்கின்றனர். பல்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் வாழ்ந்து வந்தாலும், பிரிவினைகள் ஏதுமின்றி பன்முகக் கலாச்சாரத்திற்கு ஓர் அடையாளமாகவே இதுநாள்வரை அந்த நகரம் இருந்து வந்துள்ளது.

அத்தகைய நகரில்தான் தற்போது மதவெறிக் கலவரத்தைத் தூண்டிவிட்டுள்ளது இந்துத்துவ கும்பல். சொல்லப்போனால் லெய்ஸ்டர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கே அந்த நகரின் பன்முகத்தன்மையே காரணம். இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ், இந்துக்களும் இஸ்லாமியர்களும் அதிகம் வாழும் பகுதியைக் குறிவைத்துதான் கலவரங்களைத் தூண்டும். ஏனெனில், அத்தகைய பகுதிகள்தான் அவர்கள் நினைத்த அளவிற்கு பிளவையும் வன்முறையையும் ஏற்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும்.

இவ்வாறு கலவரத்திற்கு லெய்ஸ்டர் நகரம் குறிவைக்கப்பட்டது, இஸ்லாமிய வணிக தெருவில் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட்டு முதல் தாக்குதல்களை இவர்கள் நடத்தி பின்னர் அதை கலவரமாக மாற்றுவது, “நீ இஸ்லாமியனா?”  என்று கேட்டு தாக்குவது போன்றவை எல்லாம் சங்கப் பரிவாரக் கும்பல் முஸ்லீம்களுக்கு எதிராக இந்தியாவில் பின்பற்றிய தாக்குதல் வடிவங்களாகும். அவற்றை தற்போது ஆர்.எஸ்.எஸ் இங்கிலாந்திலும் அமல்படுத்திப் பார்த்துள்ளது.

***

இந்த கலவரம் தொடர்பாக லெய்ஸ்டர் போலீஸ் கிட்டதட்ட ஐம்பது நபர்களைக் கைது செய்துள்ளது. மேலும், போலீஸ் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கலவரம் நடந்த சனிக்கிழமை அன்று திரளப் போகும் மக்களின் எண்ணிக்கை தொடர்பான நேரடி உளவுத்துறை தகவல் எதுவும் வரவில்லை என்றும் அந்த சூழலில் அதிகாரிகள் வரும் வரை அங்கிருந்த குறைந்த எண்ணிக்கையிலான போலீஸ் கலவரக்காரர்களை எதிர்கொண்டு கலவரத்தைத் தடுக்கும் வகையில் தங்களால் முடிந்ததைச் செய்தார்கள்” என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், பல பத்திரிகைகள், போலீஸ் இக்கலவரத்தைக் கட்டுப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதை அம்பலப்படுத்தியுள்ளன. கலவரம் நடந்த அன்று வெளியான பல காணொளிகளில், இந்து குண்டர்கள் கையில் ஆயுதங்களோடு தெருவில் திரிவதையும், போலீஸ் ஓரமாக நின்று வேடிக்கைப் பார்ப்பதையும் காண முடிகிறது.

லெய்ஸ்டர் போலீசின், இந்த இந்துத்துவ-சார்பு போக்கு என்பது அந்நாட்டு போலீஸ் மத்தியில் மட்டும் இருக்கும் போக்கல்ல. அந்நாட்டு அரசே இந்துத்துவ கும்பல்களின் வளர்ச்சியைக் கண்டும் காணாமல் இருப்பதோடு, அதன் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வேலையை செய்து வருவதாக அறிய முடிகிறது.

1966-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்-இன்  வெளிநாட்டு அமைப்பான ஹெச்.எஸ்.எஸ் (இந்து ஸ்வயம்சேவக் சங்) இங்கிலாந்தில் பல ஆண்டுகளாக வேலை செய்து வருகிறது. இருப்பினும் இந்தியாவில் 2014-ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஹெச்.எஸ்.எஸ் இங்கிலாந்தில் ஒரு பிரம்மாண்டமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. 2002-இல் குஜராத் படுகொலையின் போது பிரிட்டனுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட மோடி, 2014-இல் ஆட்சியைப் பிடித்த பிறகு வரவேற்கப்பட்டார். அதன்பின், அந்நாட்டு ஆளும் கட்சியான  பழமைவாத கட்சியுடன் ஹெச்.எஸ்.எஸ் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஓர் நெருங்கிய கூட்டை ஏற்படுத்திக்கொண்டது. இதன் காரணமாக சமீப காலங்களில் இந்துத்துவ கும்பல்கள் அங்கு சுதந்திரமாகக் கொட்டம் அடித்து வருகின்றன. எனவே, இங்கிலாந்து நகரங்களில் நடந்து கொண்டிருக்கும் மதவெறிக் கலவரங்களை அரசின் ஆதரவுடன் ஹெச்.எஸ்.எஸ் மேற்கொள்ளும் பயங்கரவாத நடவடிக்கைகளின் அங்கமாகவேப் பார்க்க வேண்டியுள்ளது.

***

முஸ்லீம்கள் மீதான இந்து வெறியர்களின் தாக்குதல்களை இங்கிலாந்து அரசு தடுக்காததற்குக் காரணம், இயல்பாகவே முஸ்லிம் வெறுப்பு என்ற புள்ளியில் ஆட்சியில் இருக்கும் பழமைவாதக் கட்சியும் ஹெச்.எஸ்.எஸ்-உம் ஒன்றிணைவதுதான். மேலும், இங்கிலாந்தில் தடையின்றி வளர்வதற்காக ஹெச்.எஸ்.எஸ்-க்கு பழமைவாதக் கட்சியின் ஆதரவும், இந்துக்களின் வாக்கை அறுவடை செய்வதற்காக பழமைவாதக் கட்சிக்கு ஹெச்.எஸ்.எஸ்-ம் தேவைப்படுகின்றன. இந்த நலன்களுக்காக இரண்டும் ஒன்றோடு ஒன்று சமரசம் செய்து கொள்கின்றன.

சான்றாக, 2019 பொதுத் தேர்தலில் பாஜகவுடன் தொடர்பு கொண்ட தேசிய இந்து சமய அறநிலையக் குழுவின் பொதுச் செயலாளர், சமூக ஊடகங்களில் பழமைவாதக் கட்சிக்கு வாக்களிக்குமாறு மக்களைத் தனிப்பட்ட முறையில் வற்புறுத்தினார்.

அதேபோல, பழமைவாதக் கட்சியில் இருந்தவர்களும் பகிரங்கமாகவே ஹெச்.எஸ்.எஸ் ஆதரவாளர்களாக தங்களைக் காட்டிக் கொண்டுள்ளனர். முன்னாள் உள்துறை செயலாளர் பிரிதி படேல் 2014-ஆம் ஆண்டில் “ஆர்.எஸ்.எஸ்- எ விஷன் இன் ஆக்சன் – எ நியூ டான்” என்ற தலைப்பில் ஹெச்.எஸ்.எஸ் நடத்திய நிகழ்வுக்காக வாழ்த்துக் கடிதம் எழுதினார். மேலும் “பிரிட்டனின் இந்து சமூகத்திற்காக அவர்கள் சாதித்ததைப் பற்றி மிகவும் பெருமைப்பட வேண்டும்” என்று கூறினார்.

***

ஆர்.எஸ்.எஸ்-இன் இந்துத்துவ பயங்கரவாதம், இங்கிலாந்தில் மட்டுமல்ல அமெரிக்கா, ஆஸ்திரேலியா என உலக நாடுகளுக்கு பரவி வருகிறது. இம்மேற்கத்திய நாடுகளில் உள்ள ஆகமிகப் பிற்போக்கு சக்திகளான நவ நாஜி கும்பல்களோடு கைகோர்த்துக் கொண்டு தனது பாசிச அடித்தளத்தை விரிவுபடுத்தி வருகிறது.

தற்போது இங்கிலாந்தில் நடந்த கலவரமும் அமெரிக்காவில் ‘சுதந்திர தினத்தில்’ புல்டோசரை நிறுத்திக் கொண்டாடியது போன்ற நிகழ்வுகளும் ஆர்.எஸ்.எஸ்-இன் இருப்பையும் வளர்ச்சியையும் காட்டுகின்றதே ஒழிய அதன் முழு பலத்தையும் காட்டவில்லை. உண்மையில்,  அதன் பலம் பிரம்மாண்டமானது. தற்போது ஆர்.எஸ்.எஸ் ஓர் ஆயுதபாணியாக்கப்பட்ட சர்வதேச அடித்தளம் கொண்ட இந்து மதவெறி பாசிச அமைப்பு.

இந்துத்துவ பயங்கரவாதத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்துமத அடையாளங்களைப் பயன்படுத்தி மேற்கத்திய நாடுகளில் உழைக்கும் மக்களின் ஒற்றுமையைப் பிளக்கும் வேலையை ஆர்.எஸ்.எஸ் செய்து வருகிறது. எனவே, ஆர்.எஸ்.எஸ்-ஐ வீழ்த்துவது என்பது இனியும் இந்திய பாட்டாளி வர்க்கத்தின் கடமை மட்டுமல்ல. அது உலகப் பாட்டாளி வர்க்கத்தின் கடமையுமாகும்.

துலிபா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க