அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்!

பேச்சு வார்த்தையில் தொழிலாளர்கள் ரூ.17 ஊதிய உயர்வு வேண்டும் என்று கோரினார்கள். ஆனால் ரப்பர் தோட்ட நிர்வாகமோ மலைக்கும் மடுவுக்கும் உள்ள அளவைபோல வெறும் ரூ.2 மட்டுமே ஊதியத்தை உயர்த்த முடியும் என்று கூறியது.

0

ன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக அரசின் கீழ் இயங்கும் அரசு ரப்பர் கழகத் தொழிலாளர்கள் நவம்பர் 7 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமரியில் அரசு ரப்பர் தோட்டங்கள் ஏராளமாக உள்ளன. கீறிப்பாறை, மணலோடை உள்ளிட்ட ஒன்பது ரப்பர் கோட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஒன்பது கோட்டங்களில் தற்போது 4000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைசெய்து வருகின்றனர்.

இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். அந்த வகையில் கடந்த 2019-ஆம் ஆண்டிற்கான ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. கிட்டத்தட்ட இந்த ஊதிய உயர்வு தொடர்பாக அதிமுக-திமுக ஆட்சிகளில் 67 முறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் கூட தொழிலாளர்களுக்கு பயன்கிடைக்கவில்லை.

படிக்க : விழிஞ்சம் துறைமுக திட்டம் நிறுத்தப்படும் வரை மக்கள் போராட்டம் ஓயாது!

கடைசியாக, இந்த ஆண்டு ஆகஸ்டு மாத 16 ஆம் தேதி தொழிலாளர் நலத்துறை, வனத்துறை, தொழில்நுட்ப துறை ஆகிய மூன்று துறைகளின் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் தொழிலாளர்களுக்கு ரூ.40 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்கள் அமைச்சர்கள். ஆனால் தற்போது வரை அந்த வாக்குறுதியை அரசு ரப்பர் கழகம் நிறைவேற்றவில்லை.

நவம்பர் 5 ஆம் தேதி நாகர்கோவிலில் உள்ள தொழிலாளர் நல அலுவலகத்தில், ஊதிய உயர்வு சம்பந்தமான போச்சுவார்த்தையின் போது, ஊதிய உயர்வு தரமுடியாது என்று அதிகாரிகள் தொழிற்சங்கங்களிடம் கூறிவிட்டனர். இதன் காரணமாக, ரப்பர் தோட்ட தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் ஊதிய உயர்வை ஒப்பந்தத்தை அமல்படுத்த கோரி நவம்பர் 7 தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 20 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகின்றது.

இந்த வேலைநிறுத்தத்தில் நிரந்தரத் தொழிலாளர்களும் கலந்துகொண்டனர். அனைத்து ரப்பர் கோட்ட மேலாளர்கள் அலுவலகங்கள் முன்பும், தினமும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதற்கு முன்பு ஊதிய உயர்விற்காக பலமுறை அரசுடன் தொழிலாளர்கள் அரசுடன் பேச்சுவார்த்தை மற்றும் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

2016-ஆம் ஆண்டில் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் மீதான அரசின் அலட்சிய செயல்பாடுகளால் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. மலை கிராமங்களில் வசிக்கும் மக்கள் இந்த ரப்பர் தோட்டங்களுக்கு தினக்கூலிகளாக வேலை செய்யும் அவலங்கள் அரங்கேறின. ஆனாலும், அவர்களுக்கு பலநாட்கள் வேலை கொடுக்காமல் திருப்பி அனுப்பியுள்ளது ரப்பர் தோட்ட நிர்வாகம். தொழிலாளர்களுக்குரிய எவ்வித அடிப்படை உரிமைகளும் சலுகைகளும் இன்றியே தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக வேலைசெய்து வருகிறார்கள். ஊதிய உயர்வுக்காக மட்டுமே பல ஆண்டுகளாக எண்ணற்ற போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

படிக்க : ஒடிசா: அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டம் | 60,000 மையங்கள் மூடல்!

ஊதிய உயர்விற்காக 2020 பிப்ரவரியில் 47 சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்ட பிறகும், எந்தத் தீர்வும் ஏற்படவில்லை. அதே மாதத்தில் 48 சுற்றுப் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. பேச்சு வார்த்தையில் தொழிலாளர்கள் ரூ.17 ஊதிய உயர்வு வேண்டும் என்று கோரினார்கள். ஆனால் ரப்பர் தோட்ட நிர்வாகமோ மலைக்கும் மடுவுக்கும் உள்ள அளவைபோல வெறும் ரூ.2 மட்டுமே ஊதியத்தை உயர்த்த முடியும் என்று கூறியது.

தற்போது ரப்பர் தோட்ட தொழிலாளர்கள், அரசு ரப்பர் கழகத்திடமிருந்து ரூ.40 ஊதியம் உயர்த்துவதற்கான காலவரையற்ற போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. இந்த குறைந்த பட்ச ஊதிய உயர்வைக் கூட வழங்காமல் பல ஆண்டுகளாக ரப்பர் தோட்ட தொழிலாளர்களை வஞ்சித்து வருகிறது தமிழக அரசு. அரசுத் துறைகளை திட்டமிட்டு சீரழித்து, தனியாருக்கு தாரைவார்க்கும் தனியார்மய தாராளமய உலகமய கொள்கையின் விளைவே இந்த அவலம்.

புகழ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க