பஞ்சாப்: போராடிய விவசாய தொழிலாளர்கள் மீது போலீசு தடியடி! ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை!

சங்ரூர் காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) மன்பிரீத் சிங் தலைமையில் போராடும் விவசாயிகளை தாக்கியது வீடியோக்களில் பதிவாகியுள்ளது. ஜமீன் பிரபதி சங்கராஷ் கமிட்டியின் உறுப்பினர்களான 22 விவசாயிகள் போலீசு நடத்திய தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.

0

ஞ்சாப் மாநிலம் சங்ரூரில் உள்ள முதலமைச்சர் பகவந்த் மானின் வீட்டிற்கு வெளியே பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்திய விவசாய தொழிலாளர்கள் மீது பஞ்சாப் போலீசுத்துறை நவம்பர் 30 அன்று தடியடி நடத்தியுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் 2005 (MGNREGA) இன் கீழ் குறைந்தபட்ச தினக்கூலியை ரூ.700 ஆக உயர்த்த வேண்டும் எனவும், தலித்துகளுக்கு ஐந்து மார்லா மனை திட்டங்களை செயல்படுத்த வேண்டும் எனவும், பொது பஞ்சாயத்து நிலத்தின் மூன்றில் ஒரு பகுதியை தலித் சமூகத்திற்கு குத்தகைக்கு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

எட்டு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான சஞ்சா மஸ்தூர் மோர்ச்சாவின் கொடியின் கீழ் அணிதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் விவசாய தொழிலாளர்கள். சங்ரூரில் உள்ள பாட்டியாலா – பதிந்தா சாலை அருகே நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்றுதிரண்டனர். அவர்கள் பேரணியாக மானின் குடியிருப்பு அமைந்துள்ள தனியார் காலனிக்கு வெளியே வந்தபோது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. மேலும் போராடிய விவசாய தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தியுள்ளது போலீசு.

சங்ரூர் காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) மன்பிரீத் சிங் தலைமையில் போராடும் விவசாய தொழிலாளர்களை தாக்கியது வீடியோக்களில் பதிவாகியுள்ளது. ஜமீன் பிரபதி சங்கராஷ் கமிட்டியின் உறுப்பினர்களான 22 விவசாயிகள் போலீசு நடத்திய தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.

படிக்க : உ.பி: குழாய் கிணறுகளில் மின்சார மீட்டர் பொருத்தப்படுவதற்கு எதிராக விவசாயிகள் போராட்டம்!

ஜமீன் பிராப்தி சங்கர்ஷ் கமிட்டியின் தலைவர் முகேஷ் மலாத் கூறுகையில், “முன்னதாக முதல்வர் எங்களிடம் ஒரு சந்திப்பை நடத்தினார், ஆனால் பின்னர் எங்களை சந்திக்க மறுத்துவிட்டார். தற்போது எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். எங்கள் போராட்ட திட்டத்தின் படி, நாங்கள் நவம்பர் 30 அன்று அமைதியாக முதல்வர் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்றோம், ஆனால் போலீசு எங்களை பெரிய தடுப்புகள், லாரிகள் மற்றும் பிற வழிகளில் தடுக்க முயன்றது. நாங்கள் தடைகளை தடுத்து முன்னேறும் போது எங்கள் மீது போலீசு தாக்குதல் தொடுத்தது. அதில் எங்கள் உறுப்பினர்கள் 22 பேர் காயமடைந்தனர்” என்று முகேஷ் மலாட் கூறினார்.

பஞ்சாப் கெத் மஸ்தூர் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் லக்ஷ்மன் சிங் செவேவாலா, இளஞ்சிவப்பு காய்ப்புழு பருத்தி பயிர் சேதம் ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குமாறு கோரினார். மோர்ச்சாவின் கோரிக்கைகளில் விவசாயிகளது கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் அவர்களுக்கு விவசாய மற்றும் விவசாயம் அல்லாத கடன்கள் ஆகியவை அடங்கும்.

கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டியின் மஸ்தூர் பிரிவு கடந்த ஐந்து நாட்களாக ஃபசில்கா, மோகா, ஃபெரோஸ்பூர், கபுர்தலா, ஹோஷியார்பூர், ஜலந்தர், அமிர்தசரஸ், குர்தாஸ்பூர் மற்றும் தரண் ஆகிய இடங்களில் உள்ள துணை ஆணையர் அலுவலகங்களுக்கு வெளியே போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 21 ஆம் தேதி முதல்வரைச் சந்திக்க நேரம் கிடைத்ததை அடுத்து, போராடிய விவசாய தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டனர். இருப்பினும், அரசாங்கம் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

டெல்லி விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டத்தில், போர்குணமாக போராடியவர்கள் பஞ்சாப் விவசாயிகள். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறி காங்கிரசுக்கு பிறகு ஆட்சி அமைத்த ஆம் ஆத்மி அரசும் விவசாய விரோத செயல்பாடுகளையே அரங்கேற்றி வருகிறது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்ற நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடந்து வருகிறது.

கல்பனா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க