புதுக்கோட்டை மாவட்டம்; திருமயம் தாலுகா காட்டுபாவா பள்ளிவாசல் ஊராட்சியில், குளம் – ஓடை மற்றும் குடியிருப்புகளை ஒட்டி, தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள் 1959 பிரிவு 36(1) விதிமுறைகளை மீறி, இந்த ஆண்டு தொடக்கத்தில் சுப்பையா கல்குவாரிக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள் வருவாய் துறை, சுரங்கம் மற்றும் புவியியல் துறை அதிகாரிகள்.

இதனால், இப்பகுதியில் தொன்மை சிறப்புமிக்க, பழமையான வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் – பள்ளிவாசல் – தேவாலயம்  மற்றும் குடியிருப்பு வீடுகள் – கண்மாய் ஓடை ஆகியவைகளை தகர்க்கும் வகையில் சட்டவிரோதமான முறையில் வெடிவைத்து செயல்பட்டு வருகிறது மெய்யபுரம் சுப்பையா கல்குவாரி.

சுப்பையா கல்குவாரி சட்ட விரோதமாக நானல் வெடிகளை (ANEL ED), மட்புல் முறையில் வெடிக்காமல், சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தக் கூடாத வெடிகளை வைத்து வெடித்தனர்.

இவ்வாறு வெடி வைத்ததன் காரணமாக ஆறுமாதங்களுக்கு முன்பு இந்த கல்குவாரியில் வெடிவைத்து பாறைகளைத் தகர்த்தபோது அருகிலுள்ள பல வீடுகள், பள்ளிவாசல், கோயில், தேவலாயம், பள்ளிக்கூடம் உட்பட பல கட்டிடங்கள் அதிர்ந்து சுவர்கள் விரிசலாகின.

படிக்க : அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்!

அதன் பின்னர் பாதிப்பினால் இதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பாறைகளுக்குப் பதிலாக அதனை ஒட்டியுள்ள இடத்தில் கிராவல் மண் அளவுக்கு அதிகமாகத் தோண்டி எடுத்து விற்பனை செய்தனர்.

பிறகு தற்போது மீண்டும் பாறைகளைத் தோண்டி எடுக்க எண்ணி, கடந்த வாரம் விடியற்காலையில் மிகப்பெரிய வெடிகளை வெடிக்கச் செய்து மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடும்படிச் செயதனர்.

அதன்பின்னர் இதனைக் கண்டித்து பெண்கள் முகாமையாக முன்னெடுத்து தஞ்சாவூர் – புதுக்கோட்டை சாலையில் கிராமப் பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் பொதுமக்களும் பெண்களும் கைது செய்யப்பட்டனர்.

இதனூடாக அந்த கல் குவாரிக்கு லாரிகள் சென்றுவர ஏதுவாக கண்மாய்களுக்கு வரக்கூடிய ஒரே நீர்வரத்தான மழைநீர் வாரியின் (ஓடை) நடுவே சாலைபோல் அமைத்துக் கொடுத்து கண்மாய்களையும் விவசாய நிலங்களையும் வறட்சியுறச் செய்தனர். அதனையும் தட்டிக்கேட்ட மக்கள் மீது அதிகாரிகள் வழக்குப் போட்டதோடு அந்த வாரியை (ஓடை) திறக்க அனுமதி மறுத்தனர் அதிகாரிகள்!

தற்போது கல்குவாரி செயல்பட்டுள்ள வெறும் ஐந்தடி ஆழத்திற்கே இப்படி எண்ணற்ற பாதிப்புகள் எனில், இன்னும் அவர்கள் ஆழமாகத் தோண்டும்பொழுது பல கட்டிடங்கள் இடிந்துவிழும் நிலை உள்ளது.

மேலும் இங்கு 500 ஆண்டுகால தமிழ் கலாச்சாரபடி கட்டப்பட்டுள்ள புகழ்பெற்ற பழமையான பள்ளிவாசலும் இருக்கிறது. ஏற்கனவே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு குவாரியில் வைக்கப்பட்ட வெடியினால் இங்குள்ள கட்டிடங்கள் அதிர்ந்தன. இங்கே சாலையோரம் உள்ள பேக்கரியில் கட்டிடம் அதிர்ந்து கண்ணாடிகள் உடைந்த காட்சியினை இன்றும் நேரில் காணலாம்.

இப்போது வெகு அருகில் 400 மீட்டர் தொலைவில் கல்குவாரியை அமைத்து கனிமங்களை கொள்ளையடித்தால் இந்தக் கிராமங்களில் மக்கள் வாழமுடியாத அபாய நிலை உள்ளது.

கல்குவாரி முதலாளிகள் நீதிமன்ற ஆணை வைத்திருக்கிறார்கள் என்று சொல்லும் அதிகாரிகள், அதனை எதிர்த்து எவ்வகையிலும் மேல்முறையீடு செய்யாமலும், மக்களின் எதிர்ப்பு கடுமையாக ஏற்பட்ட பின்பும் கூட சட்டவிரோதமாக அனுமதி பெற்று சட்ட விரோதமாக செயல்படும் குவாரியைத் தடுக்காமலும், கல்குவாரி முதலாளிகளுக்கு ஆதரவாக விவசாயத்தினை அழிக்கக் காரணமாகவும் இருந்து வருகின்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களிலும் கல்குவாரி அமைத்து அங்கே உள்ள இயற்கை வளங்களையும் கனிம வளங்களையும் சூறையாடித்தான் திடீர் அரசியல் பணக்காரர் ஆனார். இன்றும் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கில் கல்குவாரிகள் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு கொண்டுதான் இருக்கிறது. எப்படி பி.ஆர்.பி.பழனிச்சாமி கிரானைட்களை வெட்டி எடுக்க ஒட்டுமொத்த அதிகார வர்க்கத்தையும் வளைத்தாரோ அதேபோலதான் இன்று புதுக்கோட்டை மாவட்டத்திலும் கல்குவாரி அதிபர்களால் ஒட்டுமொத்த அரசு எந்திரமும் வளைக்கப்பட்டுள்ளது.

திராவிட மாடலிலும் சட்ட விரோதமான கல்குவாரிகளின் செயல்பாடு தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. ஒட்டுமொத்த அரசு அதிகார வர்க்கமும் லஞ்ச லாவண்யங்களில் மூழ்கி திளைக்கின்றனர். அதனால் எந்த மக்கள் போராட்டமும் இல்லாமல் கல்குவாரிகளை மூட முடியாது என்ற எதார்த்தம் நம் கண் முன்னே நிற்கிறது. இதை புரிந்து கொண்ட காட்டுபாவா பள்ளிவாசல் மெய்யபுரம் பகுதி மக்கள்  தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் 29 ஆம் தேதி புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே ஒரு பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அதில் கீழ்காணும் கோரிக்கைகளை வைத்திருந்தனர்.

1.உடனடியாக காட்டுபாவா பள்ளிவாசல் ஊராட்சியில் மெய்யபுரம் ஊரில் இயங்கும் இந்த கல்குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

2.குவாரியை மூடி, இதன் செயல்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

3.இந்தப் பகுதியில் இயங்கும் கல்குவாரிகள் அனைத்தும், திருநெல்வேலி மாவட்ட கல்குவாரிகள் – திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி மொரட்டு பாளையம் கல்குவாரிகள் போல் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

4.புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கல்குவாரியினால் உருவான பல நூறு அடிகள் ஆழமான ஆயிரக்கணக்கான பெருங்குழிகள் ஆபத்துடன் வாய்பிளந்து காட்சியளிக்கக் காரணமான சட்டவிரோத கல் குவாரி உரிமையாளர்கள் மட்டுமல்லாது அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

படிக்க : விழிஞ்சம் துறைமுக திட்டம் நிறுத்தப்படும் வரை மக்கள் போராட்டம் ஓயாது!

காட்டுபாவா பள்ளிவாசல் மக்கள் முன்னெடுக்கும் இந்தப் போராட்டம் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதையும் சூறையாடிக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த கல்குவாரிகளுக்கு எதிரானதாக மாற வேண்டும்.

பல்வேறு ஜனநாயக முற்போக்கு இயக்கங்களும் இயற்கை பாதுகாப்பு அமைப்புகளும் கல்குவாரிக்கு எதிரான காட்டுபாவா பள்ளிவாசல் மக்கள் போராட்டங்களில் இணைந்துள்ளனர். அனைத்து பகுதி உழைக்கும் மக்களும் இதனுடன் இணையும்போதுதான் நமக்கான இயற்கை வளங்களையும் காடுகளையும் வாழ்வாதாரத்தையும் நாம் பாதுகாத்திட முடியும்.

வினவு செய்தியாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க